1. (சீஷன்) இதோ! என் தேவனும் என் சர்வமுமானவர். நான் இன்னுமென்ன ஆசிக்கக்கூடும்? இதைவிட பாக்கியமான தென்ன நான் விரும்பக்கூடும்? ஓ! சுவையும் இன்பமுமான வார்த்தை! உலகத்தையும் உலகத்தில் உள்ளதையும் நேசிக்கிறவனுக்கு அல்ல, ஆனால் சர்வேசுரனை நேசிக்கிறவனுக்கு அது இன்பமாயிருக்கின்றது. என் தேவனே, என் சர்வமே! இவ்வாக்கியத்தைக் கண்டுபிடிக்கிறவ னுக்கு அதுவே போதுமானது; நேசமுள்ளவன் அதை அடிக்கடி சொல்வதில் ஆனந்தம் கொள்கிறான். ஏனெனில் நீர் இருக்கையில் சகலமும் இன்பமாகின்றது, நீர் இல்லாவிடில் எல்லாம் சலிப் பாகின்றது. இருதயத்தை அமைதியுள்ளதாக்குகிறீர். ஆழ்ந்த சமாதானத் தையும் சொல்லில் அடங்காத சந்தோஷத்தையும் நீரே அதற்குத் தந்தருளுகிறீர். சகலமும் நமக்குச் சரிப்படும்படியாகவும், நாம் சகலத்திலும் உம்மை வாழ்த்தும்படியாகவும், நீர் செய்கிறீர். உம்மையன்றி எதுவும் நெடுநேரம் பிரியப்படாது, உமது வரப்பிரசாதமும் உமது ஞானத்தின் சுவையும்கூடச் சேர்ந்திருந்தால் தான் அதில் நமக்குப் பிரியமும் இனிமையும் கிடைக்கும்.
2. உம்மைச் சுகிக்கிறவனுக்கு எது கசப்பாயிருக்கும்? உம்மைச் சுகியாதவனுக்கு எது இன்பமாயிருக்கக் கூடும்? உலகத்து ஞானி களும் சிற்றின்பத்தைச் சுகிப்பவரும் உமது ஞானத்தை வைத்துக் கொள்வதில்லை; ஏனெனில் உலகத்தில் வீண் பெருமையும், சிற்றின்பத்தில் மரணமும் உண்டாகின்றது. ஆனால் உலகத்தையும் வெறுத்துச் சரீரத்தையும் ஒறுத்து உம்மைப் பின்செல்கிறவர்கள் மெய்யான ஞானமுள்ளவர்களென்று அறியப்படுவார்கள்; ஏனெனில் இவர்கள் பொய்யை நிந்தித்து உண்மையை நாடுகிறார்கள், மாம்சத்தை அடக்கி இஸ்பிரீத்துவை அடைகிறார்கள். இவர்களுக்குத்தான் சர்வேசுரன் இன்பமாயிருக்கிறார்; சிருஷ்டிகளிடத்தில் உள்ள நன்மையான தெல்லாம் தேவனுடையதே என்று சொல்லி அவரை ஸ்துதிப் பார்கள். ஆனால் சிருஷ்டிகருக்கும் சிருஷ்டிப்புகளுக்கும், நித்தியத் திற்கும், அநித்தியத்திற்கும், சிருஷ்டிக்கப்பட்ட ஒளிக்கும், சிருஷ்டிக்கப்படாத ஒளிக்கும் இன்பம் சுவை முறையில் மிகப் பெருந்தூர வித்தியாசம் உண்டு.
3. ஓ! நித்திய பிரகாசமே! சிருஷ்டிக்கப்பட்ட சகல ஒளிகளுக்கு மேலான பிரகாசமே! என் இருதய உள்ளரங்கத்தை முழுதும் ஊடுருவும்படி உமது சுடரைப் பரலோகத்தினின்று வீசுவீராக. என் ஆத்துமம் அதன் சத்துவங்களுடன் ஆனந்தப் பெருக்கில் உம்முடன் ஐக்கியமாயிருக்கும்படிக்கு அதைச் சுத்திகரித்தருளும், சந்தோஷப் படுத்தும், பிரகாசிப்பித்தருளும், சுறுசுறுப்பாக்கும். ஓ! உமது பிரசன்னத்தால் எனக்குப் பூரண திருப்தி உண்டாக்கி, எனக்கு நீர் அனைத்திலும் அனைத்துமாயிருக்கப் போகிற பாக்கியமும் ஆசைக் குரியதுமான நேரம் எப்போது வரும்! அந்நேரம் வருமட்டும் எனக்குப் பூரண சந்தோஷம் கிடையாது. இன்னும் ஐயோ! பழைய மனிதன் என்னிடத்தில் சீவிக்கிறான், இன்னும் முழுமையும் சிலுவையில் அறையப்படவில்லை, இன்னும் முற்றும் சாகவில்லை, இன்னும் புத்திக்கு விரோதமாகப் பலமாய் எதிர்க்கிறான், உட்சண்டைகளை எழுப்புகிறான், ஆத்துமத்தின் அமைதியான அரசாட்சியைச் சகிக்கிறதில்லை.
4. ஆனால் “கடலின் அகோரத்தை அடக்கி அலைகளின் அசைவைத் தணிக்கிற நீர் எழுந்திரும், எனக்கு ஒத்தாசையைத் தந்தருளும். யுத்தத்தை விரும்புகிற சனங்களைச் சிதறடியும், உமது பலத்தால் அவர்களை நிர்மூலமாக்கும். நான் உம்மை மன்றாடுகிறேன். உமது அற்புதங்களைக் காண்பித்தருளும், உமது வலது கரத்திற்கு மகிமைஉண்டாவதாக.” ஏனெனில் ஆண்டவரே! என் சர்வேசுரா! உம்மையன்றி எனக்கு வேறு நம்பிக்கையுமில்லை, அடைக்கலமு மில்லை.
யோசனை
சர்வேசுரனை அறிந்தும், நமது ஆத்துமம் அவருடைய நேசத்தில் மூழ்கிச் சுகிக்காமலிருப்பது ஆச்சரியமல்லவா? சகல நன்மையின் ஊறணியில் மூழ்கிக் கிடக்கிறதற்குப் பதிலாய்ச் சிருஷ்டிகளிடத்தில் அது பிரியம் கொண்டிருப்பது கருதக்கூடாத காரியமல்லவா? நேசத்தையன்றிப் பாக்கியம் என்பது யாதொன்றுண்டோ? அளவில்லாப் பாக்கியம் இணையில்லா நேசத்தைத் தவிர வேறென்ன? நம் இருதயத்தைத் திருப்தி செய்ய அளவில்லாப் பொருள் தேவை, அதாவது சர்வேசுரன்தான் தேவை. சிருஷ்டிக்கப்பட்ட ஏதாவது அதைத் திருப்திப்படுத்துமா? ஒருபோதுமில்லை. உலகத்திற்கும் எனக்கும் என்ன இருக்கிறது? எனக்கு அது அவசியமில்லை; அது எனக்கென்ன கொடுக்கக் கூடும்? அதிலுண்டான நன்மைகள் யாவற் றையும்விட என் இருதயம் அதிக பெரிதாயிருக்கின்றது. கடவுள் ஒருவரே என் இருதயத்தை விட அதிகப் பெரியவராயிருக்கிறார். ஆனதால் கடவுள் ஒருவர் மாத்திரம்தான் இப்போதும் எப்போதும் என்றென்றைக்கும் எனக்கு வேண்டியவர்.