இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

33. இருதயத்தின் நிலையற்றதனத்தின் பேரிலும், கடவுளைக் கதியாகக் கொள்ள வேண்டும் என்பதின் பேரிலும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! உன் இருதயத்தின் உணர்ச்சிகளை நம்பாதே; இப்போது இவைகள் ஒருவிதமாயிருக்கும், சற்று நேரத்திற்குள் வேறானவைகளுக்கு இடம் தரும். நீ சீவிக்கும் வரையும், வேண்டாமென்றாலும் கூட அத்தகைய மாற்றத்திற்கு உட்படுவாய்; ஒரு சமயத்தில் சந்தோஷம், மற்றொரு சமயத்தில் கஸ்தி, ஒரு சமயத்தில் அமைதி, மற்றொரு சமயத்தில் கலக்கம், இப்போது பக்தி யுள்ளவன், வேறொரு சமயம் பக்தியற்றவன், இப்போது சுறுசுறுப்பு, வேறொரு சமயம் அசமந்தம், இப்போது ஒடுக்கமுள்ளவன், வேறொரு சமயம் ஒடுக்கமற்றவன், இப்படிப் பல மாறுதலாய்க் காணப் படுவாய். ஆனால் ஞானியானவன், ஞானக் காரியங்களில் நன்றாய்த் தேர்ந்தவன், இந்த மாற்றங்களின் நடுவில் மனவுறுதியுள்ளவனாய், தன்னில் உண்டாகிற உணர்ச்சிகளைச் சட்டை பண்ணாமலும், நிலையற்ற அவ்வுணர்ச்சிகள் எக்காரணத்தால் உண்டாகின்றன என்ப தைக் கவனியாமலும், தான் அடைய வேண்டிய பரம கதியை நோக்குவதிலேயே ஏக கவனமாய் இருப்பான். அப்படி அவன் சுத்தக் கருத்து என்னும் தன் கண்ணை நமது பேரில் இடைவிடாமல் திருப்பியே, பலவித மாற்றங்களுக்கு நடுவில் எப்போதும் மாறாமல் ஒரே சீராக நிலைத்திருக்கக் கூடும்.

2. கருத்தென்னும் கண் எவ்வளவுக்கு அதிக சுத்தமாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கும் அது புயல்களுக்கு நடுவே அதிக தைரிய மாய்ச் செல்லலாம். ஆனால் அநேகரிடத்தில் இந்தச் சுத்தக் கருத்து என்னும் கண் மங்கிப் போகிறதுண்டு. ஏனெனில் மனதிற்கு இசைந்த யாதொரு பொருள் தென்பட்டாலும், உடனே அதன் பேரில் நாட்ட முடையவர்களாகிறார்கள். தன் சுய நாட்டத்தைக் கொஞ்சமேனும் தேடாதவனைக் காண்பது அரிது. அவ்விதமே “சேசுநாதரை மாத்திர மல்ல, ஆனால் லாசரையும் பார்க்கும்படியாக” யூதர்கள் முன் காலத்தில் பெத்தானியாவில் இருந்த மார்த்தாள் மரியாளிடம் வந்தார்கள். ஆனதால் கருத்தென்னும் கண் கபடற்றதாயும் நேர்மை யானதாயும் இருந்து, இடையிலிருக்கிற பொருள்களால் தடுக்கப் படாமல் நமது மேலேயே எப்போதும் செலுத்தப்படும் பொருட்டு, அதைச் சுத்தமாக்கி வர வேண்டியது.

யோசனை

மனிதனுடைய குணம் ஒருபோதும் இளைப்பாறாமல் அங்கு மிங்கும் திரிந்துகொண்டிருக்கின்றது, அவன் இருதயம் அந்த நிலை யற்ற தன்மையால் இழுக்கப்படுகின்றது. நம்மிடத்தில் நம்மையும் மீறிச் சில சமயங்களில் உண்டாகும் அந்த மாற்றங்கள் என்ன வென்றால், ஒன்றில் நாம் போராட வேண்டிய சோதனைகள், இல்லாவிடில் நாம் சகிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அல்லது நாம் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய துன்பங்கள். அதனால் தான் நமது மனதை நாம் ஓயாமல் சுத்திகரிக்க முயற்சி எடுத்துவர வேண்டியது. இது நம்மால்தான் ஆகும். முயற்சியெடுத்துக் கொள்ளாவிடில் வெகு சீக்கிரத்தில் நாம் பாவத்திலாவது, கலக்கத்தி லாவது அல்லது இரண்டிலுமாவது விழுந்து விடுவோம். சர்வேசுர னுக்கு மாத்திரம் சொந்தமாயிருக்க முழுமனதோடு ஆசிக்கிறவன் நரகப் பேய்களின் தந்திரங்களுக்குப் பயப்படுவதில்லை; ஏனெனில் அவனைத் தேற்றுகிறவர்களுடைய அடைக்கலத்தில் அவன் இருக்கும் வரையில் பசாசுக்களால் வெல்லப்பட மாட்டான் என்று அறிவான்; தன்பேரில் கோபம் கொள்வதில்லை; தன் பலவீனத்தை அமரிக்கை யோடு பார்க்கிறான்; அதைப் பார்த்து அப்போஸ்தலரைப் போலச் சந்தோஷப்படுகிறான், ஏனெனில் அந்தப் பலவீனமானது புண்ணி யத்தை உத்தமமாக்கி வெற்றியை அதிகப்படுத்துகின்றது. ஆண்டவர் அவனைச் சோதித்தால், தன்னைத் தாழ்த்துகிறான்; அவருடைய ஆறுதல் களுக்குத் தான் தகுதியுடையவனல்ல என்று ஒத்துக்கொள்கிறான். தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவையை ஆவலோடு கட்டிப் பிடிக்கிறான். இந்தச் சிலுவையே அவனுக்கு அமைதி வருவிக்கும். கஸ்தியிலும் உபத்திரவத்திலும் கைவிடப்பட்டிருக்கும்போது, ஆண்டவரை நோக்கி, “ஆண்டவரே! உம்மை நம்பினேன், நித்தியத் திற்கும் நான் கலக்கமடைய மாட்டேன்” என்று சொல்வான். இந்த ஆறுதலே அவனுக்குப் போதுமானது.