இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

32. தன்னைத்தானே மறுத்தனும் எவ்வித சுய ஆசைகளை வெறுத்தனும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! உன்னைத்தானே நீ முழுவதும் பரித் தியாகம் செய்தாலொழிய உத்தம சுயாதீனத்தை நீ அடைய மாட்டாய். தங்களைத் தானே நேசிக்கிற சுய நேசமுள்ளவர்கள், நிலையில்லாதவர்கள், சேசுகிறீஸ்துவினுடையவைகளையல்ல, ஆனால் சுய செளகரியங்களைத் தேடுகிறவர்கள், நிலையாதவைகளை அடிக்கடி எண்ணி ஏக்கப்படுகிறவர்கள், முதலிய யாவரும் அடிமைகளே யாவர். ஏனெனில் சர்வேசுரனிடத்திலிருந்து வராத எதுவும் வீணே. “சகலத்தையும் விட்டுவிடு, சகலமும் கண்டடைவாய்; பேராசையை ஒழித்து விடு, இளைப்பாற்றியைக் காண்பாய்” என்னும் கருத்து செறிந்த சிறிய வாக்கியத்தைப் பத்திரமாய்க் காப்பாற்று; மனதில் தியானி; அதை நிறைவேற்றினால் எல்லாம் கண்டுபிடிப்பாய்.

2. (சீஷன்) ஆண்டவரே! அது ஒரு நாள் வேலையல்ல, சிறு பிள்ளைகளுடைய விளையாட்டுமல்ல; அந்தச் சிறு வாக்கியத்தில் துறவறத்தோருடைய உத்தம ஜீவிய முறை முழுதும் அடங்கியிருக்கின்றதே.

(கிறீஸ்துநாதர்) மகனே! உத்தமமாய் ஜீவிக்கிறவர்களுடைய மார்க்கத்தைக் கேள்விப்பட்டவுடனே நீ பின்னடையக் கூடாது, அதைரியம் கொள்ளவும் கூடாது; மாறாக, அந்த மேலான பதவியை நோக்கியே நடக்க வேண்டும், உன் ஆசையெல்லாவற்றையும் அதன் பேரில் வைக்க வேண்டும். ஆ! நீ அப்படியே நடப்பாயானால், நீ உன்னையே நேசிப்பவனாயிராமல் நம்முடைய சித்தத்துக்கும், நாம் உனக்கு நியமித்திருக்கிற சிரேஷ்டருக்கும் எல்லாவற்றிலும் உன்னை முழுமையும் கீழ்ப்படுத்திக் கொண்டு வந்தாயேயானால் நல்லது! அப்போது நமக்கு மிகவும் பிரியமாவாய், உன் சீவியமுழுதும் சந்தோஷத்திலும் சமாதானத்திலும் கடந்து போகும். நீ விட்டுவிட வேண்டிய காரியங்கள் இன்னும் அநேகமுள்ளன; நீ என்னைப்பற்றி அவைகளை முழுதும் விட்டொழித்தாலே தவிர நீ கேட்பதை யடையப் போவதில்லை. “நீ ஆஸ்திக்காரன் ஆவதற்குப் புடம் போடப்பட்ட பொன்னை நம்மிடத்தினின்று கிரயத்திற்கு வாங்கினால் சரி;” அந்தப் பொன் என்னவென்றால், இவ்வுலக நன்மைகளை யெல்லாம் நிந்தித்து வெறுக்கிற பரலோக ஞானமே. உலக ஞானத் தையும், உனக்காவது பிறருக்காவது பிரியப்படுதலையும் விட அதனை மேலாக எண்ணு.

3. மனிதர் அபிப்பிராயத்தில் விலையுயர்ந்தவையும் மேலானவையுமானவைகளை அவர்களுக்கு இழிவானவைகளுக்காக மாற்றிக் கொள் என்று சொன்னோம். உள்ளபடி மெய்யான பரலோக ஞானம் இழிவாகவும் சொற்பமாகவும் காணப்படுகின்றது. அது ஏறக்குறைய மறந்து விடப்படுகிறது; அது தன்னைப்பற்றிக் கனமாய் எண்ணங் கொள்ளுவதில்லை; பூமியில் மகிமையடையவும் தேடு வதில்லை; அநேகர் அதை வாயினால் புகழுகிறார்கள் என்பது மெய் தான், ஆனால் நடத்தையினால் அதை நிராகரிக்கிறார்கள். ஆயினும் அதுவே அநேகருக்கு மறைவாயிருக்கிற “விலையுயர்ந்த மாணிக்கமாய்” இருக்கிறது.

யோசனை

தனக்கும், ஒழுங்கற்ற தன் மனதிற்கும் தன் ஆசைகளுக்கும் தன் நாட்டங்களுக்கும் கையளிக்கப்பட்ட மனிதன் எப்படிப்பட்டவன்? மாற்றி மாற்றி அவனை மோசம் போக்குகிற தப்பறைகளின் அடிமை, அவனுடைய பேராசையினுடையவும், அந்தப் பேராசைக்குக் காரணமான பொருட்களுடையவும் அடிமை. அவனுடைய அடிமைத்தனத்தை விட அதிகக் குரூரமான அடிமைத்தனம் வேறு உண்டோ? என் ஆண்டவரே! இதுதான் உமக்கு முழுதும் கீழ்ப்படிய மனமிராத சகல மனிதருடையவும் நிலை. சுயாதீனமுள்ளவனாயிருப் பதற்குக் கீழ்ப்படிய வேண்டியது. முழுச் சுயாதீனம் கற்பனைகளையும் சுவிசேஷ ஆலோசனையையும் நிறைவேற்றுவதுதான். கற்பனைகளும் ஆலோசனைகளும் தன்னையே மறுப்பதில் அடங்கியிருக்கின்றன; ஏனெனில் தன் சுயமன எண்ணத்தை விட்டுவிடும்போது, முழுமையும், கலப்பில்லாமலும் தேவனுடைய உண்மையைக் கைக்கொள்கிறோம்; சுய நேசத்தை விடும்போது, தேவசிநேகமும் சர்வேசுரனைப் பற்றிப் பிறர்சிநேகமும் இருதய உள்ளத்தில் வாசம் பண்ணுகின்றன. நமது இஷ்டத்தை விட்டு விடும்போது சர்வேசுர னுடைய சித்தப்படி நடக்கிறோம். அதுவே ஒழுங்கு. சர்வேசுர னுடைய சாயலாகிற மனிதன் அவரைப் போலவே சுயாதீனமுள்ளவ னாகிறது எப்படியென்றால், தன்னையே முழுமையும் மறுப்பதினால் தப்பறைகளுடையவும் ஆசாபாசங்களுடையவும் அடிமைத்தனத் தினின்று விடுதலையாகிறான். “சேசுகிறீஸ்துநாதரால் மீட்கப்பட்டு, அவரால் மனச் சுதந்திரத்திற்கு அழைக்கப்பட்டோம்” என்கிறார் அப்போஸ்தலர். என்ன சுதந்தரமென்றால், சுவிசேஷத்தை அறியும் சுதந்தரம்; சுவிசேஷம் சுதந்தரத்தின் உத்தம கட்டளை, அது தன்னைச் சேர்ந்தவர்களை அழிவின் அடிமைத்தனத்தினின்று மீட்ட பிறகு “சர்வேசுரனுடைய மக்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மகிமையின் சுதந்தரத்திற்குக் கூட்டிக் கொண்டு போகிறது.”