1. (சீஷன்) ஆண்டவரே! எவனும் எந்தச் சிருஷ்டியும் எனக்குத் தடை செய்யக் கூடாத நிலைமைக்கு நான் வர வேண்டுமானால் எனக்கு இன்னும் அதிகப் பெரியதோர் வரப்பிரசாதம் அவசியமாயிருக் கின்றது; ஏனெனில் யாதொரு காரியம் என்னை நிறுத்தினால் உமதருகில் எளிதாய்ப் பறந்துவர என்னாலே முடியாது. “மாடப் புறா வுக்கு இருப்பது போலச் சிறகுகளை எனக்குக் கொடுப்பவர் யார்? நானும் பறந்துபோய் இளைப்பாறுவேன்” என்று சொன்னவர் அவ்விதமே யாதோர் தடையின்றி உம்மிடத்தில் பறக்க விரும்பிக் கொண்டிருந்தார். சர்வேசுரனை மட்டும் நோக்குகிறவனை விட அதிக அமைதியுள்ளவன் யார்? பூலோகத்தில் ஒன்றின் பேரிலும் ஆசை வையாதவனைவிட, அதிக மனச் சுயாதீனமுள்ளவன் யார்? ஆகவே சிருஷ்டிக்கப்பட்டதையெல்லாம் கடந்து, தன்னையே முழுமையும் விட்டுவிட்டு, அந்த நிலையில் இருக்கையில் சகலத்திற்கும் கர்த்த ராகிய நீர் உமது சிருஷ்டிப்புகளுக்கு நிகரில்லாதவராயிருக்கிறீர் என்று நன்றாய்க் கண்டுபிடிக்கவேண்டியது. எவ்வித சிருஷ்டிப்புகளின் பேரிலும் பற்றுதல் ஒன்றுமில்லா திருந்தால் ஒழிய, மற்றபடி மேலான தெய்வீக விஷயங்களின் பேரில் சரியான கவனம் செலுத்த முடியாது. ஆதலால்தான் அப்படிப்பட்ட தியானிகளைப் பார்ப்பது அரிது; ஏனெனில் கடந்துபோகும் சிருஷ்டிகளை முழுதும் விட்டுப் பிரிந்து போக அறிகிற வர்கள் மிகவும் கொஞ்சம் பேர்.
2. அதற்கு ஆத்துமத்தை உயர்த்தி, தனக்குத்தானே மேலாக அதைத் தாவச் செய்யும் மகத்தான வரப்பிரசாதம் தேவை. மனிதன் ஞான அறிவு அடையாமலும் சகல சிருஷ்டிகளை விட்டுப் பிரியாமலும் சர்வேசுரனோடு முழுதும் ஐக்கியம் செய்யாமலிருக்கும் வரையும் அவன் அறிவதும் கைக்கொள்வதுமெல்லாம் சொற்ப மதிப்புள்ளதே. ஏகமும் அளவற்றதனமும் நித்தியமுமான நன்மை யானவரைத் தவிர வேறு எதையும் கனமாய் எண்ணுகிறவன் புண்ணியத்தில் இன்னும் சிறியவனும் வளர்ச்சியடையாதவனுமா யிருக்கிறான். ஏனெனில் சர்வேசுரனைத் தவிர மற்ற யாவும் ஒன்று மல்ல, ஒன்றுமில்லாமையாக மதிக்கப்பட வேண்டியது. விசேஷ வரப்பிரசாதத்தால் தெளிவடைந்த பக்திச் சுறுசுறுப்புள்ள மனிதனின் ஞானத் திற்கும் வெறும் படிப்பினால் ஒருவன் அடைந்த அறிவிற்கும் வெகு வித்தியாசம் உண்டு. பரலோகத்தினின்று தேவ அருளால் உண்டாகும் அறிவானது, மனித சத்துவத்தைக் கொண்டு முயற்சியெடுத்துக் கற்றுக் கொள்ளும் சாஸ்திரத்தைவிட மிக அதிக மேலானது.
3. தியான யோகத்தைச் செய்ய விரும்புகிறவர்கள் அநேகர் உள்ளனர்; ஆனால் அதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளில் பழக முயற்சி எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தியான யோகத்திற்கு முதன்மையான தடை ஏதெனில்: வெளிப்படையானவைகளையும், அடையாளங்களையும் கடந்து போவதுமில்லை, தங்களை முழு பரித் தியாகம் செய்யக் கவனிப்பதுமில்லை. ஞானிகள் என மதிக்கப்படுகிற நாம் நிலையற்ற நீச காரியங்களைப் பற்றி அதிகக் கவலை கொள்கிறோம், ஆனால் நமது உள்ளரங்கச் சீவியத்தைப் பற்றி வெகு அரிதாய் புலன்களை முழுதும் அடக்கி யோசனை செய்கிறோம்; இதென்ன வென்றும், எவ்வித புத்தியாலே தான் தூண்டப்படுகிறோமென்றும், எதற்காக இவ்விதம் செய்கிறோமென்றும் தெரியவில்லை.
4. ஐயோ! சற்றுநேரம் மன அடக்கம் அனுசரித்த பிறகு உடனே வெளிப் பராக்குகளினால் அலைக்கழிக்கப்படுகிறோம்; மேலும் நமது செயல்களை நுணுநுணுக்கமாய்ப் பரிசோதிக்காதிருக்கிறோம். நமது பற்றுதல்கள் எதன்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன என்று சரியாய்க் கவனிக்கிறோமில்லை; அவற்றின் அசுத்தம் முழுமையும் பார்த்துக் கஸ்திப்படுகிறோமில்லை. “மாமிசமெனப்பட்ட எதுவும் தன் மார்க்கத் தைக் கெடுத்து விட்டது”; ஆனதால் வெள்ளப்பெருக்கு வந்தது. பற்றுதல்கள் ஒழுங்கற்றவைகளாயிருக்கும்போது, அவற்றால் ஏவப் பட்டு நாம் செய்யும் செயல்களும் ஒழுங்கற்றவைகளாகின்றன; அவ்விதம் நம் ஆத்துமத்தின் பலவீனமெல்லாம் வெளிப்படுகின்றது. நற்சீவியத்தின் கனி சுத்த இருதயத்தினின்றே உண்டாகின்றது.
5. ஒருவன் எவ்வளவுக்குச் செய்தானென்று கேட்பது உண்டு; ஆனால் சுத்தக் கருத்தோடு செய்தானாவென்று விசாரிக்க அக்கறையேயில்லை. ஒருவன் பெரும் வீரனா, பெரும் செல்வந்தனா, அழகுள்ளவனா, விவேகியோ, அவன் நன்றாய் எழுதுகிறவனோ, நல்ல பாடகனா, நல்ல வேலைக்காரனாவென்று விசாரிப்பதுண்டு; ஆனால் மனத் தரித்திரனா, பொறுமை சாந்தமுள்ளவனா, பக்தியுள்ளவனோ, உள்ளரங்க சீவியத்தை நாடினவனோ என்று அவ்வளவாய் அநேகர் விசாரிப்பதில்லை. சுபாவக் குணமானது மனிதருடைய வெளிச் செயல் களைக் கவனிக்கிறது. ஆனால் வரப்பிரசாதமானது உட்கருத்தை உற்றுப் பார்க்கின்றது. சுபாவம் அடிக்கடி மோசம் போகின்றது, வரப்பிரசாதமோ மோசம் போகாதபடி தேவன் மட்டில் நம்பிக்கை வைக்கிறது.
யோசனை
அப்போஸ்தலர் சொல்லுவதுபோல “நமது சீவியம் சேசுகிறீஸ்து நாதரோடு சர்வேசுரனிடத்தில் மறைக்கப்படும் வரையில்” நாம் அவருக்கு முழுமையும் சொந்தமாவதில்லை, பிதாவோடும் சுதனோடும் நாம் ஒன்றாகவில்லை, ஐக்கியமாகவில்லை, சர்வேசுரனுக்கும் நமக்கும் இடையில் ஏதோ ஒன்றிருக்கின்றது; அதேதெனில் நம்மீதும் சிருஷ்டிகள் மீதும் நாம் வைத்திருக்கிற பற்றுதல்தான்; அதனால் நமது சிநேகம் பிரிவுபட்டிருக்கிறது. ஒரு சமயத்தில் பரலோகத்தை நோக்கித் தாவுகிறோம், மற்றோர் சமயத்தில் பூமியில் நகருகிறோம். சேசுநாதரோடு சர்வேசுரனிடம் மறைவுள்ள சீவியம் சீவிப்பதற்கோ பூமியோடு நம்மைக் கட்டியிருக்கும் கட்டுகள் அனைத்தையும் அறுத்து விட வேண்டியது. அப்போது கடந்துபோகிற சகலத் தினின்று பிரிந்து, தெய்வீகத்தன்மையால் போர்த்தப்பட்டு, ஆத்துமம் அவரை மாத்திரம் பார்க்கின்றது. நம்மால் கண்டுபிடியாத ஆச்சரியமான விதமாய் அவர் வெளிப்படுத்தும் உண்மையிலும் நேசத்திலும் மாத்திரம் சீவிக்கிறது. அது சுதனோடு அந்நியோந்நிய மாய் ஒன்றித்து, அவரால் பிதாவோடு சேர்க்கப்படும்போது, அதற்கு மாதிரிகையும் மணவாளருமான சேசுகிறீஸ்துநாதர் அதை அதிகமதிக மாய்த் தமது சாயலாக்குகிறார். தாம் பட்ட பாடுகளைப் படவேண்டு மென்று, அதுவும் தம்மைப் போலக் கீழ்ப்படிதலோடும் பொறுமை யோடும், படவேண்டுமென்று ஆசிக்கிறார். சில சமயங்களில் அதன் பிரமாணிக்கத்திற்குச் சம்பாவனையாக அதைத் தாபோர் மலைக்குக் கூட்டிக் கொண்டு போவதுண்டு, ஆனால் அநேகமாய் அதை ஒலிவேத்துத் தோட்டத்திற்கும், அன்னாஸ், கைப்பாஸ், பிலாத்துஸ் முன்பாகவும், கல்வாரி மலைக்கும் கொண்டு போய்த் தமது பாடு களைக் காண்பிக்கிறார். அவர் ஆறுதல் தந்தாலும் சரி, கைவிட்டாலும் சரி, ஆன்மாவுடைய புண்ணிய வளர்ச்சிக்கு உதவுகிறது; ஏனெனில் அது இன்பத்திலும் துன்பத்திலும் நேசிக்கிறது, நேசிப்பதில் ஒருபோதும் சலிப்படைவதில்லை; தன்னை அர்ச்சிஷ்டதனத்திற்கு அழைக்கும் கடவுளை நேசிக்கிறது. அமைதியோடு அவரிடத்தில், அவருடைய சித்தத்தில் இளைப்பாறுகின்றது. ஆனால் இலெளகீகக் காரியங்களில் இருந்து முற்றும் அகலாத ஆத்துமம் எப்போதும் கலங்கிச் சங்கடப்படுகின்றது; இருளில் நடக்கின்றது; ஆயிரம் கவலைகள் அதை வருத்துகின்றன. ஆனதால் நமது விலங்குகளைச் சீக்கிரம் தறித்து விட்டு சேசுவை மாத்திரம் தேடி அவரை மாத்திரம் ஆசிப்போமாக: “யாரிடத்தில் நாம் போகிறது? அவரிடத்தில் அல்லவா நித்திய சீவியத்தின் வார்த்தைகள் உள்ளன.” ஆதலால் அவரைப் பின்செல்வதற்காகச் சகலத்தையும் விட்டுவிட்டு, “மரித்தவர்கள் மரித்தவர்களை அடக்கம் செய்ய விட்டு விடுவோமாக.”
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠