இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

30. தேவ உதவியை மன்றடிப் பிரசாதத்தை மறுபடியும் அடைய நம்பிக்கையாயிருப்பது

1. (கிறீஸ்துநாதர்) மகனே! “துன்பகாலத்தில் உறுதிப்படுத்துகிற தேவன் நாமே.” நீ வருந்தும்போது நம்மிடம் வரக் கடவாய். நீ தாமதமாய்ச் செபத்தைப் பயன்படுத்திக் கொள்வதே பரலோக ஆறுதலைப் பெறுவதற்குப் முதன்மையான தடையாகும். ஏனெனில் நீ நம்மைநோக்கி வேண்டிக்கொள்கிறதற்கு முந்தியே, வெளியில் பற்பல ஆறுதல் தேடி வெளி உல்லாசங்களில் பழகுகிறாய். அதனால் உனக்குப் பயன் ஆவதில்லையென்று பார்த்தபின், நாமே நம்மை விரும்புகிறவர்களை இரட்சிக்கிறோம் என்றும், நம்மையன்றி தக்க உதவியும், பிரயோசனமுள்ள ஆலோசனையும், நிலைமையான மருந்தும் கிடையாதென்றும் கண்டுபிடிக்கிறாய்.

2. ஆனால் இப்போது புயல் அமர்ந்து உன் புத்தி நிலைக்கு வந்திருக்க, நமது இரக்கத்தின் மிகுதியைக் கண்டு திடப்படுத்திக் கொள்; ஏனெனில் ஆண்டவர் சொல்லுகிறதாவது: உன் மனதை, ஏறக்குறைய மாத்திரமல்ல, ஆனால் அதிகமாயும் செவ்வையாயும் மீண்டும் உறுதிப்படுத்த உன் அருகில் நிற்கிறேன். நமக்குக் கடினமான காரியம் யாதொன்றுண்டோ? அல்லது தான் சொன்னதைச் செய்யாதவனுக்கு நாம் சமமாவோமோ? உன் விசுவாசம் எங்கே? உறுதியாயும் நிலைமையாயுமிரு. பொறுமையும் தைரியமும் உள்ளவனாயிரு. தக்க காலத்தில் உனக்கு ஆறுதல் உண்டாகும். நமக்காகக் காத்திரு, அவசரப்படாதே: “நாம் வந்து உன்னைக் குணப்படுத்துவோம்.” உன்னை வருத்துவது ஒரு வெறும் சோதனை, உன்னைப் பயமுறுத்துவது ஒரு வீண் அச்சம். நிச்சயமற்ற எதிர் காலத்துச் சம்பவங்களின்மேல் கவலைப்படுவதால், கஸ்தியின்மேல் கஸ்தி உனக்குண்டாகுமே தவிர மற்றென்ன பிரயோசனம்? அன்றைய துன்பம் அன்றைக்குப் போதுமானது. சிலவிசை ஒருக்காலும் சம்பவிக்கப் போகாத காரியங்களைக் குறித்துக் கலக்கம் கொள்வதாவது அல்லது சந்தோஷப்படுவதாவது வீணும் வியர்த்தமும் அல்லவா?

3. ஆனால் இவ்வித வீண் சிந்தைகளால் மயக்கம் கொண்டு திகைப்பது மனுஷீகத்துக்கு உரியது; சத்துருவின் தூண்டுதலில் இவ்வளவு எளிதாய் இழுக்கப்படுவது பலவீனமுள்ள மனதின் அடையாளம். உன்னை ஏய்க்கவும் ஏமாற்றவும் அச்சத்துராதி யாதோர் வித்தியாசமின்றி மெய்யும் சொல்லும், பொய்யும் சொல்லும்; இப்போதைய காரியங்களின்மேல் பற்றுதலையாவது, எதிர்காலக் காரியங்களின்மேல் பயத்தையாவது உபயோகிக்கும். ஆதலால் நீ மனதில் கலக்கம் கொள்ள வேண்டாம், பயப்படவும் வேண்டாம்; நம்மை நம்பு, நமது இரக்கத்தில் உன் நம்பிக்கையை வை. நாம் உன்னைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கிறோமென்று நீ நினைக்கும் போது, அநேகமாய் உன் அருகில் இருக்கிறோம். எல்லாம் முழுகிப் போயிற்று என்று நீ எண்ணும்போது, அநேகமாய் அதிக பேறுபலன் பெற்றுக்கொள்ள அதுவே சமயமாயிருக்கிறது. நீ ஒன்றுக்குக் காத்திருக்க விரோதமானதொன்று சம்பவித்தால் எல்லாம் போய் விட்டதென்று நினையாதே. முதல் மனப்போக்கின்படி தீர்மானம் செய்யாதே; எப்பக்கத்திலுமிருந்து துன்பம் வந்தாலும், இனி அதற்குத் தப்பித்துக்கொள்ள நம்பிக்கையற்றுப் போயிற்றென்று எண்ணுவதுபோல் கஸ்திக்கு இடம் கொடுத்து அதில் அமிழ்ந்து போகக்கூடாது.

4. சில காலத்திற்கு ஏதாவதொரு துன்பத்தை நாம் உனக்கு அனுப்பினாலும், அல்லது உன்னை உன் ஆசைக்கடுத்த ஆறுதலின்றி விட்டாலும், நீ முற்றும் கைவிடப்பட்டாய் என்று நினையாதே; அப்படியே துன்பப்பட்டு நீ மோட்ச இராச்சியம் சேர வேண்டியது. உனக்கும் சரி, நமது தாசர்களுக்கும் சரி, எல்லாம் உங்கள் இஷ்டப்படி அனுகூலப்படுகிறதைவிட, நீங்கள் துன்பத்தால் வருத்தப் படுவது அதிகப் பிரயோசனம் என்பதற்குச் சந்தேகமில்லை. அதிக மறைவான கருத்துக்களையும் நாம் அறிவோம்; இடையிடையே ஆறுதலின்றி நீ கைவிடப்பட்டிருக்கிறது உன் இரட்சணியத்திற்கு மிக உதவியாயிருக்கிறது; ஏனெனில் அப்படியில்லாவிடில், உனது புண்ணிய வளர்ச்சியைக் கண்டு கர்வம் கொள்வாய். உன்னிடத்திலில்லாத புண்ணியம் உண்டென்று சந்தோஷத்தோடு எண்ணத் துணிவாய். நாம் கொடுத்ததை எடுத்துவிடவும், நமக்கு இஷ்டமானபோது திரும்பக் கொடுக்கவும் நம்மாலாகும். நாம் உனக்குக் கொடுக்கிறது நம்முடையதாக நிற்கிறது; ஆதலால் கொடுத்ததை நாம் எடுத்துக் கொள்ளும்போது உன்னுடையதை நாம் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் “நன்மை எல்லாமும், உத்தம வரமெல்லாமும்” நமக்கே சொந்தமாயிருக்கிறது. நாம் உனக்கு யாதோர் துன்பமாவது நெருக்கிடையாவது அனுப்பினால், முறையிடாதே, உன் மனது கலங்காதிருக்கட்டும். நாம் ஒரு கணத்தில் உதவி செய்து உன் துன்பத்தை இன்பமாக மாற்றக்கூடும். ஆயினும் நாம் அவ்விதம் உன்னை நடத்தும்போது நீதியுள்ளவராயும் தோத்திரத்திற்குரியவ ராயும் இருக்கிறோம்.

5. நீ அதைச் சரியாயும், அது இருக்கிறபடியேயும் கண்டு பிடித்தால் உனக்குத் துன்பம் வரும்போது, நீ ஒருபோதும் இவ்வளவு மனங்கலங்கி வருத்தப்பட மாட்டாய். அதற்கு மாறாக அதிக சந்தோஷப்பட்டு நமக்கு நன்றி செலுத்த வேண்டியவனாவாய். அதுமாத்திரமல்ல, மிகுந்த துன்பங்களால் உன்னை வருத்திக் கொடூர மாய் நடத்துவோமானால் அது உனக்கு ஏக சந்தோஷமாயிருக்க வேண்டியது. “பிதா நம்மை நேசித்தது போல நாமும் உங்களை நேசித்தோம் என நமது பிரிய சீஷர்களுக்குத் திருவுளம்பற்றின நாம், அவர்களை எதற்காக அனுப்பினோமென்று கேட்டால், இவ்வுலக சுகங்களை அனுபவிக்க அல்ல, ஆனால் பலமான யுத்தம் செய்யத்தான், சோம்பலாயிருக்க அல்ல, ஆனால் பொறுமையில் அநேக புண்ணியப் பலன்களைத் தரத்தான் அவர்களை அனுப்பினோம். மகனே! இவ்வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்.

யோசனை

தற்கால சீவியம் கடந்தொழிந்து போகிற சீவியமென்று அறிந்திருந்தபோதிலும் அநேகர் இந்நிலையில்லாச் சீவியத்திலேயே தங்கள் கவனமெல்லாம் செலுத்தி வருவதும், இதைக் கொண்டு சகலத்தையும் தீர்மானிப்பதும் மிகவும் ஆச்சரியத்துக்குரியதாயிருக் கின்றது. சந்தோஷத்தில் காலத்தைச் செலவழிக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களைப் பூரணமாக ஆட்கொண்டிருக்கிறது. இவ்வுலகத்திலிராத, இவ்வுலகத்திலிருக்கக் கூடுமாயிராத சந்தோஷத்தை அலைந்து தேடிப் பார்க்கிறார்கள். ஆனால் ஐயோ! மோசம் போகிறார்கள். இவ்வுலகச் சுக சிற்றின்பத்திலும் ஆஸ்தி பெருமையிலும் அதையடையலாம் என்றெண்ணுகிறார்கள். சிலர் அதைத் தேடியும் காணாமல் களைத்துப்போய் “எல்லாம் வெறுமை யென்றும் எல்லாம் மனத்துன்பமென்றும், சூரியனின் கீழ் செய்யப் படும் வேலைகளால் மனிதனுக்கு யாதோர் பிரயோசனமும் உண்டாவ தில்லை” என்றும் கண்டுகொள்ளுகிறார்கள். வேறு சிலர் இவ்வுலக காரியங்களின் ஒன்றுமில்லாமையைக் கண்டு சர்வேசுரன் பக்கமாய்த் திரும்புகிறார்கள்; ஆனால் தாங்கள் ஆசிக்கும் பாக்கியத்தை இவ்வுலகத் திலேயே அடையலாம் என்றெண்ணுகிறார்கள்; அடையாததினால் ஏக்கப்படுகிறார்கள், முறையிடுகிறார்கள்; ஏனெனில் சில சமயங் களில் சர்வேசுரன் தமது வரப்பிரசாதங்களை எடுத்துவிட்டு அவர் களைத் துன்பங்களினாலும் சோதனைகளினாலும் பரிசோதிக்கிறார். மனித சுபாவம் பலவீனமுள்ளதென்றும், இந்த நிலையில் எவ்விதச் சந்தோஷத்தையும் அனுபவிக்கச் சக்தியற்றதென்றும், அவர்கள் முறைப்படும் துன்பங்கள் ஆத்துமங்களின் பரலோக வைத்தியரால் உபயோகிக்கப்படும் அவசியமான மருந்துகளென்றும், பூலோகத்தில் நமது சகல நம்பிக்கையும் சகல சமாதானமும் நம்மை முழுதும் அவரிடத்தில் கையளித்து விடுவதில் அடங்கியிருக்கிறதென்றும், அவர்கள் கண்டுபிடிப்பதில்லை. ஆனதினால்தான் தீர்க்கதரிசி இராஜா அடிக்கடி: “ஆண்டவரே! என் பேரில் இரக்கமாயிரும், ஏனெனில் நான் வியாதியாயிருக்கிறேன்; என்னைக் குணப்படுத்தும், ஏனெனில் என் வியாதி என் எலும்புகளை ஊடுருவினது; எங்கள் வியாதிகளை எல்லாம் சுகப்படுத்துகிற நீர், என் ஆத்துமத்தைக் குணப் படுத்தும்” என்று வேண்டிக்கொள்வார். ஆனதால் இச்சீவியத்தில், அமைந்த மனது, பொறுமை, ஞான இருளிலும் மன வியாகுலத்திலும் அமரிக்கையான கீழ்ப்படிதல் இருக்க வேண்டியது; பிறகு வெகு சீக்கிரத்தில் மெய்யான சீவியத்தில் முகத்திற்கு முகம் நீ தரிசிக்கும் கடவுளால் இளைப்பாற்றியும் நித்திய ஐக்கிய சந்தோஷமும் முடியாத பாக்கியமும் உனக்குத் தந்தருளப்படும்.