இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

29. துன்பம் நேர்ந்த போது சர்வேசுரனை மன்றாடித் துதிக்க வேண்டிய விதம்

1. (சீஷன்) இந்தச் சோதனை, இந்தத் துன்பம் எனக்கு வரச் சித்தமாயிருந்த “ஆண்டவரே! என்றென்றும் உமது நாமம் வாழ்த்தப் படக்கடவது!” அதற்குத் தப்பித்துக் கொள்ள என்னால் முடியாது; ஆனால் நீர் எனக்கு உதவி செய்து, அதை எனக்கு நன்மையாக மாற்றும்படி நான் உம்மையணுகி வருவது அவசரம். ஆண்டவரே, நான் இதோ துன்பத்திலிருக்கிறேன்; என் இருதயத்திற்கு வசதியேயில்லை, இந்தச் சோதனையால் மிகவும் வேதனைப்படுகிறேன். இப்போது, நேசப் பிதாவே! நான் என்ன சொல்வேன்? துன்பங்களில் அகப்பட்டுக் கொண்டேன், “இம்மணி நேரத்தினின்று என்னை இரட்சித்தருளும்.” என்னை வெகுவாய்ச் சிறுமைப்படுத்தியபின் என்னை இரட்சிப்பீராதலால் உமது மகிமை விளங்கும்; அதற்காக எனக்கு இந்தக் கடினமான நேரம் நேரிட்டது. ஆண்டவரே! என்னைக் கைதூக்கியருளும்; ஏழையாகிய நான் என்ன செய்யக் கூடும்? உம்மையன்றி யாரிடம் போவேன்? ஆண்டவரே! இந்தத் தடவைக்கும் எனக்குப் பொறுமை தந்தருளும். என் சர்வேசுரா! எனக்கு உதவி செய்தருளும்; செய்வீராகில் நான் எவ்வளவுதான் துன்பத்தில் மூழ்கியிருந்தாலும் பயப்பட மாட்டேன்.

2. இந்தப் பொல்லாங்குகளுக்கு நடுவே நான் என்ன சொல் வேன்? ஆண்டவரே! “உமது சித்தத்தின்படி ஆகட்டும்.” துன்பப் படவும் துயரம் அனுபவிக்கவும் நான் மெய்யாகவே தகுதியுடை யவனாய் இருக்கிறேன். ஆதலால் நான் அவைகளைச் சகிக்க வேண்டியதுதான். “புயல் அமர்ந்து நல்ல காலம் வருகிற வரையில்” நான் இவைகளைப் பொறுமையாய்ச் சகிப்பேனாக. ஆயினும் இந்தச் சோதனையில் நான் விழாதபடி, அதை என்னை விட்டகற்றவும் அதன் அகோரத்தைத் தணிக்கவும் உமது சர்வ வல்லபமுள்ள கரத்தால் கூடும். முன்னால் அவ்விதமே அநேக தடவை செய்தருளினீர். என் தேவனே, என் தயாபரரே! இந்த மாற்றம் எனக்கு எம்மாத்திரம் அரிதாயிருக்கிறதோ, அம்மாத்திரத்திற்கும் அது உன்னத கடவுளின் கரத்துக்கு எளிதாயிருக்கின்றது.

யோசனை

சோதிக்கப்படுகிற ஆத்துமம் முதன்முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், தன்னைத்தானே தாழ்த்தித் தன் பலவீனத்தை ஒத்துக் கொண்டு உடனே உயிருள்ள விசுவாசத்தோடு, தனக்குப் பலமான கடவுள் ஒருவரையே நோக்கி: “ஆண்டவரே என்னை இரட்சியும், நான் சாகப் போகிறேன்” என்று மன்றாடினால் அவர் இந்த நிர்ப்பாக்கிய ஆத்துமத்திற்கு உதவி செய்ய விரைந்து வருவார், அதற்கு உதவியாகத் தமது சர்வ வல்லபமுள்ள கரத்தை நீட்டுவார். காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுவார், பெருத்த அமைதி உண்டாகும். இப்படியே இன்னும் துன்பங்களால் இருதயம் நொறுங்கிப் போய்க் கஸ்தியால் வருந்தும்போது என்ன செய்யும்! நமது ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதருடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய மடியில் சரணடையும்; அவர் இரக்கமுள்ள பிதா, ஆறுதல் தரும் பிதா; நமது துன்பங்களில் நமக்கு ஆறுதல் செய்கிறார். ஏனெனில் சேசுகிறீஸ்துநாதருடைய பாடுகள் நம்மிடத்தில் மிகுதியா யிருப்பதுபோலவே, நமது ஆறுதலும் சேசுகிறீஸ்துநாதரால் மிகுதி யாகிறது. அப்போது நமது ஆத்துமம் சேசுநாதருடைய ஆத்துமத் தைப் போல், “மரணமட்டும் கஸ்தியாயிருந்தால்” என் பிதாவே! “இந்தக் கசப்பான பாத்திரம் என்னை விட்டகன்று போகக் கடவது” என்று அவரோடு சொல்லுவோமேயானால், “என்னுடைய மனதல்ல, ஆனால் உமது சித்தமே நிறைவேறக்கடவது” என்றும் அவரோடு சேர்ந்து சொல்லுவோம்.