இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

28. ஆவலாதி (அவதூறு) பேசுகிற நாவுகளுக்குப் பயப்படாமை

1. (கிறீஸ்துநாதர்) மகனே! யாதொருவன் உன் பேரில் தீங்கான எண்ணம் கொண்டாலும், உனக்கு வருத்தமுண்டாகும் பேச்சுக் களைப் பேசினாலும், நீ அதனால் வருத்தப்படாதே. நீ உன்னைப் பற்றியே இன்னும் அதிக நீச எண்ணம் கொண்டு, மற்றெவரையும் விட நீ பலவீனனாயிருக்கிறாயென்று நினைத்துக்கொள்ளக் கடவாய். நீ உண்மையாகவே அடக்க சீவியத்தில் சீவிக்கிறவனாயிருப்பாயாகில், பறந்துபோகிற வார்த்தைகளைக் கொஞ்சமாகிலும் சட்டைபண்ண மாட்டாய். சஞ்சலக் காலத்தில் வாய் திறவாதிருந்து உள்ளத்தை நமது பக்கமாய்த் திருப்பி மனித தீர்மானத்தைப் பற்றிக் கலங்கா திருப்பது சொற்பமான விமரிசையல்ல. மனிதருடைய தீர்மானத்தின் பேரில் உன் சமாதானம் ஊன்றியிருக்க வேண்டாம். நீ நல்லவ னென்றும் கெட்டவனென்றும் மனிதர் தீர்மானமாய்ப் பேசினாலும், அதனால் நீ வேறு மனிதனாகப் போகிறதில்லை. மெய்யான சமாதானமும் மெய்யான மகிமையும் எங்கே இருக்கின்றன? நம்மிட மல்லவா? மனிதருக்குப் பிரியப்பட ஆசியாமலும், அவர்களுக்குப் பிரியப்படாதிருக்க அஞ்சாமலுமிருக்கிறவன் வெகு சமாதானம் அனுபவிப்பான். ஒழுங்கற்ற ஆசையாலும் வீண் அச்சத்தாலும்தான் மனக்கலக்கமும் வெளிப் பராக்கும் உண்டாகின்றன.

யோசனை

சிலர் கடவுளுடைய தீர்வைக்கு அஞ்சுவதைவிட மனிதருடைய தீர்மானங்களுக்கு அஞ்சுகிறார்கள். அது சொல்ல முடியாத பைத்தியம். நாம் சர்வேசுரனுடைய சந்நிதானத்தில் தோன்றும் போது, சிருஷ்டிகளுடைய நிந்தையினாலாவது மதிப்பினாலாவது நமக்கு உண்டாவது என்ன? அவர்களுடைய வீண் நினைவுகளால் நாம் தண்டிக்கப்படப் போவதுமில்லை, மன்னிக்கப்படப் போவது மில்லை, உண்மைதான் நம்மைத் தீர்மானிக்கும். அதனுடைய தீர்மானம் நித்தியமானது. சீவிய காலத்தில் புகழ்ச்சிகளினால் கர்வம் கொண்டவன், தன் இரகசியப் பாவங்களுக்காக உத்தரிக்கப் போவான். அவன் உத்தரிக்கும் இடத்தில் “அழுகையும் பற்கடிப்பும், சாகாத புழுவுமுண்டு.” நிந்தைகளிலும் தூஷணங்களிலும் சீவித்தவன், “என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே வா; உலகாதி முதல் உனக்காக ஆயத்தம் செய்யப்பட்ட இராசாங்கத்தை அனுபவிக்க வா!” என்கிற வாக்கியங்களைக் கேட்பான்; ஏனெனில், கடவுளுடைய தீர்மானங்கள் நமது தீர்மானங்களைப் போலல்ல, அவருடைய நீதி நமது நீதியைப் போலல்ல: “அவர் பாதாளத் தினுடையவும் மனிதன் இருதயத்தினுடையவும் ஆழத்தைச் சோதிக்கிறார்.” அவரை மாத்திரம் கவனி, மற்றதைச் சட்டை பண்ணாதே. கல்லறை வாசலில் நாம் விட்டு விடும் காரியங்களால் என்ன பிரயோசனம்? வருந்தித் தேடும் புகழ்ச்சி மனச்சாட்சியை அசுத்தப்படுத்துகின்றது. செய்த நன்மையினால் உண்டான பேறுபலனை வீணாக்குகின்றது. “நீங்கள் மனிதரால் காணப்படும் பொருட்டு, அவர்களுக்கு முன்பாக உங்கள் நற்கிரியைகளைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். இல்லாவிட்டால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் சம்பாவனை அடைய மாட்டீர்கள். ஆகையால் நீ தர்மம் செய்கிற போது, கள்ள ஞானிகள் மனிதரால் சங்கிக்கப்படுவதற்காகத் தேவாலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல உனக்கு முன்னே எக்காளம் ஊதுவிக்க வேண்டாம். அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து விட்டார்கள் என்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோவென்றால், தருமஞ் செய்கையில் உன் தருமம் மறைவாயிருக்கத் தக்கதாக உன் வலது கை செய்வதை இடது கை அறியாதிருக்கக் கடவது. அப்போது மறைவிலே காண்கிற உன் பிதா உனக்குச் சம்பாவனையளிப்பார். அன்றியும் நீங்கள் செபம் செய்யும்போது மனிதரால் காணப்படும்பொருட்டு தேவாலயங்களிலும் தெருக் கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புகிற கள்ள ஞானி களைப்போல் செய்ய வேண்டாம்; அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்துவிட்டார்கள் என்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல் கிறேன். நீயோ, செபம் செய்யும்போது, உன் அறைக்குள் பிரவேசித்துக் கதவை அடைத்து அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக் கொள். அப்போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதாவும் உனக்குச் சம்பாவனை அளிப்பார்.”