1. (கிறீஸ்துநாதர்) என் மகனே, சர்வத்தையும் உன் கையில் வசப்படுத்தும்படி, நீ உன்னை முழுமையும் கையளித்து, உனக்கென்று உன்னிடம் யாதொன்றையும் வைத்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஒவ்வொரு காரியத்தின் பேரில் எவ்வளவு ஆசையும் பிரியமும் வைப் பாயோ, அவ்வளவுக்கு அதன்பேரில் பற்றுதலாயிருப்பாய் என்றறிக. ஆகையால் உலகக் காரியங்களில் நீ வைத்த பற்றுதல் பரிசுத்தமாயும் கபடற்றதாயும் ஒழுங்குள்ளதாயும் இருக்குமானால் அவற்றிற்கு அடிமையாக மாட்டாய். நீ வைத்துக் கொள்ளக் கூடாதவைகளை விரும்பாதே. உன் ஞான சீவியத்திற்குத் தடையாயிருந்து, உன் இருதய சுயாதீனத்திற்கு விக்கினமாயிருக்கிறவைகளை உன் வசத்தில் வைத்துக் கொள்ளப் பார்க்காதே. உனக்குச் சொந்தமாயிருப்பதும் நீ விரும்பு வதுமான எல்லாவற்றோடு உன்னை முழுமையும் நம்மிடம் முழுமன துடன் ஒப்புவிக்காதிருப்பது ஆச்சரியமாயிருக்கின்றது.
2. ஏன் வீண் துன்பத்தால் மடிந்து போகிறாய்? ஏன் வீணான கவலைகளால் ஏக்கங் கொள்கிறாய்? நமது சித்தத்திற்கு அமைந்து நட; உனக்கு ஒரு நஷ்டமும் நேரிடாது. உன் ஆசையைத் தீர்க்கவோ, உன் சொந்த இஷ்டப்படி மேன்மேலும் நடக்கவோ நீ இதை அல்லது அதைத் தேடியும், இங்கே அல்லது அங்கே இருக்க ஆசைப்பட்டும் வந்தால், அமரிக்கையிலும் இளைப்பாற்றியிலும் நீ ஒருபோதும் நிலை கொள்ள மாட்டாய்; ஏனெனில் எந்தக் காரியத்திலும் குறை ஏதாவது தோன்றும். எந்த இடத்திலும் யாராவதொரு எதிராளி இருப்பான்.
3. இவ்வுலக நன்மைகளைச் சம்பாதித்துத் தாராளமாய்க் கைப்பற்றுவது அல்ல, மாறாக அவைகளை நிந்தித்து அவைகளின் மேல் உள்ள ஆசையை முற்றும் ஒழிப்பதே பிரயோசனமாகும். பணத்தையும் ஆஸ்தியையும் குறித்து மாத்திரமல்ல, மகிமையைத் தேடுவதையும், வீண் புகழ்ச்சியை விரும்புவதையும் குறித்தும் இவ்விதம் சொன்னோம்; இவை யெல்லாம் உலகத்தோடு கடந்து போகின்றன. தீவிர பக்தி இல்லாவிடில் எந்த இடமும் பாதுகாப் புள்ளதல்ல. உன் இருதயத்துக்கு அதன் மெய்யான அஸ்திவாரம் இல்லாவிட்டால், அதாவது நீ நம்மிடம் நிலைத்திராவிட்டால், வெளியில் தேடியடைந்த அமைதி நெடுநேரம் நில்லாது: நீ வேறோர் இடம் மாற்றிக்கொள்ளக் கூடும். அதனால் அதிக நல்லவனாக மாட்டாய், ஏனெனில் புதிய இடத்திலும், சமயம் வாய்க்கையில், நீ விலகத் தேடினதும் அதைவிட அதிகக் கேடுள்ளதும் நேரிடுவதாகக் கண்டுகொள்வாய்.
இருதய சுத்திகரத்தையும் தெய்வீக ஞானத்தையும் அடைகிறதற்குச் செபம்
4. (சீஷன்) ஆண்டவரே! இஸ்பிரீத்துசாந்துவின் அநுக்கிரகத் தால் என்னைத் திடப்படுத்தியருளும்; என்னிடத்தில் உள்ளரங்க மனிதனைப் பலப்படுத்தும், அற்பக் காரியத்தின் பேரிலாவது உயர்ந்த மதிப்புக்குரிய காரியத்தின் பேரிலாவது என் மனம் ஆசைப்படா திருக்கும் படி சகல வீண் விசாரக் கவலைகளினின்று என் இருதயத்தை மீட்டு இரட்சியும். எல்லாம் கடந்துபோகும் என்றும், நானும் அவைகளோடு மறைந்து போவேனென்றும் நான் உறுதியாய் நினைத்துக்கொள்ளும்படி எனக்கு அநுக்கிரகம் செய்தருளும். ஏனெனில் “இவ்வுலகத்தில் நிலைமையானது ஒன்றுமில்லை, எல்லாம் வீணானதும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கின்றது.” ஆ! இவ்விதம் யோசிக்கிறவன் எவ்வளவோ ஞானி! ஆண்டவரே, உம்மைச் சர்வத் துக்கும் மேலாகக் கண்டடையவும் உம்மை எல்லாத்துக்கும் மேலாக சுகித்துச் சிநேகிக்கவும் மற்றவைகளையெல்லாம் உள்ளது உள்ளபடியே உமது ஞான ஒழுங்கின்படி கண்டு தெளியவும் எனக்குத் தெய்வீக ஞானத்தைத் தந்தருளும். முகஸ்துதி செய்வோரை விலக்கத்தக்க பொறுமையையும், கோள் சொல்பவரைச் சகித்துக் கொள்ளத்தக்க பொறுமையையும், எனக்கு உதவியருளும்; ஏனெனில் காதில் விழும் கசப்பான வார்த்தைகளைப் பற்றிச் சஞ்சலப்படாதிருப்பதும், தகாத புகழ்ச்சி சொல்லிப் பசப்புகிறவர்களுக்குச் செவி கொடாதிருப்பதும் பலத்த ஞானம். துவக்கின வழியில் ஆபத்தின்றி நடப்பதற்கு இதுவே வழி.
யோசனை
மனிதன் எவ்வளவுதான் சொற்பமாய்த் தன்னைத் தேடினாலும், சர்வேசுரனை விட்டு அகன்று போகிறான். உடனே அவனுடைய மனதில் கலக்கம் உதிக்கின்றது. ஏனெனில் அவன் தன் ஆசையை அடைவதில்லை; அல்லது உடனே அருவருப்பு கொண்டு தன் நடத்தையினாலும் மனோவேதனையினாலும், சலிப்பினாலும், எப்போதும் உபாதிக்கப்படுகிறான். செல்வம் சம்பாதிக்க, அதிகாரம் செலுத்த, கெளரவப் பட்டங்கள் தரிக்க, மகிமையடைய ஆசைப் படுகிறான். வேலை செய்ய வேண்டியிருக்கின்றது, செலவிட வேண்டியிருக்கின்றது, பிரயாசைப்பட வேண்டியிருக்கின்றது. அநேகமாய் மனசாட்சிக்கு விரோதமாகவே நடக்க வேண்டியிருக் கின்றது. எப்படியானாலும் அவன் கொண்ட ஆசை நிறைவேறிற்று என்று வைத்துக் கொள்வோம். பணமோ, காசோ, மகிமையோ, பெருமையோ, செருக்கோ, செல்வாக்கோ, அவனுக்கு யாதோர் குறையுமில்லை; திருப்திதானா என்று அவனைக் கேட்டுப் பார்! அவன் வாயில் வருவதெல்லாம் முறைப்பாடு, அவன் உள்ளத்தில் கஸ்தி, மனதில் ஏக்கம்; இதுதான் அவன் கண்ட இலாபம். இவனையும், இவனைப் போன்றவர்களையும் பற்றித்தான் அப்போஸ்தலர்: “ஓ! செல்வந்தரே! இப்போது உங்கள் மேல் வரவிருக்கும் நிர்ப்பந்தங்களில் கண்ணீர் விடுங்கள், ஓலமிடுங்கள்! உலகத்தில் இன்பங்களிலும் சரீர சுக போகங்களிலும் சீவித்தீர்கள், பலியின் நாளுக்காக உங்களைத் தானே கொழுக்க வைத்தீர்கள்” என்றார். இப்படியாக வெகு ஆவலோடு இவ்வுலகத்தில் தேடின செல்வம், பெருமை சிலாக்கியம் எல்லாம் ஆத்துமத்தைத் திருப்திக்குள்ளாக்காமல் அது சோர்ந்து போகும்படி செய்கின்றன. மற்றோர் பக்கத்தில் சேசுநாதர் சுவாமியே நமக்கு அறிவித்திருக்கிறபடி, நமக்கு விசேஷ தேவ ஒத்தாசை இல்லாமல் போனால், அவை நம்மைக் கேட்டுக்குள்ளாக்குகின்றன. அதற்கு விரோதமாய், தன்னையே முழுதும் மறுத்தவன், சர்வேசுரன் மட்டில் மாத்திரம் முழு நம்பிக்கை வைத்தவன், ஒருபோதும் மாறாத சமாதானம் அனுபவிக்கிறான். துன்பமே அவனுக்கு இன்பமாகிறது, ஏனெனில் அது அவனுடைய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது, அவனுடைய நேசத்தைச் சுத்திகரிக்கிறது. ஒரு நிமிஷத்துத் துன்பம் நித்திய சந்தோஷத்திற்குக் காரணமாகின்றது. “ஆண்டவருடைய வருகை வரையிலும் பொறுமையில் நிலைத்திரு; பூமியின் விலை யுயர்ந்த கனியைச் சேகரிக்கும் நம்பிக்கையை முன்னிட்டுக் குடியானவன் முன்பின் இரு காலத்து மழைக்கும் பொறுமையோடு எதிர்பார்த்திருக்கிறான்; நீயும் அப்படியே பொறுமையாயிரு. ஏனெனில் ஆண்டவருடைய வருகை நெருங்குகின்றது.”
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠