இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

25. நிலையான இருதய சமாதானமும் மெய்யான புண்ணிய வர்த்திப்பும் எதிலே அடங்கியிருக்கிறதென்பது

1. (கிறீஸ்துநாதர்) மகனே! “சமாதானத்தை உங்களுக்கு விடுகிறோம், நம்முடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக் கிறோம்; உலகம் கொடுக்கிற சமாதானத்தைப் போலல்ல நாம் உங்களுக்குக் கொடுக்கிற சமாதானம்” என்று கூறியவர் நாமே. சமாதானத்தை எல்லாரும் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையான சமாதானத்தை அடைய எல்லாரும் பிரயாசைப்படுவதில்லை. இருதய தாழ்ச்சியும் சாந்த குணமும் உள்ளவர்களிடம் நமது சமாதானம் வாசம் செய்யும். மிகுந்த பொறுமையில் உன்னுடைய சமாதானம் அடங்கியிருக்கும். நீ நமக்குச் செவி கொடுத்து, நமது வாக்கியத்தைப் பின்செல்வாயாகில், ஆழ்ந்த சமாதானம் அனுபவிக்கக் கூடும்.

(சீஷன்) ஆகவே, ஆண்டவரே! நான் செய்ய வேண்டியதென்ன?

(கிறீஸ்துநாதர்) உன்னையும், நீ செய்வதையும் சொல்வதையும் எப்போதும் கவனித்துக்கொண்டு சகலத்திலும் நமக்கு மாத்திரமே பிரியப்படவும் நம்மையன்றி மற்றெதையும் விரும்பாமலும் தேடா மலும் இருக்கவும் கருத்தாயிரு. மேலும் மற்றவர்களுடைய செயல்கள் அல்லது பேச்சுகளைப் பற்றி வீண் தீர்மானம் செய்யாதே; உனக்குச் சம்பந்தப்படாத காரியங்களில் கலந்துகொள்ளாதே; அப்பொழுது உனக்குக் கலக்கம் சொற்பமாயிருக்கும், அல்லது அபூர்வமாகவே வரும்.

2. யாதோர் கலக்கமும் ஒருபோதும் கொள்ளாதிருப்பதும், இருதயத்திலாவது சரீரத்திலாவது யாதோர் துன்பமும் அநுபவியா திருப்பதும் நிகழ்காலத்தில் கிடைப்பதல்ல, அது நித்திய இளைப் பாற்றிக் காலத்தில் மாத்திரம் கிடைக்கும். ஆகையால் நீ யாதோர் துன்பமும் அனுபவியாதிருக்கிறபோது, மெய்யான சமாதானம் கண்டதாக எண்ணாதே. உனக்கு எதிராளி ஒருவனுமில்லாதிருந் தாலே எல்லாம் நலமாயிருக்கிறதென்று நினையாதே. உன் விருப் பப்படி சகலமும் நடப்பதினாலே உன் நிலை உத்தமமுள்ளதென்று யோசியாதே, உனக்கு மிகுந்த பக்திச் சுறுசுறுப்பும் ஆறுதலும் உண்டானாலும், அதைப்பற்றி உன்னைப் பெரியவனாகப் பாராட் டாதே, விசேஷமான விதமாய் தேவனாலே நேசிக்கப்பட்டவன் என்றும் எண்ணாதே. ஏனெனில் அவைகளினால் புண்ணியத்தின் மெய்யான நேசன் அறியப்பட மாட்டான், ஆத்துமத்தின் புண்ணிய வளர்ச்சியும் சாங்கோபாங்கமும் அவைகளில் அடங்கினதல்ல.

3. (சீஷன்) பின் எதில் ஆண்டவரே, அடங்கியிருக்கின்றது? (கிறீஸ்துநாதர்) மகனே! சகலத்தையும் ஒரே தராசில் சீர்தூக்கிப் பார்த்து நீ செல்வத்திலும் துன்பத்திலும் ஒரே சீராய் நன்றியறிதலில் நிலைத்திருக்கும் வண்ணம், ல் சொற்பக் காரியத்திலும் பெருங்காரியத் திலும், இக்காலத்திற்கும், நித்தியத்திற்கும், உன் சுய லாபத்தைத் தேடாமல், உன் முழு இருதயத்தோடு தெய்வ சித்தத்துக்கு உன்னை ஒப்புக்கொடுப்பதிலேதான் அடங்கியிருக்கின்றது. மன ஆறுதலற்றுப் போயிருக்கும்போது கூட இன்னும் அதிகப் பெரிய துன்பங்களை அனுபவிக்க உன் இருதயத்தை ஆயத்தப்படுத்தவும், இன்னின்ன கொடிய துன்பம் அனுபவிக்க வேண்டியது அநியாயமென்று எண்ணுவதற்கு மாறாக நமது ஏற்பாடுகள் அனைத்தையும் பரிசுத் தமும் நீதியுமுள்ளவையென மதித்துத் தோத்தரிக்கவும் தக்கதான உறுதியும் ஸ்திரமுமுள்ள நம்பிக்கை உன்னிடத்தில் உண்டானால், அப்போது சமாதானத்தின் உண்மையான வழியில் நேரே நடக் கிறாய்; அப்போது நீ திரும்பவும் நமது முகத்தைச் சந்தோஷமாய்த் தரிசிப்பாய் என்கிற தளராத நம்பிக்கையை வைத்துக் கொள்ளக் கூடும். உன்னைத்தானே முழுவதும் நிந்திக்க அறிந்திருப்பாயாகில் அப்போது, இப்பரதேசத்தில் கிடைக்கக் கூடுமான வரையில் ஏராளமான சமாதானம் அனுபவிப்பாய் என்றறியக் கடவாய்.

யோசனை

தன்னைத்தானே மறுத்தலிலும், தன்னைத்தானே நிந்திப்பதிலும், சர்வேசுரனுக்கு முன்பாகத் தன்னை நிர்மூலமாக்குவதிலும், சகல காரியங்களிலும் தேவ சித்தம் நிறைவேறும்படி மாத்திரம் ஆசித்துத் தேடுவதிலும், தன் சொந்தப் பிரியத்தைத் தேடாமல் சர்வேசுரன் கற்பிக்கிறவைகளுக்கு எப்போதும் தன்னைக் கையளித்து விடுவதிலும் மனிதனுடைய மகிமையும் சமாதானமும் அடங்கியிருக்கின்றன என்று நாம் அடிக்கடி சொல்லுவது அவசியம். நாம் சர்வேசுரனோடு அந்நியோந்நியமாயும் பரிசுத்தமாயும் ஒன்றித்திருக்க வேண்டு மானால் அவரிடத்தினின்றும் நாம் பெற்றுக்கொண்ட வரங்களை முதலாய் நாம் விட்டுப் பிரிய வேண்டியது. பக்தி உருக்கம், ஆறுதல்கள், தேவசிநேகத்தின் பலமான இன்பங்கள் நாம் அறியாமலே நமக்குக் கொடுக்கப்படுகின்றன, நாம் அறியாமலே நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன; நாம் அவைகள் மேல் மிஞ்சின பற்றுதல் வைத்தால், அவை மறைந்து போகும்போது துன்பத்திற்குள்ளாகிறோம். ஆனதால் சர்வேசுரனை மாத்திரம் தேடுவோமாக; கஸ்தியிலும், சந்தோஷத்திலும், கசப்பிலும், சர்வேசுரனை அவரைப் பற்றியே நேசிப்போமாக. ஆம் “ஆண்டவரே! உம்மை நான் நேசிப்பேன், எக்காலத்திற்கும் உம்மையே நான் வாழ்த்துவேன்,” நீரே எங்கள் சமாதானம், இந்தச் சமாதானத்தில் நான் நித்திரை கொள்வேன், நான் இளைப்பாறுவேன்.