இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

25. நமது நடவடிக்கை முழுவதையும் சுறுசுறுப்போடு திருத்தம் செய்யவேண்டியது

1. சர்வேசுரனுடைய ஊழியத்தில் விழிப்பாயும் சுறுசுறுப்பாயுமிரு. நீ உன்னைப்பற்றி அடிக்கடி யோசிக்க வேண்டியதாவது: ஏன் இங்கே வந்தாய்? உலகத்தை ஏன் விட்டாய்? சர்வேசுரனுக்காகச் சீவிக்கிறதற்கும், ஞான அறிவுடையோன் ஆகிறதற்குமல்லவா? ஆதலால் நீ புண்ணியத்தில் வளர்ச்சியடைய சுறுசுறுப்பாயிரு, உன் பிரயாசைகளின் சம்பாவனையைச் சீக்கிரத்தில் பெறுவாய்; அப்போது உன் இருதயத்தில் பயமும் நுழையாது, துன்பமுமிராது. இப்போது நீ படப்போகும் சொற்பப் பிரயாசைக்குச் சம்பாவனையாக, உனக்குப் பெரும் இளைப்பாற்றியையும் நித்திய சந்தோஷத்தையும் கண்டடைவாய். நீ பிரயாசைப்படுகிறதில் எந்நேரமும் பிரமாணிக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாய் இருந்தால், சந்தேகமறச் சர்வேசுரன் சம்பாவனையளிப்பதில் பிரமாணிக்கமும் தாராள குணமும் உள்ளவராயிருப்பார். நீ வெற்றி முடியடைவாயென்று உறுதியான நல்ல நம்பிக்கை உன்னிடமிருக்க வேண்டியது. ஆயினும் நீ புண்ணியத்தில் தளர்ந்து போகாதபடிக்கும், ஆங்காரம் கொள்ளாதபடிக்கும், அது நிச்சயம் என்று எண்ணாதே.

2. ஒருவன் ஏக்கம் பிடித்துப்போய் அடிக்கடி பயம் நம்பிக்கை இவைகளின் மத்தியில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் துயரத்தில் மூழ்கி ஒரு கோவிலில் பிரவேசித்து அங்கே ஒரு பீடத்திற்கு முன்பாகச் சாஷ்டாங்கமாக விழுந்து வேண்டிக்கொண்டிருக் கையில் தனக்குள்ளாக யோசித்து: ஓ! நான் புண்ணியத்தில் நிலைத்துக்கொள்வேன் என்று நான் அறிந்தால் எவ்வளவோ நலமாயிருக்குமென்று சொன்னான். உடனே அவன் செவியில் விழுந்த மறுமொழியாவது: “நீ அதை அறிந்தால் என்ன செய்ய மனதாயிருப்பாய்? அப்போது செய்ய இருப்பதை இப்போதே செய்துவா; அவ்விதம் செய்து வந்தால் ஆபத்தின்றி இருப்பாய்” என்று கேட்கப் பட்டது. உடனே அவன் ஆறுதலடைந்து தைரியம் கொண்டு தன்னைத் தேவ சித்தத்திற்கு ஒப்படைத்தான்; ஏக்கமும் கலக்கமும் நீங்கிற்று. அதன்மேல் தனக்குச் சம்பவிக்கப் போவதென்ன என்றறிய வீணாய்த் தேடினவனல்லன். ஆனால் எவ்வித நற்கிரியையைத் துவக்கி முடிப்பதென, சர்வேசுரனுடைய சித்தத்தையும் பிரியத் தையும் அறியவும், அதிக உத்தமமானது என்னவென்று தேடவும் அதிகமாய்க் கவனித்தான்.

3. ஆண்டவர்பேரில் நம்பிக்கை வைத்து நன்மை செய்; அப்போது பூமியில் சமாதானமாய் வாசம் செய்வாய், அதன் பலன்களைக்கொண்டு நீ போஷிக்கப்படுவாய் என்று தீர்க்கதரிசியானவர் வசனிக்கிறார். புண்ணியத்தில் வளர்ச்சியடைவதிலும் தங்களைத்தான் திருத்துவதிலும் சுறுசுறுப்பாய் முயல்வதற்கு அநேகரைத் தடுக்கும் தடை ஏதெனில்: கஷ்டத்திற்கு அஞ்சுவது, அல்லது ஞான யுத்தத்தில் ஆயாசம் அடைவதேயாம். உள்ளபடி தங்கள் சுபாவத்திற்கு அதிக கடினமாயும் அதிக விரோதமாயுமிருப்பவைகளைத் தைரியமாய் வெல்லப் பிரயாசைப்படுகிறவர்களே மற்றவர்களை விடப் புண்ணி யங்களில் வளர்ச்சியடைகிறார்கள். ஏனெனில் மனிதன் எம்மாத்திரத் திற்குத் தன்பேரில் தானே அதிகமாய் வெற்றிகொண்டு தன் மனதை ஒறுத்து வருகிறானோ, அம்மாத்திரத்திற்கும் அதிகமான வளர்ச்சி யடைகிறான், அதிகமான வரப்பிரசாதத்திற்குப் பாத்திரவானாகிறான். 

4. ஆனால் தன்னைத்தானே வெல்லவும், தன்னைத்தானே ஒறுக் கவும் எல்லோருக்குமே அவசியம் ஒரே அளவாயிருப்பதில்லை. ஆயினும் சுறுசுறுப்பாய்ப் பிரயாசைப்படுபவன், பாவ நாட்டங் களால் அதிகமாய் வருத்தப்பட்டிருந்த போதிலும், நல்ல ஒழுக்க முடையவனானால் புண்ணியத்தின் பேரில் குறைவான ஆசை வைத்திருக்கிறவனை விட புண்ணியத்தில் மிகுந்த வளர்ச்சி யடைவான். அதிக நல்லவனாவதற்கு இரண்டு காரியங்கள் விசேஷ மாய் உதவுகின்றன. என்னவெனில், தன் சுபாவத்தின் கெட்ட நாட்டங்களுக்கு தன்னைத்தானே வலுவந்தம் செய்து இடங் கொடாதிருப்பதும், தனக்கு எந்தப் புண்ணியம் அதிக அவசரமாய் இருக்கின்றதோ அதையடைய சுறுசுறுப்பாய்ப் பிரயாசைப் படுகிறதுமாம். மேலும் நீ மற்றவர்களிடம் கண்ட உனக்கு மிகவும் அருவருப்பாயிருக்கும் குறைகளை நீயே உன்னிடத்தில் விலக்கவும் வெல்லவும் அதிகமாய்ப் பிரயாசைப்படு.

5. புண்ணிய வளர்ச்சிக்கு எதையும் பிரயோகித்துவா; நன்மாதிரிகளைக் கண்டாலும் அல்லது அவைகளைப் பற்றிக் கேள்விப் பட்டாலும் அவைகளைக் கண்டுபாவிக்க உன்னைத் தூண்டிவிடு. மாறாகத் தகாத ஒன்றை நீ கண்டால் நீயும் அவ்விதம் செய்யாதபடி ஜாக்கிரதையாயிரு; சில விசை செய்திருந்தால் சீக்கிரமாய் அதைத் திருத்தக் கவலையாயிரு. நீ பிறர் பேரில் கண்ணுண்டாயிருப்பது போல பிறரும் உன்பேரில் கண்ணுண்டாயிருக்கிறார்கள். நம் சகோதரர்கள் பக்தி சுறுசுறுப்பு, ஒழுங்கு நல்லொழுக்கமுள்ளவர் களாய் இருப்பதைப் பார்க்கிறது எவ்வளவோ பிரியமும் சந்தோஷமு மானது; தங்கள் அந்தஸ்தின் கடமைகளை அனுசரியாமல் ஒழுங்கீன மாய்த் திரிகிறவர்களைப் பார்ப்பதோ எவ்வளவோ கஸ்திக்குரியதும் புலம்புதலுக்குரியதுமாயிருக்கிறது. தன் அந்தஸ்தின் கருத்தை அசட்டை பண்ணி தன்னைச் சேராத காரியங்களில் தன் புத்தியைச் செலுத்துவது எவ்வளவோ கெடுதியை விளைவிக்கின்றது. 

6. நீ எடுத்துக்கொண்ட பிரதிக்கினையை ஞாபகப்படுத்தி, சிலுவையிலறையுண்ட கிறீஸ்துநாதருடைய படத்தை உன் கண் முன்பாக வைத்துக்கொள். சர்வேசுரனுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து நெடுநாளாகியும், சேசுநாதருடைய சீவியத்திற்கு உன் சீவியம் ஒப்பாகும்படி நீ இதுவரையில் எடுத்த அவ்வளவு சொற்ப பிரயாசையைப் பற்றி நீ எவ்வளவோ வெட்கம் கொள்ள வேண்டியது. ஆண்டவருடைய மகா பரிசுத்த சீவியத்தையும் பாடுகளையும் கவன மாயும் பக்தியாயும் தியானித்து வருகிற சந்நியாசி அவைகளில் தனக்குப் பிரயோசனமும் அவசரமுமான யாவற்றையும் ஏராளமாய்க் கண்டடைகிறான்; சேசுநாதருக்குப் புறம்பாய் அதிக உத்தமமான எதையாவது அவன் தேடவேண்டிய கவலையில்லை. ஓ! சிலுவையில் அறையுண்ட சேசுநாதரைச் சரியாய் உணர்ந்தறிவோமாகில், எவ்வளவோ சீக்கிரத்தில் நாம் போதுமானமட்டும் ஞானத் தெளிவடைவோம்.

7. பக்தி சுறுசுறுப்புள்ள சந்நியாசி தனக்குக் கற்பிக்கப்படுகிற யாவற்றையும் நல்லமனதோடு ஏற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் செய்கிறான். அசட்டைத்தனமும் அசமந்தமுமான சந்நியாசியோ துன்பத்தின்மேல் துன்பப்படுகிறான், எப்பக்கத்திலும் இடையூறு அனுபவிக்கிறான்; ஏனெனில் அவனுக்கு மனச் சந்தோஷம் கிடை யாது, வெளி ஆறுதலைத் தேடுவதற்கோ வழியில்லை, ஒழுங்குக்கு உட்பட்டு நடவாத சந்நியாசி கனமான கேட்டுக்குள்ளாவான். கண்டிப்பானதைத் தள்ளிச் சுலபமானதைத் தேடுகிறவன் எப்போதும் சஞ்சலப்படுவான்; எப்போதும் ஏதாவதொன்று அவனுக்கு அருவருப்பாயிருக்கும்.

8. அவ்வளவு கண்டிப்பான தங்கள் மடத்து ஒழுங்குக்குக் கீழ்ப்படிந்து வருகிற மற்ற அநேக சந்நியாசிகள் எவ்விதம் செய்கிறார்கள்? அவர்கள் அபூர்வமாய் வெளியே போகிறார்கள், ஒடுக்கத்தில் வசிக்கிறார்கள், மகா தரித்திரமாய்ச் சாப்பிடுகிறார்கள், தாழ்மையான உடை உடுத்திக் கொள்கிறார்கள், வெகுவாய் உழைக்கிறார்கள், கொஞ்சமாய்ப் பேசுகிறார்கள், வெகுநேரம் கண் விழிக்கிறார்கள். அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள், நெடுநேரம் செபம் பண்ணு கிறார்கள், அடிக்கடி வாசிக்கிறார்கள், தங்கள் ஒழுங்குகளையெல்லாம் அனுசரித்து வருகிறார்கள். கர்த்துசியன், சிஸ்தேர்சியன் முதலிய பல சபைச் சந்நியாசிகளும் கன்னியாஸ்திரீகளும் எவ்விதம் இரவுதோறும் ஆண்டவருக்குத் தோத்திரமாகச் சங்கீதங்கள் பாடுகிறதற்கு எழுந்திருக்கிறார்களென்று பார். ஆகையால் இத்தனை சகோதரர்களும் சர்வேசுரனுக்குத் தோத்திரம் செய்யும் பரிசுத்த நேரத்தில் நீ சோம்பலாயிருப்பதானால் அது எவ்வளவோ வெட்கத்திற்குரியதா யிருக்கும்.

9. ஓ! நமதாண்டவராகிய சர்வேசுரனை மனதோடும் வாக் கோடும் துதிப்பதே நமது ஏக வேலையாயிருந்தால் எவ்வளவோ உத்தமமாயிருக்கும்! ஓ! உண்டு குடிக்கவும் நித்திரை கொள்ளவும் அவசரமில்லாதிருந்து, எப்போதுமே நீ சர்வேசுரனைத் துதிக்கவும், ஞானக் காரியங்களைமாத்திரம் கவனிக்கவும் கூடுமாயிருந்தால்... சரீர அவசரத்துக்கெல்லாம் உட்பட வேண்டிய உன் அந்தஸ்தைவிட அவ்வந்தஸ்து அதிக பாக்கியமுள்ளதாயிருக்குமல்லவா! இந்த அவசரங்கள் எல்லாம் ஒழிந்து போய் ஆத்துமஞான உணவுகளைத் தேடுவது மாத்திரமே நமது வேலையாயிருக்குமேயானால் எவ்வளவோ பாக்கியம்! ஐயோ! நாம் மெத்த அரிதாய் அல்லவா ஞான உணவை ருசி பார்க்கிறோம்!

10. எந்த சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துவிலும் ஒருவன் இனி ஆறுதலைத் தேடாமலிருக்கும்பொழுதுதான் அவன் சர்வேசுரனை சரியாய் உணரத் துவக்குகிறான், அப்போது என்னென்ன சம்பவித் தாலும் சந்தோஷமாகவே இருக்கிறான், அப்போது மிகுதியிலிருந் தால் சந்தோஷப்படுகிறதில்லை; வறுமையிலிருந்தால் கஸ்திப்படுகிற தில்லை; ஆனால் தனக்குச் சர்வத்திலும் சர்வமாயிருக்கிற சர்வேசுர னுக்குத் தன்னை முழுதும் நம்பிக்கையாய் ஒப்புக்கொடுத்து விடு வான். அவருடைய சமுகத்திலோ ஒன்றும் அழிந்து போவதில்லை, ஒன்றும் மரிப்பதில்லை, ஆனால் சகலமும் அவரில் சீவிக்கின்றது, அவருடைய சித்தத்திற்குத் தாமதமும் தடையுமின்றிப் பணிந்து வருகின்றது.

11. உன்னுடைய கதி ஏதென்றும், வீணில் போக்கடித்த காலம் திரும்பி வருவதில்லையென்றும் எப்போதும் ஞாபகப்படுத்திக்கொள். கவலையும் சுறுசுறுப்புமின்றி நீ ஒருபோதும் புண்ணியம் சம்பாதிக்க மாட்டாய். நீ அசமந்தமாக நடக்கத் துவக்கினதும் கலக்கத்தில் அகப்படுவாய். ஆனால் நீ பக்தி சுறுசுறுப்புள்ளவனாயிருப்பாயாகில், பெருத்த சமாதானம் காண்பாய். உன்னுடைய வேலை சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தினாலும் புண்ணியத்தின்பேரில் நீ வைத்த பற்றுதலாலும் அவ்வளவு பிரயாசையல்லவென்று உணர்ந்து கொள் வாய். பக்திச் சுறுசுறுப்புள்ளவன் எந்தப் புண்ணிய முயற்சி செய்யவும் தயாராயிருக்கிறான். சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்வதை விடத் துர்க்குணங்களையும் துர் இச்சைகளையும் எதிர்ப்பது அதிக வருத்தமான காரியம். “அற்பக் குற்றங்களை அசட்டை பண்ணு கிறவன் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெருத்த குற்றங்களில் விழுவான்.” நீ பகல் நேரத்தைச் செவ்வையாய்ச் செலவழித்தால் சாயங் காலத்தில் எப்போதும் சந்தோஷப்படுவாய். உன் விஷயத்தில் விழிப்பாயிரு, உன்னைத்தானே தூண்டிக்கொள், உனக்குத்தானே புத்தி சொல்லிக்கொள். மற்றவர்கள் என்னென்ன செய்த போதிலும் நீ உன்னைத்தானே அசட்டை பண்ணாதே. நீ உன்னை எவ்வளவு பரித் தியாகம் செய்வாயோ அம்மாத்திரம் புண்ணியத்தில் வளர்ச்சியடைவாய்.

யோசனை

இரட்சணியம் அடைய உனக்கு மெய்யான ஆசையுண்டோ? உறுதியான மனதுண்டோ? அப்படியானால் கடும் உழைப்புக்கு அஞ்சாதே. யுத்தத்திற்கு ஆயத்தம் செய். “கேட்டுக்குக் கூட்டிப் போகிற வழி விசாலமாயிருக்கின்றது; நித்திய சீவியத்திற்குக் கூட்டிப் போகிற வழியோ நெருக்கமாயிருக்கின்றது;” தேவ ஒத்தாசையைக் கொண்டு இந்தப் பிரயாசை, இந்த யுத்தம் எளிதாயிருக்கும். சகல பிரயாசை துன்பங்களின் மத்தியில் பாவிகளுக்கு இராத சமாதானம் புண்ணியவானுக்கு உண்டு, ஆயினும் தன்னையும், தன் ஆசைகளையும், தன் ஆசாபாசங்களையும், உலகத்தையும், பசாசையும் மேற்கொள் வதற்குத் தேவ அனுக்கிரகம் எப்போதும் அவசரமாயிருக்கின்றது. இவ்விதப் போராட்டங்களை வென்றால்தான் அர்ச்சிஷ்டவர்கள் ஆகலாம். சிலர் நிந்தை அவமானங்களுக்குள்ளானார்கள். சகலவித நிஷ்டூர வேதனைகளை அனுபவித்தார்கள். வாளுக்கிரையானார்கள். ஆட்டுத் தோலைப் போர்த்து வனாந்தரங்களில் கடின தவம் புரிந்து பசி தாகம் அனுபவித்தார்கள். மலைகளிலும் குகைகளிலும் வாசம் செய் தார்கள். இத்தனை புண்ணியவான்களுடைய நன்மாதிரிகைகளைப் பின்பற்றி, நாமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் பாவங்களையும் பாவச் சமயங்களையும் விட்டு அகலக்கடவோம். நம்மைப்பற்றி சிலுவை வேதனைகளை அனுபவித்த சேசுநாதரைக் கண்டுபாவித்து, நமக்கு வரும் சிலுவைகளையும் நாம் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றி நடந்தோமேயானால், அவர் இப்போது பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் மகிமையோடு வீற்றிருப்பதுபோல நாம் அவருடைய சந்நிதானத்தில் நித்தியத் திற்கும் வீற்றிருக்கும் பேறு பெறுவோம்.