இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

24. பிறரைப்பற்றி வீண் விசாரணையை விலக்குதல்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! வெளிக்காரியங்களை அறிய ஆசை யுள்ளவனாயிராதே. வீண் கவலைகள் கொள்ளாதே, “எது எப்படியிருந்தால் உனக்கென்ன? நீ நம்மைப் பின்செல்.” இன்னான் இப்படி அப்படி இருக்கிறான், இவ்விதம் அவ்விதம் நடக்கிறான், பேசுகிறான் என்றால் உனக்கென்ன? பிறர் நடத்தைக்கு நீ உத்தரவாதியல்ல; உன்னைப் பற்றி மாத்திரமே நீ கணக்குக் கொடுப்பாய்; ஆனதால் நீ ஏன் வீணாய்க் கவலைப்படுகிறாய்? நாமே எல்லாரையும் அறிவோம்; உலகத்தில் நடக்கிற எல்லாவற்றையும் பார்க்கிறோம். அவனவனுடைய நிலைமை, எண்ணங்கள், விருப்பங்கள், கருத்துக்கள் முதலிய இவையெல்லாவற்றையும் அறிவோமல்லவா! ஆகையால் சகலத்தையும் நம்மிடமே ஒப்படைத்துவிட வேண்டியது; பதறி நடப்பவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்கட்டும்; நீயோ சமாதானத்தில் நிலைத்திரு. அவர்கள் செய்வதும் பேசுவதுமெல்லாம் அவர்கள் மேலேதான் விழும், ஏனெனில் நம்மை மோசஞ் செய்ய அவர்களால் முடியாது.

2. பிரபலமான பெயரின் வீண் கீர்த்தியைப் பற்றியும் அநேகருடைய சகவாசத்தைப்பற்றியும், மனிதருடைய விசேஷ சிநேகத்தைப்பற்றியும், கவலையெடுத்துக் கொள்ளாதே. ஏனெனில் அவை பராக்குகளையும், மன இருளையும் பிறப்பிக்கின்றன. நமது வருகைக்குச் சுறுசுறுப்போடு காத்திருந்து, உன் இருதய வாசலை நமக்குத் திறப்பா யாகில், நாம் சந்தோஷமாய் நமது வாக்கியங்களை உனக்குத் தெரி வித்து நமது இரகசியங்களை வெளிப்படுத்துவோம். முன் ஜாக்கிரதை எடுத்துக் கொள், செபத்தியானம் செய், விழித்திரு, “சகலத்திலும் உன்னைத் தாழ்த்து.”

யோசனை

உன் சகோதரரின் செயல்களின்பேரில் நீ ஏன் உன் பொறாமைக் கண்களைத் திறக்கிறாய்? அவர்களுடைய மனச்சாட்சியையும் செயல் களையும் பரிசோதிக்க உனக்கு உத்தரவு தந்தது யார்? சர்வேசுரன் தமக்கே உரியதாக வைத்திருக்கும் அந்த வேலையை அவருக்கே விட்டுவிடு; உனக்கு நீ கணக்குக் கொடுக்கப் போவதைக் கவனி. மற்றவர்களைப் பற்றித் தீர்மானம் செய்யப்போகும்போது பொதுவாக எப்போதும் மோசம் போகிறோம்; தனக்கு இல்லாத சுதந்திரத்தை அபகரிக்கிறவன் கடினமான தீர்ப்புக்குத் தன்னைத்தானே உட்படுத்திக் கொள்கிறான்; ஏனெனில் பிறர்சிநேகத்திற்கு விரோதமாய் நடக் கிறான். “பிறர்சிநேகம் தாட்சணியமுள்ளது, கெடுதி நினைப்பதில்லை.” மற்றவர்களைப் பற்றி நன்மையானவைகளையெல்லாம் எண்ணு. உன்னை மற்றவர்கள் மன்னிக்கும்படியாக நீயும் பிறரை மன்னித்துக் கொள்; “நீ தீர்ப்பிடப்படாதபடி நீயும் தீர்ப்பிடாதே.”