இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

24. தேவத் தீர்வையும் பாவிகளுடைய ஆக்கினையும்

1. எதைச் செய்தாலும் உன் முடிவையும் கண்டிப்புள்ள நடுவருடைய சன்னிதானத்தில் நீ எவ்விதம் நிற்கப் போகிறாயென்பதையும் எண்ணிப் பார்; இவர் சகலத்தையும் அறிந்தவர், கைக்கூலியால் வசப்படுத்தப்படாதவர், சாக்குப்போக்குகளை ஏற்றுக்கொள்ளாதவர், ஆனால் நீதிப்படியே தீர்வையிடுகிறவர். ஓ! மிகவும் நிர்ப்பாக்கியனும் புத்தியீனனுமான பாவியே! கோபங் கொண்ட மனிதனுடைய முகத்தைக் கண்டு சில சமயங்களில் நடுநடுங்குகிற நீ உன் பாவங்களையெல்லாம் அறிந்திருக்கும் சர்வேசுரனுக்கு என்ன மறுமொழி சொல்வாய்? அந்தத் தீர்வை நாளில், அவனவனுக்குத் தன்தன் கணக்கே தனக்குப் போதுமான பாரமாயிருக்க, எவனும் உன்னைக் காப்பாற்றவும் உனக்காக நியாயம் சொல்லவும் முடியாதே; ஆதலால் அந்நாளுக்கென்று நீ உன்னைச் சீர்ப்படுத்தாதிருப்பது ஏன்? இப்போதே நீ படும் பிரயாசை வீணாய்ப் போகாது, நீ சிந்தும் கண்ணீர் அங்கீகரிக்கப்படும், உன் பிரலாபப் புலம்புதல் கேட்கப்படும், உன் பாடுகளாலே நீ உன் பாவங்களைப் பரிகரித்து உன் ஆத்துமத்தை பரிசுத்தப்படுத்தக் கூடுமாயிருக்கிறது. 

2. பிறர் தன்னை அவமானப்படுத்தும்போது தனக்கு வந்த அவமானத்தைப் பற்றியல்ல, பிறனுடைய துர்க்குணத்தைப் பற்றி விசேஷமாய் கஸ்திப்படுவதாலும், தன் விரோதிகளுக்காக மனச் சந்தோஷமாய் வேண்டிக்கொண்டு முழு இருதயத்தோடு அவர் களுடைய குற்றங்களை மன்னிப்பதாலும், பிறரிடத்தில் பொறுத்தல் கேட்கத் தாமதியாதிருப்பதாலும், கோபிப்பதைவிட எளிதாய் இரக்கப்படுவதாலும், தனக்கே அடிக்கடி பலவந்தம் செய்து சரீரத் தைப் புத்திக்கு முழுமையும் கீழ்ப்படுத்தப் பிரயாசைப்படுவதாலும், பொறுமைசாலிக்கு இச்சீவியம் பாவப்பரிகாரம் செய்யும் பெரிய உத்தரிப்பு ஸ்தலமாக இருக்கின்றது. மறு உலகத்தில் தன் பாவங்களைப் பரிகாரம் பண்ணலாமென்று காத்திராமல் இப்போதே அவைகளுக்கு உத்தரித்துத் துர்க்குணங்களைப் பிடுங்கி எறிகிறது உத்தமம். நமது சரீரத்தின் மட்டில் நாம் வைத்திருக்கும் ஒழுங்கற்ற நேசத்தால் மெய்யாகவே நாம் நம்மையே ஏமாற்றி விடுகிறோம்.

3. உத்தரிக்கிற ஸ்தலத்து அக்கினி உன் பாவங்களையன்றி வேறெதைச் சுட்டெரித்து விழுங்கப்போகின்றது? நீ இப்போது உன் சரீர இச்சைகளைப் பின்பற்றி எவ்வளவுக்கதிகமாய் உன்னைத்தானே இளக்காரமாய் நடத்துகிறாயோ, பிறகு அவ்வளவுக்கதிக கடின வேதனைக்குள்ளாகி அந்த அக்கினிக்கு அதிக இரை தேடி வைக்கிறாய். மனிதன் எந்த துர்விஷயங்களில் பாவங்கட்டிக் கொண்டானோ, அவ்விஷயங்களிலேயே அதிகக் கடினமாய்த் தண்டிக்கப்படுவான்; அங்கே சோம்பேறிகள் அக்கினி முட்கோலால் குத்தப்படுவார்கள்: போசனப் பிரியமுள்ளவர்கள் கடும் பசி தாகத்தினால் உபாதிக்கப் படுவார்கள்; காமாதுரரும் துர்மார்க்கரும் கொதிக்கிற கீலிலும் நாற்ற மெடுக்கிற கந்தகத்திலும் அமிழ்த்தப்படுவார்கள்; காய்மகாரிகள் வெறிபிடித்த நாய்களைப்போல வருத்த மிகுதியால் ஊளையிடுவார்கள். 

4. தனக்குரிய வேதனையை அனுபவியாத துர்க்குணம் கிடை யாது. அங்கே ஆங்காரிகள் சர்வ வெட்கத்தால் நிரப்பப்படுவார்கள்; உலோபிகள் மிகவும் நிர்ப்பாக்கியமான எளிமைத்தனத்தால் துன்பப் படுவார்கள். இங்கே நூறு வருஷத்துக் கடின தபசைவிட அங்கே ஒரு மணி நேர வேதனை அதிகக் கடினமாயிருக்கும். அங்கே, நரகவாசி களுக்கு இளைப்பாற்றியுமில்லை, ஆறுதலுமில்லை: இங்கேயோ வேதனைகள் ஓயாதவையல்ல, மேலும் சிலவேளை சிநேகிதர்களால் ஆறுதலடையலாம். தீர்வை நாளில் நீ புண்ணியவான்களோடு அச்சமற்றிருக்கும்படியாக இப்போதே உன் பாவங்களைக் கவனித்து அவைகளுக்காக மனஸ்தாபப்படு.

5. “அப்போது நீதிமான்கள் தங்களை நெருக்கிடை செய்து ஈனப் படுத்தினவர்களுக்கு எதிரில் வெகு தைரியத்தோடு நிற்பார்கள்.” இப்போது மனிதருடைய தீர்மானங்களுக்குக் தாழ்ச்சியோடு தன்னைக் கீழ்ப்படுத்துகிறவன் அப்போது தீர்மானிக்க எழுந்து நிற்பான். தாழ்ச்சியுள்ளவனும் தரித்திரமுள்ளவனும் அப்போது வெகு நம்பிக்கையாயிருப்பார்கள்; ஆங்காரியோ அங்கம் முழுவதிலும் நடுங்குவான். கிறீஸ்துநாதரைப் பற்றிப் பைத்தியனும் நிந்திக்கப் பட்டவனுமாயிருக்கக் கற்றுக்கொண்டவன், இவ்வுலகத்தில் விவேகியாயிருந்ததாக அப்போது காணப்படுவான். பொறுமை யாய்ச் சகித்த துன்பமெல்லாம் அப்போது சந்தோஷம் வருவிக்கும். “அக்கிரமமெல்லாம் தன் வாயை அடைத்துக் கொள்ளும்.” பக்தியுள்ளவர்கள் எல்லோரும் அப்போது அகமகிழ்வார்கள்; பக்தியற்றவர்கள் எல்லோரும் மிகுந்த வேதனைப்படுவார்கள். தான் சுகத்தில் எப்போதும் வளர்ந்து அக்களித்திருப்பதை விட, துன்பம் அனுபவித்த சரீரம் அப்போது ஒளி பெற்றிருக்கும், விலையேறப் பெற்ற ஆடைகளோ மங்கிப் போகும், தங்கமயமான அரண் மனையைவிட எளிமையான வீடு அப்போது மேன்மையாக மதிக்கப் படும். அப்போது நிலைமையுள்ள பொறுமை உலக அதிகாரம் முதலியதை விட அதிகமாய் உதவும். உலகத்திலுள்ள எவ்வித சூது மார்க்கத்தையும் விட கபடற்ற கீழ்ப்படிதலே அப்போது அதிக மேன்மை பெறும். தேர்ந்த சாஸ்திரத்தை விடக் குற்றமில்லாத நல்ல மனசாட்சி அப்போது அதிக சந்தோஷம் கொடுக்கும். பூலோகத்திலுள்ள சகல பொக்கிஷங்களையும் விட செல்வங்களின் மட்டில் கொண்டிருந்த அருவருப்பு அப்போது அதிக பேறுள்ளதாயிருக்கும். அறுசுவைப் பதார்த்தங்களை அருந்தினதை விடப் பக்தியுடன் செபம் பண்ணினது அப்போது அதிக ஆறுதல் தரும். நெடுநேரம் வாய்ச் சாலகமாய்ப் பேசினதை விட மெளனம் காத்தால் அப்போது அதிக சந்தோஷம் கொள்வாய். மிகவும் அலங்காரமான வார்த்தைகளை உரைத்ததைவிட புண்ணியச் செயல்களினால் அதிகப் பேறுண்டாகும். பூலோக சகல இன்பங்களையும்விட கஷ்டமான சீவியமும் கடுந்தபசும் அப்போது அதிக பிரியம் வருவிக்கும்.

6. (ஆதலால்) அப்போது அதிக கனமான துன்பங்களினின்று தப்பித்துக்கொள்வதற்காக இப்போது கொஞ்சம் துன்பப்படக் கற்றுக்கொள். பிறகு நீ என்ன அனுபவிக்கக் கூடுமென்று இங்கேயே முந்தி பரீட்சை செய்து பார். இப்போது உனக்குச் சொற்பத் துன்பம் அனுபவிக்க உன்னால் தாங்க முடியாமல் போனால், நித்திய ஆக்கினைகளை எவ்விதம் சகிக்கப் போகிறாய்? இப்போது உனக்குச் சொற்ப வேதனையினிமித்தம் அவ்வளவு எரிச்சலுண்டானால், அப்போது நரக வேதனைகளை எவ்விதம் சகிப்பாய்? உள்ளபடி இவ்வுலத்தில் இன்பமனுபவிக்கிறதும், பிறகு கிறீஸ்துநாதரோடு அரசாட்சி செய்கிறதுமாகிய இவ்விரண்டு சந்தோஷத்தையும் நீ அடைவது இயலாத காரியம். 

7. இன்றுவரைக்கும் எப்போதும் நீ பெருமையிலும் இன்பங்களிலும் ஜீவித்திருந்தவனாய் இந்த நிமிஷமே நீ சாகும்படி நேரிட்டால், அதெல்லாம் உனக்கென்ன பிரயோசனப்படும்? ஆனதால் சர்வேசுரனை நேசிப்பதும் அவருக்கும் மாத்திரம் ஊழியம் பண்ணுவதுமே தவிர மற்றதெல்லாம் வீண். முழு இருதயத்தோடு சர்வேசுரனை நேசிக்கிறவன் சாவுக்கும், வேதனைக்கும் தீர்வைக்கும் நரகத்திற்கும் அஞ்ச மாட்டான், ஏனெனில் உத்தம நேசம் சர்வேசுரனிடத்தில் அச்சமின்றி அண்டிப் போகச் செய்யும். பாவம் கட்டிக்கொள்வதில் இன்னமும் பிரிய முள்ளவனோ சாவுக்கும் தீர்வைக்கும் அஞ்சுவதும் ஆச்சரியமல்ல. ஆயினும் தேவ சிநேகம் உன்னைப் பாவத்தினின்று விலக்க இன்னும் போதாவிட்டாலும், நரகப் பயமாவது பாவத்தினின்று அகல உன்னைக் கட்டாயப்படுத்துவது நன்மையாயிருக்கும், தெய்வ பயத்தை அசட்டை பண்ணுகிறவன் நன்மையில் நெடுங்காலம் நிலைத்திருக்க முடியாதவனாய், வெகு சீக்கிரத்தில் பசாசின் வலைகளில் சிக்கிக் கொள்ளுவான்.

யோசனை

“சர்வேசுரன் பொறுமையாயிருக்கிறார்; ஏனெனில் நித்தியராயிருக்கிறார்” என்று அர்ச். அகுஸ்தீன் சொல்லுகிறார். ஆனால் பொறுமையின் நாட்கள் கடந்து போன பிறகு நீதியின் நாள் வரும். அது பயங்கரத்திற்குரிய நாள். அதற்குத் தப்பித்துக் கொள்ளுவது முடியாது. தங்களுடைய செயல்களுக்கும் நினைவுகளுக்கும் கணக்குக் கொடுக்க நித்திய நீதிபரருக்கு முன்பாக சகல மனிதரும் வரவேண்டியது ஒருநாள்! அந்தப் பயங்கரமான நாளை நினைத்துப் பார். இதோ! கல்லறைகளினின்று தூசியெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து உருவமெடுக்கின்றது; உலகத்தின் எத்திசையிலும் நின்று மரித்தோ ருடைய கூட்டம் நீதி அதிபருடைய சமூகத்தில் வந்து சேருகின்றது. அங்கே எல்லா இரகசியங்களும் வெளியாகின்றன, மறைவிடமான மனசாட்சியில்லை. ஒவ்வொருவனும் தன் தீர்வையை எதிர்பார்க்கிறான். மனிதர் பிரிக்கப்படுகிறார்கள், தீர்ப்புச் சொல்லப்படுகின்றது. நீதிமான்களுக்கு மோட்சம் திறந்திருக்கிறது; பாவிகளையோ நரகம் தன் வாயை அகலமாய்த் திறந்து விழுங்குகின்றது. பயங்கரத்திற்குரிய நாள்! சம்மனசுகளும் புண்ணியவான்களும் சேசுகிறீஸ்து நாதரைப் புடைசூழ்ந்து வர, மகிமையுள்ளவராய் மோட்சத்திற்கு எழுந்தருளிப் போகிறார். பசாசுகள் பாவிகளைத் தள்ளிக் கொண்டு நரகத்தில் விழுகின்றன. எல்லாம் முடிந்தது. பரலோக பாக்கியமும், நரக வேதனையும் மாத்திரம் முடியாது. ஒருபோதும் முடியாது. என்றென்றைக்கும் நீளித்திருக்கும். ஆனதால் நீ உலகத்திலிருக்கும்போதே இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள். மறுசீவியத்தில் மனந் திரும்பலாம் என்று உன் கனவிலும் எண்ணாதே.