இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

23. மிகுந்த சமாதானத்தைப் பெறுவிக்கும் நாலு காரியங்கள்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! சமாதானத்தினுடையவும் மெய்யான மனச் சுதந்திரத்தினுடையவும் வழியை உனக்கு இப்போது கற்பிப்போம். 

(சீஷன்) ஆண்டவரே! நீர் சொன்னதைச் செய்யும்; ஏனெனில் உமக்குச் செவி கொடுப்பது எனக்கு இன்பமாயிருக் கின்றது. 

(கிறீஸ்து நாதர்) மகனே! உன் இஷ்டப்படி நடக்கிறதைவிட மற்றவர்களுடைய மனதுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கற்றுக் கொள். அதிகமாய்ப் பெறுகிறதை விட கொஞ்சமாய்ப் பெறுவது உனக்குப் பிரியமாயிருக்க வேண்டும். கடைசி இடத்தையும் எல்லாருக்கும் கீழ்ப்பட்டிருப்பதையும் எப்போதும் தேடு. உன்னிடம் சர்வேசுரனுடைய சித்தம் முழுமையும் நிறைவேற எப்போதும் ஆசித்து வேண்டிக்கொள். அப்படி செய்வாயானால் சமாதானத்தினுடையவும் இளைப்பாற்றியினுடையவும் வழியில் செல்வாய்.

2. (சீஷன்) ஆண்டவரே! நீர் இப்போது சுருக்கமாய்த் திருவுளம்பற்றினவைகளில் அநேக உத்தம புண்ணியங்கள் அடங்கியிருக்கின்றன. நீர் சொல்லிய வாக்கியம் சுருக்கமுள்ளதாயினும் மிகுந்த அர்த்தமுள்ளதும் புண்ணியப் பலனுள்ளதுமாயிருக்கிறது. நான் அதைப் பிரமாணிக்கமாய்க் காப்பாற்றினால், என்னிடம் அவ்வளவு எளிதாய்க் கலக்கமுண்டாகாது; ஏனெனில் நான் அமைதியிழந்து கலக்கமுற்று நடந்ததற்கெல்லாம் அந்தப் போதனையை மறந்து விட்டதே காரணமென்று எனக்குத் தெரிய வருகிறது. ஆனால் நான் உமது போதகத்தை நிறைவேற்றி என் இரட்சணியத்தைப் பூர்த்தியாக்கி வரும்படி சர்வ வல்லபரான நீர், ஞான வளர்ச்சியை எப்போதும் நேசிக்கிற நீர், உமது வரப்பிரசாதத்தை எனக்கு அதிகமதிகமாய்த் தந்தருளும்.

பொல்லாத கவலைகளை அகற்ற ஜெபம்

3. என் ஆண்டவராகிய சர்வேசுரா! என்னை விட்டகன்று போகாதேயும்; என் தேவனே! எனக்குதவி செய்யக் கண்ணோக்கி யருளும்; ஏனெனில் பல கவலைகளும் பயமும் என்னிடத்தில் எழும்பி என் ஆத்துமத்தை உபாதிக்கின்றன. நான் காயப்படாமல் அவற்றினின்று வெளிவருவதெப்படி? அவைகளை நான் ஜெயிப் பதெப்படி? “நான் உனக்கு முன் நடந்து போவேன், உலகப் பெருமை படைக்கிறவர்களைத் தாழ்த்துவேன்;” சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அந்தரங்க இரகசியங்களை உனக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறினீர். ஆண்டவரே! நீர் திருவுளம்பற்றின வண்ணம் செய் தருளும். உமது முகத்துக்கு முன்பாகப் பொல்லாத கவலைகள் எல்லாம் ஓடிப் போகட்டும். சகல துன்பங்களிலும் உமதண்டையில் ஓடிவருவதும், உமது பேரில் நம்பிக்கை வைப்பதும், உம்மை முழு மனதோடு மன்றாடிப் பொறுமையோடு உமது ஆறுதலுக்குக் காத் திருப்பதுமேதான், என் நம்பிக்கையும் ஏக ஆறுதலுமாயிருக்கின்றது.

புத்தித் தெளிவடைய செபம்.

4. நல்ல சேசுவே! என் ஆத்துமத்தை உமது ஞான ஒளியால் பிரகாசிப்பித்தருளும்; என் மனதினின்று இருள் அனைத்தையும் அகற்றி விடும். என்னை வலுவந்தம் செய்யும் சோதனைகளைத் தகர்த்துவிடும்; என் புத்தியை அடிக்கடி மயக்கி விடும் எண்ணிறந்த பராக்குகளைத் தள்ளிவிடும். “உமது வல்லமையின் உதவியால் என் ஆத்துமத்தில் சமாதானம் நிலைகொள்ளும்படியாகவும்,” அப்போது என் மாசற்ற மனசாட்சியென்னும் பரிசுத்த தேவாலயத்தில் உமது தோத்திரங்கள் ஒலிக்கும்படியாகவும், நீர் எனக்காகப் பலமாய்ப் போராடித் துஷ்ட மிருகங்களைப் போன்ற அந்தச் சிற்றின்ப நாட்டங்களை அகற்றி விடும். “காற்றையும் புயலையும் அமரும்படிக் கட்டளையிடும்; கடலை நோக்கி: அமைதியாயிரு என்றும் வாடைக்காற்றை நோக்கி: வீசாதே என்றும் சொல்லும்; அப்போது பலத்த அமைதி உண்டாகும்.”

5. “உமது பிரகாசமும் சத்தியமும் பூலோகத்தில் துலங்கும்படி அவைகளை அனுப்பியருளும்.” ஏனெனில் நீர் என்னைப் பிரகாசிப் பிக்கிற வரைக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலம் போலிருக் கிறேன். ஆண்டவரே, மோட்சத்தினின்று உமது வரப்பிரசாதத்தைச் சொரிந்தருளும்; அவ்வுந்நதப் பனி என் ஆத்துமத்தில் ஊறக் கடவது; என் ஆத்துமம் என்னும் நிலத்தில் பாயும்படி பக்தி என்னும் நீரைக் கொடுத்தருளும்; அவ்விதம் அது உத்தமகனிகளை விளைவிக்கும். பாவச் சுமையால் நசுங்கிக் கிடக்கிற என் ஆத்துமத்தைத் தூக்கி யருளும்; மோட்ச ஆனந்தத்தின் சுவையை நான் இப்போதே உணர்ந்து உலகக் காரியங்களைச் சிந்திப்பதில் எனக்குச் சலிப்பு உண்டாகும்படி, என் ஆவல் முழுமையும் பரலோகக் காரியங்களில் நாடியிருக்கச் செய்யும்.

6. சிருஷ்டிக்கப்பட்ட எந்தப் பொருளும் எனக்குச் சரியான இளைப்பாற்றியும் சம்பூரணத் திருப்தியும் கொடுக்கச் சக்தியற்றவை களாதலால், சிருஷ்டிப்புகளினின்று வருகிற நிலையற்ற ஆறுதல்களை நான் ஆசிக்காதபடி என்னை வலுவந்தம் செய்தருளும். உம்மையன்றி யாவுமேநிழலும் வியர்த்தமுமாயிருக்க, உம்மைநேசிக்கிறவனுக்கு நீர் ஒருவரே போதுமானவராயிருக்க, இணைபிரியாத நேச பாசத்தால் என்னை உம்மோடு ஐக்கியப்படுத்தியருளும்.

யோசனை

“சமாதானத்தின் காட்சிகளை எருசலேமில் பிரசங்கிக்கிற தீர்க்க தரிசிகள் இஸ்ராயேலில் உதித்தார்கள். ஆனால் சமாதானமில்லை” என்று ஆண்டவர் அருளிச் செய்கிறார். உலகமும் தன்னைப் பின்பற்றி நடக்கிறவர்களுக்குச் சமாதானத்தின் காட்சிகளை அறிவிக்கின்றது; ஆனால் இன்ப சுகங்கள், ஆங்காரம் ஆசாபாசங்கள், திருப்தி இவைகளில் அடங்கியிருக்கிற அந்தச் சமாதானம் தன்னைத் தேடு கிறவர்களை ஏமாற்றுவதற்காகவே தூரத்தில் தன்னைக் காண்பிக்கிறது. அவர்கள் அதைக் கைப்பற்றினதாக எண்ணினவுடனே, விழிக்கிறவன் கனவு எப்படி மறைந்து போகிறதோ அப்படியே சமாதானமும் காற்றாய்ப் பறந்து போகின்றது. அதற்கு விரோதமாய்ச் சுத்த மனச் சாட்சியின் அமரிக்கைதான் மெய்யான சமாதானம்; ஆசைகளைத் திருப்தியாக்குவதில் அல்ல, ஆனால் அவைகளை அடக்குவதில்தான் சமாதானம் அடங்கியிருக்கின்றது. எது மறைவான இடமோ, எது இருளடர்ந்த ஸ்தலமோ, எது உலகத்தால் நிந்திக்கப்பட்ட அந்தஸ்தோ, அங்கேதான் சமாதானமிருக்கிறது. இருதயம் தன்னைத்தானே எவ்வளவு தாழ்த்துகின்றதோ, அவ்வளவு மதுரமாயும் ஆழமாயும் ஆகின்றது. ஒன்றுக்கும் ஆசைப்படாதவனை, யாதொன்றும் தனக்குச் சொந்தமென்று நினையாதவனை, கலக்கத்துக்கு உள்ளாக்குவது என்ன இருக்கிறது? அவன் பிரியம் கொள்கிற தாழ்மையில் அவன் பேரில் எவரும் பொறாமைப்படப் போவதில்லை; ஆனால் மற்றொரு பக்கத்தில் எவ்வளவு மகிமை! சம்மனசுக்கள் மரியாதையோடு அவனை நோக்குகிறார்கள். சர்வேசுரன் தமது மகிமைச் சிம்மாசனத்தினின்று அவனை ஆசீர்வதிக்கிறார். ஆண்டவரே! எனக்கு உதவியாக வாரும். என் ஆங்காரத்தை அடக்கிவிடும். எனக்குச் சமாதானம் உண்டாக்கும். தீர்க்கதரிசி இராஜாவைத் தூண்டின நல்லுணர்ச்சிகளால் நானும் தூண்டப்பட்டு, அவரோடு கூட “பாவிகளுடைய கூடாரங்களில் வசிப்பதை விட, என் சர்வேசுரனுடைய வீட்டில் சமாதானத்தில் குடியிருப்பதை நான் தெரிந்து கொண்டேன்” என்று சொல்வேன்.