இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

23. மரணத்தைப்பற்றிய யோசனைகள்

1. நீ வெகு சீக்கிரத்தில் இவ்வுலகை விட்டு மறைந்து போவாய். ஆகையால் நீ எவ்விதமாய் உன்னைத் திருத்த வேண்டுமென்று கவனி. இன்றைக்கு இருப்பவன் நாளைக்குக் காணாமல் போகிறான். கண்ணுக்கு மறைவாய்ப் போனபிறகு வெகு சீக்கிரத்தில் நினைக்கப்படவும் மாட்டான். ஓ! மனிதனுடைய இருதயத்தின் மூடத்தனமே! கல் நெஞ்சே! நிகழும் காரியங்களை மாத்திரம் யோசிக்கின்றாய்! வருங் காரியங்களையோ ஏறக்குறையச் சிந்திக்கிறதில்லை. இன்றே சாகப் போகிறது போல ஒவ்வொரு கிரியைகளிலும் நினைவிலும் நீ நடந்து கொள்ள வேண்டியது. உனக்கு பரிசுத்த மனசாட்சி உண்டானால் நீ மரணத்திற்கு அதிகமாக பயப்படமாட்டாய். மரணத்திற்குத் தப்பித்துப் போவதை விட பாவத்திற்கு அஞ்சி நடப்பது உத்தமம். இன்று நீ மரணத்திற்கு ஆயத்தமாயிராவிடில், நாளைக்கு எப்படி ஆயத்தமாயிருப்பாய்? நாளைய நாள் நிச்சயமற்றது. நாளைய தினம் உயிரோடிருப்பாயென்று நீ அறிவாயோ? 

2. நாம் அதிக சொற்பமாய்த் திருந்துகின்றோமாகில், வெகு காலம் சீவிப்பதினால் வரும் இலாபம் என்ன? ஆ! வெகுகாலம் சீவிப்பதினால் நாம் அநேகமாக திருந்துகிறோமா? இல்லை; அதற்கு மாறாகப் பெரும்பாலும் குற்றமே நம்மில் அதிகரிக்கின்றது. இவ்வுலகத்தில் ஒரு நாளாகிலும் நாம் நன்மையாய் நடந்தோமேயானால் எவ்வளவோ நலமாயிருக்கும். சிலர் தாங்கள் மனந்திரும்பி (மடம் பிரவேசித்து) இத்தனை வருஷங்கள் ஆயினவென்று கணக்கிடுகிறார்கள்; ஆனால் திருத்தத்தின் பலனோ பெரும்பாலும் கொஞ்சமாய்த்தான் இருக்கும். சாகிறது பயங்கரத்திற்குரியதானால், வெகுகாலம் சீவிக்கிறது இன்னும் அதிக ஆபத்திற்குரியதாக இருக்கலாம். மரண நேரத்தை எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டு தினந்தோறும் சாகிறதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறவன் பாக்கியவான். ஒருவன் சாகிறதை நீ எப்போதாவது பார்த்திருந்தால், நீயும் அவ்வழியே தான் நடந்துபோவாயென்று நினைத்துக்கொள்.

3. பொழுது விடிய, சாயங்காலம் வரையிலும் இருக்க மாட்டாயென்று நினை. பொழுது சாய, மறுநாள் காலை வரையிலும் உயிரோடிருப்பாயென்று துணிந்திராதே. ஆகையால் நீ ஆயத்தமாயிராத சமயத்தில் சாவு உன்னை நெருங்காதபடி எப்போதும் சாவுக்கு ஆயத்தமாயிருக்கக் கடவாய். அநேகர் திடீரென்றும் நினையாத நேரத்தில் சாகிறார்கள், ஏனெனில் “நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.” அந்த இறுதி நேரம் வரும்போது, கடந்து போன உன் சீவியகாலம் எல்லாவற்றையும் பற்றி வெகு வித்தியாசமாய் நினைக்கத் துவக்குவாய்; அவ்வளவு அசட்டைத்தனமாயும் தளர்ச்சியுள்ளவனாயும் இருந்ததையுணர்ந்து வெகுவாய் வேதனைப்படுவாய்.

4. மரண சமயத்தில் எவ்விதம் காணப்பட வேண்டுமென்று ஆசிக்கிறானோ, அவ்விதமே சீவிய காலத்தின்போது இருக்க முயற்சி செய்கிறவன் எவ்வளவோ பாக்கியவான், எவ்வளவோ விவேகி. ஏனெனில், உலகத்தை முழுமையும் நிந்திப்பதும், புண்ணியங்களில் வளர்ச்சியடைய சுறுசுறுப்பாய் ஆசிப்பதும், ஒழுங்குகளை அன்புடன் அநுசரிப்பதும், தபசு செய்ய வருந்துவதும், துரிதமாய்க் கீழ்ப்படிவதும், தன்னைத்தானே வெறுத்தலும், கிறீஸ்துநாதருடைய நேசத்தைப் பற்றி எவ்விதத் துன்பங்களையும் தைரியமாய் சகிப்பதும், இவை யாவும் பாக்கியமான மரணமடைய பெருத்த நம்பிக்கையைக் கொடுக்கும். நீ செளக்கியமாயிருக்கையில் அநேக நன்மைகள் செய்யக் கூடும். வியாதியானபோதோ உன்னால் என்ன செய்யக் கூடுமென்றும் நான் அறியேன். வியாதியினால் புண்ணியத்தில் அதிகரிக்கிறவர்கள் மிகவும் கொஞ்சம் பேர். அப்படியே அடிக்கடி பயணம் செய்பவர்கள் புண்ணிய வளர்ச்சி அடைவது அபூர்வம்.

5. நீ எண்ணியிருப்பதைவிட அதிசீக்கிரத்தில் மனிதர் உன்னை மறந்துவிடுவார்கள், ஆதலால் உன் சிநேகிதர் பேரிலும் சுற்றத்தார் பேரிலும் நம்பிக்கை வைக்காதே; உன் இரட்சணியக் காரியத்தைப் பிற்பாடு கவனிக்கலாமென்றும் தாமதியாதே. பிறர் ஒத்தாசையின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதைவிட, இப்போதே முன்ஜாக்கிரதை யாய் உன் இரட்சணியத்தை வேண்டி நற்செயல்களைச் செய்வது உத்தமம். இப்போது உன் மட்டில் உனக்கே கவலையில்லாமல் போனால் பிற்பாடு உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறவன் யார்? இக்காலமானது மிகவும் விலையேறப்பெற்ற காலம். இப்போதுதான் தக்க சமயம், இப்போதுதான் இரட்சணியத்தின் நாட்கள். ஆனால் ஐயோ! நித்தியமாய்ச் சீவிக்கப் பாத்திரவானாவதற்கு உதவும் இக்காலத்தை நீ அதிக பிரயோசனமாய்ச் செலவழிக்காதிருப்பது எவ்வளவோ பரிதாபம்! மனந்திரும்புவதற்காக உனக்கு ஒருநாள் ஒரு நாழிகை வேண்டுமென்று ஆசிக்கும் காலம் வரும். ஆனால் அந்த நாளும் நேரமும் உனக்குக் கிடைக்குமோ என்னவோ நானறியேன்.

6. ஆ! பிரியமுள்ளவனே, இப்போதே நீ ஓயாமல் தேவ பயம் உடையவனாய், மரணம் எப்போது வருமோவென்று அஞ்சி நடந்தால், எவ்வளவு பெருத்த ஆபத்தினின்று உன்னை மீட்டுக் கொள்ளவும், எவ்வளவு பெரிய அச்சத்தினின்றும் உன்னை விடுவித்துக் கொள்ளவும் கூடும். உன் மரண சமயத்தில் பயப்படுவதைவிடச் சந்தோஷப்படக் கூடுமான விதமாய் இப்போதே சீவித்து வர முயற்சி யெடு. அப்போது கிறீஸ்துநாதரோடு ஜீவிக்கத் துவக்கும்படியாக, இப்போதே உலகத்திற்கு மரித்துப் போகக் கற்றுக்கொள். அப்போது கிறீஸ்துவிடம் தடையின்றிச் சேரக் கூடுமாயிருக்க, இப்போதே சகலத்தையும் நிந்திக்கக் கற்றுக் கொள். அப்போது நிச்சயமான நம்பிக்கை கொள்ளக்கூடுமாயிருக்க, இப்போதே தபசினால் உன் சரீரத்தைத் தண்டித்து வா.

7. ஆ! புத்தியீனனே, ஒரு நாளாவது உயிரோடிருப்பது உனக்கு நிச்சயமாயில்லாமலிருக்கும்போது, நெடுங்காலம் ஜீவிப்பேனேன்று எண்ணுவதெப்படி? எத்தனையோ பேர் மோசம் போய், நினையாத நேரத்தில் உயிர் பிரிந்தார்கள். இவன் வாளால் வெட்டுண்டு இறந்தான்; அவன் நீரில் மூழ்கி செத்தான்; இவன் உயரத்திலிருந்து விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டான்; அவன் சாப்பிடும் போது செத்தான்; இவன் விளையாடும்போது இறந்தான்; ஒருவன் நெருப்பினால், வேறொருவன் கத்தியால், மற்றொருவன் கொள்ளை நோயால், வேறொருவன் திருடர் கையால் மாண்டான் என்று நீ எத்தனையோ முறை கேள்விப்பட்டிருக்கிறாய். அவ்விதம் சகல ருடைய முடிவும் மரணமே; மானிட ஜீவியம் நிழலைப்போன்று சீக்கிரத்தில் கடந்துபோகின்றது. 

8. உன் மரணத்திற்குப்பின் உன்னை நினைக்கப் போகிறவன் யார்? உனக்காக வேண்டிக்கொள்பவன் யார்? எனக்கு மிகவும் பிரியமானவனே, உன்னால் கூடுமானதைச் செய். இப்போதே செய். ஏனெனில் நீ எப்போது சாகப் போகிறாய் என்று அறியமாட்டாய், சாவுக்குப்பின் உனக்கென்ன சம்பவிக்கப் போகிறதென்பதையும் நீ அறியாய். உனக்கு நேரமிருக்கும்போதே, அழியாத செல்வங்களைச் சேகரித்துக் கொள். உன் இரட்சணியத்தை மட்டும் நினை; சர்வேசுரனுக்கு அடுத்தவைகளில் கவனி. நீ இச்சீவியத்தை விட்டுப் பிரிந்து போகும்போது அர்ச்சியசிஷ்டவர்கள் “நித்திய கூடாரங்களில் உன்னை வரவேற்றுக் கொள்ளும்படியாக” அவர்களை வணங்கி வருவதாலும், அவர்களுடைய நன்மாதிரிகைகளைக் கண்டுபாவிப்பதாலும் இப்போதே சிநேகிதர்களைச் சம்பாதித்துக்கொள்.

9. உலக காரியங்களில் தொடர்பேதுமில்லாத “யாத்திரைக் காரன் போலவும், பரதேசியைப் போலவும்” உலகத்தில் சஞ்சரிக்கக் கடவாய். உன் இருதயத்தை உலக ஆசையில்லாததாகவும், சர்வேசுரனை நோக்கி நாடினதாகவும் காப்பாற்றிக்கொள், ஏனெனில் “இவ்விடத்தில் உனக்கு நிலைமையுள்ள இல்லிடமில்லை.” உன் மரணத்திற்குப் பின் உன் ஆத்துமம் பாக்கியமாய் சர்வேசுரனிடம் சேரப் பாத்திரமாகத் தக்கதாக, பரலோகத்தை நோக்கி நாள்தோறும் உன் மன்றாட்டுகளையும், புலம்பலையும் கண்ணீர்களையும் திருப்பக் கடவாய்.

யோசனை

இந்தக் கல்லறை ஓரத்தில் வா. வெளுத்து, நொறுங்கிப் போயிருக்கும் எலும்புகளை உற்றுப்பார்! இந்த மனிதனை நீ அறிந்திருக்கிறாய். அவன் கொஞ்ச வருஷங்களுக்கு முந்தி தன் சாவைப்பற்றி நினைத்தவனல்லன். நீயும் இப்போது சாவை நினைப்பதில்லை. அவன் செல்வங்களைப் பற்றி, தன்னைச் சேர்ந்தவர்களுக்குச் சம்பாதித்து வைப்பதைப் பற்றிக் கவலைப்பட்டவனே தவிர, கடைசி வரைக்கும் சாவை நினைத்தவனல்லன். ஆனால், இப்போது நீ போய் அவனுடைய வீட்டில் நுழைந்து பார்! அவனைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் யார்? அவனை நினைக்கிறவர்கள்தான் யார்? அவன் கடுமையாய் உழைத்து சம்பாதித்துச் சேர்த்த பொருளைத் தப்பும் தவறுமாய்ச் செலவிடுகிறதற்கும் செல்வத்தை அழிப்பதற்கும் வேண்டிய மனிதர்கள் இருப்பதைக் காண்பாய். சேசுநாதருடைய இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட அவனுடைய ஆத்துமத்தின் கதி என்ன? சரீரத்தை விட்டுப் பிரிந்த மாத்திரத்தில் ஒன்றில் மோட்சம், அல்லது நரகம்! இப்போது நீ உலக காரியங்களின் மேல் கவலையாய் இருக்கிறாயோ? மனந்திரும்புகிறதற்குத் தாமதிக்கிறாயோ? சொல். நாளை பார்த்துக் கொள்ளலாமென்கிறாயோ? மதியீனனே! நாளை உன் கையிலில்லை, இதோ! உனக்கு குழி வெட்டப்படுகின்றது. பிறகு நித்தியம்தான்.