இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

22. மனிதருடைய நிர்ப்பாக்கியங்களைத் தியானித்தல்

1. நீ சர்வேசுரனை நாடி வந்தாலொழிய மற்றப்படி நீ எங்கேதான் இருந்தபோதிலும் எவ்விடம்தான் பார்த்த போதிலும், நிர்ப்பாக்கியனாய்த்தான் இருப்பாய். உன் இஷ்டப்படியும் ஆசைப் படியும் காரியங்கள் அனுகூலப்படாததால், நீ ஏன் கலக்கம் கொள் கிறாய்? தன் இஷ்டப்படி சகலமும் கைக்கொண்டிருக்கிறவன் யார்? நானுமல்ல, நீயுமல்ல, பூலோகத்திலுள்ள மனிதரில் எவனுமல்ல, இராஜாவானாலும் சரி, பாப்பானவரானாலும் சரி, ஏதாவது துன்பம் அல்லது இக்கட்டில்லாத மனிதன் பூமியில் எவனுமில்லை. எவன் அதிகப் பாக்கியவான்? சர்வேசுனைப்பற்றி கஸ்தியை (துன்பத்தை) பொறுமையாய்ச் சகிக்கக் கூடுமானவனே பாக்கியவான்.

2. ‘அந்த மனிதன் எவ்வளவோ சுகமாய்ச் சீவிக்கிறான்! எவ்வளவு தனவந்தன்! எவ்வளவு பெரியவன்! எவ்வளவு வல்லமையுள்ளவன்! எம்மாத்திரம் உயர்ந்தவன்!’என்று பேதைகளும் பக்திக் குறையுள் ளவர்களுமான அநேகர் சொல்லுகிறார்கள். ஆனால் பரலோக நன்மை களைக் கவனி; அப்போது இவ்வுலக நன்மைகளெல்லாம் ஒன்றுமில் லாமையென்றும் நிலையற்றவையென்றும் அதிகத் தொந்தரவு உள்ளவையென்றும் காண்பாய்: கவலையின்றியும் பயமின்றியும் அவைகளை வைத்துக் கொள்வதும் ஒருபோதும் இயலாத காரியம். இவ்வுலக பொருட்களை ஏராளமாய் அடைந்திருப்பதில் மனித னுடைய பாக்கியம் அடங்கியிருப்பதில்லை; கொஞ்சமாய் வைத் திருப்பதே போதுமானது. பூமியில் வாழ்வது மெய்யாகவே நிர்ப்பாக் கியமாயிருக்கின்றது. மனிதன் எவ்வளவுக்கதிகம் பரிசுத்தவானாய்ச் சீவிக்கிறதற்கு ஆசைப்படுகிறானோ, அச்சீவியம் அவனுக்கு அவ்வளவுக்கதிகம் கசப்பாகின்றது; ஏனெனில் மனுஷத் தன்மையின் குறைகளையும் துர்க்குணங்களையும் அவன் அதிகமாய் உணர்ந்து அதிகத் தெளிவாய்க் கண்டுபிடிக்கிறான். எப்படியென்றால் சாப்பிடு வதும், குடிப்பதும், விழித்திருப்பதும், தூங்குவதும், இளைப்பாறுவதும், வேலை செய்வதும் இன்னும் மற்ற சுபாவத்திற்குரிய அவசியங்களுக்கு உட்பட்டிருப்பதும், இவை முதலியவைகளில் பாவ அடிமைத்தனத் திலும் நின்று விடுதலையாக மனப்பூர்வமாய் ஆசிக்கிற புண்ணிய வானுக்கு, மெய்யாகவே பெருத்த நிர்ப்பாக்கியமும் துன்பமுமா யிருக்கின்றது.

3. உள்ளபடி சரீரத்திற்குரிய இந்த அவசரங்களுக்கு உட்படுவது புண்ணிய ஆத்துமாக்களுக்கு மிகவும் பாரமாயிருக் கின்றது. ஆனதினால்தான் இந்த அவசரங்களினின்று விடுதலையாகத் தீர்க்கதரிசியானவர்: ஆண்டவரே! என் அவசரங்களினின்று என்னை மீட்டு இரட்சியும் என்று சொல்லிப் பக்தியோடு மன்றாடுகிறார். ஆனால் தங்கள் நிர்ப்பாக்கியத்தையறிந்து கொள்ளாதவர்களுக்கு ஐயோ கேடாம்! இந்த நிர்ப்பாக்கியமுள்ளதும் அழிவுக்குரியதுமான ஜீவியத்தை நேசிக்கிறவர்களுக்கு ஐயோ! இன்னும் அதிகக் கேடாம். ஏனெனில், சிலர் இவ்வுலக வாழ்வை எம்மாத்திரம் நேசிக்கிறார் களென்றால், வேலை செய்து அல்லது பிச்சை எடுத்து தங்களுக்கு அவசரமானவைகளை அபூர்வமாய்ச் சம்பாதித்தாலும் அவர்கள் இவ்வுலகத்தில் எப்போதுமே சீவித்திருக்கக் கூடுமானால், சர்வேசுர னுடைய இராச்சியத்தைப் பற்றி அற்பமேனும் அவர்கள் கவலைப் படமாட்டார்கள்.

4. ஓ! அவர்கள் மதியீனரும் ஞானமில்லாதவர்களுமாயிருக் கிறார்கள்! அவர்கள் பூலோகக் காரியங்களில் எவ்வளவு ஆழமாய் அமிழ்ந்து கிடக்கிறார்கள் என்றால், இலெளகீகக் காரியங்கள் தவிர மற்றொன்றின் பேரிலும் அவர்கள் பிரியங்கொள்வதில்லை. ஆனால் இந்த நிர்ப்பாக்கியர் தாங்கள் அவ்வளவு பலமாய் நேசித்து வந்தது எவ்வளவு நீசமானதென்றும் ஒன்றுமில்லாமையென்றும் கடைசி முடிவில் மகா கவலையோடு கண்டுகொள்வார்கள். ஆனால் அர்ச்சியசிஷ்டவர்களும் மற்றுமுள்ள கிறீஸ்துநாதருடைய பக்தியுள்ள நேசர்களும் சரீர சுகங்களையும் தங்கள் காலத்தில் பெரிதாக எண்ணப்பட்டவைகளையும் கவனியாமல் நித்திய நன்மைகளின் மேல் தங்களுடைய சர்வ நம்பிக்கையும் கவனமும் வைத்திருந் தார்கள். இலெளகீக நன்மைகளின் மேல் கொண்டிருக்கும் பற்றுதல் இவ்வுலக இழிவுக்குரிய நாட்டங்களுக்கு இழுக்குமேஎன்று பயந்து, நித்தியமும் ஞானமுமான நன்மைகளின் மேல் தங்கள் முழு ஆசையெல்லாம் செலுத்தினார்கள். சகோதரனே! ஞான சீவியத்தில் வளர்ச்சியடைய வேண்டுமென்ற நம்பிக்கையை விட்டு விடாதே; உனக்கு இன்னும் காலம் உண்டு. இதுவே அதற்கு நேரம்.

5. உன் பிரதிக்கினையை நாளைக்கு நிறைவேற்றலாம் என்று ஏன் தாமதம் செய்கிறாய்? எழுந்திரு; ‘வேலை செய்கிற காலம் இதுவே, சீவியத்தைத் திருத்துகிறதற்குத் தகுந்த காலம் இதுவே, யுத்தம் செய்கிற காலம் இதுவே’ என்று சொல்லி இந்தக் கணமே துவங்கு. வருந்தப்பட்டுத் துன்பம் அனுபவிக்கும் காலம்தான் நீ பேறுபலன் அடைய வேண்டிய காலம். “நீ இளைப்பாறுவதற்கு முந்தி அக்கினி யையும் நீரையும் கடந்து” போக வேண்டியது. உனக்கே நீ பலவந்தம் பண்ணினாலேயன்றி மற்றபடி துர்க்குணத்தை மேற்கொள்ள மாட் டாய். இந்தப் பலவீனமான சரீரத்தை நாம் அணிந்திருக்கிற வரையில், பாவமில்லாதிருப்பதும், சலிப்பும் துன்பமுமின்றிச் சீவிப் பதும் முடியாது. நாம் சகல நிர்ப்பாக்கியத்தினின்றும் விடுதலை யாக்கப்பட ஆசித்துத்தான் வருகிறோம்; ஆனால் பாவத்தினிமித்தம் நாம் பரிசுத்த அந்தஸ்தைப் போக்கடித்ததால், மெய்யான பாக்கியத் தையும் இழந்து போனோம். ஆனதினால் “இந்த அக்கிரமக் காலம் கடந்து போய், அழிவுக்குரிய சீவியம் அழிவில்லாச் சீவியமாகிற வரைக்கும்” பொறுமையை அனுசரித்து, சர்வேசுரனுடைய இரக்கத்துக்கு எதிர்பார்த்திருக்க வேண்டியது.

6. ஓ! துர்க்குணங்களின்மேல் எப்போதும் நாட்டமாயிருக்கும் மனிதப் பலவீனம் எவ்வளவோ பெரியது! இன்று உன் பாவங்களை சங்கீர்த்தனம் பண்ணுகிறாய். நாளையோ நீ சங்கீர்த்தனம் பண்ணின பாவங்களைத் திரும்பவும் கட்டிக்கொள்கிறாய். எச்சரிக்கையா யிருப்பதாக இப்போது பிரதிக்கினை பண்ணுகிறாய்; ஒருமணி நேரத் திற்குப் பிற்பாடு யாதோர் பிரதிக்கினையும் பண்ணாததுபோல் நடக்கிறாய். ஆனதால் நாம் இவ்வளவு பலவீனரும் நிலையற்றவர் களுமாயிருக்க, நம்மையே தாழ்த்திக் கொள்ளவும் நம்மைகனமாக எப்போதும் எண்ணாதிருக்கவும் வேண்டிய நியாயமுண்டு; வெகு பிரயாசைப்பட்டு தேவ அனுக்கிரகத்தால் நாம் அடைந்த நன்மைகளை ஒரு நொடியில் அசட்டைத்தனத்தால் போக்கடிக்கக் கூடும்.

7. ஆரம்பத்திலேயே நாம் அவ்வளவு பக்தி சுறுசுறுப்பற்றவர் களாயிருந்தால் கடைசியில் நமது கதி என்னவாகுமோ? நமது நடத்தையில் மெய்யான அர்ச்சியசிஷ்டதனத்தின் அடையாளம் இன்னும் தோன்றாத போதே, ஏற்கனவே சமாதானம் உண்டானது போலவும், ஆபத்தெல்லாம் அற்றுப் போனது போலவும், இளைப்பாற்றியை நாட நாம் ஆசை கொண்டால், நமக்குக் கேடுதான் நேரிடும். நாம் திருந்தி, புண்ணியத்தில் வளர்ச்சியடைவோம் என்ற நம்பிக்கை ஏதாவது உண்டோவென பார்க்கும்படி, நல்ல நவசந்நியாசிகளைப் போல நமக்கு நல்லொழுக்கங்களைத் திரும்பக் கற்றுக் கொடுத்தாலே நல்லது.

யோசனை

“ஒரு ஸ்திரீயினிடமாய்ப் பிறந்த மனிதன் சொற்ப காலம் சீவிக் கிறான்.” துன்பங்களால் நிரப்பப்பட்டிருக்கிறான். பாவத்தினால் நமக்குக் கிடைத்த இலாபம் இதுதான். மனிதருடைய புலம்பல் களையும் பெருமூச்சுகளையும் கேள். யோபென்கிறவர் சொல்வ தாவது: “நான் பிறந்த நாளும், ஒரு மனிதன் கற்பந்தரிக்கப்பட்டான் என்று சொல்லப்பட்ட இரவும் இல்லாமற் போவதாக. என் தாயின் உதரத்திலேயே நான் ஏன் இறந்து போகவில்லை? வெளி வரும்போது நான் ஏன் அழிந்து போகவில்லை? என்னுடைய தாய் ஏன் என்னைத் தன் மடிமேல் வைத்துக்கொண்டு எனக்குப் பால் ஊட்டினாள்? அப்படி அவள் செய்யாதிருந்தால், இப்போது நான் மெளனத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பேன்; இப்போது நித்திரையில் இளைப் பாறிக் கொண்டிருப்பேன்” என்றார். ஆனால் இந்த நிர்ப்பாக்கியத் திற்குப் பிறகு பெருத்த நம்பிக்கை உண்டானது. “என் இரட்சகர் சீவிக்கிறார் என்றும் நான் திரும்பவும் மாம்ச உத்தானமாவேன் என்று நான் அறிந்திருக்கிறேன். என் சரீரத்தோடு என் சர்வேசுரனைக் காண்பேன், அவரைப் பார்ப்பேன், என் கண்கள் அவரை நோக்கும்” என்றார். அப்போதே சகலமும் மாறிப் போகின்றன. ஆறுதல் அற்றுப்போயிருந்த துன்பங்கள் இரட்சகருடைய பாடுகளோடு ஒன்றிக்கவே பாவப் பரிகாரமாகின்றன. தேவ நீதியினுடையவும் இரக்கத்தினுடையவும் அடையாளமாகின்றன. நித்திய இன்பங்களின் துவக்கமாகின்றன. கிறீஸ்துநாதர் தமது மரணத்தால் பாவியான மனிதனுக்கு அடைபட்டுப் போயிருந்த மோட்சத்தைத் திறந்தார். துன்பங்களுக்குச் சர்வேசுரன் இப்படிப் பட்ட உயர்ந்த சம்பாவனையை அளிக்கவிருக்க, அவைகளைப் பற்றி முறையிடலாமோ? சேசுநாதர் தம் சிலுவைப் பலியில் நாமும் நமக் குண்டாகும் துன்பங்களால் அவரோடு ஒன்றித்துப் பேறுபலன்களை அடையும்படி தயைபுரியும்போது நாம் முறையிட நியாய முண்டோ? ஆண்டவரே! இதுவரையிலும் என்னிடம் இருந்த பாவக் குருட்டாட்டத்தை இப்போதே விட்டுவிடுகிறேன். உமது பாடுகளில் எனக்குப் பங்குண்டாயிருக்கக் கடவது. ஒரு நாள் உமது மகிமையிலும் பங்குண்டாகும்.