இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

21. சர்வேசுரனிடமே இளைப்பாற வேண்டும்

1. (சீஷன்) “என் ஆத்துமமே, சகலத்துக்கு மேலாகவும், சகல காரியங்களிலும் எப்போதும் ஆண்டவரிடத்தில் இளைப்பாறக் கடவாய். ஏனெனில் அவரே அர்ச்சியசிஷ்டவர்களுடைய நித்திய இளைப்பாற்றியாயிருக்கிறார். மிகவும் மதுரமும் அன்பும் நிறைந்த சேசுவே! சகல சிருஷ்டிகளையும் விட, சகல மகிமை பெருமையையும் விட, சகல அதிகாரத்தையும் பட்டத்தையும் விட, சகல கல்வியையும் புத்தி கூர்மை யையும்விட, சகல திரவியங்களையும் சாஸ்திரங்களையும்விட, சகல சந்தோஷங் களையும் அக்களிப்பையும் விட, சகல கீர்த்தியையும் புகழ்ச்சியையும்விட, சகல நம்பிக்கையையும், வாக்குத்தத்தத்தையும்விட, சகல இன்பங்களையும், ஆறுதல் களையும்விட, என் பேறுபலன்களையும் ஆசைகளையும்விட, நீர் தந்து பொழியக் கூடுமான சகல வரங்களையும் கொடைகளையும்விட, யாதொருவன் நினைக் கவும் அனுபவிக்கவும் கூடுமான சகல இன்பத்தையும் மகிழ்ச்சியையும் விட, கடைசியாய் தூதரையும், அதிதூதரையும் விட, சகல மோட்சவாசிகளையும் விட, காணக்கூடியனவும் காணப்படாதனவுமாகிய சகலத்தையும் விட, என் சர்வேசுரா! நீரல்லாத மற்ற யாவற்றையும் விட உம்மிடத்திலேயே நான் இளைப்பாறும்படி எனக்கு அனுக் கிரகம் செய்தருளும்.

2. ஏனெனில், என் ஆண்டவராகிய தேவனே! நீர் சர்வத்துக்கு மேலான நன்மையாயிருக்கிறீர்; நீர் ஒருவரே மகா உன்னதமுள்ளவர், நீர் ஒருவரே உமக்குப் போதுமானவரும், கரைகாணாத சம்பூரணரும்; நீர் ஒருவரே சகல இன்பங்களையும் ஆறுதல்களையும் பொழியும் ஊறணியானவர்; நீர் ஒருவரே சர்வ இலட்சணமுடையவர்; சர்வ அன்புக்குரியவர், நீர் ஒருவரே சர்வத்துக்கும் மேலாக உயர்ந்தவர், மகிமைபெற்றவர்; அளவில்லாத சகல நன்மையும் எக்காலத்திலும் நிறைந்தவராய் இருக்கின்றீர். ஆகையினால் உம்மையல்லாத என்ன வரம் நீர் எனக்குத் தந்தபோதிலும், என்ன திருவுளம் செய்தபோதிலும், என்ன வாக்குத்தத்தம் அளித்த போதிலும், அதெல்லாம் எனக்குப் போதாது; உம்மை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு தரிசிப்பதி னாலும், சம்பூரணமாய் அனுபவிப்பதாலும்தான் எனக்குத் திருப்திகர மாகும். என் இருதயம் சகல கொடைகளுக்கும் சகல சிருஷ்டிகளுக்கும் உயர்ந்துபோய் மேலாக உம்மிடம் இளைப்பாறினால்தான் அது உண்மை யான இளைப்பாற்றியையும் முழு திருப்தியையும் அடையும்.

3. என் ஆத்துமத்தின் மிக்க நேசமுள்ள பத்தாவாகிய சேசு கிறீஸ்துவே! மிகவும் பரிசுத்த அன்பரே! சகல சிருஷ்டிகளையும் ஆள்பவரே! நான் பறந்து வந்து உம்மிடம் இளைப்பாறும்படி மெய் யான மனச் சுயாதீனத்தின் “சிறகுகளை எனக்குக் கொடுப்பவர் யார்?” ஆ! என் ஆண்டவராகிய சர்வேசுரா! உம்மை மட்டும் சிந்தித்து நீர் எவ்வளவு மதுரமுள்ளவரென்று பார்க்க நான் குறையறக் கொடுத்து வைப்பது எப்போது? உமது நேசத்தின் மிகுதியால், நான் என்னையே மறந்து, சகல உணர்வுகளுக்கு மேலாகவும், வெகு கொஞ்சம்பேர் அறியும் உந்நத விதத்திலும் உம்மை மாத்திரமே உணரும்படி உமது மட்டில் நான் போதுமான வரையில் சிந்தையாயிருப்பது எப்போது? இப்போது எனக்குப் புலம்பி அழத்தான் தெரியும், என் நிர்ப்பாக் கியத்தை வருத்தத்தோடு சகித்து வருகிறேன்; ஏனெனில் இந்தத் துன்பக் கணவாயிலுள்ள அநேக பொல்லாங்குகள் அநேக முறை எனக்குக் கலக்கமும் கஸ்தியும் வருவித்து என்னை மயக்கிப் போடுகின்றன. நான் உம் அருகில் தடையின்றி வராதபடிக்கும் மோட்சவாசிகள் எப்போதும் தடையில்லாமல் சுகித்து வருகிற உமது இன்பமான ஐக்கியத்தை நான் சுகிக்காதபடிக்கும், அவை அநேக முறை தடுக்கின்றன, பராக்கை வருவிக்கின்றன, என்னை இழுத்துக் குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றன. பூலோகத்தில் நான் அழுகிற புலம்பல்களையும் நான் அனுபவிக்கிற திரளான கஸ்திகளையும் கண்டு என்பேரில் இரக்கம் கொள்ளும்.

4. ஓ சேசுவே! நித்திய ஒளியின் தூய்மையானவரே! பரதேசத்தில் திரியும் ஆத்துமத்துக்கு ஆறுதலானவரே! உமது சந்நிதியில் என் நாவானது வார்த்தையற்றிருக்கிறது; என் மவுனமே உம்மோடு உரையாடுகின்றது! என் ஆண்டவர் எழுந்தருளிவர எது வரையில் தாமதம் செய்வார்? அவருடைய எளிய தாசனாகிய என்னிடம் அவர் வந்து, என்னைச் சந்தோஷப்படுத்தக்கடவார்; அவர் தமது கரத்தை நீட்டி நிர்ப்பாக்கியனான என்னைச் சகல துன்பங்களிலு மிருந்து இரட்சிக்கக் கடவார். வாரும்! வாரும்! ஏனெனில் நீர் வராவிட்டால் ஒரு நாளாவது ஒரு மணி நேரமாவது சந்தோஷமா யிருப்பது இயலாத காரியம்; நீரே என் சந்தோஷம், நீர் இல்லா விட்டால் எனக்குத் திருப்தி கிடையாது. நீர் உமது பிரகாசமுள்ள பிரசன்னத்தால் என்னைத் தேற்றி என்னை விடுதலையாக்கி எனக்கு உமது தயையுள்ள முகத்தைக் காண்பிக்கும் வரையில் நான் நிர்ப்பாக்கியனும், சிறைப்பட்டு விலங்குகளால் பூட்டப்பட்ட வனுமாயிருக்கிறேன்.

5. மற்றவர்கள் உமக்குப் பதிலாகத் தங்கள் இஷ்டப்படியே எது வேண்டுமோ அதைத் தேடிக்கொள்ளட்டும்! ஆனால் என் சர்வேசுரா! என் நம்பிக்கையே! என் நித்திய ஆனந்தமே! உம்மைத் தவிர மற்ற யாதொன்றும் எனக்குப் பிரியப்படுகிறதுமில்லை, பிரியப் படப் போவதுமில்லை. உமது அநுக்கிரகத்தை நான் திரும்பவும் அடைந்து நீர் என் உள்ளத்தில் “இதோ வந்தோம்” என்று சொல்லுகிற வரையில், நான் மவுனமாய் இருக்க மாட்டேன், உம்மை மன்றாடு கிறதையும் விடமாட்டேன்.

(கிறீஸ்துநாதர்) ல் “நீ நம்மை அழைத்தபடியால், இதோ உன்னிடம் வந்தோம்.” உன் கண்ணீர்களும், உன் ஆத்துமத்தின் ஆசையும், உன் தாழ்ச்சியும், உன் இருதய மனஸ்தாபமும் நம் மனதை இளகச் செய்து நம்மை உன் அண்டையில் கூட்டி வந்தன.

(சீஷன்) ல் நான் சொன்னது: ஆண்டவரே! உம்மைப் பற்றிச் சகலத்தையும் வெறுக்க ஆயத்தமாயிருந்து, உம்மை அழைத்தேன், உம்முடன் ஒன்றித்திருக்க ஆசை கொண்டேன். ஆனால் நான் உம்மைத் தேடும்படி நீரே என்னை முந்தித் தூண்டினீர் ஆதலால் ஆண்டவரே! உமது இரக்கத்தின் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல, அடியேனுக்கு இந்த உபகாரத்தைச் செய்தீரானதால் வாழ்த்தப் படக் கடவீராக.

அடியேன் என் அக்கிரமத்தையும், நீசத்தனத்தையும் ஞாபகப் படுத்திக்கொண்டு உமது சந்நிதியில் என்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளுவதன்றி வேறு என்ன செய்யக்கூடும்? ஏனெனில் வானத் திலும் பூமியிலுமுள்ள சகல ஆச்சரியமான பொருட்களிலும் உமக்குச் சமமானது ஒன்றுமில்லை. உம் செய்கைகள் மகா உத்தமமானவை, உமது தீர்மானங்கள் உண்மையானவை, உமது திருச்செயலால் சகலமும் நடப்பிக்கப்படுகின்றன. ஆகையால் பிதாவின் ஞானமே! உமக்கு மகிமையும் தோத்திரமும் உண்டாகக்கடவது; என் நாவும், என் ஆத்துமமும், சிருஷ்டிக்கப்பட்ட சகல பொருட்களும் ஒன்றுசேர்ந்து உம்மைப் புகழ்ந்து வாழ்த்தக்கடவன.

யோசனை

பிரமாணிக்கமுள்ள ஆத்துமம் உலகத்தையும் தன்னையும் விட்டகன்று போகிற அளவுக்கு அது நேசிப்பவரை நோக்கி அதன் சகல ஆசைகளும் தாவுகின்றன. அவர் ஒருவரையே அவ்வாசைகள் நாடுகின்றன. அப்போது தன்னை இவ்வுலகத்தில் கட்டித் தடை செய்து கொண்டிருக்கும் பாசங்களைப் பற்றி அது புலம்பியழுகிறது. வரவர வளரும் தேவசிநேகத்தை முன்னிட்டு தான் ஆசிக்கும் நித்திய கடவுளின் மடியில் சேரவும், அவருடன் நித்தியத் துக்கும் ஜீவிக்கவும் இந்த சாவுக்குரிய சடலத்தை விட்டுப் பிரிந்து போகத் தேடுகின்றது: “புறாக்களுக்குச் சிறகுகள் இருப்பதுபோல எனக்குச் சிறகுகளைக் கொடுப்பவர் யார்? நானும் பறந்துபோய் இளைப்பாறுவேன்.” தான் ஆசிப்பவரிடம் அது சேரும் வரையிலும் தான் தெய்வீக சந்தோஷ அக்களிப்பில் அமிழ்ந்துபோகிற வரையிலும், தான் பரலோக பத்தாவுடன் ஒன்றிக்கிற வரையிலும், “என் நேசர் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்” என்று சொல்லக் கூடுமான காலம் வருகிறவரையிலும், ஆத்துமத்துக்கு மெய்யான இளைப்பாற்றியில்லை. “அப்பாக்கியமான நாள், அந்த இரட்சணியத்தின் நாள், அந்த முடிவில் லாத சந்தோஷத்தின் நாள் எப்போது உதிக்கும்? பரதேசத்தில் தங்கி யிருக்கும் காலம், கண்ணீரின் காலம் எப்போது முடியும்? என் நேசரை என் பார்வையினின்று மறைக்கும் நிழல் கடந்துபோகும் காலத்தை எப்போது காண்பேன்? தாகத்தினால் வருந்தும் கலைமான் ஊற்று களின் தண்ணீரைத் தேடுவதுபோல, என் ஆத்துமம், ஆண்டவரே! உம்மைத் தேடுகிறது. வல்லவரான கடவுளின் மட்டில், சீவனுள்ளவ ரான கடவுளின் மட்டில் என் ஆத்துமம் தாகமாயிருக்கின்றது. ஓ! எப்போது நான் சர்வேசுரனுடைய சமூகத்துக்கு வருவேன்? எப்போது அவர் முன்பாகத் தோன்றுவேன்?”