1. புண்ணியத்தில் வளர நீ மனதாயிருந்தால், தேவ பயத்தில் நிலைகொண்டு உன் சுய இஷ்டத்துக்கு அளவாக நடக்காமல், உன் புலன்களைக் கண்டிப்பான கட்டுப்பாட்டுக்கு உள்ளடக்கு; வீணான சந்தோஷத்திற்கு உன்னைக் கையளிக்காதே. உன் உள்ளத்தில் மன ஏக்கம் உண்டாக்க உன்னை ஆயத்தப்படுத்து. அப்போது உன்னிடம் மெய்யான பக்தியுண்டாகும். மன ஏக்கம் அநேக நன்மைகளுக்கு ஊறணியாகும், ஆனால் வெளிப் பராக்குகளாலோ இவைகளை ஒரு நொடியில் இழந்து விடுவாய். ஒருவன் தான் பரதேசியென்றும் தன் ஆத்துமம் எண்ணிலடங்காத ஆபத்துகளில் சிக்கிக் கொள்ளக் கூடுமென்றும் எண்ணுவானாகில், அவன் இவ்வுலகில் தன்னை முழுமையும் சந்தோஷத்திற்கு அளிப்பது கூடாத காரியம்.
2. நமதிருதயத்தில் உண்டான கவனமின்மையாலும், நமது குறைகளைத் திருத்த நமக்குண்டான அசட்டைத்தனத்தாலும், நமது ஆத்துமத்தின் துன்பங்களை நாம் உணருகிறதில்லை: அழவேண்டிய நியாயமிருக்கும்போதே பலமுறை தகுந்த காரணமின்றி வீணில் நகைக்கிறோம். நல்ல மனச்சாட்சியோடு சேர்ந்த தேவபயமிருந்தா லன்றி, மற்றபடி மெய்யான மனச்சுதந்திரமும் நிலையான சந்தோஷமும் கிடையாது. பராக்குக்குக் காரணமான சகல காரியங்களையும் நீக்கி விட்டு, உத்தம மனஸ்தாபப் புத்தியோடு தனக்குள் தங்கியிருக்கக் கூடுமானவன் பாக்கியவான். மனசாட்சியைக் கறைப்படுத்தவும் அதின்மேல் பாரம் சுமத்தவும் கூடிய எதையும் விட்டு நீக்குகிறவன் பாக்கியவான். தைரியமாய்ப் போராடு. ஒரு வழக்கத்தை மற்றொரு பழக்கத்தினால் தோற்கடிப்பாய்.
3. மனிதர்களுடைய பழக்கத்தை நீ ஒழித்துவிட்டால் அப்போது நீ செய்கிற வேலையை அவர்கள் தடுக்க மாட்டார்கள். அந்நியருடைய காரியங்களில் நீ பிரவேசிக்காதே. பெரியோர்களின் காரியங்களில் நீ பிரவேசிக்காதே, முதலில் உன் மீதே எப்போதும் கருத்தாயிரு; உன் சிநேகிதருக்கு நீ புத்தி சொல்வதற்கு முந்தி, உனக்கு நீயே விசேஷமான விதமாய்ப் புத்தி சொல்லிக்கொள். மனிதருடைய நற்சாட்சியம் உனக்கிராமல் போனால் அதற்காக நீ வருத்தப்படாதே; ஆனால் சர்வேசுரனுடைய ஊழியனும், பக்தியுள்ள சந்நியாசியும் நடந்து கொள்ள வேண்டியதுபோல போதுமான மட்டும் ஒழுங் காயும் எச்சரிக்கையாயும் நீ நடவாததைப் பற்றி நீ சஞ்சலப்பட நியாய முண்டு. இவ்வுலகில் பல ஆறுதல்களை, முக்கியமாய் இலெளகீக ஆறுதல்களை, அடையாமலிருப்பது சாதாரணமாய் அதிகப் பிரயோசனமும் ஆபத்தில்லாமையுமாயிருக்கும். ஆயினும் தேவ ஆறுதல்களை நாம் அடையாமலிருப்பது, அல்லது அவைகளை நாம் அரிதாய் உணருவது நமது தப்பிதமே, ஏனெனில் இருதய மனஸ் தாபத்தை நாம் தேடுகிறதில்லை, வீணான வெளி ஆறுதல்களை நாம் முழுதும் அகற்றிவிடுகிறதுமில்லை.
4. தேவ ஆறுதலுக்கு நீ பாத்திரவானல்லன் என்றும், அதை விட அதிக துன்பங்களுக்கே நீ பாத்திரவான் என்றும் அறிந்துகொள். நமது மனஸ்தாபம் உத்தமமாயிருக்கும் போது, உலக முழுதும் நமக்கு அருவருப்பாகவும் கசப்பாகவும் இருக்கின்றது. நீதிமான் தான் கஸ்திப்படவும் அழவும் போதுமான காரணம் காண்கிறான்; ஏனெனில் தன்னைப் பற்றி அவன் யோசித்தபோதிலும், பிறரைப்பற்றி யோசித்த போதிலும், இவ்வுலகில் துன்பமின்றி சீவிக்கிறவன் எவனு மில்லை என்றறிந்து கொள்கிறான். எவ்வளவுக்கு நுணுக்கமாய்த் தன்னைப்பற்றி யோசித்துப் பார்க்கிறானோ அவ்வளவுகதிகமாய்க் கஸ்திப்படுகிறான். சரியான கஸ்திப்படுவதற்கும் உள் மனஸ்தாப மடைவதற்கும் நியாயம் ஏதென்றால்: நம் பாவங்களும் துர்க்குணங்களுமாகும்; இவைகளால் உண்டாகும் கொடிய குருட்டுத்தனத்தால் மேலான மோட்சக் காரியங்களைத் தியானிப்பது அரிதான காரியமாகின்றது.
5. நீ நெடுங்காலம் சீவிப்பதைப் பற்றியல்ல, ஆனால் உன் மரணத்தைப் பற்றி, நீ அடிக்கடி தியானித்தால், நீ உன்னைத் திருத்திக் கொள்ள அதிக ஊக்கமுள்ளவனாக இருப்பாய் என்பதற்குச் சந்தேகமில்லை. மேலும் நீ நரக அல்லது உத்தரிக்கிற ஸ்தல ஆக்கினைகளை முழு இருதயத்தோடு யோசித்துப் பார்த்தால், கடுமையான வேலையையும் துன்பத்தையும் மனப்பூரணமாய்ச் சகிப்பாயென்றும், அருந்தவக் கிரிகைகளுக்கும் அஞ்சமாட்டாயென்றும் நான் நம்புகிறேன். ஆனால் இந்த யோசனை நமது இருதயத்தில் ஆழமாய்ப் பிரவேசியாததாலும், நாம் இன்ப சுக அனுபவக் காரியங்களை இன்னும் நேசிப்பதாலும் ஞான காரியங்களில் குளிர்ச்சியுள்ளவர்களாயும் சோம்பேறிகளாயும் இருந்து விடுகிறோம்.
6. ஒன்றுமில்லாத விஷயம் பற்றி நம் நீசச் சரீரம் முறைப்பாடு இடுவதற்கு நம்மிடத்திலுள்ள குறைவான மனச்சிந்தனையே அநேக முறை காரணமாயிருக்கின்றது. ஆதலால் உனக்கு மன ஏக்கத்தைச் சர்வேசுரன் அளிக்கும்படி தாழ்ச்சியோடு மன்றாடு: “ஆண்டவரே, என் ஆத்துமத்திற்கு நான் சிந்தும் கண்ணீர் போசனமும், என் ஏராள மான அழுகை பானமுமாயிருக்கடவது” என்று தீர்க்கதரிசியுடன் பிரார்த்தித்துக்கொள்.
யோசனை
மனித சீவிய காலத்தில் கஸ்திதான் அஸ்திவாரம் போலிருக்கின்றது. சரீர வேதனைகள், ஆத்தும வியாதிகள், கவலை, ஏக்கம், துன்பம், பாவம் இப்பேர்ப்பட்ட பாரமான சுமைகளை நாம் பிறந்த நாள் முதற்கொண்டு கல்லறை சேருகிறவரைக்கும் சுமக்க வேண்டியிருக்கிறது. ஆயினும் இத்தனை துன்ப வருத்தங்களுக்கு மத்தியில் மனிதன் ஏதோ மதிகெட்டுப்போய் இவ்வுலகில் கடந்துபோகிற வீண் சந்தோஷத்தில் அமிழ்ந்து கிடக்கிறான். இப்பேர்ப்பட்ட சந்தோஷத்தினின்று ஓடிவிடுவோம். எண்ணிலடங்காத நமது பாவங்களைப்பற்றி பின் வரவிருக்கும் நித்திய ஆக்கினையை யோசித்துப் பார்ப்போம். இருதய துக்கத்தோடு மனஸ்தாபம் வரக்கூடிய வரத்தைக் கேட்கக் கடவோம். உருக்கம் நிறைந்த நேசத்தையும், துக்க மனஸ்தாபக் கண்ணீரையும் சேசுநாதரிடம் கேட்போம். நீ அதிகம் நேசித்தபடியால் உனக்கு அநேக பாவங்கள் பொறுக்கப்படும் என்று அவரே திருவுளம் பற்றியிருக்கிறார்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠