இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

20. ஏகாந்தத்தின் (தனிமையின்) பேரிலும் மெளனத்தின் பேரிலும் வைக்கவேண்டிய பிரியம்.

1. நீ தனித்திருந்து உன்னைத்தானே கவனிக்கத் தக்க சமயத்தைத் தேடு; சர்வேசுரனுடைய நன்மைகளை அடிக்கடி நினை. வீண் விநோத விசாரணைகளையெல்லாம் விட்டு விடு; புத்தியை யோசிக்கச் செய்யும் விஷயங்களை விட உன் மனதை அனுதாபப்படுத்தி இளகச் செய்யும் விஷயங்களை வாசி. மட்டுத்திட்டமின்றிப் பேசுவதையும், அவசரமன்றி இங்குமங்கும் திரிவதையும், நூதனமானதும் வீணானது மான பெருமையுள்ள பேச்சுகளைக் கேட்பதையும் விட்டு நீ விலகினால், பக்திக்குரிய தியானங்களில் நீ கவனம் செலுத்துவதற்குப் போது மானதும் தகுந்ததுமான அவகாசம் உனக்குக் கிடைக்கும். மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் மனிதருடைய சகவாசத்தை முடிந்த போதெல்லாம் விலக்கி, சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யும்படி தனிமையில் சீவிப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

2. “மனிதருடன் நான் பழக்கம் செய்யும்போதெல்லாம் குறைந்த மனிதனானேன்” என்று செனேக்கா சாஸ்திரி சொல்லியிருக்கின்றார். வெகுநேரம் உரையாடுகிறவர்கள் அதன் உண்மையை அடிக்கடி அனுபவத்தால் அறிந்து கொள்வார்கள. பேச்சில் வரம்பைத் தாண்டாதிருப்பதை விட ஒன்றும் பேசாமலே இருப்பது அதிக எளிது. மானிடர்கள் நடுவில் தன்னை யோக்கியமாய்க் காப்பதைவிட அறையில் அமைதியாய்த் தனித்திருப்பது அதிக எளிது. அந்தரங்கமும் ஞானமுமான ஜீவியத்தை ஜீவிக்க விரும்பு கிறவன் எவனோ அவன் சேசுநாதர் சுவாமியுடன் மக்கள் கூட்டத் தினின்று அகன்றுபோக வேண்டியது. அந்தரங்கத்தில் ஜீவிக்கப் பிரியம் கொள்ளாதவன் ஆபத்தின்றித் தன்னை வெளியே காண்பிக்க மாட்டான். மெளனப் பிரியனாயிராதவன் எவனும் ஆபத்தின்றிப் பேச மாட்டான். மனப்பூர்வமாய்த் தாழ்ந்து போகாதவன் எவனும் ஆபத்தின்றி மேலான அந்தஸ்தில் நிலைகொள்ள மாட்டான். நன்றாய்க் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவன் எவனும் ஆபத்தின்றி அதிகாரம் செலுத்த மாட்டான். தனக்குள்ளாக நல்ல மனசாட்சி யில்லாதவன் எவனும் ஆபத்தின்றி சந்தோஷம் கொள்ள மாட்டான்.

3. அர்ச்சியசிஷ்டவர்களுடைய உறுதியான நிலைமையோ எப்போதும் தேவபயத்தில் பலமாய் வேரூன்றியிருந்தது. தங்களிடம் சிறப்பாக விளங்கும் புண்ணியங்களையும் வரப்பிரசாதங்களையும் நம்பி தாங்கள் கவனக் குறைவுள்ளவர்களாகவும் தாழ்ச்சிக் குறையுள்ளவர்களாகவும் இருக்கலாமேயென்று அவர்கள் கருத வில்லை. பாவிகளுடைய உறுதியோவெனில் ஆங்காரத்தின் பேரிலும் மிஞ்சின நம்பிக்கையின் பேரிலும் ஊன்றியிருக்கிறது; ஆனதால் அது கடைசியில் மோசமாக முடிகின்றது. நீ உத்தம சந்நியாசியாகவும் பக்தியுள்ள வனவாசியாகவும் காணப்பட்ட போதும், இவ்வுலகத்தில் பயமில்லாமல் சஞ்சரிக்கலாமென்று கண்டிப்பாக எண்ணாதே.

4. மனிதருடைய எண்ணத்தில் உத்தமராயிருந்தவர்கள், தங்கள் மிதமிஞ்சின சுயநம்பிக்கையினிமித்தம், அநேக முறை அதிக பெருத்த ஆபத்துக்களுக்கு உள்ளானார்கள். ஆகையால் அநேகர் சற்றும் பயமற்றவர்களாயிராதபடிக்கும், ஆங்காரத்தினால் பெருமை கொள் ளாதபடிக்கும், வெளி ஆறுதல்களை அதிக மன உற்சாகத்தோடு தேடாதபடிக்கு அவர்களுக்கு முற்றும் சோதனை இல்லாமல் போகா திருப்பதும் அவர்களை அடிக்கடி சோதனை அலைக்கழிப்பதும் கூட அதிகப் பயனுள்ளதாயிருக்கும். நிலையற்ற சந்தோஷங்களை ஒருபோதும் தேடாது, உலகக் காரியங்களைப் பற்றி ஒருபோதும் கவலை கொள்ளாதவன் எவ்வளவோ தூய மனதுடையவனாயிருப்பான்! ஓ! வீண் கவலையெல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டு, இரட்சணியத் திற்கும் சர்வேசுரனுக்கும் அடுத்தவைகளை மாத்திரமே சிந்தித்து, தன் நம்பிக்கையையெல்லாம் சுவாமியின் பேரில் வைத்திருக்கிறவன், எவ்வளவோ ஆழ்ந்த சமாதானமும் அமரிக்கையும் அடைவான்!

5. துக்க மனஸ்தாபப்படத் தன்னைத்தானே சுறுசுறுப்புடன் ஆயத்தப்படுத்திக் கொள்ளாத எவனும் மேலான ஆறுதலுக்குப் பாத்திரவானல்ல. உண்மையான மனஸ்தாபத்தை உணர உனக்கு மனதிருக்குமேயானால், “உங்கள் படுக்கையறையில் மனஸ்தாபப் படுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறபடி உன் அறையில் பிரவேசித்து உலக சந்தடியை நீக்கி விடு. உன் அறையில் தனிவாசம் செய்வதனால், வெளியில் நீ அநேகமாய் இழந்துபோகும் நன்மைகளைக் கண்டடைவாய். அறையில் சாதாரணமாய்த் தங்கி வாசம் செய்வது இன்பம் தருகின்றது. அதை அடிக்கடி விட்டகன்று போகிறவனுக்கு அது சலிப்புக்கு இடமாகின்றது. நீ மனந்திரும்பின துவக்கத்திலேயே உன் அறையை நீ நேசித்து அதில் தங்கியிருந்தால், பிற்காலத்தில் உனக்கு அது பிரிய சிநேகிதன் போலவும், மிகவும் பெரிய ஆறுதலாகவுமிருக்கும்.

6. மவுனத்திலும் அமரிக்கையிலுமே பக்தியுள்ள ஆத்துமம் வளர்ச்சியடையும்; வேதாகமங்களில் மறைந்திருக்கிற இரகசிய ஞான அர்த்தங்களையும் கண்டுபிடிக்கும். அப்போது இரவில் கண்ணீர்த் தாரைகளைக் கண்டடையும். அவை அதன் பாவக்கறைகளைச் சுத்தப் படுத்தி எவ்வளவுக்கு அது உலக சந்தடிகளை அகற்றி விட்டதோ அவ்வளவுக்கு அதைக் கர்த்தருடன் நெருக்கமாய் ஐக்கியப்படுத்து கின்றன. தனக்கு அறிமுகமும் சிநேகமுமானவர்களை விட்டுப் பிரிகிறவன், சர்வேசுரனும் அவருடைய பரிசுத்த சம்மனசுகளும் தன்னை அணுகுவதாக உணருவான். புதுமை செய்வதைவிட, அந்தரங்கமான சீவியத்தில் சீவித்துத் தன் ஆத்தும இரட்சணியத்தைக் கவனிப்பது உத்தமம். அரிதாய் வெளியே போவதும், தன்னைக் காண்பிப்பதை விலக்கு வதும், பிறர் கண்ணுக்கு முதலாய்த் தென்படாமல் ஒதுங்கி ஜீவிக் கிறதும் சந்நியாசியிடத்தில் புகழ்ச்சிக்குரியது.

7.  நீ வைத்துக்கொள்ளக்கூடாதவைகளைப் பார்க்க ஆசைப் படுவதேன்? “பூலோகமும் அதன் சுக அனுபவங்களும் ஒழிந்து போகின்றன.” புலன்களின் இச்சைகளால் நீ வெளிக்கும் பயணத் திற்கும் இழுக்கப்படுவாய். ஆனால் அக்காலம் கடந்தபின் மனச் சாட்சியில் கலக்கமும் இருதயத்தில் பராக்குமேயன்றி வேறென்ன பயன் உண்டாகும்? சந்தோஷமாய் வெளியே புறப்படுகிறவன் பல முறை துயரத்தோடு திரும்பி வருவான். இரா விழிப்பதில் அநுபவித்த சந்தோஷம் காலையில் துக்கமாக மாறுகின்றது. இவ்விதமாக உலக சந்தோஷமெல்லாம் இன்பத்தோடு ஆத்துமத்தில் நுழைந்து, கடைசியில் அதைக் காயப்படுத்திச் சாகடிக்கிறது. இங்கே நீ பார்க்காத வேறெதை மற்றவிடங்களில் காணப் போகிறாய்? இதோ வானமும் பூமியும் ஐம்பூதங்கள் அனைத்தும் இருக்கின்றன, பார். அவைகளினின்றே சகலமும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.

8. பூவுலகில் நெடுநாள் நிலைத்திருக்கிற வஸ்து எதையாவது எவ்விடத்திலாகிலும் நீ காணக்கூடுமோ? நீ சில சமயம் திருப்தியடைவதாய் நம்புகிறாய்; ஆனால் உன் நம்பிக்கை வீணாய்ப் போகும். உன் முன்பாகச் சகலத்தையும் நீ கண்டாலும், அது வீண் காட்சியே தவிர வேறென்ன? பரலோகத்திலிருக்கிற சர்வேசுரனை நோக்கிப் பார்த்து உன் பாவங்களுக்காகவும் அசட்டைத்தனங் களுக்காகவும் அவரை மன்றாடு. வீண் காரியங்களை வீணருக்கு விட்டு விடு; நீயோ சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிவதை மட்டும் கவனி. உன் அறையின் கதவைச் சாத்திக் கொண்டு, உன் நேசரான சேசுவை உன்னருகில் அழைத்துக்கொள். உன் அறையில் அவருடன் தங்கியிரு; வேறெந்த இடத்திலும் அவ்வளவான சமாதானம் காண மாட்டாய். நீ வெளியே புறப்படாமலும் ஊர் விஷயங்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலுமிருந்தால், உத்தம சமாதானத்தில் அதிக உறுதியாய் நிலைத்திருப்பாய். ஆனால் எப்போதும் உலக செய்திகளைக் கேட்க நீ பிரியங்கொள்ளுகிறாயோ அப்போது உன் இருதயம் கலக்கத்தினால் வருந்த நேரிடுவது தப்பாது.

யோசனை

பூலோகத்தில் என்ன தேடுகிறாய்? பாக்கியத்தை நீ காணப் போவதில்லை. பூலோகத்தில் பாக்கியமும் சமாதானமும் சந்தோஷமும் அகப்படாதென்று நாலா பக்கமும் சொல்லப்படுவது உன் காதில் விழவில்லையா? உலகம் இருளிலும், சகலவித கெடுதிகளிலும் அமிழ்ந்திருக்கின்றது; ஆனதினால்தான் தீர்க்கதரிசியானவர்: “நான் அகன்றுபோனேன், ஓடிவிட்டேன், தனிவாசத்தில் நிலைத்திருக்கிறேன்” என்கிறார். தனிவாசத்தில் இருதயத்தோடு சர்வேசுரன் உரையாடுகிறார்; அவ்விடத்தில் அவருடைய வார்த்தை எவ்வளவு ஆச்சரியமாயும் இனிமையாயும் இருக்கிறதென்றால், வேறொன் றுக்கும் செவிகொடுப்பதற்கு ஆத்துமம் ஆசிப்பதில்லை. சர்வேசுரனை முகமுகமாய் காண்கிற வரையில் வேறு எதன்மீதும் ஆசை கொள் வதில்லை. வனாந்தரங்கள் இவ்வித ஆத்துமங்களால் நிறைந்திருக் கின்றன. அவை உலகத்தைத் துறந்தன. உலக சுக செல்வங்களை, பெருமைகளை, திரவியங்களை, ஆசாபாசங்களை அருவருத்தன. தங்களுடைய ஜீவியத்தில் சம்மனசுகளைப் போலிருந்தன. ஆனால் கிறீஸ்தவர்கள் எல்லோருமே இப்பேர்ப்பட்ட மேலான அந்தஸ்திற்கு அழைக்கப்படவில்லை; ஆயினும் உலக சந்தடிக்குள் அகப்பட்டிருந்த போதும், ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இருதயத்தில் தனிவாசம் தேடி, சேசுநாதரோடு தனித்து உரையாட வேண்டியது. அவருடைய சந்நிதானத்தில் அமர்ந்திருக்க வேண்டியது. இவ்விதமாகத்தான் நமது எண்ணங்களை நித்திய காரியங்களின்மேல் செலுத்தலாம்; பூலோகத் திலிருந்தும், இராதவர்களைப் போல் ஆகலாம். “சர்வேசுரனிடத்தில் சேசுநாதரோடு என் ஜீவியம் மறைக்கப்பட்டிருக்கின்றது” என்று சொல்லக் கூடுமான ஆத்துமம் எவ்வளவோ பாக்கியம் பெற்றது!