1. உத்தம சந்நியாசியின் ஜீவியம் சகல புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டியது. அவன் வெளிப்புறத்தில் மனிதருக்கு முன்பாக எப்படி காணப்படுகிறானோ அப்படியே அவன் உள்ளத்திலும் இருக்க வேண்டியது. இன்னும் நியாயத்தின்படி, வெளிப்புறத்தில் காணப்படுவதை விட உள்ளத்தில் அதிக புண்ணிய வானாய் இருக்கவேண்டியது; ஏனெனில், நமது உள்ளத்தைப் பார்க் கிறவர் கடவுள்தான்; நாமோ எங்கிருந்தாலும் சர்வத்துக்கும் மேலாய் அவரை சங்கித்து, அவருடைய சந்நிதானத்தில் சம்மனசுக்களைப் போல் பரிசுத்தராய் ஒழுக வேண்டியது. ஒவ்வொரு நாளும், நாம் மனந்திரும்பின (சபையில் சேர்ந்த) முதல் நாள் இதுவென்பதுபோல, நமது பிரதிக்கினையைப் புதுப்பித்துப் பக்திச் சுறுசுறுப்பில் நம்மைத் தூண்டி, சுவாமியை நோக்கி: “ஆண்டவராகிய சர்வேசுரா, என் நல்ல பிரதிக்கினையை அநுசரிக்கவும் உமது பரிசுத்த ஊழியத்தைச் செய் யவும் எனக்கு உதவி புரிந்தருளும். நான் இதுவரையிலும் செய்தது ஒன்றுமில்லை ஆனதால், இன்று உத்தமவிதமாய்த் துவக்க எனக்கு உதவி செய்தருளும் சுவாமி” என்று சொல்லக் கடவோம்.
2. நமது பிரதிக்கினையில் உறுதி எவ்வளவோ அவ்வளவு சாங்கோபாங்கத்தில் வளர்ச்சியடைவோம்; ஏனெனில் வளர்ச்சி யடைய மெய்யாகவே விரும்புகிறவன் மிகவும் சுறுசுறுப்புள்ளவனாய் இருக்கவேண்டியது. கெட்டியான பிரதிக்கினை பண்ணுகிறவனே அடிக்கடி தவறிப் போகையில், அரிதாய் அல்லது மேலெழுந்த வாரியாய்ப் பிரதிக்கினை பண்ணுகிறவனுடைய கதி என்னவாகும்? பலவிதமாய் நமது பிரதிக்கினையை நாம் மறந்து விடுகிறோம்; நமது அனுதினச் செயல்களில் அற்பமானதொன்றைச் செய்யாமல் விடும் போதுகூட நஷ்டம் ஏதாகிலும் ஏற்படாமல் போவதில்லை. நீதிமான்கள் பிரதிக்கினை விஷயத்தில், தங்கள் சுய ஞானத்தின் பேரிலல்ல, தேவ அநுக்கிரகத்தின் மேல் அதிகமாய் ஊன்றியிருக் கிறார்கள். எதை அவர்கள் செய்தாலும் சர்வேசுரனையே நம்பிச் செய்வார்கள். “ஏனெனில், மனிதன் ஒன்று நினைக்கிறான், ஆனால் சர்வேசுரன் தம் இஷ்டப்படி நடத்துகிறார். மனிதனுடைய மார்க்கம் அவன் கையில் அடங்கினதல்ல.”
3. பக்தியினிமித்தமாவது, பிறர்சிநேகத்தைப் பற்றியாவது, வழக்கமான யாதொரு செயலைச் செய்யாமல் விட்டு விட்டால், பிற்பாடு அதை எளிதாய்ச் செய்ய கூடுமாயிருக்கும். மனச்சலிப் பினாலாவது அல்லது அசட்டையினாலாவது அதை எளிதாய் விட்டு விட்டாலோ, அது குற்றம் என்றும், அதனால் நஷ்டம் உண்டாகிற தென்றும் நிச்சயிக்க வேண்டும். நம்மாலான பிரயாசைப்பட்டும் அநேகம் தடவை சிறு தப்பிதங்களில் விழப்போவோம். நாம் செய்யும் பிரதிக்கினை எப்போதும் விசேஷித்ததும் முக்கியமாய் ஞான ஜீவியத்தில் வளர்ச்சியடைய நம்மை அதிகமாய் தடுக்கும் விஷயத் திற்கு விரோதமுள்ளதாயிருக்க வேண்டியது. நமது வெளிச்செயல்கள் உட்செயல்கள் இரண்டையும் ஆராய்ந்து ஒழுங்குபடுத்த வேண்டியது; ஏனெனில் இரு வகைச் செயல்களும் புண்ணிய வளர்ச்சிக்கு உதவுகின்றன.
4. நீ எப்போதும் உன்னுள் அடங்கியிருக்க முடியாவிட்டால், அவ்வப்போதாவது, நாள்தோறும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறையாவது, அவ்விதம் செய்ய பிரயாசைப்படவேண்டும். காலையில் உனது பிரதிக்கினையை நினைப்பூட்டிக்கொள்; சாயங்காலம் உன் நடத்தையைப் பரிசோதித்துப்பார்; அன்று நீ பேசினது, செய்தது, நினைத்தது எத்தன்மையானவை என்று ஆராய்ந்து பார்; ஏனென்றால் இவைகளில் ஒருவேளை சர்வேசுரனுக்கும் பிறனுக்கும் விரோதமாக அநேக முறை நடந்திருப்பாய். பசாசின் தந்திரங்களை எதிர்க்க, வீரத் துடன் ஆயுதமணிந்துகொள்; போசனப்பிரியத்தை அடக்கு. அப்போது சரீர சம்பந்தமான துராசைகளைஎல்லாம் எளிதாய் அடக்குவாய். ஏதும் செய்யாமலே ஒருபோதும் இராதே; ஆனால் ஏதாவது வாசி, அல்லது எழுது, வேண்டிக்கொள், அல்லது தியானி, அல்லது மடத்துக்கு உதவியான யாதொன்றைச் செய். ஆயினும் சரீரப் பிரயாசையான வேலைகளை நிதானமாய்ச் செய்ய வேண்டும்; அவைகளை ஒரே அளவிற்கு எல்லோராலேயும் செய்வது சாத்தியப் படாது.
5. எல்லோருக்கும் பொதுவாயிராத பக்திச் செயல்களை வெளியரங்கமாய்ச் செய்ய வேண்டாம்; ஏனெனில் உனக்குப் பிரத்தியேக மான பக்திச்செயல்களை அந்தரங்கத்தில் செய்வது அதிகப் பொருத்தமாயிருக்கும். நீ பொதுவான பக்திச்செயல்களை அசட்டை பண்ணி, உனது தனி பக்திச்செயல்களை மிக்க ஆசையோடு செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. ஆனால் உன் கடமைகளையும் உனக்கு இடப்பட்ட வேலைகளையும் முற்றும் பிரமாணிக்கமாய்ச் செய்த பிறகு, இன்னும் நேரம் உண்டானால் உன் பக்திக்கு தக்கதுபோல உனக்கு இஷ்டமான தைச் செய். ஒரே பக்தியுள்ள செயலை எல்லோருமே ஆசிப்பது இயலாத காரியம். சிலருக்கு ஒரு பக்திச்செயல் பயனுள்ளதா யிருக்கும். வேறு சிலருக்கு வேறொரு பக்திச் செயல் பயனுள்ளதா யிருக்கும். மேலும் கால வேறுபாட்டிற்கு தக்கதுபோல வெவ்வேறு பக்திச் செயல்களைச் செய்வதில் பிரியம் கொள்வோம். திருநாட் களில் அதிகமாய்ப் பிரியப்படுகிற பக்திச்செயல்கள் வேறு; சாதாரண நாட்களில் அதிகமாய் பிரியம் வருத்துவிக்கிற பக்திச்செயல்கள் வேறு. தந்திர சமயத்தில் வேறு பக்திச்செயல்களும், சமாதானமான அமரிக்கையாயிருக்கும்போது வேறு பக்திச்செயல்களும் வேண்டி யதாயிருக்கும். நாம் கஸ்திப்படும்போது சிலவற்றின்மீதும், ஆண்டவரில் அகமகிழ்ந்திருக்கும்போது வேறு சிலவற்றின்மீதும் பிரியங்கொள்வோம்.
6. பிரதான திருநாட்களின்போதும் நமது பத்திக் செயல்களைப் புதுப்பித்து அர்ச்சியசிஷ்டவர்களுடைய ஒத்தாசையை அதிக பக்தி யுடன் மன்றாடவேண்டியது. ஒரு திருநாள் போய் மறு திருநாள் வருவதற்குள்ளாக, நாம் இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்து நித்திய திருநாளுக்கு மறுவுலகம் போய்ச் சேரவேண்டியவர்கள் என்று நினைத்து அதற்காக ஆயத்தம் செய்வது தகுதியானது. ஆகவே நமது பிரயாசையின் சம்பாவனையை இன்னும் கொஞ்ச காலத்திற்குள் சர்வேசுரனிடத்தினின்று அடையவிருக்கிறோம் என்று எண்ணி, மேற்படி பக்திக்குரிய காலங்களில் ஊக்கத்தோடு நம்மை ஆயத்தம் செய்யவும், அதிகப் பக்தியாய் நடக்கவும், ஒழுங்குகளை அதிக நன்றாய் அனுசரிக்கவும் வேண்டியது.
7. அந்தச் சம்பாவனையின் நாள் வரத் தாமதமானாலோ, நாம் இன்னும் சரியானபடி ஆயத்தமாகவில்லை என்றும், சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட காலத்தில் நமக்கு வரவிருக்கும் மகத்தான மகிமைக்குத் தகுதியற்றவர்களாயிருக்கிறோம் என்றும் எண்ணி, இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு அதிக உத்தமமாய் ஆயத்தம் செய்யப் பிரயாசைப்படக்கடவோம். “எஜமான் வரும்போது விழித் திருக்கும் ஊழியன் எவனோ அவனே பாக்கியவான். தன் சகல செல்வங்களுக்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவாரென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சுவிசேஷகரான அர்ச். லூக்காஸ் எழுதியிருக்கிறார்.
யோசனை
“பூலோகத்தில் மனிதருடைய ஜீவியமானது பசாசோடும் உலகத் தோடும் சரீரத்தோடும் ஓயாத போராட்டமாயிருக்கின்றது.” எளிதாய்த் தந்திரங்களை எதிர்ப்பதற்காகச் சிலர் சந்நியாசிகள் ஆகிறார்கள். சிலர் உலகத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் விசேஷ விழிப்பில்லாமல் எவரும் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வது இயலாத காரியம். தியானம், தனிமை, வார்த்தை, நினைவு, செயல்களின் மேல் கவனம், தன் கடமைகள் சில விஷயங்களில் சொற்பமாயிருந்த போதிலும் அவைகளை நிறைவேற்றுவதில் பிரமாணிக்கம், இவைதான் பெரிய தந்திர சோதனைகளின்று நம்மைக் காப்பாற்றுகின்றன. இவைகளைக் கொண்டுதான் பரலோக வரப்பிரசாதத்தை நாம் அடையலாம். “சிறு காரியங்களை அசட்டை செய்கிறவன் கொஞ்சங் கொஞ்சமாய் விழுந்துவிடுவான்” என்று இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அருளிச் செய்திருக்கிறார்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠