இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

19. நிந்தை அவமானங்களச் சகித்தனும் மெய்யான பொறுமையின் அடையாளங்களும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே, நீ என்ன சொல்கிறாய்? நம்முடைய பாடுகளையும் அர்ச்சியசிஷ்டவர்கள் அனுபவித்த உபத்திரவங்களையும் யோசித்து, முறைப்படுவதை நீ விட்டுவிடு. இரத்தம் சிந்துகிற மட்டும் நீ இன்னமும் போராடினதில்லை. வெகு பலமான தந்திரங்களால் வருந்தி, வெகு கடினமான துன்பங்களுக்குள்ளாகி, பலவிதமாய்ச் சோதிக்கப்பட்டுப் பரீட்சிக்கப்பட்டுப் பாடுபட்ட அவர்களோடு உன்னை இணையிட்டுப் பார்த்தால், நீ படுகிறது மகா சொற்பமாயிற்றே. உன்னுடைய சொற்பத் துன்பங்களை நீ அதிக எளிதாய்ச் சகிக்கும்படி மற்றவர்களுடைய பலத்த துன்பதுரிதங்களை நீ நினைவுகூரத் தகும். அப்போதும் உன் துன்பங்கள் உனக்குச் சொற்பமாய்த் தோன்றாவிடில், உன் பொறுமையற்றதனம் அதற்கும் காரணமாயிருக்கிறதில்லையோ என்று பார். அற்பமாயிருந்தாலும் சரி, பலத்ததாயிருந்தாலும் சரி, எல்லாவற்றையும் பொறுமையாய்ச் சகிக்கக் கற்றுக்கொள்.

2. நீ துன்பங்களை அநுபவிக்க எவ்வளவு உன்னை ஆயத்தப் படுத்துகிறாயோ அவ்வளவும் அதிக விவேகமாய் நடப்பாய், அதிக மாய் பேறுபலன் அடைவாய்; துன்பங்களை அநுபவிக்கிற பழக்கம் பிரதிக்கினை இவற்றால் உன்னை உறுதியாய் ஆயத்தப்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவைகளை அதிக எளிதாய்ச் சகிப்பாய். இன்ன மனித னால் எனக்கு உண்டாகும் துன்பங்களைச் சகிக்க முடியாது; மற்றெவ னாலே வந்தாலும் என் சக்திக்குத் தக்கபடியாகிலும் சகிப்பேன், ஆனால் இவனிடத்திலிருந்து அதைச் சகிக்கவே முடியாது; ஏனெனில் இவன் எனக்குப் பெருத்த நஷ்டம் வருவித்தான், நான் ஒருபோதும் நினையாத குற்றத்தை என்பேரில் சாட்டுகிறான் என்று சொல்லாதே. அப்படி எண்ணுவது தவறு. இத்தகைய எண்ணங் கொள்வாயாகில் பொறுமை என்கிற புண்ணியமாவது என்ன வென்றும் அதற்குச் சம்பாவனை தருபவர் யாரென்றும் பாராதவனாய், ஆட்களையும் அவர்கள் உன் மட்டில் செய்த குற்றங்களையும் மட்டும் நீ கவனிப்பதாகும்.

3. தனக்குப் பிரியமாயிருக்கும்வரை, தனக்கு இஷ்டமானவர்களால் உண்டாகும் துன்பங்களை மாத்திரம் சகிக்க மனதுள்ளவன் மெய்யான பொறுமைசாலியல்ல. மெய்யான பொறுமைசாலியோ தன்னைத் துன்பப்படுத்துகிறவன் தன் சிரேஷ்டரோ, தனக்குச் சரியொத்தவனோ, தன்னிலும் சிறியவனோ, பரிசுத்தவானோ, அயோக்கியனோ என்று கவனிக்க மாட்டான். ஆனால் ஒரு வித்தி யாசமும் இன்றி எந்தச் சிருஷ்டியினால், என்னென்ன துன்பம், எவ்வளவு கடினமாயிருந்தாலும், எத்தனை தடவைதான் வந்தாலும், சர்வேசுரனுடைய கரத்தினின்று வருவதுபோல எல்லாவற்றையும் நன்றியறிதலோடு ஏற்றுக்கொண்டு அவைகளைப் பெருத்த இலாப மென்று எண்ணுவான். ஏனெனில் எவ்வளவு சொற்பத் துன்பமாயி ருந்தாலும் சரி, அதைச் சர்வேசுரனைப்பற்றி அநுபவிப்போமாகில் அவரிடத்தில் அது பேறுபலனடையாமல் போகாது.

4. ஆகையால் நீ வெற்றிபெற விரும்பினால், யுத்தத்துக்கு எப்பொழுதும் ஆயத்தமாயிரு. பொறுமைக்குக் குறிக்கப்பட்ட முடியைப் போராடாமல் நீ சம்பாதிக்க முடியாது. துன்பப்பட மனதில்லாதிருப்பது முடிசூட்டப்பட வேண்டாம் என்பதாகும்; முடிசூட்டப்பட உனக்கு ஆசையுண்டானால், தைரியமாய் யுத்தம் செய், பொறுமையோடு சகித்து வா. பிரயாசையின்றி இளைப் பாற்றி அடைவது முடியாது; யுத்தமின்றி வெற்றி கொள்ள முடியாது.

5. (ஆத்துமம்): ஆண்டவரே! என் இயற்கை பலத்தால் முடியாததாய் எனக்குக் காணப்படுவது உமது வரப்பிரசாதத்தால் எனக்குக் கூடுமானதாகட்டும். நான் பாடுபடப் பலனற்றவனென்றும், ஒரு சொற்பத் துன்பம் வந்தபோதே கலக்கத்துக்கு உள்ளாகிறேன் என்றும் நீர் அறிவீர். எனக்கு என்ன துன்பம் வந்தாலும், உமது நாமத்தைப்பற்றி, எனக்கு அது இன்பமும் பிரியமு மாய் ஆகக்கடவது. ஏனெனில் உம்மைப் பற்றித் துன்ப வேதனைப் படுவது என் ஆத்துமத்துக்கு மிகவும் நன்மையாயிருக்கிறது.

யோசனை

அயலானால் நமக்குத் துன்பம் வருவதுபோல் நம்மாலும் அவனுக்குப் பற்பல துன்பம் உண்டாகிற தல்லவா; ஆனதினால் தான் அப்போஸ்தலர்: “ஒருவர் ஒருவருடைய பாரத்தைச் சுமந்து கொள்ளுங்கள், அதனால் சேசுகிறீஸ்துநாதருடைய கட்டளையை நிறைவேற்றுவீர்கள்” என்றார். சகிப்பதற்கு அரிதான சில காரியங்கள் உண்டென்பீர்கள். மெய்தான், ஆனால் அப்போது அதிகப் பேறுபலன் அடைவீர்கள். இயற்கையினால் செய்யக் கூடாததைப் பற்றித்தான் அவைகளைச் செய்வதற்கு நமக்குத் தேவ வரப்பிரசாதம் கொடுக்கப் படுகின்றது. மேலும் சர்வேசுரன் முன்னறியாத காரியம் என்ன உனக்குச் சம்பவிக்கும்? அவருடைய சித்தமில்லாமல் உனக்கு என்ன நேரிடும்? அவர் கட்டளையிடுவதற்குச் சந்தோஷமாய்க் கீழ்ப் படிவதே பொறுமை. இல்லாவிட்டாலோ, ஓயாத சஞ்சலத்தில் சீவித்து வருவோம். ஏனெனில் “சர்வேசுரனை எதிர்த்து, சமாதானமா யிருப்பவன் யார்?” என்று எழுதப்பட்டிருக்கின்றது. அவர் உன்மட்டில் எவ்வளவோ பொறுமையாயிருந்து வருகிறார் என்பதை நீ யோசித்தாயா? உன் மனசாட்சியைப் பரிசோதித்து பதில் கூறு. உன்னால் அவர் சகிக்க வேண்டியதொன்றுமில்லையோ? உனக்கு மன்னிக்க வேண்டியதொன்றுமில்லையோ? ஆம், “ஆண்டவர் பொறுமையுள்ளவராய், இரக்கம் நிறைந்தவராயிருக்கிறார்.” ஆனதால் நாமும் சகல விஷயத்திலும் பொறுமையுள்ளவர்களாய் இருக்கக் கடவோம். பொறுமையுள்ளவன் பலமுள்ளவனை விட உத்தமன்; தன் ஆத்துமத்தை அடக்கி ஆளுகிறவன், பட்டணங்களைச் ஜெயித்துப் பிடிக்கிறவனை விட மேலானவன். கிறீஸ்துநாதருடைய பாடுகளைத் தீர்க்கதரிசனமாய் அறிவிக்கும்போது, தாவீது இராசா: “நான் மெளனமானேன், வாய் திறந்ததில்லை” என்கிறார். வேறோர் தீர்க்கத்தரிசி: “மயிர் கத்தரிக்கிறவன்முன் செம்மறியாட்டுக்குட்டியைப் போல மெளனமாயிருந்தார்” என்றார். இவையெல்லாம் அறிந்தபிறகு முறையிடத் துணிபவன் யார்? கோபம் கொள்ளத் துணிபவன் யார்? நிந்தை சொல்லத் துணிபவன் யார்? ஓசேசுவே! நீர் எங்களுக்கு முன்மாதிரிகையாயிரும். சர்வேசுரனுக்குச் சொந்த மாவதற்கு நீர் எங்களுக்குப் படிப்பித்திருக்கிறீர். “எங்களுக்குத் தின்மை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங் களைப் பொறுத்தருளும்.” இவ்விதமாய்த்தான் நாம் நாள்தோறும் மன்றாடுகிறோம், இதைத்தான் நாள்தோறும் நாம் வாக்குத் தத்தம் செய்கிறோம்; எவனுடைய மன்றாட்டு, எவனுடைய வாக்குத்தத்தம் பொய்யானதாகக் காணப்படுகின்றதோ, அவன் நிர்ப்பாக்கியன் என்பதற்குச் சந்தேகமில்லை.