இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

18. இவ்வுலகத் துன்பங்களைக் கிறீஸ்துநாதர் பாவனையாகப் பொறுமையோடு சகிக்க வேண்டும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே, உன் இரட்சணியத்திற்காக நாம் பரலோகத்தினின்று இறங்கினோம்; கட்டாயத்தினால் அல்ல, ஆனால் நீ பொறுமையைக் கற்றுக்கொள்ளும் படியாகவும், இவ்வுலக துன்பங்களை நீ முறைப்பாடு இல்லாமல் சகிக்கும்படியாகவும், இவ்விதம் நேசப் பெருக்கத்தாலே செய்யலானோம். ஏனெனில் நாம் பிறந்த நேரமுதல் சிலுவையில் மரித்த நேரம் வரை நமக்குத் துன்ப மில்லாமல் போனதில்லை. இவ்வுலக சொத்துக்களின் விஷயத்தில் கொடிய வறுமைப்பட்டோம்; நமதுபேரில் பலதடவை முறைப் பாடுகள் நாம் கேள்விப்பட்டோம்; அவமானங்களையும் நிந்தனைகளையும் தயாளமாய்ச் சகித்து வந்தோம்; உபகாரங்களுக்கு நன்றியறியாமையையும் புதுமைகளுக்குத் தேவ தூஷணங்களையும், போதகங்களுக்குக் கண்டனங்களையும் சம்பாவனையாகப் பெற்றோம்.

2. (சீஷன்) ஆண்டவரே! நீர் விசேஷமாய் உமது பிதாவின் கற்பனையை அநுசரித்து உமது சீவிய காலத்தில் அத்தனை பொறுமையா யிருந்திருக்க, மிகவும் நிர்ப்பாக்கிய பாவியாகிய நான் உம் சித்தப்படி நடந்து பொறுமையோடு பாடுபடுவதும், என் இரட்சணியத்துக்காக அழிவுக்குரிய சீவியத்தின் பாரத்தை உமக்கு இஷ்டமாகும் காலம் வரை சுமந்து கொள்வதும் நியாயமே. ஏனென்றால் இந்தச் சீவியம் பாரமுள்ளதாய்க் காணப்பட்டாலும், அது உமது அநுக்கிரகத்தால் மிகுந்த பேறுபலனடைவதற்கு ஏற்ற இடமாயிற்று; மேலும் உமது மாதிரிகையினாலும், அர்ச்சியசிஷ்டவர்களுடைய தர்மநடத்தை களினாலும் அது பலவீனருக்கு முதலாய் இலேசானதும் எளிதானது மாயிற்று. வரிவேத காலத்தை விட, இப்பொழுது மனித சீவியம் வெகு அதிக ஆறுதலுள்ளதாயிருக்கிறது. அப்போது மோட்ச வாசல் அடைப்பட்டிருந்தது; மோட்சப் பாதை அதிக இருட்டாய்த் தோன்றியது; வெகு சொற்பப் பேர் பேரின்ப இராச்சியத்தைத் தேடக் கவலை கொண்டிருந்தார்கள்; நீதிமான்களாயிருந்து கரையேற வேண்டியிருந்தவர்கள் முதலாய் உமது பாடுகளுக்கும் திருமரணத் துக்கும் முந்தி மோட்ச இராச்சியத்தில் பிரவேசிக்க முடியாமல் போனார்கள்.

3. ஓ! உமது நித்திய இராச்சியத்திற்குச் சேருகிற நேரான நல்ல வழியை அடியேனுக்கும் சகல விசுவாசிகளுக்கும் தேவரீர் காண் பிக்கக் கிருபை செய்ததற்காக, நான் உமக்கு எவ்வளவோ நன்றியறிந்த தோத்திரம் செய்யக் கடமைப்பட்டவனாயிருக்கிறேன். ஏனெனில் உமது சீவியம் எங்களுடைய பாதை; உத்தம பொறுமையின் வழியாய் எங்கள் சம்பாவனையாகிய உம்மிடத்தில் சேருகிறோம். நீர் முன் நடந்து அவ்வழியைக் காட்டியிராவிட்டால், யார்தான் அதில் நடக்க முயலுவான்? எந்நேரமும் உமது பிரபலமுள்ள மாதிரிகைகளைப் பாராமல் போனால், ஐயோ! எத்தனையோ பேர் தொலைவில் பின்னாலே நின்று விடுவார்கள். இத்தனை புதுமைகளையும் போதனைகளையும் கேட்டபிறகும் இன்னும் வெதுவெதுப்புள்ளவர்களா யிருக்கிறோமே, உம்மைப் பின்செல்வதற்கு எங்களுக்கு இவ்வளவு வேகமுள்ள பிரகாசமில்லாவிடில் என்ன வாகும்?

யோசனை

பூமியில் மனிதனுடைய சீவியம் கஸ்தியும் நிர்ப்பாக்கியங்களும் துன்பங்களும் நிறைந்ததாய் இருக்கின்றது; இதை அறியாதவன் யார்? நாம் தண்டிக்கப்படுகிறோம் என்பதற்குச் சந்தேகமில்லை. நம்மைத் தண்டிக்கிறவர் சர்வ வல்லபரானபடியால், தண்டனைக்குத் தப்பித்துக் கொள்வது கூடாது. ஆனதால் மனிதன் ஒன்று தன் சுபாவத்தை அடக்க வேண்டியது, அல்லது தண்டனை இல்லையென்று தன் இச்சைப்படி நடக்க வேண்டியது. மனிதர் ஆங்காரத்திலும், புலன்களின் சுகங்களிலும் சந்தோஷத்தைத் தேடுகின்றனர்; வேறு மார்க்கம் இல்லையென்று எண்ணுகின்றனர். ஆனால் திடீரென “அழுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்ற சப்தம் கேட்கப்படு கின்றது. ஜனங்கள் உற்றுக் கேட்கின்றனர், ஆச்சரியம் அடைகின்றனர். அவர்களிடத்தில் நூதனமான உணர்ச்சியொன்று உண்டா கின்றது. கண்டுபிடிக்கிறார்கள். கண்ணீரால் உண்டாகும் சந்தோ ஷத்தை உணருகிறார்கள். “கஸ்தியின் மனிதன்” அறையப்பட்ட சிலுவை உச்சியினின்று அறியாத ஆறுதல்களின் வற்றாத ஆறு ஓடுகின்றது. இரத்த வேர்வை வேர்த்து, மரண அவஸ்தைப்பட்டு, சேசுகிறீஸ்துநாதர்: “மரண மட்டும் என் ஆத்துமம் கஸ்தியா யிருக்கின்றது” என்று சொன்னபோதே, ஜீவியத்தின் கஸ்தியெல்லாம் போய்விட்டது. மனஸ்தாபப்படுவதற்குப் போதுமான துன்பங் களில்லை, சிநேகத்தைக் காட்டுவதற்குப் போதுமான துரிதங் களில்லை. இந்த ஆச்சரியம் நடந்த விதமென்ன? ஜீவனுள்ளவ ராகிய சர்வேசுரனுடைய குமாரனே! உமது ஒளி பூலோகத்தைப் பிரகாசிப்பித்தது, உமது வரப்பிரசாதம் அதைத் தொட்டது; மனிதன் தான் விட்டுவிட்ட பாதையை, “பாதையும், உண்மையும் ஜீவியமு” மாயிருக்கிற உம்மிடத்தில் மறுபடியும் கண்டடைந்தான். பாவத்துக்குப்பின் பாவப் பரிகாரம் செய்ய வேண்டியது முழு நியாயம் என்று கண்டுபிடித்தான். ஆனதால் சிலுவையை நோக்கி: “ஒன்றில் பாடுபடுகிறது, அல்லது மரிக்கிறது! பரிசுத்த பலியே! உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையே, நான் உம்மோடு பாடுபடவும், பாவத்தால் அடைக்கப் பட்ட மோட்ச வாசலை மறுபடியும் திறந்து விட்ட உமது பாடு களோடு நான் என் பாடுகளையும் ஒன்றித்து மரிக்கவும் எனக்குத் தயை புரிந்தருளும்” என்று மன்றாடுகிறான்.