இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

18. அர்ச்சிஷ்டவர்களுடைய மாதிரிகை

1. மெய்யான பரிசுத்த ஜீவியத்தினாலும் சந்நியாச ஓழுக்கத்தினாலும் பிரகாசித்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய உத்தம மாதிரிகைகளைக் கண்ணுற்றுப் பார்த்தால், நாம் செய்வது சொற்பமென்றும் ஏறக்குறைய பூச்சியமென்றும் அறிவோம். ஐயோ! அவர்களுடைய ஜீவியத்தையும் நமது ஜீவியத்தையும் இணையிட்டுப் பார்த்தால் எவ்வளவோ வித்தியாசம்! அர்ச்சியசிஷ்டவர்களும் கிறீஸ்துநாதருடைய நேசர்களும் பசியிலும் தாகத்திலும், குளிரிலும், வஸ்திர வறுமையிலும், பிரயாசையிலும் இளைப்பிலும், விழிப்பிலும் உபவாசத்திலும், ஜெபத்திலும் தியானங்களிலும், திரளான இடையூறுகளிலும் அவமானங்களிலும், ஆண்டவருக்கு ஊழியம் பண்ணினார்கள்.

2. ஓ! அப்போஸ்தலர்கள், வேதசாட்சிகள், ஸ்துதியர்கள், கன்னியர்கள், இன்னும் கிறீஸ்துநாதரை பின்செல்ல மனதாயிருந்த மற்றெல்லோரும் எத்தனையோ கடின உபத்திரவங்களை அநுபவித்தார்கள். ஏனெனில் “நித்திய ஜீவியத்தை அடையும்படியாக, இவ்வுலகில் தங்கள் உயிரைப் பகைத்தார்கள்.” ஓ! அர்ச்சியசிஷ்ட வனவாசிகள் எத்தனையோ கஷ்டத்திற்குரியதும் கொடூரத்திற் குரியதுமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். எவ்வளவோ காலம் கொடிய தந்திர சோதனைகளைச் சகித்து வந்தார்கள்! எத்தனையோ முறை சத்துருவால் தொந்தரவுபட்டார்கள். அவர்கள் இடைவிடாமல் சர்வேசுரனைப் பக்தியாய் வேண்டிக் கொண்ட ஜெபங்கள் எத்தனை! எவ்வளவு கடுமையான உபவாசம் பிடித்தார்கள்! பரிசுத்த ஜீவியத்தில் மேலோங்க எவ்வளவோ சுறுசுறுப்பும் உருக்கமும் உள்ளவர்களாயிருந்தார்கள்! தங்கள் துர்க்குணங்களை அடக்கு வதற்கு எத்தனையோ பலமாய் யுத்தம் செய்தார்கள்! சர்வேசுரன் மட்டில் எவ்வளவு சுத்தமானதும் நேர்மையானதுமான கருத்து கொண்டிருந்தார்கள்!

3. பகலில் உழைத்து வேலை செய்வார்கள்; இரவில் நெடு நேரம் ஜெபத்தியானம் பண்ணுவார்கள்; வேலை செய்யும்போது மனத்தியானத்தைக் கொஞ்சமாவது விட்டவர்களல்லர். தங்கள் காலம் எல்லாம் பிரயோசனமாய்ச் செலவழிப்பார்கள். சர்வேசுரனை சேவிக்கிறதில் செலவழித்த ஒவ்வொரு மணி நேரமும் அதிக விரை வாய்க் கடந்து போகிறதென்று எண்ணுவார்கள்; தியான யோகத்தில் அவர்களுக்கு உண்டாகிற பேரின்பத்தால் சரீர பலத்துக்கு அவசிய மான அன்ன பானத்தை முதலாய் மறந்துவிடுவார்கள். செல்வம், பட்டம், புகழ், சிநேகிதர், உறவினர்கள் முதலிய சகலத்தையும் வெறுத்து விட்டிருந்தார்கள்; உலகத்திற்குச் சம்பந்தமான யாதொன்றையும் வைக்காதிருக்க ஆசிப்பார்கள்; உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசிய மானதை மிகச் சொற்பமாய் உண்பார்கள்; சரீரத்தின் தேவைகளுக்குப் பணிய வேண்டியதற்கு வருந்துவார்கள். ஆனதால் அவர்கள் உலகக் காரியங்களில் தரித்திரராயிருந்தார்கள்; ஆனால் வரப்பிரசாதத்திலும் புண்ணியத்திலுமோ பெரும் செல்வந்தர். வெளியில் அவர்களுக்கு அநேக காரியங்கள் குறைவுபட்டன, ஆனால் உள்ளத்திலோ வரப்பிர சாதத்தினாலும் தேவ ஆறுதலாலும் போஷிக்கப்பட்டிருந்தார்கள்.

4. உலகத்திற்கு அந்நியராயிருந்தார்கள், ஆனால் சர்வேசுர னுக்கோ உறவினரும் உத்தம சிநேகிதர்களுமாயிருந்தார்கள். சுத்த சூனியம் போலத் தங்களை எண்ணினார்கள், இவ்வுலகம் அவர்களை நிந்தித்துக் கொண்டு வந்தது; ஆனால் அவர்கள் சர்வேசுரனுக்குச் சிநேகிதர்களும் மிக அருமையானவர்களுமாயிருந்தார்கள். மெய் யான தாழ்ச்சியையும் கபடற்ற கீழ்ப்படிதலையும் சிநேகத்தையும் பொறுமையையும் தங்கள் வாழ்நாட்களிலெல்லாம் அனுசரித்து வந்ததால், நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து சர்வேசுரனிடமிருந்து மகத்தான வரப்பிரசாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் சகல சந்நியாசிகளுக்கும் உந்நத மாதிரிகையாக ஏற்படுத்தப்பட்டார்கள்; ஆனதால் திரளான வெதுவெதுப்புள்ளவர்கள் நம்மை அசட்டைத் தனத்திற்கு இழுப்பதைவிட அவர்கள் நம் முன்னேற்றத்திற்கு நம்மை அதிகமாய்த் தூண்ட வேண்டியது.

5. ஓ! சந்நியாசிகள் எல்லோரும் தங்கள் பரிசுத்த சபை ஸ்தாபகமான முதல் காலங்களிலே எவ்வளவோ பக்தி சுறுசுறுப்பு உள்ளவர்களாயிருந்தார்கள்; ஜெபத்தில் எவ்வளவோ பிரியப் பற்றுதல், புண்ணியத்தில் வளர எவ்வளவோ உற்சாகம்; ஒழுங்குகளை எவ்வளவோ நுணுக்கமாய் அநுசரித்துக்கொண்டு வந்தார்கள், சிரேஷ்டருடைய கட்டளையின்கீழ் எவ்வளவோ மரியாதையும் கீழ்ப் படிதலும் எங்கும் விளங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் மெய் யாகவே அர்ச்சியசிஷ்டவர்களும் பரிசுத்த ஜீவியத்தில் தேர்ந்தவர் களுமாயிருந்தார்களென்றும், எவ்வளவு தைரியமாய்ப் போராடி உலகத்தைக் காலால் மிதித்தார்களென்றும், அவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் இன்னும் நமக்குக் காண்பிக்கின்றன. இக்காலத் திலோ எவராகிலும் சபை ஒழுங்குகளை மீறாமலும் தான் தெரிந்து கொண்ட அந்தஸ்தைப் பொறுமையாய்ச் சுமந்து கொண்டும் நடந் ததால், அவர்கள் மகா புண்ணியவான்களாக எண்ணப் படுகிறார்கள்.

6. ஓ! நமது அந்தஸ்தில் எவ்வளவோ உற்சாகக்குறைவும் அசட்டைத்தனமும் உண்டாயிற்று; அதனால் துவக்கத்தில் நம்மிட மிருந்த பக்தி விருப்பம் வெகு சீக்கிரத்தில் குறைந்து போயிற்று. சோர்வினாலும் அசமந்தத்தினாலும், ஜீவிக்கிறது முதலாய் நமக்குச் சலிப்பாய்ப் போயிற்று. அநேக தடவை அர்ச்சியசிஷ்டவர் களுடைய கனத்த நன்மாதிரிகைகளைக் கண்டிருக்கும் உன்னிடத்தில் புண்ணிய வளர்ச்சி முற்றுமே அயர்வுராதிருக்கக்கடவது.

யோசனை

சேசுகிறீஸ்துநாதருடைய உத்தம சீஷரில் அநேகர் நமக்கு விட்டுப் போயிருக்கும் நன்மாதிரிகைகளை நாம் பார்க்கையில் நமது கோழைத்தனத்தைப்பற்றி நாம் வெட்கப்படக்கடவோம்; தைரிய மாய் அவர்களுடைய அடிகளைப் பின்செல்வோம். “என்ன! இன்னின் னவர்கள் செய்ததை நாம் செய்ய மாட்டோமா!” என்று சொல் வோம். அப்போஸ்தலரோடு: எங்களால் தனியே ஒன்றும் முடியாது, ஆனால் எங்களைத் திடப்படுத்துகிறவரைக் கொண்டு எல்லாம் செய்ய முடியும் என்று சொல்லக் கடவோம். நமது பலவீனத்தைக் கண்டுபிடிப்பதில்தான் நமது பலம் அடங்கியிருக்கின்றது. தேவ வரப்பிரசாதத்தின் ஒத்தாசையும் அவசரமா யிருக்கின்றது.