இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

17. நமது கவலையெல்லாம் சர்வேசுரன்பேரில் வைக்க வேண்டும்

1. (கிறீஸ்துநாதர்) மகனே! நமது இஷ்டப்படி உன்னை நடத்த நம்மை விட்டுவிடு; உனக்குத் தகுதியானது எதுவென்று நாம் அறிவோம். நீ மானிடப் புத்தியுடையவனாக எண்ணம் கொள்கிறாய்; அநேக காரியங்களில் மனித சுபாவப் பற்றுதல்களால் ஏவப்பட்டுத் தீர்மானம் செய்கிறாய்.

(சீஷன்) ஆண்டவரே! நீர் சொல்லுவது மெய்தான்! என் மட்டில் நான் வைக்கக் கூடுமான கவலையைப் பார்க்க உமக்கு என்மட்டிலுள்ள கவலை எவ்வளவோ அதிகம். உமது பேரில் முழுதும் ஊன்றி நடக்காதவன் அநேகத் தவறுகளுக்குள்ளாகப் போகிறான். ஆண்டவரே! உமக்கு எப்படி இஷ்டமோ, அப்படி என்னை நடத்தும்: என்னுடைய மனது உம்மிடத்தில் நேர்மையாயும் உறுதியாயும் தங்கியிருந்தால் போதும்; ஏனெனில் நீர் என் விஷயத்தில் என்னென்ன செய்தபோதிலும் அது நன்மையே தவிர வேறல்ல. நான் இருளில் இருக்க உமக்கு இஷ்டமானால், நீர் வாழ்த்தப்படக் கடவீராக; நான் வெளிச்சத்திலிருக்க உமக்குச் சித்தமானால் அப்போதும் வாழ்த்தப்படக் கடவீராக; எனக்கு ஆறுதல் வருவிக்கக் கிருபை செய்வீராகில் வாழ்த்தப்படக் கடவீராக; நான் துன்பத்தில் வருந்த உமக்குச் சித்தமிருக்குமேயாகில் அப்போதும் எப்போதும் வாழ்த்தப்படக் கடவீராக.

2. (கிறீஸ்துநாதர்) மகனே! நீ நம்மோடு ஒத்து நடக்க ஆசைப் படுவாயாகில், அவ்விதமே நீ நிலைகொண்டிருக்க வேண்டியது. சந்தோஷம் அனுபவிக்க எவ்வளவு ஆவலுள்ளவனாயிருக்கிறாயோ, துன்பப்படவும் அவ்வளவு மனதுள்ளவனாயிருக்க வேண்டும்.

3. (சீஷன்) ஆண்டவரே! எனக்கு என்னென்ன சம்பவிக்க வேண்டுமென்று தேவரீர் சித்தமாயிருக்கிறீரோ, அதை எல்லாம் உம்மைப் பற்றி முழுமனதோடு அநுபவிப்பேன். உமது கரத்தினின்று நன்மையோ, தின்மையோ, இன்பமோ, துன்பமோ, சந்தோஷமோ, கஸ்தியோ எது வந்தாலும் அதை வித்தியாசமின்றி ஏற்றுக்கொள் ளவும், எனக்குச் சம்பவிக்கிற எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்தவும் மனதாயிருக்கிறேன். என்னை சகல பாவங்களிலுமிருந்து காப்பாற்றும். அப்போது நான் சாவுக்கும் நரகத்துக்கும் அஞ்சுகிறதில்லை. நித்திய காலத்திற்கும் நீர் என்னைத் தள்ளிப் போடாமல் ஜீவியப் புத்தகத்தில் என் பெயரை அடித்து விடாமல் இருப்பீராகில் அதுவே போதும்; மற்றென்ன துன்பம் வந்தாலும் அதனால் எனக்கு நஷ்டமிராது.

யோசனை

தேவ சித்தத்தை மாத்திரம் ஆசிப்பதிலும், தேவ சித்தம் அல்லாததை ஆசியாதிருப்பதிலும் கிறீஸ்தவ சீவியம் அடங்கியிருக் கின்றதென்று நாம் நன்றாய் அறிந்திருக்க வேண்டியது. நாம் அதை அறியாமையினால், நமது கெட்ட சுபாவத்தின் ஏவுதலினால் நம்மிடம் உண்டாகிற ஆசைகள் பொதுப்பட எப்போதும் நம்முடன் போராடு கின்றன. நமக்கு மறைவானதெல்லாம் சர்வேசுரன் அறிந்திருக்கிறார். நம் இருதயத்தின் இரகசிய நாட்டங்களையும், நமது பலவீனத்தின் அளவையும், நம்மைப் பரீட்சிப்பதற்கு உதவியான காரியங்களையும், அவைகளைச் சகிக்க நமக்கு வேண்டிய ஒத்தாசையையும் அவர் அறிவார். நமது பலத்துக்கு மேல் சோதிக்கப்பட விட மாட்டார். அவருடைய ஞானம் அளவில்லாதது. அவர் எவ்வளவிற்கு நம்மை நேசித்தார் என்றால் தமது ஏக குமாரனையே நமக்காகக் கையளித் தார். இந்த யோசனையில் நாம் எவ்வளவு நம்பிக்கையும் சமாதானமும் காண வேண்டியது. நமக்காகச் சகலமும் செய்த அவருக்கு நம்மை முழுவதும் கையளித்து விடுவதை விட இன்பமான வேறேதாகிலும் உண்டோ? நமது மனதை அவருடைய சித்தத்தோடு ஒன்றிப்போம்! நன்றியறிதலையும் நேசத்தையும் மாத்திரம் நமக்கு வைத்துக் கொள் வோம். அப்போதுதான் “என் ஆண்டவரே! என் தேவனே!” என்ற வாக்கியங்களில் நமது சீவியம் முழுவதும் அடங்கியிருக்கும்.