இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

17. கிறீஸ்துநாதரை உட்கொள்ளுவதற்கு வேகமுள்ள ஆசையும் சிநேகப் பிரகரணமும்.

1. (சீஷன்) ஆண்டவரே! தங்களுடைய ஜீவியத்தின் பரிசுத்த தனத்தாலும், தீவிரமான பக்தியினாலும் உமக்கு மிகவும் பிரிய மானவர்களாயிருந்த அநேக அர்ச்சியசிஷ்டவர்களும் பக்தியுள்ள ஆத்துமாக்களும் தேவ நற்கருணையில் உம்மை உட்கொள்ள ஆவலாய்த் தேடினதுபோல, நானும் மகா பக்தியோடும், உருக்கமுள்ள நேசத்தோடும், இருதய முழுப் பற்றுதலோடும் உட்கொள்ள ஆவலாய்த் தேடுகிறேன்.

ஆ! என் தேவனே! நித்திய நேசமே! என் சர்வ நன்மையே! ஓயாத பாக்கியமே! அர்ச்சியசிஷ்டவர்களுள் எவருக்கும் இருந்ததும், இருக்கக் கூடியதுமான அதிவேகமுள்ள ஆசையோடும் மிகுந்த வணக்கத்தோடும் நான் உம்மைஉட்கொள்ள விரும்புகிறேன்.

2. இந்த நேச உணர்ச்சிகளை உணர நான் தகுதியற்றவன் என்றாலும், உமக்கு மிகவும் பிரியமாயிருக்கிற அந்த பக்தியுள்ள ஆவல்கள் யாவும் என்னிடத்திலேயே இருக்கிறது போல என் இருத யத்தின் பற்றுதல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

ஆகவே ஒரு பக்தியுள்ள ஆத்துமம் உணரவும் ஆசிக்கவும் கூடுமான சகலத்தையும் அத்தியந்த வணக்கத்தோடும் மகா உருக்கமான நேசத்துடனும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். 

எனக்கு யாதொரு மிச்சம் வைக்காமல் என்னையும் எனக்குச் சொந்தமாயிருக்கின்றவைகளையும் மனது பொருந்திய மனரம்மிய மாய் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

என் ஆண்டவரே, என் தேவனே! என் சிருஷ்டிகரே, என் இரட் சகரே! உமது மிகவும் பரிசுத்த மாதாவாகிய மகிமை பொருந்திய கன்னிமரியம்மாள், மனிதாவதாரத்தின் பரம இரகசியத்தைத் தமக்கு அறிவித்த சம்மனசானவரை நோக்கி, “இதோ! ஆண்டவருடைய அடிமை! உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்று தாழ்ச்சியோடும் பக்தியோடும் சொன்னபோது, உம்மை ஏற்றுக் கொண்டு ஆசித்தது போலவே, நானும் அவ்வளவு பற்று, சங்கை, துதி, மரியாதையோடும், நன்றியறிந்ததனம், தகுதி, நேசத்தோடும், விசுவாசம், நம்பிக்கை, பரிசுத்ததனத்தோடும் இன்று உம்மை உட்கொள்ள ஆசைப்படுகிறேன்.

3.ல் அர்ச்சியசிஷ்டவர்களுள் மிகவும் மேன்மை பொருந்திய உமது பரிசுத்த முன்னோடியான ஸ்நாபக அருளப்பர், தாயின் உதரத்தில் இன்னும் மறைந்திருந்தபோதே, உமது சமூகத்தில் இஸ்பிரீத்துசாந்துவினால் சந்தோஷித்துத் துள்ளினது போலவும், அதன்பிறகு சேசுநாதர் மனிதரிடையே நடமாடுகிறதைக் கண்டு, தம்மை மிகவும் தாழ்த்தி பக்திப் பற்றுதலோடு, “மணவாள னோடுகூட நின்று அவன் வார்த்தைகளைக் கேட்கிற சிநேகிதன் அந்த மணவாளனுடைய குரலைக் கேட்டுச் சந்தோஷ அக்களிப்புக் கொள்வான்” என்றது போலவும், நானும் அவ்வித வேகமும் பரிசுத்தமுமுள்ள ஆசைகளால் பற்றி எரியவும் என்னையே முழு இருதயத்தோடு உமக்கு ஒப்புக்கொடுக்கவும் விரும்புகிறேன்.

ஆகையால் சகல பக்தியுள்ள இருதயங்களின் ஆனந்தங்களையும், மனதின் பரவசங்களையும், சுபாவத்திற்கு மேற்பட்ட தெளிவுகளையும், பரலோகக் காட்சிகளையும், புண்ணியச் செயல் களையும், இன்னமும் பரலோகத்திலாவது பூலோகத்திலாவது சகல சிருஷ்டிகளாலும் கொண்டாடப்பட்டனவும், கொண்டாடப்பட இருக்கின்றனவுமான சகல புண்ணியச் செயல்களையும் புகழ்ச்சி களையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அவைகளையெல்லாம், சகலராலும் நீர் தகுந்த விதமாகத் துதிக்கப்பட்டுச் சதாகாலத்திற்கும் மகிமைப்படுத்தப்படும் பொருட்டு, எனக்காகவும், என் செபத்தின் உதவி கேட்டிருக்கும் சகலருக்காகவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; என் காணிக்கைகளை ஏற்றருளும்.

4. என் ஆண்டவராகிய சர்வேசுரா! நீர் அளவில்லாத புகழ்ச்சி களையும் மட்டற்ற ஸ்துதிகளையும் பெறும்படி ஆசிக்கிறேன், என் ஆசையை ஏற்றுக்கொள்ளும். உள்ளபடி வாக்குக்கெட்டாத உமது சர்வ மகத்துவம் அவைகளுக்குப் பாத்திரமாயிருக்கின்றது.

அவைகளைத்தான், என் ஆண்டவரே, நான் உமக்கு நாள் தோறும் கணத்திற்குக் கணம் ஒப்புக்கொடுக்கிறேன், ஒப்புக் கொடுக்க ஆசைப்படுகிறேன்; என்னோடுகூட உமக்கு நன்றியறிந்த தோத்திரமும் துதியும் செலுத்துகிறதற்கு, பரலோகத்திலுள்ள சகல சம்மனசுகளையும் உமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்கள் அனை வரையும் மன்றாடி அன்போடு அழைத்து வேண்டிக் கொள்கிறேன்.

5. சகல ஜனங்களும் சாதிகளும் பாஷைக்காரரும் உம்மைத் துதிக்கக்கடவார்கள்; பரிசுத்தமும் தேனிலும் இனியதுமான உமது நாமத்தை, மிகுந்த மகிழ்ச்சியோடும் வேகமான பக்தியோடும் கொண்டாடக் கடவார்கள்.

இந்த உந்நதமான உமது தேவத்திரவிய அனுமானத்தைப் பக்தி வணக்கமாய் ஒப்புக்கொடுக்கிறவர்களும், முழு விசுவாசத்தோடு உட்கொள்கிறவர்களும், உம்மிடத்தில் அனுக்கிரகத்தையும் இரக்கத் தையும் அடையப் பாத்திரவான்களாகக் கடவார்கள்; அவர்கள் பாவியாகிய எனக்காக உம்மைக் கெஞ்சி மன்றாடுவார்களாக. அவர்கள் தாங்கள் ஆசித்த ஐக்கியத்தைப் பக்தியோடு சுகிக்கிறவர் களாய், மிக்க ஆறுதல் பெற்று ஆச்சரியத்திற்குரிய விதத்தில் தேறுதல் அடைந்தவர்களாய்ப் பரலோகத் திருப்பந்தியை விட்டுப் போகும் போது ஏழைப் பாவியாகிய அடியேனை ஞாபகப்படுத்திக் கொள்ளத் தயைபுரிவார்களாக.

யோசனை

ஆ! என் இரட்சகரே! இந்த ஆராதனைககுரிய தேவத் திரவிய அனுமானம் எனக்குப் பாவப்பொறுத்தலைப் பெற்றுத் தரக் கடவது; இந்தத் திரு இரத்தம் என்னைச் சுத்திகரிக்கக் கடவது; ஞானஸ்நானத் தினால் நீர் எனக்கு உடுத்தின தூய கலியாண உடையில் பட்ட கறைகளைக் கழுவக் கடவது. அப்போதுதான் உமது திருக்குமார னுடைய கலியாணப் பந்தியில் நான் தைரியமாய் உட்காரலாம். நான் பாவியான ஆத்துமம் தான், பிரமாணிக்கமற்ற பத்தினிதான்; எண்ணிலடங்காத விசை பிரமாணிக்கம் தப்பினேன்; ஆயினும், ஆண்டவரே! நீர் என்னைக் கடைக்கண்ணோக்கி: “திரும்பி வா, உன்னிடத்தில் முன்னிருந்த கலியாண உடையை அணிந்து, தேவ வார்த்தைக்கும் உனக்கும் முன்னிருந்த ஒன்றிப்பின் அடையாளமாக நீ உன் விரலில் போட்டிருந்த மோதிரத்தைத் தரித்து நீ திரும்பி வா, நாம் உன்னை ஏற்றுக் கொள்வோம்” என்று என்னை அழைக்கிறீர். ஆண்டவரே! அந்தப் பரம இரகசியமான மோதிரத்தை எனக்குத் திரும்பத் தந்தருளும். என் பரம தந்தையே! ஊதாரிப் பிள்ளையைப் போல் உம்மிடத்தில் நான் திரும்பி வருகிறேன்; நான் உமது பந்தியில் அமரும்போது தரித்திருக்க வேண்டிய மாசற்றதனத்தின் வஸ்திரத்தை எனக்குத் தரிப்பித்தருளும். அந்த அழிவில்லாத ஆபரணத்தைத் தான் என்னிடத்தில் கேட்கிறீர்; ஏனெனில் நீரே பத்தாவும், விருந்திடு கிறவரும், எங்களுக்குப் போசனமாகக் கொடுக்கப்படுகிற பலியுமா யிருக்கிறீர். இந்தப் பரம பந்தியில்தான், “நம்மைப் புசிக்கிறவன் நமக்காக சீவிப்பான்” என்று நீர் சொன்ன வாக்கியங்கள் நிறைவேறு கின்றன; ஆ! என் இரட்சகரே! அவை என்னிடம் நிறைவேறக் கடவன; நான் அதைக் கண்டுணரக் கடவேன்; என்னை உம்மிடம் கொண்டு போய்விடும்; நீரே என்னிடமாய் ஜீவிக்கக் கடவீர். ஆனால் அதற்காக நான் விலையுயர்ந்த உடைகளோடு இந்தப் பரலோக விருந்திற்கு வர வேண்டியிருக்கின்றது; சகல புண்ணியங்களோடும் வரக்கடவேன்; அவ்வளவு நேர்த்தியான விருந்திற்கும், அதில் நீர் எனக்குக் கொடுத்தருளும் அழிவில்லாத மாம்சத்திற்கும் தகுந்த சந்தோஷத்தோடு ஓடிவரக் கடவேனாக.