இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

17. சந்நியாச ஒழுக்கம்

1. பிறரோடு சமாதானமும் ஒற்றுமையும் காப்பாற்ற வேண்டுமாகில், நீ அநேக காரியங்களில் உன்னையே வெல்லக் கற்றுக்கொள்ள வேண்டியது. ஓர் மடத்தில், ஓர் சந்நியாச சபையில் வசித்துத் தன் பேரில் யாதொரு குறையும் சொல்லப்படாவண்ணம் அதில் ஜீவித்து மரணம் வரையிலும் பிரமாணிக்கமாய் அதில் நிலைத்திருப்பது அற்பக் காரியமல்ல. அவ்விடத்தில் புனிதனாய் ஜீவித்து நல்ல முடிவு அடைகிறவன் பாக்கியவான். நீ அதில் தகுதியானபடி நிலைத்து வளர்ச்சியடைய வேண்டுமானால், உலகத்தில் பரதேசியைப் போலவும் வழிப்போக்கனைப்போலவும் உன்னை நீ எண்ணக்கடவாய். சந்நியாசியாக ஜீவிக்க உனக்கு ஆசையிருக்கும் பட்சத்தில், சர்வேசுரனை வேண்டி நீ பைத்தியனாக வேண்டியது.

2. சந்நியாச உடை தரித்தல் அல்ல, ஆனால் நடத்தையின் சீர்திருத்தமும் ஆசாபாசங்களின் முழு ஓறுத்தலுமே ஒருவனை மெய்யான சந்நியாசியாக்குகின்றன. சர்வேசுரனையும் தன் ஆத்தும இரட்சணியத்தையும் தவிர வேறொன்றைத் தேடுபவன் இடையூறும் துன்பமுமே அடைவான். அன்றியும் எல்லோரிடத்திலும் தாழ்ந்தவனாகவும் எல்லோருக்கும் கீழ்ப்படிதலுள்ளவனாகவும் இருக்க முயற்சிசெய்யாதவன் சமாதானத்தில் வெகுகாலம் நிலைத்திருக்க மாட்டான்.

3. அதிகாரம் செலுத்துவதற்கல்ல, ஊழியம் செய்வதற்காக வந்தாய். சாவகாசமாகக் கதை பேசி சோம்பலாய்க் காலம் கழிப்பதற்கல்ல, வருந்தி உழைத்துப் பாடுபடுவதற்காகவே நீ அழைக்கப் பட்டாயென்று அறிந்திரு. செம்பொன் உலையில் பரீட்சிக்கப்படுவது போல, இங்கு சந்நியாசி பரீட்சிக்கப்படுகிறான். சர்வேசுரனைப் பற்றி தன்னைத் தாழ்த்த முழு இருதயத்தோடு சம்மதித்தாலன்றி மற்றபடி எவனும் இவ்விடத்தில் நிலைத்திருப்பது கஷ்டம். 

யோசனை

நல்ல சந்நியாசி யார்? எப்போதும் உத்தமதனத்தை நாடுகிற கிறீஸ்தவன். எனவே சந்நியாச வாழ்க்கை என்பது என்னவென்றால் அதிக உத்தம கிறீஸ்தவனாய் வாழ்ந்து வருவதே. தன்னைத்தானே மறுதலிப்பது, இதில்தான் உத்தம கிறீஸ்தவ வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அந்தக் கடமை நமக்கும் உரியதுதான்; ஏனெனில் “உங்களுடைய பரலோக பிதாவானவர் உத்தமராயிருப்பதுபோல நீங்களும் உத்தமராயிருங்கள்” என்று சிலருக்கு மாத்திரமல்ல, எல்லோருக்குமே சேசுநாதர் சொல்லியிருக்கிறார். இக்கட்டளையை நிறைவேற்றுவதற்காக நம்மைத்தானே மறுதலிப்போம்; நமது தலைவருடைய பலியோடு ஒன்றித்திருப்போம்; உலக நிந்தை அவமானங்களை நேசிப்போம்; ஆங்காரத்தை ஒழித்து விட்டால் இரட்சணியம் அடைந்தது போலாகும்.