1. (சீஷன்) ஓ! மிகவும் மதுரம் பொருந்திய, மிக்க நேசத்துக்குரிய ஆண்டவரே! நான் இப்போது உம்மைப் பக்தியோடு உட்கொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன்; ஆனால் நீர் என் பலவீனத்தையும், என் அவசரங்களையும் அறிவீர்; நான் எத்தனை தீமைகளிலும் துர்க் குணங்களிலும் அமிழ்ந்து கிடக்கிறேன் என்று நீர் அறிவீர்; எனக்கு அடிக்கடி உண்டாகும் கஷ்டங்களையும், என் சோதனைகளையும், என் மன ஏக்கங்களையும், என் குற்றங்களையும் நீர் அறிந்திருக்கிறீர்.
உம்மிடத்தில் மருந்து தேடி வருகிறேன். எனக்கு ஆறுதலும் உதவியும் புரியும்படி உம்மை மன்றாடுகிறேன்.
எல்லாம் அறிந்திருக்கிறவரிடத்தில் பேசுகிறேன்; என் கருத்துகள் அனைத்தும் உமக்கு வெளியாயிருக்கின்றன; எனக்குச் சம்பூரண மாய் ஆறுதலளிக்கவும் உதவி புரியவும் உம்மாலே மாத்திரம் கூடும். எந்த நன்மைகள் எனக்கு விசேஷமாய் வேண்டியதென்றும், புண்ணி யங்களில் நான் எவ்வளவு தரித்திரனாயிருக்கிறேன் என்றும் நீர் அறிவீர்.
2. இதோ! ஏழையும் ஒன்றுமில்லாதவனுமான நான் உமது சமூகத்தில் நிற்கிறேன், உமது வரப்பிரசாதத்தை மன்றாடுகிறேன், உமது இரக்கத்தைக் கெஞ்சுகிறேன். பசியோடு உம்மை இரந்து கேட்பவனைத் தேற்றும், உமது நேசத்தின் வேகத்தால் என் ஆத்துமம் எரியச் செய்யும், உமது சன்னிதானத்தின் ஒளியால் என் குருட் டாட்டத்தைப் பிரகாசிப்பித்தருளும்.
இவ்வுலகக் காரியங்கள் யாவற்றையும் எனக்குக் கசப்பாகவும், துன்பங்கள் விரோதங்கள் யாவையும் பொறுமைப் பலனாகவும் மாற்றியருளும். பூலோக சிருஷ்டிகள் யாவும் எனக்கு வெறுப்பாகவும் மறதியாகவும் இருக்கக் கடவன.
நான் இவ்வுலகில் மோசம் போகாமல் என் இருதயத்தை உம்மிடம் பரலோகத்திற்கு இழுத்தருளும்.
இது முதல் எப்போதைக்கும் நீர் ஒருவரே எனக்கு மதுரமாயிரும், ஏனெனில் நீர் ஒருவரே என் அன்னமும் பானமும், என் நேசமும், சந்தோஷமும், என் இன்பமும், என் சர்வ நன்மையுமாயிருக்கிறீர்.
3. உமது சந்நிதானம் என் ஆத்துமத்தைப் பற்றியெரித்து உம்மில் உருமாறச் செய்யக் கடவது. அவ்விதம் இந்த ஞான ஒற்றுமையின் பந்தனத்தாலும் உருக்கமான உமது சிநேகத்தின் சகாயத்தாலும், என் மனமும் உமது மனமும் ஒன்றாயிருக்கக் கடவதாக.
நான் இருதயப் பசியோடும், வறட்சியோடும் உம்மிடத் தினின்று அகன்றுபோகும்படி என்னை விட்டுவிடாதேயும்; ஆனால் உமது அர்ச்சியசிஷ்டவர்களோடு ஆச்சரியமான விதமாய் நீர் அடிக்கடி நடத்தி வந்தது போல, என் விஷயத்திலும் தயவாய் நடத்தியருளும்.
நீர் ஒருக்காலும் தணிய முடியாமல் எப்போதும் கொழுந்து விட்டெரியும் அக்கினியும், இருதயங்களைச் சுத்திகரித்து புத்தி களைத் தெளிவித்து வருகிற நேசமுமாயிருக்கையில், உம்மை அண்டி வருவதால் நான் முழுமையும் உம்மில் அக்கினி மயமாகி எனக்குள் என் சுய நேசம் முற்றும் அணைந்து போவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!
யோசனை
திவ்விய சற்பிரசாதத்தின் பலனை நாம் அடையக் கூடுமானது, உயர்ந்த மேலான தியானங்களைக் கொண்டு அல்ல, ஆனால் நமது உள்ளத்தில் எழுந்தருளியிருக்கும் சேசுகிறீஸ்துநாதரை உருக்கமுள்ள நேசத்தோடு ஆராதிப்பதினாலும், சிநேகிதன் தன்னுடைய சிநேகித னோடு சம்பாஷிப்பது போல உறுதியான நம்பிக்கையோடும், கபடற்றதனத்தோடும் நம் இருதயத்தை அவருக்குத் திறந்து காட்டுவதினாலும் மகத்தான பலன்களை அடையலாம். நமக்கு அவசரமான காரியங்கள் அநேகம் உண்டு. அவை களை அவர் தமது திரு இரத்தத்தில் கழுவும்படி, அவைகளை அவருக்குக் காண்பிக்க வேண்டியது. நாம் பலவீனர், நம்மைத் திடப்படுத்தும்படி அவரை மன்றாட வேண்டியது. நாம் நிர்வாணிகள், பசிதாகத்தினால் வருந்துகிறோம். ஆதலால் அவரை நோக்கி: ஆண்டவரே! இந்த நிர்ப்பாக்கிய ஏழைகள் மேல் இரக்கமாயிரும் என்று சொல்வோம். அவரிடத்தினின்றுதான் சகல வரப்பிரசாதங்களும் உற்பத்தி யாகின்றன. அவர் சொல்வதைக் கேள்: “நாமே உத்தானமும் உயிருமாய் இருக்கிறோம், நம்மை விசுவசிக்கிறவன் இறந்து போயிருந்தாலும் பிழைப்பான். மேலும் சீவிக்கும்போது நம்மை விசுவசிக்கிறவன் ஒருபோதும் இறக்கப் போவதில்லை. இப்படி நீயும் விசுவசிக்கிறாயோ?” என்று கேட்கிறார். ஓ, கிறீஸ்தவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. சேசு கிறீஸ்துநாதரே மார்த்தா வழியாய் உன்னிடம் கேட்கிற கேள்விக்கு, நீ அவளோடு: “ஆம் ஆண்டவரே! இவ்வுலகத்தில் வந்திருக்கிற நீர் சுயஞ்சீவியரான சர்வேசுரனுடைய குமாரனாகிய கிறீஸ்துநாதர் என்பதை நான் விசுவசிக்கிறேன்” என்று சொல். அர்ச். சின்னப்பரோடு: “பாவிகளில் நான் பெரும் பாவியாயிருக்கிறேன், பாவிகளை இரட்சிக்க கிறீஸ்து நாதர் வந்தார்” என்று சொல்வாய். ஆனதால் கிறீஸ்தவ ஆத்துமமே, விசுவசி, ஆராதி, நம்பு, நேசி; ஓ, சேசுவே! திரைகளை அகற்றும், நான் உம்மைக் காண எனக்கு அருள் புரியும். சேசுவே! என் இருதயத்தில் பேசும். நான் உமக்குச் செவி கொடுக்கும்படி செய்யும்; இன்னும் ஒரு நிமிஷம்தான்; நான் உமக்கு மறுமொழி சொல்லும் படியாக, எனக்குக் கண்ணீரைக் கட்டளையிடும். கற்பாறையின் மேல் அடியும்; நம்பிக்கையினால் நிறைந்து நன்றியறிதலினால் ஊடுருவப்பட்ட நேசத்தின் கண்ணீர்கள் தரைமட்டும் ஓடக் கடவன.