1. என் இளைப்பாற்றிக்காக நான் ஆசிக்கவும் நினைக்கவும் கூடுமான எல்லாவற்றையும் இவ்வுலகத்திலல்ல, மறுவுலகத்தில்தான் அடையக் காத்திருக்கிறேன். பூலோக இன்பங்களையெல்லாம் நான் மாத்திரமே அடைந்து சகல சுகங்களையும் அநுபவிக்கச் சக்தியுடையவனா யிருப்பேன் என்றாலும், இது வெகு காலம் நீடிக்கக்கூடாதென்பது நிச்சயம். ஆனதால் என் ஆத்துமமே! ஏழைகளுக்கு ஆறுதல் தருகிறவருமாய், தாழ்ந்தவர்களை ஆதரிக்கிறவருமாயிருக்கிற சுவாமி யிடத்திலன்றி, வேறொருவரிடமாய் நீ பூரண ஆறுதல் அடைந்து குறையற்ற சந்தோஷம் அனுபவிக்க முடியாது. என் ஆத்துமமே, சற்றுப் பொறு; தேவ வாக்கு நிறைவேறும் காலத்துக்குக் காத்திரு; பரலோகத்தில் சகல நன்மைகளையும் ஏராளமாய் அடைவாய். இவ்வுலக நன்மைகளை ஒழுங்கற்ற ஆசையுடன் தேடினால் நித்திய பரலோக நன்மைகளை இழந்து விடுவாய். அவைகளை ஒழுங்குப்படி பயன்படுத்திக் கொள். இவைகளின்மேல் மட்டும் ஆசை வைத்துக் கொள். முடிந்து போகக் கூடிய நன்மைகளால் நீ திருப்தியடைவது இயலாத காரியம், ஏனெனில் அவைகளைச் சுகிப்பதற்காக நீ சிருஷ்டிக்கப்பட்டவனல்ல.
2. சிருஷ்டிக்கப்பட்ட சகல நன்மைகளும் உனக்குக் கிடைத் தாலும், நீ செல்வ பாக்கியனாக மாட்டாய். ஆனால் சகலத்தையும் படைத்த கடவுளிடம் உன் செல்வ பாக்கியமெல்லாம் அடங்கி யுள்ளன. அப்பாக்கியமோ உலகத்தை நேசிக்கிற பைத்தியக்காரர் நினைத்துப் புகழ்கிற பாக்கியத்தைப் போலல்ல. ஆனால் கிறீஸ்து நாதருடைய பிரமாணிக்கமுள்ள சீஷர்கள் எதிர்பார்த்திருக்கும் பாக்கியம், எந்நேரமும் பரலோகத்தின் பேரில் நினைப்பாயிருக்கும் ஞான அறிவுடைய ஆத்துமாக்களும் தூய மனதுடையோர்களும் சிற்சில சமயங்களில் முன்னதாய்ச் சுவை பார்க்கும் பாக்கியம். மனித ஆறுதல் வீணானது, நிலையற்றது, சத்தியமானவர் நம்முள்ளத்தில் அனுபவிக்கச் செய்யும் ஆறுதலே பாக்கியமானதும் மெய்யானதுமா யிருக்கின்றது. பக்தியுள்ள தனக்கு ஆறுதல் தருகிற சேசுவைத் தன்னுடன் எங்கும் வைத்துக் கொண்டு “ஆண்டவராகிய சேசுவே! எவ்விடத்திலும் எந்நேரத்திலும் எனக்கு உதவியாயிரும்” என்று மன்றாடுவான். “ஆண்டவரே! எந்த மனித ஆறுதலும் இல்லாம லிருப்பது எனக்கு ஆறுதலாயிருக்கக்கடவதாக. உமது ஆறுதல் எனக்கு இல்லாமல் போனாலோ, உமது சித்தமும் இந்த நீதியான சோதனையும் எனக்கு மேலான ஆறுதலாயிருக்கக் கடவது; ஏனெனில் நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பதில்லை, நித்தியத் துக்கும் பயமுறுத்துவதில்லை.”
யோசனை
“சிருஷ்டிக்கப்பட்டதெல்லாம் பெருமூச்சு விடுகின்றது” என்று அப்போஸ்தலர் கூறியிருக்கிறார். அவருக்குப் பின் இன்று வரையிலும் எல்லாரும் அவ்விதமே சொல்லி வருகிறார்கள். ஆனதால் நீ சிருஷ்டி களிடத்தில் என்ன தேடுகிறாய்? அவைகளை என்ன கேட்கிறாய்? அவைகள் உனக்கு என்ன கொடுக்கக் கூடும்? உன்னைப் போலவே அவைகள் எப்போதும் கவலை கொண்டு சங்கடப்பட்டுக் கொண் டிருக்கும் போது, அவைகளும் இளைப்பாற்றியைத் தேடி அடைவதில்லை. அவைகளிடத்தினின்று உனக்கெப்படி சமாதானம் உண்டாகும்? புயல்களை நோக்கி: என்னை அமைதிப்படுத்துங்கள் என்று சொல்வதை விட்டுவிடு. சர்வேசுரனிடத்தில் மாத்திரம்தான் அமைதி யுண்டு. அவரிடத்தில் மாத்திரம் இளைப்பாற்றி, சமாதானம், சந்தோஷம், ஆறுதல் உண்டு. ஆனதால், “ஆண்டவராகிய சர்வேசுர னிடமாய்த் திரும்பு;” மற்றதெல்லாம் விட்டுவிடு. அப்போது மாத்திரம் மெய்யான பாக்கியம் அனுபவிக்கத் துவக்குவாய். ஐம்புலன்களை நிந்தித்து, உலகத்தையும் சரீரத்தையும் வெறுத்து, அவசியமாயிருக்கும்போது மாத்திரம் உலகக் காரியங்களைப் பயன் படுத்திக் கொண்டு, சர்வேசுரனுடனும் தன்னுடனும் மாத்திரம் உரையாடி, இன்னும் மற்ற ஞானக் காரியங்களில் எப்போதும் தன் வாழ்நாட்களைச் செலவழித்து அவைகள் மட்டில் எப்போதும் சிந்தனையாயிருக்கிறவனே மெய்யான பாக்கியம் அனுபவிப்பான்; அவனுடைய பாக்கியத்துக்கு வேறொன்றும் இணையிராது.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠