1. உன்னிடத்திலாவது பிறரிடத்திலாவது திருத்தக் கூடுமாயிராத குற்றங்களை, சர்வேசுரன் வேறு விதமாய்க் கட்டளையிடு மட்டும், நீ பொறுமையாய்ச் சகித்துவர வேண்டியது. உன்னைப் பரிசோதிப்பதற்கும், உன் பொறுமையை உறுதிப்படுத்துவதற்கும், அந்த குறைகளிருப்பது சிலவேளை அதிக நலமென்று நினைத்துக்கொள்; ஏனெனில் நமக்குப் பொறுமையிராவிட்டால் நமது பேறுபலன்கள் அவ்வளவு மதிப்புக்குரியவையல்ல. ஆயினும் சர்வேசுரன் உனக்கு ஒத்தாசை செய்தருளி அத்தடங்கலை நீ மன எரிச்சலின்றித் தாங்கும்பொருட்டு அவரைக் கெஞ்சி மன்றாடக் கடவாய்.
2. இரண்டொரு முறை நீ ஒருவனை எச்சரித்தும் அவன் ஒத்து வராமல் போனால், அவனோடு வாதாடாதே; ஆனால் தேவசித்தம் நிறைவேறவும் சர்வேசுரன் தமது சகல ஊழியர்களிடமும் மகிமை பெறவும் வேண்டி, தீமையை நன்மையாக மாற்றிவிடுவதில் மிகச் சிறந்தவரான சர்வேசுரனுக்கே எல்லாம் ஒப்புக்கொடுத்துவிடு. பிறரிடமுள்ள குறைகளையும் சகல பலவீனங்களையும் பொறுமையாய்ச் சகிக்கப் பிரயாசைப்படு; ஏனெனில் உன்னிடத்திலும் பிறர் சகிக்கவேண்டியவைகள் அநேகமுள்ளன. உன் மனதின்படி உன்னையே சீர்திருத்த முடியாது போனால், நீ எப்படிப் பிறரை உன் இஷ்டமாய்த் திருத்தக் கூடும்? பிறர் உத்தமமானவர்களாயிருக் கும்படி ஆசிக்கிற நாம் கேவலம் நமது சுயக்குறைகளைத் திருத்திக் கொள்வதில்லை.
3. மற்றவர்கள் கண்டிப்பாய்த் திருத்தப்படும்படி மனதா யிருக்கிறோம்; நாமே திருத்தப்பட நமக்கு மனதில்லை. மற்றவர்களுக்கு மிக்க இளக்காரம் கொடுத்தால் நமக்குப் பிரியமில்லை; ஆயினும் நாம் கேட்பதை இல்லை என்றால் நமக்கு எரிச்சலாகிறது. பிறரை நல்லொழுங்குகளால் அடக்க வேண்டும் என்கிறோம்; நம்மை மற்றவர்கள் எவ்விதத்திலும் அடக்க நாம் சகிப்பதில்லை. ஆகையால் நாம் பிறரை அளந்த அளவுடன் நம்மை அளந்து கொள்வது அரிதென்று தெளிவாய் விளங்குகின்றது. எல்லோரும் உத்தமரானால் சர்வேசுரனைப் பற்றிப் பிறரால் துன்பப்பட நமக்கு என்னவிருக்கும்?
4. இப்போது, நாம் “ஒருவரொருவருடைய குறைகளைச் சகிக்க” கற்றுக்கொள்ளும் பொருட்டுச் சர்வேசுரன் இவ்வகையாய் நிர்ணயித்திருக்கிறார். ஏனெனில் குறையில்லாதவனும் இடைஞ்சல் இல்லாதவனும் இல்லை; (உத்தமன் ஆவதற்கு) எவனுக்கும் தன் சொந்த பலம் போதுமானதல்ல; தன்னைத்தான் திருத்தமாய் நடத்துவதற்காக எவனுக்கும் போதுமான ஞானமில்லை. ஆனால், நாம் ஒருவரொருவரைத் தாங்கவும் தேற்றவும் வேண்டியது; ஒருவருக் கொருவர் உதவி செய்தும், புத்தி சொல்லியும், எச்சரிக்கைப்படுத்திக் கொண்டும் வர வேண்டியது. ஒருவன் எவ்வளவு புண்ணியசாலி என்று துன்ப காலத்தில்தான் தெளிவாய் விளங்கும். ஏனெனில், சமயங்கள் மனிதன் எப்படிப்பட்டவனென்று காண்பிக்கின்றதே யொழிய, அவைகளே அவனை பலவீனன் ஆக்குவதில்லை.
யோசனை
பிறரிடத்தில் காண்கிற இந்த அல்லது அந்தக் குறையைச் சகிக்க முடியவில்லை என்கிறாயென்றால், அதிக நியாயமான காரணத்தோடு உன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள வேண்டியது. ஏனென்றால் உத்தம பரிசுத்தரான சர்வேசுரன் இவ்விதக் குறைகளை மாத்திரமல்ல, இன்னும் அதிகப் பெரிய குற்றங்களைச் சகித்து வருகிறார். உன்னைத் தூண்டுவது பிறசிநேகமல்ல, உன் சுயநேசமே; ஆனால் உன்பேரில் உன் கண்களைத் திருப்பிப் பார். பிறர் சகிக்க வேண்டிய குற்றங்கள் உன்னிட மில்லையா? மெய்யான சிநேகம், சாந்தமும் பொறுமையுமுள்ளதா யிருக்கின்றது. தன்னுடைய பலவீனத்தை நன்றாய் அறிந்து, அதைப் பற்றி துயரப்படுகிறவன் பிறருடைய பலவீனத்தைப் பற்றி ஆச்சரியப் படமாட்டான். எல்லோரிடத்திலும் குறைகள் உள்ளன என்று அவன் அறிந்திருக்கிறபடியால், எல்லோர் மட்டிலும் இரக்கப்படுகிறான். தனக்குள்ளாகச் சமாதானத்தையும் வெளியில் சிநேகத்தையும் எப்போதும் காப்பாற்றி வருகிறான்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠