இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

15. பக்தி என்னும் வரப்பிரசாதத்தைத் தாழ்ச்சியினாலும் சுயப்பரித்தியாகத்தினாலும் அடையவேண்டியது.

1. (கிறீஸ்துநாதர்) பக்தி என்னும் வரப்பிரசாதத்தை நீ இடைவிடாமல் தேடவும், ஆசையாய்க் கேட்கவும், பொறுமை யோடும் நம்பிக்கையோடும் எதிர்பார்த்திருக்கவும், நன்றியறிந்த மனதோடு பெற்றுக் கொள்ளவும், தாழ்ச்சியோடு காப்பாற்றவும், சுறுசுறுப்பாய் அதோடு வேலை செய்யவும், ஆண்டவர் உன்னைச் சந்திக்க வருகிற வரையிலும் அவர் வரும் நாளையும் விதத்தையும் அவர் இஷ்டத்திற்குக் கையளித்து விடவும் வேண்டியது.

உன் உள்ளத்தில் பக்தி கொஞ்சமாயிருக்கும்போது, அல்லது முற்றுமே இல்லாமலிருக்கிறபோது, உன்னைத் தாழ்த்த வேண்டி யதே முக்கியம்; ஆயினும் மிதமிஞ்சி ஏக்கப்படவும் கஸ்திப்படவும் கூடாது.

நெடுநாள் கொடுக்காமலிருந்ததைப் பற்றி சர்வேசுரன் அநேகம் விசை சற்று நேரத்தில் தந்தருளுகிறார். தியானத்தின் துவக்கத்தில் அவர் கொடுக்காததைச் சிலவிசை அதன் முடிவில் கொடுக்கிறார்.

2. செபத்தில் கேட்டது உடனே எப்போதும் கொடுக்கப்பட்டுக் கேட்ட அளவில் கிடைத்தால், அது மனுஷ பலவீனத்துக்கு ஆபத்தாயிருக்கும்.

ஆனதுபற்றி நல்ல நம்பிக்கையோடும் தாழ்ச்சியுள்ள பொறுமை யோடும் பக்தி என்னும் வரத்துக்காகக் காத்திருக்க வேண்டியது; ஆயினும் அது கொடுக்கப்படாவிட்டால் அல்லது உனக்குத் தெரியாத காரணத்தால் அது எடுபட்டால் நீயும் உன் பாவங்களுமே அதற்குக் காரணமென்று நினைத்துக் கொள்.

அவ்வரப்பிரசாதத்தைத் தடுக்கும் அல்லது எடுக்கும் காரணம் சில சமயங்களில் மகா சொற்பமானதாயிருக்கின்றது ல் ஆனால் இவ்வளவு பெருத்த நன்மையைத் தடைசெய்யும் காரியத்தை சொற்பமென்று சொல்லத் தகுமோ? ல் சொற்பமான அல்லது பெரி தான இந்த விக்கினத்தை நீ அகற்றி முழு வெற்றி கொள்ளுவாயே யானால், நீ மன்றாடிக் கேட்டதை அடைவாய்.

3. ஏனெனில், முழு இருதயத்தோடு நீ உன்னைச் சர்வேசுர னுக்குக் கையளித்து, எதையும் உன் இஷ்டபபடி தேடாமல் அவரிடம் உன்னை முழுமையும் விட்டு விட்ட மாத்திரத்தில் அவரோடு சமாதானமாய் நீ ஒன்றித்திருப்பதாகக் காண்பாய்; ஏனெனில் அப்போது எல்லாவற்றையும்விட தேவ திருவுளத்தின் சித்தமே உனக்கு அதிக இன்பமுள்ளதும் பிரியமுள்ளதுமாகத் தோன்றும்.

தன் கருத்தைக் கபடற்ற இருதயத்தோடு சர்வேசுரனை நோக்கி உயர்த்தி, யாதொரு சிருஷ்டியின் மட்டில் தனக்குண்டான மிதமிஞ்சின பற்றுதலையாவது அல்லது அரோசிகத்தையாவது முற்றும் ஒழித்துவிடுகிற எவனும், பக்தியென்னும் வரத்தையடைய மிக்க தகுதியானவனும், அதிலுள்ள நன்மைக்குப் பாத்திரவானும் ஆவான். ஏனெனில் ஆண்டவர் தாம் காணும் வெற்றுப் பாத்திரங் களைப் பிரியத்தோடு ஆசீர்வதிக்கிறார். ஒருவன் இவ்வுலகக் காரியங்களை எவ்வளவிற்கு பழுதற வெறுத்து விட்டு, தன்மட்டில் நீச எண்ணம் கொண்டு தனக்குத்தானே அதிகமாய் மரிக்கிறானோ, அவ்வளவிற்கு தேவ வரப்பிரசாதம் அதிக சீக்கிரமாய் வருகிறது, அவன் உள்ளத்தில் ஏராளமாய்ப் பிரவேசிக்கின்றது, முழுதும் சுதந்தரமுள்ள இருதயத்தை அதிகமாய் உயர்த்துகின்றது.

4. அப்போது ஆண்டவருடைய கரம் அவனுக்கு உதவியா யிருப்பதாலும் அவனும் அவருடைய கரத்தில் தன்னை முழுமையும் எக்காலத்திற்கும் ஒப்பித்து விட்டதினாலும், “அவன் மேலான தெளிவடைந்து சந்தோஷப் பிரவாகமாவான், அவனுடைய இருதயம் ஆச்சரியம் கொண்டு பூரிக்கும்.” தன் இருதயத்தோடு “சர்வேசுரனைத் தேடி, தன் ஆத்துமத்தை வீணில் உபயோகப் படுத்தாதவன் இதோ, இவ்விதம் ஆசீர்வதிக்கப்படுவான்.” 

அவன் தேவ நற்கருணை உட்கொள்ளும்போது, தெய்வீக ஒன்றிப்பின் பெருத்த வரப்பிரசாதத்தை அடையப் பேறு பெறு கிறான்; ஏனெனில் அவன் தன் சொந்தப் பிரியத்துக்கும் ஆறுத லுக்கும் மேலாகச் சர்வேசுரனுடைய மகிமையையும் தோத்திரத்தையும் தேடுகிறான்.

யோசனை

சர்வேசுரனைப் பற்றி மாத்திரமே நாம் அவரை நேசிக்க வேண்டி யிருந்தபோதிலும், நமக்கு வேண்டிய வரங்களையும் அவரிடத்தில் கேட்கலாம், ஆனால் நாம் எப்போதும் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டியது. ஆத்துமத்தைத் தேவ ஒளியினால் பிரகாசிப்பித்து, சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்த்துகிற வரப்பிர சாதங்கள் எப்போதும் நமக்கு அதிக நல்லவையென்று எண்ணுவது சரியல்ல; ஏனெனில் அவை சில சமயங்களில் நமதுள்ளத்தில் வீணான சுயபிரியத்திற்குக் காரணமாகக் கூடும். இச்சீவிய காலத்தில் பரிசுத்த விசுவாசத்தின் இருளில் நடப்பதும், கஸ்தியினாலும் துன்ப துரிதங்களாலும் சோதிக்கப்படுவதும் “என் சர்வேசுரா! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?” என்று சேசுநாதர் சொன்னபோது அவர் செய்ததுபோல தன்னுள்ளத்தில் சிலுவை சுமந்து போவதும் அநேக அநேக விசை நிச்சயமான மார்க்கமாயிருக்கும். அப்போது ஆங்காரத்திற்கு இடமில்லை; நம்மிடத்தில் பலவீனத்தைத்தான் காண்கிறோம், நம்மைக் குணப்படுத்துவதற்காக அடிக்கும் கரத்திற்கு முன்பாக நம்மைத்தானே மறுதலிக்கச் செய்யும் அந்தப் புண்ணிய முயற்சி யானது பிரமாணிக்கமுள்ள ஆத்துமத்திற்குப் பேறுபலனுள்ள தாகின்றது; வேறெதுவும் பரலோக பத்தாவை அவ்வளவாய் மனமிளகச் செய்வதில்லை. கஸ்தியில் விழிப்பாயிருந்து, “கூரையின் கீழ் பிரலாபிக்கும் ஊர்க்குருவி போல” தவித்து நேசரைக் காணாத ஞானப் பத்தினியிடம் பரலோக பத்தாவை அந்தப் புண்ணிய முயற்சி கூட்டி வருகின்றது. அவர் தேவ நற்கருணையில் தம்மைத் தாமே தமது பத்தினிக்குக் காண்பிக்கிறார், ஆறுதல் வருவிக்கிறார், கண்ணீரைத் துடைக்கிறார், தமது நேச அக்கினியால் பற்றி எரியும்படி செய்கிறார்; “வழியில் அவர் நம்மிடம் பேசி, வேதாகமங்களை வியாக்கியானம் செய்தபோது நமது இருதயம் பற்றி எரிய வில்லையோ? ” என்று சொல்லிக் கொண்ட எம்மாவுஸ் சீஷர்களைப் போல, புண்ணிய ஆத்துமம் பற்றி எரிகிறது. ஆண்டவரே! இப்பேர்ப்பட்ட ஞான இன்பங்களுக்கு நான் தகுதியற்றவனென்று ஒத்துக் கொள்கிறேன். “என் அக்கிரமத்தை நான் அறிவேன், என் பாவம் எப்போதும் என் கண்முன் இருக்கின்றது.” நீர் எனக்குச் செய்ய வேண்டியது கண்டனையும் தண்டனையும் தானல்லவோ! அப்படி யாயினும் உமது இரக்கத்தை மன்றாடத் துணிவு கொண்டேன்; முகங்குப்புற விழுந்து உயிருள்ள தண்ணீரின் ஊற்றருகில் வருகிறேன். என் வறட்சியான ஆத்துமத்தில் சில துளிகள் விழும்படி உமது இரக்கம் தயை செய்யும் என்று நம்பியிருக்கிறேன். ஆண்டவரே! எனக்கு இந்த உதவி புரிந்தருளும். ஆமென்.