இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

15. ஆசிக்கத்தக்க காரியங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதமும், அவைகளைக் குறித்து நாம் பேச வேண்டிய விதமும்

1. மகனே! ஒவ்வொரு காரியத்திலும்: “இன்ன காரியம் உமக்குப் பிரியமானால் உமது சித்தப்படி ஆகக்கடவது, ஆண்டவரே, இது உமது தோத்திரமானால் இது உமது நாமத்தினால் ஆகக்கடவது. ஆண்டவரே! இன்ன காரியம் எனக்குத் தக்கது, பயனுள்ளது என்று நினைப்பீராகில் அதை நான் உமது தோத்திரத்திற்காகச் செய்யும்படி எனக்கு உதவி தந்தருளும். ஆனால் அது எனக்குக் கேடென்றும் என் ஆத்துமத்தின் இரட்சணியத்திற்குப் பயனற்றதென்றும் நீர் அறிந்தால், அதன் ஆசையை என்னிடத் திலிருந்து அகற்றியருளும்” என்று சொல்லு; சகல ஆசைகளும், நேர்மையானதென்றும் நல்லதென்றும் தோன்றுகிறவைகள் கூட, இஸ்பிரீத்துசாந்துவிடமிருந்து வருவதில்லை. இன்னின்ன காரியத்தை ஆசிக்கும்படி உன்னைத் தூண்டுகிறது நல்ல சம்மனசோ அல்லது பசாசோ அல்லது உன் சுய புத்தியோ என்று சரியாய்த் தீர்மானித் தறிவது மகா கடினமான காரியம். அநேகர் நல்ல சம்மனசினால் தூண்டப்பட்டதாக முதலில் காணப்பட்டு கடைசியில் மோசத்துக் குள்ளானார்கள்.

2. ஆனதால் ஆசிக்கத் தக்கதாகப் புத்திக்குத் தோன்றுகிற ஒவ்வொரு காரியத்தையும் எப்போதும் தேவ பயத்தோடும் இருதயத் தாழ்ச்சியோடும் ஆசித்து மன்றாட வேண்டியது. விசேஷமாய் தன்னை முழுவதும் நம்மிடம் கையளித்து சகலமும் நல்ல மனதோடு ஒப்பித்துச் சொல்ல வேண்டியதாவது: “ஆண்டவரே! எனக்கு அதிக நன்மையானது ஏதென்று நீர் அறிவீரானதால், உமக்கு இஷ்டமானது எதுவோ அது நிறைவேறக் கடவது. நீர் இஷ்டப்பட்டதை நீர் நினைத்த அளவோடும் நியமித்த நேரத்திலும் எனக்குத் தந்தருளும். உமது ஞானத்தின்படியும், உமது பிரியத்தின்படியும், உமக்கு அதிகத் தோத்திரம் உண்டாகத் தக்க விதமாகவும் என்னை நடப்பித்தருளும். எங்கேயாவது உமது இஷ்டப்படி என்னை வைத்தருளும்; சகலத்திலும் உமது மனதின்படி என்னை நடத்தியருளும். நான் உமது கரங்களில் இருக்கிறேன்; உமக்கு இஷ்டமானபடி என்னைச் சுற்றிச் சுழற்றும். இதோ நான் உமது அடிமை, எல்லாவற்றிற்கும் ஆயத்தமா யிருக்கிறேன்; ஏனெனில் எனக்காக அல்ல, உமக்காகவே ஜீவிக்க ஆசைப்படுகிறேன். அவ்விதம் தகுதியாயும் உத்தமமாயும் ஜீவிப்பேனாக” என்று சொல்வாயாக.

தேவ திருவுளத்தை அநுசரிக்க உதவி கேட்கிறதற்காக வேண்டுதல்

3. மிகவும் மதுரமுள்ள சேசுவே! உமது வரப்பிரசாதத்தை எனக்குத் தந்தருளும்; அது என்னுடனிருந்து, என்னுடன் முயற்சி செய்து, முடிவு வரை என்னோடு நிலைத்திருக்கும்படி செய்தருளும். உமக்கு மிகவும் ஏற்புடையதும் அதிகப் பிரியமானதும் எதுவோ, அதையே நான் எப்போதும் ஆசித்து விரும்பும்படி செய்தருளும். உமது மனதே என் மனதாயிருக்கட்டும்; என் மனது எப்போதும் உமது சித்தத்தைப் பின்பற்றி அதற்கு முழுதும் ஒத்ததாக இருக்கக் கடவது. உமக்குச் சித்தமானதே எனக்கும் மனதாயிருக்கட்டும், உமக்குச் சித்தமிராதது எனக்கும் மனது இராதிருக்கக் கடவது. பூலோகத்துக்கடுத்த சகலத்துக்கும் நான் செத்தவனாகி, உம்மைப் பற்றி இவ்வுலகத்திலே நிந்திக்கப்படவும், அறியப்படாதிருக்கவும் என்னை விரும்பச் செய்யும். எனக்குக் கிருபை செய்து, ஆசிக்கத்தக்க சகல காரியங்களுக்கு மேலாக நான் உம்மிலே இளைப்பாறவும், என் இருதயம் உம்மிலே சமாதானமாய் இருக்கவும் தந்தருளும். இருதயத்துக்கு மெய்யான சமாதானம் நீரே; உம்மைவிட்டு அகன்றால் எல்லாம் வருத்தமுள்ளதுமாய், ஏக்கம் நிறைந்ததுமாயிருக் கின்றது. இந்தச் சமாதானத்தில்தானே, அதாவது உத்தமமானதும் நித்தியமானதுமான ஏக நன்மையாயிருக்கிற உம்மிடத்திலேயே அயர்ந்து இளைப்பாறுவேன். ஆமென்.

யோசனை

மனிதன் தன்னைப்பற்றியும் தன் பொருளைப் பற்றியும் திருப்தி யற்றவனாய், தன் இருதயத்தின் வறுமையைக் கண்டு சலித்துப் போய் எப்போதும் கவலை கொண்டு, தன்னிடம் இருந்து ஓடிப்போகும் ஏதோ ஒரு நன்மையைத் தேடி ஒரு நிமிஷமாவது மெய்யான இளைப்பாற்றியில்லாமல் இருக்கிறான். அவனுடைய சீவியம் ஆசை களில் காலம் கழிக்கின்றது. இந்த நிலை பெரும் நிர்ப்பாக்கியமாய் மாத்திரமல்ல, பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. “ஏனெனில் சகல தீமைகளின் அடிவேர் பேராசை. அநேகர் அதற்கு இடம் கொடுத்து விசுவாசத்தை இழந்து அநேக துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.” மனோசக்தி தன்னையிழுக்கும் தோற்றத்தைப் பலமாய் நாடுகிறது. புத்தியை மயங்கச் செய்து மனதை வருத்துகின்றது. ஆனதால் அதை உடனே அடக்கித் தோற்றங்களை அகற்றிவிட வேண்டியது. வீண் ஆசைகளின் பேரில் ஜாக்கிரதையாய் இராவிட்டால் பக்தி உருக்கமே வெகு எளிதில் தடுமாறிப் போகின்றது. நமக்கு எது நன்மையென்று அறிய மாட்டோம். நமது இரட்சணியத்துக்கு அவசரமான சிலுவை நம்மை விட்டு அகல வேண்டுமென்று சில விசை கேட்கிறோம்; சில விசை நமது பக்தி உருக்கத்தில் நம்மால் தாள முடியாத சிலுவையைக் கேட்கிறோம்; அப்போது நாம் செய்ய வேண்டியதென்ன? நம்மிடத் திலும் வெளியிலும் சர்வேசுரனுடைய சித்தம் நிறைவேற வேண்டு மென்று அவரை மன்றாடி அதற்கு முழுமையும் நம்மை உட்படுத்தி அதில் நமது ஆசைகளை அடக்கி வைக்க வேண்டியது. இவ்விதம் நமது பிதாவுக்குத் தாராளமாய் நம்மைக் கையளித்தால்தான் மெய் யான சமாதானத்தையும் அமைதியையும் காண்போம். “என் பிதாவே, நான் ஆசிப்பதல்ல, நீர் விரும்புவதே நிறைவேறக் கடவது.”