இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

15. தேவ சிநேகத்தைப் பற்றிச் செய்யப்படும் கிருத்தியங்கள்

1. எந்தக் காரணத்தைப் பற்றியும் எவனுடைய நன்மை யைப் பற்றியும் யாதொரு தீவினையையும் செய்யலாகாது. ஆனால் உன் உதவி வேண்டியவனுடைய பிரயோசனத்துக்காக ஓர் நற்செயலைச் சில சமயங்களில் நிறுத்தவும், அல்லது அதிக நலமான மற்றொன்றைச் செய்யவும் வேண்டும். இவ்விதம் செய்வதினால் அந்த நற்செயல் கெட்டுப் போகாது; ஆனால் அதிக உத்தமமானதொன்றில் மாற்றப்பட்டதாகும். தேவசிநேகமில்லாத வெளி நற்செயல் யாதொன் றுக்கும் பிரயோசனப்படாது. ஆனால் தேவசிநேகத்தோடு செய்யும் எக்காரியமும், எவ்வளவுதான் சிறியதும் அற்பமுமாயிருந்த போதிலும், முழுதும் பயனுள்ளதாயிருக்கும். ஏனெனில் சர்வேசுரன் நாம் செய்கிற கிரிகையை விட, அதைச் செய்வதில் நம்மைத் தூண்டின கருத்தையே முக்கியமாய்ப் பார்க்கிறார்.

2. அதிகமாக நேசிக்கிறவன், அதிகமாய்ச் செய்கிறான். தான் செய்வதை நன்றாய்ச் செய்கிறவன் அதிகமாய்ச் செய்கிறான். தன் சுய மனதைத் திருப்தி செய்வதைவிட்டு பிறரின் நலத்துக்காக உழைக் கிறவன் நன்றாய் நடக்கிறான். அநேக சமயங்களில் பரிசுத்த சிநேகச் செயலாகக் காணப்படுவது தன்னிச்சையான செயலாக இருக் கின்றது; ஏனெனில் சுபாவ நாட்டம், சுயமனது, இலாப நம்பிக்கை, சுகப்பிரியம் இவைகள் நமது செயல்களில் நம்மைத் தூண்டாமலே யிருப்பது மிகவும் அபூர்வம்.

3. மெய்யான உத்தமசிநேகமுள்ளவன் எதிலும் தன்னைத்தானே தேடாமல் சகலத்திலும் சர்வேசுரனுக்கு மகிமை உண்டாக வேண்டு மென்றே ஆசிக்கிறான். தனக்கேயென எந்த சந்தோஷத்தையும் தேடாதவனாயிருப்பதால், எவன்பேரிலும் காய்மகாரப்பட மாட்டான்; தனக்குள்ளே தானே சந்தோஷம் கொள்ள ஆசிப்பதில்லை, ஆனால் சகலத்தையும் விட சர்வேசுரனிடத்தில் பாக்கியவானாவதை ஆசிப் பான். மனிதர்களுடைய நற்குணங்களைப் பார்த்து அவர்களையல்ல, சர்வேசுரனையே ஸ்துதித்து வருகிறான்; ஏனெனில் அவரே சகல நன்மைகளுக்கும் ஊறணியாயிருக்கிறாரென்றும் அவரே சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய கடைசி முடிவும் பாக்கியமும் இளைப் பாற்றியுமாயிருக்கிறார் என்றும் அறிவான். கொஞ்சமாகிலும் உண்மையான தேவசிநேகமுள்ளவன் இவ்வுலகக் காரியங்கள் அனைத்தும் எவ்வளவோ வியர்த்தமானவைகள் என்று சந்தேகமறக் கண்டுபிடிப்பான்.

யோசனை

அர்ச். அருளப்பர் மூன்று முக்கியமான ஆசாபாசங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார் (1அரு.2:16). அவைகளுக்கு விரோதமாக ஆத்துமம் எப்போதும் போராட வேண்டியிருக்கிறது. அவைகளினின்றே மனிதருடைய சகல செயல்களும் உற்பத்தியாகின்றன. ஒழுங்கற்ற சுய நேசத்தை ஜெயிப்பது மகா கஷ்டம், அது நற்செயல்களை முதலாய்க் கெடுத்து விடுகின்றது. எத்தனையோ தவ முயற்சிகள் வீணாய்ப் போகின்றன! பிரயோசனமற்றுப் போகின்றன. தம்மை நேசிக்கிறவர் களுக்கு மாத்திரமே சர்வேசுரன் தம்மைக் கையளிக்கிறார். அர்ச். சின்னப்பர் சொல்லுவதுபோல, சகலமும் கடந்துபோம்; ஆனால், நித்தியமாய் நிலைத்திருக்கும் வாக்கிலடங்காத அளவற்ற தேவ சிநேகத்தின் சம்பாவனை சர்வேசுரன்தான். அர்ச்சிஷ்டவர்களாக்குகிற நேசமே! “சர்வேசுரனாயிருக்கிற” நேசமே! என்கிறார் அப்போஸ்தலர். பரிசுத்த நேசமே! நீ என் ஆத்துமத்தை ஊடுருவி, அதை உன் வசப்படுத்திக் கொண்டு, அதன் சத்துவங்களை உன்னுடையதாய் ஆக்கிக் கொள். நீயே என் சீவியமாயிரு! இப்போதும், எப்போதும், சதா காலத்திற்கும் நீயே என் ஏக சீவியமாயிரு. -ஆமென்.