இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

14. கிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தை உட்கொள்ள சில பக்தி நிறைந்த ஆத்துமாக்களுக்குண்டான அதிவேகமான ஆசை.

1. (சீஷன்) “ஆண்டவரே! உம்முடைய பயபக்தியுள்ள ஊழியர்களுக்கு நீர் கொடுக்கச் சித்தமாயிருக்கிற இன்பம் எவ்வளவோ ஏராளமாயிருக்கின்றது.” ஆண்டவரே! வெகு வணக்கத்தோடும் நேசத்தோடும் உமது தேவதிரவிய அனுமானத்தைப் பெற வரும் பக்தியுள்ளவர்களைப் பற்றி நான் நினைக்கும்போது, அடிக்கடி என் உள்ளத்தில் வெட்கி நாணுகிறேன். ஏனெனில், மிகுந்த வெதுவெதுப்போடும், மனவறட்சியோடும் நான் உமது பீடத்தையும் திவ்விய நற்கருணைப் பந்தியையும் அண்டிவருகிறேன்; என் இருதயத்தில் உருக்கமுமில்லை, பட்சமுமில்லை; அநேகம் பக்திமான் களைப் போல நான் தேவனாகிய உம்முடைய சமூகத்தில் சிநேகத் தால் முழுதும் பற்றியெரிவதில்லை. அவ்வளவு பலமாய் நான் இழுக்கப்படுவதுமில்லை, நேச பாசம் கொண்டிருப்பதுமில்லை. அவர்களோ, தேவ நற்கருணை உட்கொள்ள மிஞ்சின ஆவலாலும், இருதயத்தில் தாங்கள் உணர்ந்த நேசத்தாலும் தங்களுடைய கண்ணீர் களை அடக்க முடியாது சரீர வாயோடு இருதய வாயையும் திறந்து சீவிய ஊற்றாகிய உம்மை, ஆண்டவரே! ஆவலோடு அண்டி வந்தார்கள். உமது திருச்சரீரத்தைச் சர்வ அக்களிப்போடும் ஞான ஆவலோடும் உட்கொண்டாலே தவிர தங்கள் ஆத்துமபசியை வேறு விதமாய்த் தணிக்கவும் அதைத் திருப்தியாக்கவும் கூடாதவர்களாய் இருந்தார்கள்.

2. ஆ! அவர்களுடைய விசுவாசம் எவ்வளவு ஆழ்ந்ததும் வேகமுள்ளதுமாயிருந்தது; அது நீர் உண்மையாகவே அங்கு இருக் கிறீர் என்பதற்குத் தகுதியான அத்தாட்சியாயிருந்தது. ஆண்டவர் அப்பத்தைப் பிட்கவே அவர் இன்னாரென்று மெய்யாகவே அறிந்து கொண்ட சீஷர்களுக்கு அவர்கள் ஒத்தவர்களாயிருக்கிறார்கள். ஏனெனில் தங்களோடு நடக்கிற சேசுவுக்காக அவர்களுடைய இருதயம் பற்றியெரிகிறது.

அவ்விதப் பற்றுதலும் பக்தியும், அவ்வளவு வேகமான நேசமும் உருக்கமும் அடிக்கடி என்னிடத்தில் காணப்படாது.

மதுரமும் தயையும் பொருந்திய நல்ல சேசுவே! என் பேரில் இரக்கமாயிரும்; என் விசுவாசம் மேன்மேலும் திடமுள்ளதாகவும், உமது தயவின் பேரிலுள்ள என் நம்பிக்கை வளரவும் என் தேவ சிநேகம் ஒருவிசை என்னிடத்தில் மூட்டப்பட்டுப் பரலோக மன்னா வினால் வளர்க்கப்பட்ட பிறகு ஒருக்காலும் குறையாதிருக்கவும், சற்பிரசாதத்தை நான் உட்கொள்ளும் சிற்சில சமயங்களிலாகிலும் உமது நேசத்தின் அன்புள்ள பற்றுதலில் கொஞ்சம் உணரும்படி ஏழையான உமது அடியேனுக்குக் கிருபை செய்தருளும். நீர் உமக்கு இஷ்டமாயிருக்கும் நாளில் என்னைச் சந்தித்து வெகுவாய் நான் ஆசிக்கிற அந்த வரத்தை எனக்குக் கொடுக்கவும் வேகமான நேசத்தை என் உள்ளத்தில் மூட்டவும் உம்முடைய தயவு போதிய வல்லமை யுடையதாயிருக்கிறது.

ஏனெனில் உமது பேரில் விசேஷ பக்தி வைத்திருக்கிறவர்களைப் போல அவ்வளவு ஆசையினால் நான் பற்றியெரியாவிட்டாலும், உமது கிருபையால் அந்தப் பெருத்த ஆசை எனக்குள் பற்றியெரிய வேண்டுமென்று விரும்புகிறேன். உமது உருக்கமுள்ள நேசரைப் போல் உணரவும் அவர்களுடைய கூட்டத்தில் நானும் ஒருவனா யிருக்கவும் ஆசிக்கிறேன், மன்றாடுகிறேன்.

யோசனை

“பாஸ்கா நாளுக்கு முந்தி, சேசுநாதர் இவ்வுலகத்தை விட்டுத் தமது பிதாவிடம் போக வேண்டிய நேரம் சமீபித்ததென்று அறிந்து, இவ்வுலகிலிருந்த தம்மவர்களை அவர் நேசித்து வந்ததால், அவர் களைக் கடைசி வரை நேசித்தார்.” அப்போதுதான் தாம் நேசித்து வந்த சீஷர்களிடமும் தாம் நேசிக்கப்போகிற எக்காலத்துச் சீஷர் களிடமும் வாசம் செய்ய வேண்டி தேவ நற்கருணையை ஏற்படுத் தினார். அவ்விதமாக “உங்களை நாம் அநாதைப் பிள்ளைகளாக விட்டுவிட மாட்டோம், உங்களிடத்தில் நாம் வருவோம்” என்ற வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். அப்படியே வந்தார்; “நமக்குள் ளாக வாசம் செய்தார். தயாளமும் சத்தியமும் நிறைந்த பிதாவின் ஏக குமாரனுடைய மகிமையைக் கண்டோம்.” நாம் அவரை நமது கண்களால் பார்க்கிறதில்லை, மெய்தான்; ஆனாலும் தேவ நற்கருணையில் சேசுநாதர் மெய்யாகவே இருக்கிறார். ஆண்டவரே! அவ்விதம்தான் நான் விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக் கிறேன். சேசுகிறீஸ்துநாதர் பீடத்தின் தேவதிரவிய அனுமானத்தில் தம்மையே நமக்குக் கொடுக்கும்போது திரையினால் தம்மை மறைத்துக் கொள்ளாவிட்டால், தமது பிரகாசத்தை மூடாவிட்டால், சகல மனுமக்களிலும் அதிக சுபசெளந்தரியமுள்ள தம்மைத் தாமிருப்பது போலக் காண்பிப்பாரேயானால், சரீரத்தோடு சரீரத்தையும், இருதயத்தோடு இருதயத்தையும், மனதோடு மனதையும் ஒன்றிக்கத் தாம் கொண்டிருக்கும் ஆவலை நமக்குத் தெரிவிப்பாரேயானால், நமது மனித பலவீனம் அப்பேர்ப்பட்ட பாக்கியத்தைத் தாங்குவதெப்படி? நமதாத்துமம் உடலைவிட்டுப் பிரிந்து போகுமல்லவோ? ஆனதினால்தான் திவ்விய இரட்சகர் விசுவாசக் கண்ணுக்கு மாத்திரம் தோன்றுகின்றார். அந்த விசுவாசம் பக்தியுள்ளவர்களுடைய இருதயத்தில் எப்பேர்ப்பட்ட தேவசிநேக அக்கினியை மூட்டுகிறது என்றால் இவ்வுலக நேச பாசமெல்லாம் அதற்கு இணையாகாது, இருதய உள்ளரங்கத்தில் திவ்விய பத்தா வுக்கும் பத்தினிக்கும் நடக்கிற சந்தோஷம், அமரிக்கை, தேவசிநேகம் பற்றியெரியும் சம்பாஷணை, உத்தம மவுனம் இவை முதலியவை களை வருணிக்கக் கூடுமானவன் யார்? “ஆ! சர்வேசுரனுடைய வரமும், என் தாகத்திற்குத் தண்ணீர் கொடு என்று உனக்குச் சொல்லுகிறவர் யார் என்றும் உனக்குத் தெரியுமேயானால் அவரையே நீ தாகத்திற்குக் கொடும் என்று கேட்பாய், அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்குக் கொடுப்பார்.” அர்ச்சிஷ்டவர்கள் எல்லோரும் அவரைக் கேட்டார்கள், அவர் அவர்களுடைய மன்றாட்டுக்கு அருள் புரிந்து நித்திய ஜீவியத்தின் தண்ணீரை அவர்களுக்குத் தந்தார். நீயும் கேள், வேண்டிக் கொள், மன்றாடு; அவர் உன்னை நோக்கி: “தாகமுள்ளவன் வரக்கடவான், நித்திய ஜீவியம் தரும் தண்ணீரை வேண்டியவன் இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளட்டும்; ...இதோ வருகிறோம்,” என்று பத்தா சொல்லும் போது, ஆண்டவராகிய சேசுவே! நீர் என்னுள்ளத்தில் எழுந்தருளி வாரும் என்று நீ பக்தி உருக்கத்தோடு சொல்லக்கடவாய்.