இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

14. நம்முடைய நற்கிருத்தியங்களில் நமக்கு ஆங்காரம் வராதபடிக்குச் சர்வேசுரனுடைய அந்தரங்கத் தீர்மானங்களைத் தியானிக்க வேண்டும்

1. ஆண்டவரே! உமது தீர்மானங்களை என்பேரில் இடிமுழக்கம் போலச் சப்திக்கச் செய்கிறீர்; என் எலும்புகளை எல்லாம் அச்சத் தினாலும் நடுக்கத்தினாலும் அசைக்கச் செய்கிறீர்; என் ஆத்துமம் மிகவும் திகில் அடைந்திருக்கிறது. “உமது சந்நிதானத்தில் பரலோகம் முதலாய்ப் பரிசுத்தமானதல்ல” என்று காண்கிற நான் பிரமித்து நிற்கிறேன். “சம்மனசுகளிடத்தில் நீர் பாவக்கறையைக் கண்டு” மன்னியாமல் போனீரே; அப்படியிருக்க எனக்கு என்னதான் நேரிடாது? “வானத்தினின்று நட்சத்திரங்கள் விழுந்து போயின” என்றால் துரோகியான நான் எதற்குக் காத்திராதிருப்பேன்? சிலருடைய செயல்கள் புகழ்ச்சிக்குரியவைகளாகக் காணப்பட்டன, ஆயினும் அவர்கள் வெகு தாழ விழுந்தார்கள். சம்மனசுக்களின் போசனத்தை அருந்தினவர்கள் பன்றிகளுடைய தீனியில் பிரியம் கொள்ளக் கண்டேன்.

2. ஆகையால் என் ஆண்டவரே! உமது கரத்தின் உதவி இல்லாமல் போனால் பரிசுத்ததனமே கிடையாது. நீர் நடத்தி வராத எந்த ஞானமும் எங்களுக்குப் பிரயோசனமற்றதே. நீர் தாங்காமல் விட்டுவிடும் எப்பலமும் எங்களைக் காத்துக் கொள்ளாது. கற்பை நீர் பாதுகாக்கா விட்டால், அது பத்திரமாயிராது. உமது பரிசுத்த காவல் இல்லாமல் மனிதனுடைய காவல் அவனுக்கு உதவாது. ஏனெனில் உம்மால் கைவிடப்படும்போது விழுந்து மடிகிறோம்; நீர் எங்களைச் சந்திக்கையிலோ தலையெடுத்துப் பிழைக்கிறோம். நாங்கள் நிலை யற்றவர்கள்தாம். ஆனால் எங்களைப் பலப்படுத்துகிறீர்; நாங்கள் வெதுவெதுப்பு உள்ளவர்கள்தாம், ஆனால் உம்மால் தேவசிநேகத்தின் வெப்பம் அடைகிறோம்.

3. ஓ என் மட்டில் நான் எவ்வளவோ தாழ்மையும் இழிவுமான எண்ணம் கொள்ள வேண்டியது; என்னிடம் ஏதாவது நன்மை உண்டென்று காணப்பட்டால் அதை ஒன்றுமில்லாமை என்று மதிக்க எவ்வளவோ நியாயம் உண்டு. நான் ஒன்றுமில்லாமையே, சுத்த சூனியமே என்று எனக்குக் காண்பித்த, மனித அறிவுக்கெட்டாத உமது தீர்மானங்களின் எதிரில் நான் எவ்வளவோ என்னைத்தானே தாழ்த்த வேண்டியது. ஓ பிரமாண்டமான பாரமே! ஓ அளவில்லாத சமுத்திரமே! எப்பக்கத்தில் பார்த்தாலும் உம் சமூகத்தில் ஒரு சூனியம்போலிருக்கிறேன். எல்லாமுமாகிய உம்மில் ஒன்றுமில் லாமையாகவே இருக்கிறேன். ஆகையால் ஆங்காரம் கொள்வதற்கு அடிப்படையேது? சொந்தப் புண்ணியத்தின் பேரில் ஊன்றி நிற்ப தெப்படி? என்மேல் நீர் கொண்ட தீர்மானத்தின் பாதாளங் களிலேயே வீண் பெருமை எல்லாம் மூழ்கிப் போயிற்று.

4. உமது சந்நிதியில் மனிதனென்ன? “களிமண் தன்னை உருவாக்குகிறவன் முன் மேன்மை கொள்ளத் துணியுமோ?” உண்மை யாகவே சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன் வீண் புகழ்ச்சி களால் ஆங்காரம் கொள்வதெப்படி? ஏனெனில், சத்தியமான வருக்குத் தன்னை வசப்படுத்தினவன் உலகமெல்லாம் உடையவ னானாலும் பெருமையும் ஆங்காரமும் கொள்ள மாட்டான்; தன் நம்பிக்கை முழுவதும் சர்வேசுரனிடம் ஒப்படைத்தவன் மனித னுடைய எப்புகழ்ச்சிகளாலும் மேன்மை பாராட்ட மாட்டான். ஏனெனில் இப்புகழ்ச்சிகளைப் பேசுகிறவர்களும் யார்? ஒன்று மில்லாதவர்கள்; அவர்கள் பேசும் வார்த்தைகளின் சப்தம் கடந்து போவதுடன் அவர்களும் கடந்து போவார்கள்; ஆனால் ஆண்டவரின் சத்தியம் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கின்றது.

யோசனை

சுயப் பெருமையினாலுண்டாகும் தந்திரங்கள்தான் மெத்தவும் ஆபத்தான தந்திரங்கள். கொஞ்சம் ஜாக்கிரதை தவறினால், வரப்பிர சாதத்தினால் சுபாவத்துக்கு மேல் உயர்த்தப்பட்ட ஆத்துமம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவித் தன் பழைய நிலையில் விழுகின்றது. எப்படியெனில் சில பாவங்களை அகற்றி சில புண்ணியங்களைச் செய்வதில் ஆத்துமம் பிரியம் கொள்கிறது; தன்மட்டில் திருப்தி யுண்டாகிறது; தன்னை மேன்மையாக எண்ணுகிறது; ஆங்காரம் கொள்கிறது; எல்லாம் தன்னால் உண்டானதென்று கர்வங்கொண்டு சர்வேசுரனை மறந்து விடுகின்றது. ஆனால் “சர்வேசுரன் ஆங்காரிகளை எதிர்க்கிறார்.” அகன்று போகிறார். அப்படித்தான் சிலர் புண்ணியத்தில் சிறந்தவர்கள் என்று தோன்றிச் சகலரும் ஆச்சரியப்பட பாவக் குழியில் விழுந்து தேவ துரோகிகளாகி மரித்தார்கள். தன் சுய பலத்தை நம்புகிறவனுக்குக் கேடு! அவனுக்கு அழிவு வருவது நிச்சயம். “என்னிடத்தில் என்னைக் குற்றம் சாட்டுவ தொன்றையும் காணேன்; ஆனால் அதைப் பற்றி நான் நீதிமான் ஆகிறதில்லை; ஏனெனில் எனக்குத் தீர்வையிடுகிற ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்” என அப்போஸ்தலர் கூறியிருக்கிறார். தீர்க்கதரிசி இராஜா: “என் மறைவான பாவங்களினின்று என்னைச் சுத்திகரியும்; நான் அறியாத வைகளை மறந்துவிடும்; மற்றவர்களுடையவைகளை மன்னியும்” என்று வேண்டிக்கொள்கிறார். ஆனபடியால் தன் நீசத்தனத்தை உணரும் தாழ்ச்சியிலும் சர்வேசுரன் ஒருவரை மாத்திரமே நோக்குகிற நம்பிக்கையிலும் இரட்சணியமடைவோம். ஆனதால் அவருடைய பாதத்தில் விழுந்து தீர்க்கதரிசியோடு: “என் பாவம் எப்போதும் என் கண் முன்பாக இருக்கின்றது; என் வெட்கம் என் முகத்தை மூடினது. ஆண்டவரே! மனஸ்தாபமாயிருந்து தன்னைத் தாழ்த்தின இருதயத்தை நீர் நிந்திப்பதில்லை” என்று மன்றாடுவோமாக.