இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

13. தாழ்ச்சியுள்ளவன் சேசுநாதருடைய பாவனையாகக் கீழ்ப்படிய வேண்டும்

1. கீழ்ப்படிய மாட்டேன் என்று எண்ணம் கொள்பவன் எவனோ, அவன் வரப்பிரசாதத்தை அடைய மாட்டான். விசேஷ நன்மைகளைத் தேடுபவன் எவனோ அவன் பொது நன்மைகளை இழந்து விடுவான். ஒருவன் தன் சிரேஷ்டருக்கு முழு மனதோடும் மனப்பூரணமாயும் தன்னைத்தானே கீழ்ப்படுத்தாமல் போகிறபோது, அவனுடைய சரீரம் இன்னும் அவனுக்கு முழுமையும் கீழ்ப்படியாமல் அடிக்கடி எதிர்த்து முறுமுறுக்கிறது என்பதற்கு அடையாளமாய் இருக்கின்றது. ஆகையால் உன் சரீரத்தைக் கீழ்ப்படுத்த உனக்கு ஆசை இருந்தால் உன் சிரேஷ்டருக்குத் துரிதமாய்க் கீழ்ப்படியக் கற்றுக்கொள். ஏனெனில் நமது ஆத்துமத்தில் யாதோர் பழுது இல்லாவிடில், வெளியிலுள்ள சத்துரு (எதிரி) கூடிய சீக்கிரத்தில் ஜெயிக்கப்படும். நீ உன் மனச்சாட்சிக்கு ஒழுங்காய்க் கீழ்ப்படியாமல் போனால், மற்ற சத்துருக்களை விட நீயே உனக்கு மிக விரோதமும் கெடுதியுமுள்ள சத்துரு. மாமிசத்தையும் இரத்தத்தையும் நீ ஜெயிக்க வேண்டுமாகில் உன் பேரிலேயே உறுதியாய் நீ மெய்யான நிந்தை கொண்டிருக்க வேண்டியது. நீ இன்னும் ஒழுங்கற்ற பற்றுதலோடு உன்னையே சிநேகிக்கிறபடியால் பிறருடைய கட்டளைக்கு நீ முழுதும் அமைந்திருக்கப் பயப்படுகிறாய்.

2. ஒன்றும் இல்லாமையினின்று சகலத்தையும் சிருஷ்டித் தவரும் சர்வ வல்லவரும் உன்னதமானவருமான நாம் உன்னைப்பற்றித் தாழ்ச்சியாய் மனிதனுக்குக் கீழ்ப்படிந்திருக்க, தூசியும் ஒன்று மில்லாத வஸ்துவுமாகிய நீ சுவாமியைப் பற்றி மனிதனுக்குக் கீழ்ப் பட்டிருப்பது பெரிய காரியமோ? நமது தாழ்ச்சியைப் பார்த்து நீ உன் ஆங்காரத்தை வெல்லும்படி, நாம் எல்லாரையும் விடத் தாழ்ச்சி யுள்ளவரும் கடைசியானவருமானோம். தூசியே, கீழ்ப்படியக் கற்றுக் கொள்; மண்ணும் சேறுமே! உன்னைத் தாழ்த்தி எல்லோருடைய காலடியிலும் பணியக் கற்றுக்கொள். உன் மனதை முறித்துச் சகலருக்கும் கீழ்ப்படியக் கற்றுக்கொள்.

3. உன் பேரிலேயே கோபங்கொண்டு உன்னிடம் ஆங்காரம் உயிர் பிழைத்திருக்க விடாதே. ஆனால் சகலரும் உன் மேல் நடந்து, தெருவின் சகதியைப்போல் உன்னைக் காலால் மிதிக்கக்கூடுமாறு உன்னைத் தாழ்ச்சியுள்ளவனும் சிறியவனுமாகக் காண்பிக்கக் கடவாய். அற்ப மனிதா! நீ எதற்காக முறையிடுகிறாய்? நீசப் பாவியே! எண்ணிறந்த தடவை சர்வேசுரனுக்குத் துரோகம் செய்து, அநேக முறை நரகத்திற்குத் தகுதியுடையவனான நீ உன் பேரில் முறையிடு கிறவர்களுக்கு என்ன எதிர்த்துச் சொல்லக்கூடும்? ஆனால் உன் ஆத்துமம் நமது சமூகத்தில் விலையேறப்பெற்றது என்பதால், நமது நேசத்தை நீ அறிந்து நமது உபகாரங்களைப் பற்றி எப்போதும் நன்றி யறிதல் உள்ளவனாயிருக்கும்படிக்கும், கீழ்ப்படிதலுக்கும் தாழ்ச்சிக்கும் உன்னை இடைவிடாமல் கையளித்து உனக்குத் தகுதியானதாயிருக்கிற நிந்தையைப் பொறுமையோடு சகித்து வரும்படிக்கும் நமது கண் உனக்குத் தயாளத்தைக் காண்பித்தது.

யோசனை

சகலத்தையும் சிருஷ்டித்துக் காப்பாற்றி வரும் நித்திய கடவு ளுடைய சித்தம் ஒன்று மாத்திரம்தான் நமது கீழ்ப்படிதலுக்குரியது; ஆனதுபற்றியே, தீர்க்கதரிசியானவர்: “ஆண்டவரே! நீர் என் தேவனாய் இருக்கிறபடியால், உமது சித்தத்தை நிறைவேற்ற எனக்குப் போதித்தருளும்” என்று மன்றாடினார். ஆனால் அவரது சித்தத்தை நமக்கு அறிவிக்கவும், அது நிறைவேற்றப்படுகின்றதாவென்று கண்காணிக்கவும், குடும்பங்களிலும் அரசாங்கங்களிலும், திருச்சபை யிலும் பெரியோர்கள் ஏற்பட்டிருக்கிறபடியால், அவர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவர்கள் சர்வேசுர னுடைய பதிலாளிகளாயிருக்கிறார்கள். ஆனதால் அவர்களுக்கு நாம் கீழ்ப்படியும்போது, தேவ கட்டளைக்குத்தான் கீழ்ப்படிகிறோம். சகல பாவங்களும் கீழ்ப்படிதல் இல்லாமையினின்று உண்டா கின்றன. பாவத்தில் மனிதன் உதித்தபடியால் சர்வேசுரனுக்கு விரோதியாகிறான். தாய் உதரத்திலிருந்தே பாவி விரோதியாகிறான்; சுபாவத்திலேயே தின்மையை நாடுகிறான் என்று தீர்க்கதரிசி இராஜா சொல்லுகிறார். பாவ நிவாரணம் செய்து மனுக்குலத்தை மீட்ட பலி, அர்ச்சியசிஷ்டவர் சொல்வது போல, அளவில்லாத கீழ்ப்படிதலில் அடங்கியிருக்கின்றது. “கிறீஸ்துநாதர் சிலுவையில் மரணமடையு மட்டும் கீழ்ப்படிந்தார்.” நாமோ நிர்ப்பாக்கியர், ஆச்சரியத்துக்குரிய கீழ்ப்படிதலினால் இரட்சிக்கப்பட்ட நாம் கீழ்ப்படிய மாட்டோம் என்போமோ? நரகத்துக்குக் காரணமாயிருந்த ஆங்காரத்தை முன்னிட்டுச் சர்வ வல்லபமுள்ளவருடைய சித்தத்துக்கு நாம் விரோதிகள் ஆவோமோ? நரகத்தின் இருளிலும், ஆக்கினைகளிலும் கோபவெறியிலும், அவநம்பிக்கையிலும், அகோரமான அடிமைத் தனத்திலும் லூசிபரும் அவன் ஊழியர்களும்தான் சதாகாலத்துக்கும் “நான் கீழ்ப்படிய மாட்டேன்” என்பார்கள். ஆ சர்வேசுரா! அப்பேர்ப் பட்ட மூடத்தனமான ஆங்காரத்தினின்று என்னைக் காப்பாற்றும். உமக்கும், உம்மால் ஏற்படுத்தப்பட்ட சகலருக்கும் கீழ்ப்படிய எனக்குத் தயைபுரியும். “நான் பூமியில் பரதேசியாயிருக்கிறேன். உமது கட்டளைகளை எனக்கு அறியப்படுத்தும்; என் ஆத்துமம் எந்நேரத் திலும் அவைகளைத் தேடி ஆசிக்கிறது. ஆண்டவரே! நீர் என் கடவு ளானபடியால் உம் சித்தத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்.”