இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

13. பக்தியுள்ள ஆத்துமம் சற்பிரசாதத்தில் கிறீஸ்துநாதருடைய ஐக்கியத்தை முழுமனதோடு ஆசிக்க வேண்டியது.

1. (சீஷன்) ஆண்டவரே! நான் உம்மையே, உம்மை மாத்திரமே கண்டடைந்து, உமக்கு என் இருதயத்தைத் திறந்து, என் ஆசை யின்படி உம்மைக் கொண்டு சுகிக்கும்படி எனக்குக் கிருபை செய் தருளும். அப்படியானால் தானே இனிமேல் எவனும் என்னை நிந்தித்தாவது, மயக்கியாவது, தேடியாவது வராதிருக்க, நேசன் நேசனுடன் பேசிப் பழக்கம் செய்கிறதுபோல நானும் உம்முடன் பேசுவேன், நீர் மட்டும் என்னுடன் பேசுவீர்.

உம்முடன் நான் முழுமையும் ஒன்றித்திருக்கவும், சிருஷ்டிக்கப் பட்ட சகல பொருட்களின் பேரில் பற்றுதல் வைக்காமல் இருக்கவும், தேவநற்கருணையைக் கொண்டும் அடிக்கடி பூசை செய்வதைக் கொண்டும் பரலோக நித்திய இன்பங்களைச் சுவைபார்க்க மென் மேலும் கற்றுக் கொள்ளவும், நான் மன்றாடுகிறேன், நான் ஆசைப் படுகிறேன்.

ஆ! என் ஆண்டவராகிய சர்வேசுரா! உம்மோடு நான் முழுதும் ஒருமைப் பந்தனமாகி உம்மில் மூழ்கி, என்னை முழுதும் மறந் திருப்பது எப்போது? நீர் என்னிடத்தில் இருக்கவும் நான் உம்மிடத் திலிருக்கவும் மன்றாடுகிறேன். இவ்விதம் நாம் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்க அனுக்கிரகம் செய்தருளும்.

2. உண்மையாகவே “ஆயிரம் பேர்களுக்குள்ளாகத் தெரிந்து கொள்ளப்பட்ட என் உத்தம அன்பராயிருக்கிறீர்;” உம்மிடத் திலேயே என் சீவியநாளெல்லாம் வாசம் செய்வதற்கு என் ஆத்துமம் பிரியம் கொள்கின்றது.

உண்மையாகவே, என் சமாதான இராஜாவாயிருக்கிறீர். உம்மிடத்தில் உந்நத சமாதானமும் மெய்யான இளைப்பாற்றியு முண்டு; நீரில்லாமல் போனால் பிரயாசையும் துன்பமும் அளவற்ற நிர்ப்பாக்கியமும்தான் உண்டு.

“உண்மையாகவே நீர் மறைந்திருக்கிற தேவனாயிருக்கிறீர்; அக்கிரமிகளை அருவருக்கிறீர்; ஆனால் தாழ்ச்சியுள்ளவர் களோடும், கபடற்றவர்களோடும் வாசம் செய்து சம்பாஷணை செய்கிறீர்.” 

“உமது நேசத்தை உமது மக்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு பரலோகத்தினின்று இறங்கும் மிக மதுரம் பொருந்திய அப்பத்தால் அவர்களைத் திடப்படுத்தச் சித்தமாகிறீர், ஆனதால் உமது அன்பு நிறைந்த குணம் எவ்வளவோ இன்பமுள்ளதாயிருக்கின்றது.” 

எங்கள் சர்வேசுரா! உமது சகல விசுவாசிகளுக்கும் நீர் பிரசன்னமாகிறீர்; “இதுபோல் தங்கள் சமீபத்தில் இருக்கிற தேவர்கள் வேறு எந்தப் பெரிய சாதி ஜனங்களுக்குமில்லை” என்பது நிச்சயம். நீர் உமது விசுவாசிகளுக்குத் தினந்தோறும் ஆறுதலாகவும் அவர்களுடைய இருதயத்தைப் பரலோக மட்டும் உயர்த்த வேண்டி, உம்மைத் தாமே அவர்களுக்குப் போசனமாகவும் இன்பமாகவும் கையளிக்கிறீர்.

3. உள்ளபடி கிறீஸ்துவ ஜனத்தைப் போல் அவ்வளவு வரம் பெற்ற ஜனம் வேறேது? தமது மகிமை பொருந்திய சரீரத்தைக் கொண்டு போஷிப்பதற்காகச் சர்வேசுரன் பிரவேசிக்கும் பக்தியுள்ள ஆத்துமத்தைப் போல் அவ்வளவு சிநேகிக்கப்பட்ட சிருஷ்டி பூலோகத்தில் வேறென்ன இருக்கின்றது?

ஓ! வாக்குக்கெட்டாத வரப்பிரசாதமே! ஆச்சரியத்துக்குரிய கிருபையே! நூதன விதமாய் மனிதன் பேரில் பொழியப்பட்டிருக்கிற அளவில்லாத நேசமே!

இந்த வரப்பிரசாதத்திற்காக, இவ்வளவு அரிய நேசத்திற்காக, நான் ஆண்டவருக்கு என்ன பிரதிநன்றி செய்யப் போகிறேன்? என் தேவனுக்கு என்னிருதய முழுமையும் கையளிப்பதையும், அவருடன் அந்நியோன்னியமாய் ஒன்றித்திருப்பதையும்விட அவருக்கு வேறென்ன அதிகப் பிரியமான காணிக்கை நான் கொடுக்கக் கூடும்? என் ஆத்துமம் சர்வேசுரனோடு கூட முழுமையும் ஒன்றித்திருக்கும் போது, என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடையும்; அப்போது அவர்: “நம்மோடிருக்க உனக்கு மனதானால் நாம் உன்னோடிருக்க மனதா யிருக்கிறோம்” என்று எனக்குச் சொல்வார்; நானும் அவரை நோக்கி மறுமொழியாக, “ஆண்டவரே! அடியேனோடு இருக்கத் தயை கூரும். நான் உம்முடனிருக்க முழுமனதாயிருக்கிறேன்; என் இருதயம் உம்மோடு ஐக்கியமாயிருப்பதே என் சர்வ ஆசை” என்பேன்.

யோசனை

ஆ! என் ஆண்டவரே! என்னை உமக்குக் கையளிக்கிறேன்; உம்முடன் எப்போதும் ஐக்கியமாய் ஒன்றித்திருப்பதற்கு உமது ஏகத் துவத்திற்கு என்னைக் கையளிக்கிறேன்; என்னையே போக்கடித்துக் கொண்டு என்னை முற்றிலும் மறந்து போவதற்கு உமது அளவிறந்த விசாலத்திற்கும் என்னைக் கையளிக்கிறேன்; என் எண்ணங்களின் படியல்ல, ஆனால் உமது கருத்துக்களின்படி நான் ஆளப்பட, உமது அளவில்லாத ஞானத்திற்கு என்னைக் கையளிக்கிறேன். அறியப் பட்டவையும், அறியப்படாதவையுமான கட்டளைகள் யாவும் நீதி யுள்ளவைகளானபடியால், அவைகளுக்கு நான் ஒத்து நடக்கும்ப டியாக அந்தக் கட்டளைகளுக்கு என்னைக் கையளிக்கிறேன்; உமது நித்தியத்தை என் பாக்கியமாக்கிக் கொள்வதற்காக, அதற்கு என்னைக் கையளிக்கிறேன்; எப்போதும் உமது அடைக்கலத்தில் இருப் பதற்காக உமது சர்வ வல்லமைக்கு என்னைக் கையளிக் கிறேன்; நீர் குறித்திருக்கிற நேரத்தில் என் ஆத்துமத்தை நீர் உமது கரங்களில் ஏற்றுக்கொள்ளும்படியாக, உமது தந்தைக்குரிய தயாளத் திற்கு என்னைக் கையளிக்கிறேன்; அக்கிரமியும் பாவியுமான என்னை நீதிமானும் அர்ச்சியசிஷ்டவனுமாக்குகிறதற்காக, பாவி களைப் பரிசுத்தப்படுத்துகிற உமது நீதிக்கு என்னைக் கையளிக் கிறேன்; பாவங்களைத் தயவில்லாமல் தண்டிக்கும் நீதிக்கு மாத்திரம் என்னைக் கையளித்துவிட மாட்டேன். ஏனெனில் அது நான் பாத்திர வானான நித்திய தண்டனைக்கு என்னைக் கையளித்து விடுவதாகும்; ஆயினும் ஆண்டவரே! உமது மட்டற்ற இலட்சணங்களைப் போல உமது நீதியும் பரிசுத்தமானது, அதற்குப் பலி ஆகவேண்டியிருக் கின்றது; ஆனதால் அதற்கு நான் என்னைத்தானே கையளிக்க வேண்டியது. இதோ! இனி பயமில்லை, சேசுகிறீஸ்துநாதர் வருகிறார்; நான் அவரிடத்திலும் அவரைக் கொண்டும் என்னை முழுதும் அதற்குக் கையளிக்கிறேன்.