இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

12. இராச பாதையாகிற திருச்சிலுவையின் பாதை

1. “உன்னைத்தானே பரித்தியாகம் செய்; உன் சிலுவையைச் சுமந்துகொண்டு சேசுநாதரைப் பின்செல்” என்ற வசனம் அநேகருக்குக் கடுமையாய்க் காணப்படுகின்றது. ஆனால், “சபிக்கப்பட்டவர்களே! நம்மைவிட்டு நித்திய அக்கினிக்குப் போங்கள்” என்னும் அந்தக் கடைசி வாக்கியத்தைக் கேட்பதோ இன்னும் அதிகக் கடுமையாயிருக்கும். இப்போது சிலுவையின் வாக்கியத்தை மனப்பூர்வமாய்க் கேட்டு அதைப் பின்செல்லுகிறவர்கள் அப்போது நித்திய நரகாக்கினைத் தீர்ப்பைக் கேட்போமென்று பயப்பட வேண்டியதில்லை. “ஆண்டவர் நடுத்தீர்க்க வரும்போது அந்தச் சிலுவையடையாளம் வானத்தில் காணப்படும்.” தங்கள் சீவிய காலத்தில் சிலுவையில் அறையுண்ட ஆண்டவருடைய பாவனையாய்ச் சீவித்திருந்த சிலுவையின் ஊழியரெல்லாரும் அப்போது மிகுந்த நம்பிக்கையோடு நியாயாதிபதியான கிறீஸ்துநாதரை அண்டிப் போவார்கள்.

2. சிலுவையானது மோட்ச ராச்சியத்திற்குப் போகிற வழியாயிருக்கையில் அதைச் சுமந்துகொள்ள நீ பயப்படுவதேன்? சிலுவையில்தான் இரட்சணியம், சிலுவையில்தான் சீவியம், சிலுவையில் தான் பகைவர்களிடமிருந்து உன்னைப் பாதுகாக்கும் கேடயம்; சிலுவையில் பரலோக இன்பம் பொழிகின்றது, சிலுவையில் மனம் தைரியமடையும், சிலுவையில் ஞான சந்தோஷமுண்டாகும். சிலுவையில் சாங்கோபாங்கத்தின் பூரணமும் உத்தமபரிசுத்ததனமும் ஏற்படும். சிலுவையினாலன்றி ஆத்தும இரட்சணியமுமில்லை, நித்திய சீவியத்தின் நம்பிக்கையுமில்லை. ஆனதால் உன் சிலுவையை எடுத்துக்கொண்டு சேசுநாதரைப் பின்சென்று நட: நித்திய சீவியத்தை அடைவாய். நீயும் உன் சிலுவையைச் சுமந்து நடக்கவும் சிலுவையில் மரிக்கப் பிரியம் கொள்ளவும் வேண்டி அவர் “தமது சிலுவையைச் சுமந்து” முன்னே நடந்தார். ஏனெனில் “நீ அவரோடு மரித்தால், அவரோடு உயிர்த்தும் போவாய்; அவர் பாடுகளுக்குப் பங்காளியா யிருந்தால், அவர் மகிமைக்கும் பங்காளியாயிருப்பாய்.”

3. ஆகவே சிலுவையில் எல்லாம் பொருந்தியிருக்கின்றது; அதில் மரிப்பதிலே எல்லாம் அடங்கியிருக்கின்றது; பரிசுத்த சிலுவையினுடையவும் தினசரி ஒறுத்தலினுடையவும் வழியே தவிர, நித்திய சீவியத்தையும் மெய்யான உள்ளரங்க சமாதானத்தையும் அடைவதற்கு வேறு வழியில்லை. எங்கே போனாலும் சரி, எதைத் தேடினாலும் சரி, பரிசுத்த சிலுவையின் வழியைத் தவிர மேலே அதிகமாய் உயர்ந்த வழியையாகிலும், கீழே அதிக நிச்சயமான வழியை என்கிலும் நீ காணப்போவதில்லை. உன் இஷ்டப்படியும் உன் கருத்துப்படியும் சகலத்தையும் நீ ஒழுங்குபடுத்தி நடத்தி வந்தாலும் மனது பொருந்தியோ மனதில்லாமலோ பாடுபட வேண்டுமென்றுதான் காண்பாய். அதெப்படியென்றால் ஒன்றில் உன் சரீரத்தில் ஏதாவதொரு பிணியால் வேதனை அனுபவித்திருப்பாய், ஒன்றில் உன் ஆத்துமத்தில் ஏதாவது மனக் கிலேசமுற்றிருப்பாய்.

4. ஒரு சமயத்தில் நீ சர்வேசுரனால் கைவிடப்பட்டது போல் தோன்றும், மற்றொரு சமயத்தில் அயலாரால் இடைஞ்சல் படுவாய்; இவைகளைவிட அதிக கஷ்டமானது ஏதென்றால் அநேகமுறை உனக்கே நீ பாரமாயிருப்பாய். அப்படியாயினும் யாதோர் மருந்தினால் சுகமடையவும் அல்லது ஆறுதலடையவும் உன்னால் முடியாமலிருக்கும்; ஆனால் சர்வேசுரனுக்குச் சித்தம் வரும் வரையில் நீ அவைகளை அனுபவிக்கத்தான் வேண்டியது. ஏனெனில் சர்வேசுரனுக்கு நீ உன்னை முற்றிலும் கீழ்ப்படுத்தும்படி யாகவும், துன்பத்தினால் நீ அதிகத் தாழ்ச்சியுள்ளவனாகும்படியாகவும், ஆறுதலின்றி துன்பத்தை நீ சகிக்கக் கற்றுக்கொள்வது தேவ சித்தம். சேசுவின் திருப்பாடுகளை அதிக மன உருக்கத்தோடு உணருகிறவன் எவன் என்றால் அதே வகையான சில துன்பங்களை அனுபவித்திருக் கிறவன்தான். ஆனதால் சிலுவை எப்போதும் உனக்குத் தயாரா யிருக்கின்றது, எங்கும் உனக்காகக் காத்திருக்கின்றது. நீ எங்கேதான் போனபோதிலும் அதற்குத் தப்பித்துக்கொள்வது கூடாது, ஏனெனில் எங்குமே உன்னையே சுமக்க வேண்டும். உன்னையே எப்போதும் காண்பாய். மேலே பார்த்தாலும், உள்ளத்தில் பார்த்தாலும், எங்கும் எல்லாவற்றிலும் சிலுவையைத் தான் காண்பாய். எச்சமயத்திலும் நீ பொறுமையோடிருக்க வேண்டியது, இல்லாவிட்டால் உள்ளரங்கச் சமாதானத்தை அனுபவிக்கவும் மாட்டாய், நித்திய முடிக்குப் பாத்திரவானாகவும் மாட்டாய்.

5. நீ மனது பொருந்தி சிலுவையைச் சுமந்து நடந்தால், அது உன்னைச் சுமந்து நீ ஆசிக்கிற கதிக்கு உன்னைக் கூட்டிக் கொண்டு போகும். அவ்விடத்தில் எல்லாத் துன்பங்களுக்கும் முடிவு இருக் கிறது; இவ்வுலகத்தில் அப்படியாகாது. ஆனால் நீ அதைக் கட்டாயத் தின்பேரில் சுமந்தால் உனக்கு அது அதிக பளுவாயிருக்கும், உன்னையே நீ மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்குகிறாய்; ஆயினும் அதைச் சுமந்துதான் தீர வேண்டியதாகும். ஒரு சிலுவையை நீ தள்ளிப்போட்டால் சீக்கிரத்தில் வேறொன்றை அடைவாய்; சில வேளை இது அதிக பளுவானதாயிருக்கும்.

6. எந்த மனிதனும் தப்பக்கூடாத காரியத்திற்கு நீ தப்பித்துக் கொள்ளலாமென்று எண்ணுகிறாயோ? சிலுவையின்றியும் துன்ப மின்றியும் அர்ச்சியசிஷ்டவர்களில் யார் பூலோகத்திலே இருந் தார்கள்? நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் முதலாய்த் தமது சீவியகாலத்தில் ஒருமணி நேரமாகிலும் திருப்பாடுகளின் துன்பம் அனுபவியாமல் இருந்ததில்லை; “கிறீஸ்துநாதர் பாடுபட்டு, மரித்தோர் இடத்தினின்று உயிர்த்தெழுந்து, இவ்வகையாய்த் தமது மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டியிருந்தது” என்று அர்ச். சின்னப்பர் திருவுளம்பற்றுகிறார். நீயோ புனித சிலுவையின் பாதையாகிற இந்த இராஜ பாதையைவிட வேறு பாதையை எவ்விதம் தேடுவாய்?

7. கிறீஸ்துநாதருடைய சீவியம் முழுமையும் சிலுவையும் வேதனையுமாயிருந்தது; நீயோ இளைப்பாற்றியும் சந்தோஷமும் தேடுகிறாய்! மோசம் போகிறாய்! துன்பங்களைச் சகிப்பதைவிட வேறு எதையாவது தேடினால் மோசம் போகிறாய்; ஏனெனில், இந்த அழிவுக்குரிய சீவியம் முழுமையும் நிர்ப்பந்தங்களால் நிறைந்து சிலுவை களால் சூழப்பட்டிருக்கின்றது. வழக்கமாய் ஒருவன் ஞானத்தில் எவ்வளவு அதிகமாய் வளர்ச்சியடைகிறானோ, அவ்வளவு அதிக பார மான சிலுவைகளை மேன்மேலும் சுமந்து கொள்வான்; ஏனெனில், அவனுக்குண்டான தேவசிநேகத்தின் மிகுதியால், அவன் பரதேசத் திலிருப்பதால் உண்டாகும் வேதனை அதிகமாய் வளருகின்றது.

8. ஆயினும் இவ்விதமாய்ப் பலவிதத்திலும் கஸ்தி அடைந்திருக்கிறவன் ஆறுதலில்லாமல் இரான்; ஏனெனில் தன்னுடைய சிலுவையைப் பொறுமையோடு சகித்து வருவதால் தனக்கு உண்டாகிற பேறுபலன் அதிகரித்து வருகிறதை உணருகிறான். ஏனெனில் அவன் மனது பொருந்தித் துன்பத்திற்குத் தன்னைக் கையளிக்கும்போது, துன்பத்தின் பாரமெல்லாம் தேவ ஆறுதலின் நம்பிக்கையாக மாறிப்போகின்றது. சரீரம் துன்பத்தால் எவ்வளவுக்கு அதிகமாய் நொறுக்கப்படுகின்றதோ, ஆத்துமம் உள்ளாந்தர வரப்பிரசாதத்தால் அவ்வளவுக்கு அதிகமாய்த் தேற்றப்படுகின்றது. சிலுவையில் அறையுண்ட சேசுவுக்குச் சில வேளை தான் ஒத்தவ னாகும்படி பாடுபட வேண்டுமென்கிற ஆசையால் அவனிடத்தில் எம்மாத்திரம் பலம் உண்டாகிறதென்றால் தான் வேதனைப்படாமல் சீவிக்க முடியாதென்றிருப்பான்; ஏனெனில் சேசுநாதருக்காகத் தான் படும் துன்ப துரிதங்களின் அளவுக்கும் கனாகனத்துக்குத் தக்கதாகவே சர்வேசுரன் தன்பேரில் பிரியம் கொள்வார் என்று நிச்சயித்திருக் கிறான். அது உண்டாகிறது மனிதனுடைய பலத்தால் அல்ல, ஆனால் கிறீஸ்துநாதருடைய கிருபையால்தான். இது பலவீனமுள்ள சரீரத்தை எவ்வளவு வல்லமையுடன் நடத்தி வருகிறதென்றால், அச்சரீரமானது தான் இயல்பாக வெறுத்து அகற்றி விடுகிற காரியத்தை ஞான மன வேகத்தால் ஆவலோடு செய்து முடிக்கும்.

9. சிலுவையைச் சுமப்பதும், அதை நேசிப்பதும், சரீரத்தைத் தண்டித்து அடிமைத்தனத்திற்குக் கீழ்ப்படுத்துவதும், பெருமை களைத் தள்ளுவதும், அவமானங்களை மனது பொருந்தி ஏற்றுக் கொள்வதும், தன்னைத்தானே நிந்தித்துக் கொள்வதும், நிந்திக்கப்பட ஆசிப்பதும், எவ்வித செல்வத்தையும் தேடாதிருப்பதும், மனித னுடைய இயல்பல்ல. உனது சொந்த பலத்தை மட்டும் கொண்டு இதெல்லாம் உன்னால் செய்ய முடியாது. ஆனால் ஆண்டவரை நம்பினால், பரலோகத்தினின்று உனக்குப் பலம் கொடுக்கப்படும். அப்போது உலகமும் சரீரமும் உன் ஆளுகைக்கு உட்படுத்தப்படும். நீ விசுவாசத்தை ஆயுதமாகக் கொண்டு கிறீஸ்துநாதருடைய சிலுவை யைத் தரித்திருந்தால், சத்துராதியான பசாசுக்கு முதலாய் நீ பயப்பட வேண்டியதில்லை.

10. ஆனதால் உன் மட்டில் வைத்த நேசத்தால் சிலுவையில் அறையுண்ட உன் ஆண்டவருடைய சிலுவையைத் தைரியமாய்ச் சுமந்து போகும்படி, கிறீஸ்துநாதருடைய பிரமாணிக்கமுள்ள உத்தம அடிமையைப்போல, உன்னை ஆயத்தப்படுத்து. இந்த நிர்ப்பாக்கிய சீவியத்தில் அநேக விரோதங்களையும் பலவித சங்கடங்களையும் சகிக்கத் தயாராயிரு; ஏனெனில் நீ இருக்குமிடமெங்கும் அவைகள் உனக்கு நேரிடும். நீ எவ்விடம் ஒளிந்திருந்த போதிலும் அவை களையே காண்பாய். இவ்விதம்தான் பொறுமையோடு இருக்க வேண்டியது; கஸ்திக்கும் சஞ்சலத்திற்கும் மருந்து பொறுமையோடு பாடுபடுவதே தவிர வேறல்ல. ஆண்டவருடைய சிநேகிதனாயிருக் கவும் அவர் மகிமையில் பங்கடையவும் உனக்கு மனதுண்டானால் அவருடைய பாத்திரத்தில் மகா மன விருப்பத்தோடு பானம் பண்ணு. ஆறுதல் என்னும் விஷயத்தைச் சர்வேசுரனுடைய கையில் விட்டு விடு; அவருக்கு எப்படிப் பிரியமோ அப்படியே செய்யட்டும். நீயோ எவ்வித துன்பங்களையும் சகிக்கத் தயாராயிரு. அவைகளைப் பெருத்த ஆறுதல்களென்று எண்ணிக்கொள்; ஏனென்றால், “இக்காலத்துத் துன்பங்களையெல்லாம் நீ ஒருவனே அனுபவிக்க முடியுமானாலும், அவைகளால் நீ பெறப் போகும் மகா உன்னத மகிமைக்கு அவை ஒத்தவையாகாது.”

11. கிறீஸ்துநாதருக்காகத் துன்பங்களை அனுபவிப்பது உனக்கு இனிப்பும் மதுரமுமாயிருக்கிறதென்றால், அப்போது உன்னைப் பாக்கியவானென்று நினைத்துக்கொள். ஏனெனில் உனக்கு இவ்வுலகமே மோட்சமாயிற்று. துன்பங்களைச் சகிப்பது உனக்குக் கஷ்டமென்று அவைகளுக்குத் தப்பித்துக் கொள்ளத் தேடும்போதெல்லாம் நீ நிர்ப்பாக்கியனாய் இருப்பாய், நீ நீக்கி விடுகிற துன்பமோ உன்னை எங்கும் தொடரும்.

12. நீ இருக்க வேண்டியபடியே இருந்தால், அதாவது துன்பப் படவும் சாகவும் ஆயத்தமாயிருந்தால், வெகு சீக்கிரத்தில் உன் கவலை நீங்கிச் சமாதானத்தை அடைவாய். நீ அர்ச். சின்னப்பரோடு மூன்றாம் மண்டலம் வரையில் தூக்கிக்கொண்டு போகப்பட்டு இருந்தபோதிலும், அதைப் பற்றி இனி ஒரு தடங்கலும் உனக்கு வரப்போவதில்லையென்று நீ நினைத்துக் கொள்ளாதே; ஏனெனில், “நம்முடைய நாமத்திற்காக அவன் எம்மாத்திரம் பாடுபட வேண்டு மென்று அவனுக்குக் காண்பிப்போம்” என்பதாக சேசுநாதர் திருவுளம் பற்றுகிறார். ஆகையால், சேசுநாதரை நேசிக்கவும் என்றென்றும் அவருக்கு ஊழியம் செய்யவும் ஆசிக்கிறாயானால், நீ துன்பங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

13. சேசுநாதருடைய நாமத்திற்காக ஏதாகிலும் துன்பம் அனுபவிக்க நீ பாத்திரமாய் இருந்தால், எவ்வளவோ உத்தமம்! உனக்கு எவ்வளவு பெரிய மகிமையுண்டாகும்! அர்ச்சிஷ்டவர்களுக் கெல்லாம் எவ்வளவோ ஆனந்தம்! அயலானுக்கும் எப்படிப்பட்ட நன்மாதிரிகை! ஏனெனில் துன்பப்பட மனதுள்ளவர்கள் கொஞ்சப் பேராயினும் துன்பத்தில் பொறுமையாயிருக்க வேண்டுமென்று சொல்லுகிறவர்கள் அநேகம்பேர். அநேகர் பூலோகத்தைப் பற்றி அதிக கொடிய துன்பங்களை அனுபவிக்கும்போது, நீ சேசுநாதரைப் பற்றி நல்ல மனதோடு சொற்ப துன்பம் அனுபவிப்பது நியாயம் தானே.

14. இவ்வுலகில் தனக்கு மரித்துக் கொண்டே சீவிக்க வேண்டிய தென்று நிச்சயமாய் அறிந்திரு; எவ்வளவுக்கு ஒருவன் தனக்குத்தானே மரிக்கிறானோ, அவ்வளவுக்கு அதிகமாய்ச் சர்வேசுரனுக்காகச் சீவிக்கத் துவக்குகிறான். கிறீஸ்துநாதருக்காகத் துன்பங்களைச் சுமந்து போகத் தன்னைக் கீழ்ப்படுத்துகிறவனைத் தவிர, மற்றெவனும் பரலோகக் காரியங்களைக் கண்டுபிடிக்கிறதற்குத் தகுதியானவன் அல்லன். கிறீஸ்துநாதருக்காக நல்ல மனதோடு துன்பப்படுகிறதைப் பார்க்கிலும், சர்வேசுரனுக்கு அதிகப் பிரியமும், இவ்வுலகத்தில் உனக்கு அதிகப் பிரயோசனமுமான காரியம் ஒன்றுமில்லை. நீயே தெரிந்து கொள்ளக் கூடுமானால் அநேக ஆறுதல் இளைப்பாற்றி அடைவதை விடக் கிறீஸ்துநாதருக்காகத் துன்பங்களை அனுபவிப் பதை அதிகமாய்த் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனெனில் அப்போ துதான் நீ கிறீஸ்துநாதருக்கும் அதிகம் ஒத்திருப்பாய், அர்ச்சிய சிஷ்டவர்களுக்கும் சமானமாயிருப்பாய். அநேகமான இன்பங் களையும் ஆறுதல்களையும் சுகிப்பதாலல்ல, ஆனால் பலமான துன்ப துரிதங்களைச் சகிப்பதாலேதான் பேறுபலன்களைப் பெற்றுப் புண்ணியத்தில் வளருகிறோம்.

15. உள்ளபடி துன்பங்களை அனுபவிப்பதைவிட வேறு ஏதாகிலும் மனிதருடைய இரட்சணியத்திற்காக அதிக மேலானதும் அதிகப் பிரயோசனமானதும் இருந்தால், கிறீஸ்துநாதர் தமது வாக்கினாலும் மாதிரிகையினாலும் அதைக் காண்பித்திருப்பார். ஆனால் தம்மைப் பின்செல்லுகிற சீடர்களுக்கும் தம்மைப் பின்செல்ல ஆசிக்கிற சகலருக்கும் சிலுவை சுமந்துபோகத் தெளிவாய்ப் புத்தி சொல்லி “யாதொருவன் நமது பிறகே வர மனதாயிருந்தால் அவன் தன்னைத்தானே பரித்தியாகம் செய்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு நம்மைப் பின்செல்லக் கடவான்” என்கிறார். இவை யாவற்றையும் வாசித்து ஆராய்ந்த பிறகு முடிவான வாக்கியம் என்ன வென்றால்: “அநேக உபத்திரவங்களின் வழியாகவே சர்வேசுர னுடைய இராச்சியத்தில் பிரவேசிக்க வேண்டும்” என்பதே.

யோசனை

“சிலுவையின் போதகம் யூதருக்கு இடையூறும், அஞ்ஞானி களுக்குப் பைத்தியமுமாகத் தோன்றினது.” இதை மனிதர் சரியாய்க் கண்டுபிடிப்பதில்லை. தங்களை இரட்சிப்பதற்காகச் சர்வேசுரன் மரித்தார் என்பதை மனிதன் கண்டுபிடிப்பதெப்படி? தாங்களும் அவரைக் கண்டுபாவித்துத் தங்களுக்கு, தங்கள் ஆசாபாசங்களுக்கு, தங்கள் மனதுக்கு, தங்கள் ஆசைகளுக்கு மரிக்க வேண்டுமென்பது மனித சுபாவத்திற்கு விரோதமாகக் காணப்படுகின்றது. “இந்த வார்த்தை கடினமானதாயிருக்கிறது, இதைக் கேட்கக் கூடுமானவன் யார்?” என்று கப்பர்நாவூம் நகர்வாசிகள் சொன்னார்கள். ஆயினும் அதை நாம் கேட்டு அனுசரிக்க வேண்டியது அவசரம். அதிலேதான் நமது இரட்சணியம் இருக்கின்றது. மோட்சம் பூமியினின்று பிரிந்திருக்கின்றது. சிலுவை அவைகளை ஒன்றாய்ச் சேர்த்தது. சிலுவையடியினின்றுதான் மோட்சம் சேரும் வழி புலப்படுகின்றது. சிலுவையோடு நம்மை ஒன்றிப்போம். இவ்வுலகத்தில் அதுவே நமது ஆறுதலும் பலமுமாயிருக்கக் கடவது. ஆண்டவர் தமது கருணையால் நமக்குத் துன்பங்களையனுப்பும்போது, “ஓ, மதுர சிலுவையே! புண்ணிய ஆத்துமத்தினால் நெடுநாளாய் ஆசிக்கப்பட்ட சிலுவையே! அதற்காக ஆயத்தம் பண்ணப்பட்ட சிலுவையே!” என்று சொல்லக் கடவோம். சகல அர்ச்சியசிஷ்டவர்களும் சிலுவையை ஆசித்தனர். சிலுவையைத் தேடினர். “பாடுபடுவது அல்லது மரிப்பது” என்று அர்ச். தெரேசம்மாள் அடிக்கடி சொல்வாள். அவள் துன்பங்களில் அதிக சமாதானத்தைக் கண்டாள். சேசுநாதருடைய பாதத்தில் சிந்தும் ஒரு கண்ணீர்த்துளி பூலோக சகல இன்பங்களைவிட ஆயிரமாயிர மடங்கு அதிக இனிப்பானதாயிருக்கின்றது.