1. (ஆத்துமம்) ஆண்டவராகிய சர்வேசுரா! இவ்வுலகத்தில் விரோதமான காரியங்கள் அநேகம் சம்பவிக்கிறபடியால், எனக்குப் பொறுமை மிகவும் அவசியமென்று தெரிய வருகிறது. ஏனெனில், என் மனச் சமாதானத்தைக் காப்பாற்ற நான் என்னதான் ஏற்பாடு பண்ணின போதிலும், என் ஜீவியம் யுத்தமும் கஸ்தியுமில்லாமல் இருக்க முடியவில்லை.
2. (ஆண்டவர்) மகனே! அது மெய்தான். ஆதலால் சோதனையில்லாததும், தடையில்லாததுமான சமாதானத்தை நீ தேடி வர வேண்டாம். ஆனால் பற்பல துன்ப துரிதங்களில் பழக்கப்பட்டு அநேக இடையூறுகளில் நீ சோதிக்கப்பட்ட பிறகுதான் நீ சமாதானத்தை அடைந்தாயென்று எண்ணக்கடவாய். நீ அவ்வளவு வருத்தப்பட உன்னால் கூடுமாயில்லை என்பாயாகில், நீ ஒருநாள் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பை எப்படித் தாங்கப் போகிறாய்? இரு தீமைகளில் அதிகச் சிறியதையே எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் மறுலோக நித்திய வேதனைகளுக்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் தற்கால பொல்லாங்குகளைச் சுவாமியைப் பற்றி நல்ல மனதோடு சகிக்கப் பார். உலகத்தார் வருத்தப்படுகிறதேயில்லை அல்லது கொஞ்சம் மாத்திரம் வருத்தப்படுகிறார்களென்று நீ நினைக்கிறாயோ? வெகு சொகுசாய் வாழ்க்கை நடத்துகிறவர்களிடம் முதலாய் இதைக் காண மாட்டாய்.
3. ஆனால் அவர்களுக்கு அநேக இன்ப சுகங்கள் உள்ளன, சுய மனதின்படி நடக்கிறார்கள், ஆனதால் தங்கள் துன்ப துரிதங்களை அற்பமாய் எண்ணுகிறார்கள் என்பாயோ? இருக்கட்டும், அவர்கள் ஆசிப்பதெல்லாம் அவர்களுக்குண்டாகின்றன என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அது எத்தனை காலம் நீடிக்கும் என்று நினைக்கிறாய்? இதோ உலகத்தில் பெரும் செல்வந்தர்களாயிருக்கிறவர்கள் “புகை போல மறைந்து போவார்கள்,” அடைந்த சந்தோஷங்களைக் குறித்து ஞாபகமும் நிற்காது. அவர்கள் உயிரோடிருக்கையில் முதலாய், கசப்பும் சலிப்பும் அச்சமுமின்றி அவர்கள் சுகம் அனுபவிப்பதில்லை; அவர்களுக்கு இன்பத்தைத் தருகிற காரியங்களே அநேக முறை அவர்களுக்குத் துன்பத்தை வருவிக்கின்றன. அவர்கள் ஒழுங்கற்ற இன்பங்களைத் தேடிப் பின்பற்றுவதால், கலக்கமும் கசப்புமின்றி அவைகளை அநுபவியாதிருப்பது நீதிதான்.
4. ஓ! இன்பங்களெல்லாம் எத்தனையோ சொற்ப நேரத்துக்கு, எத்தனையோ பொய்யும் அக்கிரமமும் உள்ளவை, வெட்கத்துக் குரியவை! ஆனால் மதிமயக்கத்தினாலும் குருட்டாட்டத்தினாலும் அவர்கள் கண்டுபிடிப்பதில்லை. புத்தியில்லா மிருகங்களைப் போல அழிந்து போகிற அற்ப சுகத்துக்காக ஆத்துமத்தின் நித்திய அழிவுக்கு உள்ளாகிறார்கள். ஆனதால் “மகனே நீ உன் தீய ஆசாபாசங்களைப் பின்பற்றி நடவாதே, உன் சுயமனதை வெறுத்துவிடு.” “சர்வேசுரனிடத்தில் பிரியங்கொள்; உன் இருதயத்தின் விண்ணப்பத்தை அவர் உனக்குத் தந்தருளுவார்.”
5. ஏனெனில், நீ மெய்யான இன்பம் அநுபவித்து நமது ஆறுதலை ஏராளமாய் அடைய வேண்டுமானால் இதோ உலகக் காரியங்களை எல்லாம் நிந்தித்து, வீணான இன்பங்களை எல்லாம் தள்ளி விடு; அப்பொழுது உனக்கு ஆசீர்வாதமும் ஏராளமான ஆறுதலும் கிடைக்கும். சிருஷ்டிகளால் வருகிற ஆறுதலை நீ எவ்வளவிற்குத் தள்ளி நடப்பாயோ அவ்வளவிற்கு அதிக இன்பமும் பலமுமுள்ள ஆறுதலை நம்மிடம் கண்டடைவாய். ஆனால் துவக்கத்தில் துன்பமும், பிரயாசையும், யுத்தமுமின்றி அவைகளை அடைய மாட்டாய். வேரூன்றின பழக்கம் தடை செய்யும். ஆனால் அது நல்ல பழக்கத் தால் தோற்கடிக்கப்படும்; சரீரம் முறையிடும், ஆனால் புத்தியின் சுறுசுறுப்பினால் அடக்கப்படும். ஆதி சர்ப்பம் உன்னைக் கடித்துத் தொல்லைப்படுத்தும், ஆனால் செபதியானத்தால் துரத்தப்படும். இதுவுமன்றி ஏதாவது ஒரு பிரயோசனமான வேலையால் உன் ஆத்துமத்தின் வாசல் அதற்கு அடைத்து விடப்படும்.
யோசனை
மாம்சம் எனப்பட்டதெல்லாம் பாவத்தைக் கட்டிக் கொண்டது, ஆனதால் அது துன்பப்பட வேண்டியது. இதுதான் இப்போதைய கட்டளை; இது நீதிக் கட்டளை; ஏனெனில் ஒழுங்கீனம் தண்டிக்கப் படாவிடில் சர்வேசுரன் சர்வேசுரனாயிருக்க மாட்டார். இது சிநேகத்தின் கட்டளையாயிருக்கின்றது. ஏனெனில் நல்ல மனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரட்சகருடைய பாடுகளோடு ஒன்றிக்கப் பட்ட துன்பம் ஆத்துமத்தைக் குணப்படுத்தி முந்திய மாசற்ற தனத்தில் திரும்ப நிலைநாட்டுகின்றது. ஆதலால் உன் விஷயத்தில் இந்தத் தேவ கட்டளை நிறைவேறும்போது நீ முறைப்பட வேண்டிய காரணமென்ன? சர்வேசுரனுடைய இரக்கம் உனக்குத் திரும்ப உயிர் கொடுக்கப் பார்க்கிறதைப் பற்றியோ? உன்னை மீட்பதற்காகப் பாடுபட்ட சேசுநாதரைப் போலாகிறதினாலோ? சேசுநாதர் தமது பாடுகளால் செய்கிற பாவ நிவாரணத்தால் நமக்குப் பலனுண்டாகும்; நாமும் நமது துன்பங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றிக்க வேண்டியது. இரட்சணிய இரகசியம் சிலுவையில் நிறைவேறுகின்றது. ஆனதால் சிலுவைதான் இவ்வுலகத்தில் நமது ஏக பாக்கியம். அதனின்றுதான் மன அமைதியும் இருதய சமாதானமும் உண்டாகின்றன. உலகம் தன் உதவாத சந்தோஷத் தோற்றங்களால் உன்னை மயக்குகின்றது. ஆனால் உலகத்தைப் பின்பற்றி நடக்கிறவர்கள் துன்பம் ஒன்றும் படுவதில்லை என்று நினைக்கிறாயோ? அவர்களுக்கும் மற்றவர்களைப் போல் சரீர வியாதிகள், கஸ்தி, கவலை, கணக்கற்ற உபத்திரவங்கள் வருவதில்லையோ? கடைசியில் முடிவு வருகின்றது, தேவ நீதி இதைக் கேட்கின்றது; இவ்வுலக செல்வந்தன் நிர்வாணியாய்ச் சிறைக் கூடத்தில் தள்ளப்படுகிறான். “மெய்யாகவே நான் உனக்குச் சொல்லு கிறேன்: கடைசிக் காசு செலுத்துகிற வரையிலும், அவன் அதை விட்டுப் புறப்படப் போவதில்லை.” இவ்வுலகத்திலேயே இரட்சகரால் பரிசுத்தமாக்கப்பட்டு மீட்கப்படுகிற நீங்கள் சந்தோஷப்படுங்கள், நேசத்தோடு நீதியின் பலியைச் செலுத்துங்கள். “ஆண்டவரே! நான் சமாதானத்தில் நித்திரை போய் இளைப்பாறுவேன்; ஏனெனில், என் சர்வேசுரா! நீர் என்னை நம்பிக்கையில் திடப்படுத்தினீர்.”
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠