இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

11. இருதயத்தின் ஆசைகளைப் பரிசோதித்துச் செவ்வைப்படுத்த வேண்டும்

1. மகனே! நீ இன்னும் நன்றாய் அறியாத அநேக காரியங்களைக் கற்றுக்கொள்ளக் கடவாய். அவை எவை, ஆண்டவரே? உன் ஆசைகளை நமது பிரியத்துக்கு முழுதும் ஒத்ததாகச் செய்து, உன்னையே தேடாமல் நமது சித்தத்தை ஆவலோடு தேடிப் பின்பற்றக் கடவாய். அடிக்கடி உன்னுடைய ஆசைகள் பலமாய் எழும்பி வேகமாய் உன்னை இழுக்கின்றன; ஆனால் அவைகளைத் தூண்டுகிறது நம்முடைய தோத்திரத்தைத் தேடுகிறதோ அல்லது உன்னுடைய சொந்தப் பிரயோசனத்தை நாடுதலோ எதுவென்று யோசித்துப் பார். அந்த ஆசைகளில் நம்மைத் தேடுகிறாயானால், நாம் எவ்விதம் கட்டளையிட்ட போதிலும் நீ சந்தோஷமாயிருப்பாய். ஆனால் அவைகளில் எள்ளளவேனும் உன்னுடைய சுயநலத்தையும் தேடுவா யாகில் அதுதான் உன் வளர்ச்சிக்குத் தடங்கலும் வருத்தமும் உண்டாகக் காரணமாயிருக்கும்.

2. ஆதலால் நம்மை ஆலோசனை கேளாமல் நீ கொண்ட ஆசைகளின் பேரில் மிதமிஞ்சி ஊன்ற வேண்டாம்; ஏனெனில் முதலில் உனக்குப் பிரியமாகவும் உத்தமமெனத் தோன்றியதாகவும் இருந்தவைகளைப் பற்றி, பிறகு உனக்கு மனஸ்தாபமும் வெறுப்பும் உண்டாகக் கூடும். உள்ளபடி, தகுந்ததாய்த் தோன்றுகிற ஆசை எதையும் உடனே பின்பற்ற வேண்டாம்; தகாததாய்த் தோன்றுகிற ஆசை யாவற்றையும் உடனே தள்ளிவிடவும் வேண்டாம். பரிசுத்த ஊக்கத்தையும் நல்ல ஆசைகளையும் கூட அடக்குவது சமயத்தில் நன்று. ஏனெனில் மிதமிஞ்சின தீவிரம் உன் மனதில் பராக்கு உண்டாக்கக் கூடும்; ஒழுங்கற்ற பரபரப்பினால் பிறருக்குத் துர்மாதிரிகையாயிருக்கக் கூடும்; மற்றவர்கள் உன் கருத்துக்குச் செய்யும் விரோதத்தால் ஓர் சமயம் நீ மனச் சமாதானமும் தைரியமு மற்றவனாவாய்.

3. சரீரம் ஆசிப்பதென்னவென்றும், வெறுப்பதென்ன என்றும் கவனியாமல், சில சமயங்களில், சரீரத்தைக் கட்டாயமாய்ப் புத்திக்குக் கீழ்ப்படுத்தி, புலன்களின் ஆசைகளை வலிமையோடு எதிர்க்க வேண்டியது. சரீரம் எந்தக் கஷ்டத்துக்கும் பின்வாங்க மாட்டேன் என்னும் வரையிலும், சொற்பமாயிருந்தாலும் திருப்தி யடையவும், அற்பமான அலுவல்களில் பிரியம் கொள்ளவும், முறைப்படாமல் எதிரிடையைத் தாங்கவும் அறியும் வரையிலும், அதை ஓயாமல் அடக்கவும் தண்டிக்கவும் வேண்டியது.

யோசனை

நம்மை மோசத்திற்குள்ளாக்கும் நமது மனத்துக்கும் நமக்குக் கலக்கமுண்டாக்கும் ஆசைகளுக்கும், நமது ஆத்துமத்தை அசுத்தப் படுத்தி பூமிக்கு இழுக்கும் ஐம்புலன்களுக்கும் விரோதமாய் நாம் எப்போதும் போராட வேண்டியிருக்கிறது. கெட்டுப்போன மனித னுடைய அந்தஸ்து பரிதாபத்திற்குரியது! ஆனால் சர்வேசுரன் அவனைக் கைவிட்டதில்லை; மனமிருந்தால் அவன் வெற்றிகொள்ள லாம். மனதின் கலக்கத்தை விசுவாசம் தீர்த்து, உண்மையில் நிறுத்துகின்றது. தெய்வ சித்தத்திற்கு முழு கீழ்ப்படிதல் இருதய சமாதானத்தைத் தந்து வீண் ஆசைகளைஒழித்துவிடுகிறது. செபத்தினாலும், தாழ்ச்சியினாலும், தபசினாலும், சரீரத்தைத் தண்டித்து அடக்குவதினாலும் ஐம்புலன்களைச் ஜெயிக்கிறோம். ஓயாத இந்த யுத்தத்தில் கிறீஸ்தவன் உத்தமனாகிறான். பிரமாணிக்கமாய் யுத்தம் செய்யும்போது அப்போஸ்தலரோடு அவன்: “நான் நாடித் தேடுகிற அந்தஸ்துக்கு இன்னும் வந்து சேர்ந்ததாக நான் எண்ண வில்லை; ஆயினும் பின்னால் இருப்பதை மறந்துவிட்டு முன்னாலிருப் பதை நாடி நமக்குச் சர்வேசுரன் நியமித்திருக்கும் சம்பாவனையைப் பிடித்துக் கொள்ள என் ஜீவிய முடிவைக் கோருகிறேன். அந்தச் சம்பாவனை ஏதென்றால் சேசுகிறீஸ்துநாதரின் பேறுபலன்களால் நாம் அடையும்படியாக சர்வேசுரன் நம்மை அழைத்து நமக்களிக்கும் மோட்சபாக்கியம்தான்” என்று சொல்லக் கூடும்.