இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

11. சற்பிரசாதமும் வேதாகமங்களும் பத்தியுள்ள ஆத்துமத்திற்கு மிக அவசியம்.

1. (சீஷன்) ஆ! மிகவும் மதுரம் பொருந்திய ஆண்டவராகிய சேசுவே! உமது பந்தியில் அழைக்கப்பட்டு உட்காருவது பக்தியுள்ள ஆத்துமத்திற்கு எவ்வளவோ பெரிதான இன்பமாயிருக்கின்றது! அந்தப் பந்தியில் அதற்குப் புசிக்கக் கொடுக்கப்படுவது, அதன் இருதயத்திற்குச் சகலத்தையும் பார்க்க அதிக அன்புள்ளவரும் ஏக நேசருமாகிய நீரேயன்றி வேறென்ன?

உமது சந்நதியில் அன்பின் மிகுதியால் கண்ணீர் விட்டு அக்கண்ணீர்களால் பக்தியுள்ள மதலேனாளைப் போல உமது பாதங் களைக் கழுவுவது எனக்கும் இன்பமாக அல்லவா இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பக்தியும் அந்தப் பரிசுத்த கண்ணீர்ப் பிரளயமும் எங்கேயிருந்து வரும்? 

ஆம், உமது சந்நிதியிலும் சம்மனசுகளுக்கு முன்பாகவும் என் இருதயம் முழுவதும் பற்றியெரிந்து, சந்தோஷக் கண்ணீர் சொரிய வேண்டியதுதான். ஏனெனில் தேவ நற்கருணையில் நீர் அந்நிய தோற்றங்களில் மறைந்திருந்த போதிலும் அதில் நீர் உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறீர், எனக்கு உண்மையாகவே சொந்தமாயிருக் கிறீர்.

2. ஏனெனில் உமக்குரிய தெய்வீக மகிமைப் பிரதாபத்தைப் பார்க்க என் கண்கள் தாளாது. உமது மகத்துவத்தின் மகிமைக்குமுன் உலகம் முழுதும் ஒன்றுமில்லாமையாய்க் குன்றிப் போகும். ஆதலால் தேவ நற்கருணையில் நீர் உம்மை மறைத்துக் கொண்டிருப்பது என் பலவீனத்தை முன்னிட்டே.

பரலோகத்தில் சம்மனசுகளால் ஆராதிக்கப்படுகிறவர் எனக்கு மெய்யாகவே சொந்தமாய் இருக்கிறார். நான் அவரை ஆராதிக் கிறேன். ஆனால் இன்னும் நான் விசுவாசத்தினால் அவரைத் தரிசிக் கிறேன். அவர்களோ யாதோர் மறைவில்லாமல் முகமுகமாய்த் தரிசிக்கிறார்கள்.

“நித்திய ஒளியின் நாள் உதயமாகி, முன்னோடிகளின் நிழல் சாய்ந்து போகிறவரையிலும்” மெய்யான விசுவாசத்தின் ஒளியில் நிற்பதும் நடப்பதும் எனக்குப் போதுமானதாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த உத்தம நாள் உதயமான பிறகு தேவதிரவிய அனுமானங் களின் பயன் அற்றுப் போகும், ஏனெனில் பரலோக மகிமையில் அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தேவதிரவிய அனுமானங்கள் என்னும் மருந்து வேண்டியதில்லை. அவர்கள் தேவனுடைய சமூகத்தில் முகமுகமாய் அவருடைய மகிமையைத் தரிசித்து முடிவில்லாமல் அகமகிழ்ந்திருக்கிறார்கள். புத்திக்கெட்டாத தெய்வீக சோதிப் பிரகாசத்தால் அதிகமதிகமாய் மாறிப்போய், மாமிசமான தேவ வார்த்தையானவர் ஆதியிலிருந்தது போலவும், நித்தியத்திற்கும் இருப்பது போலவும் அவரைக் கண்டு அக்களிக்கிறார்கள்.

3. இந்த ஆச்சரியங்களை நான் நினைக்கும்போது, ஞான ஆறுதலும் முதலாய் எனக்குப் பெருத்த சலிப்பாக மாறிப் போகின்றது; ஏனெனில் என் ஆண்டவரை அவருடைய மகிமையில் நான் மறைவில்லாமல் பார்க்காதவரையில், இவ்வுலகத்தில் நான் காண்பதும் கேட்பதுமெல்லாம் ஒன்றுமில்லாமையென்று எண்ணு கிறேன்.

என் சர்வேசுரா! நான் நித்தியத்திற்கும் உம்மைத் தரிசிக்க ஆசிக் கிறேன்; நீர் ஒருவரேயன்றி வேறெந்த வஸ்துவும் எனக்கு ஆறுதல் தரக்கூடுமானதல்ல, வேறெந்தச் சிருஷ்டியும் எனக்கு அமரிக்கை அளிக்கக் கூடுமானதல்ல. அதற்கு என் சர்வேசுரா நீரே சாட்சி.

ஆனால் அழிவுக்குரிய இந்தச் சீவியத்தில் உம்மைத் தரிசிப்பது கூடுமானதல்ல. ஆனதால் நான் பொறுமையாய் இருந்து எனக்கு உண்டாகும் சகல ஆசைகளிலும் உமக்கு என்னையே கீழ்ப்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். ஏனெனில் ஆண்டவரே! இப்போது பரலோக இராச்சியத்தில் உம்மோடு கூட அகமகிழுகிற அர்ச்சிய சிஷ்டவர்களும் உயிரோடிருந்த காலத்தில் விசுவாசத்தோடும், பொறுமையோடும் உமது மகிமையின் வருகைக்குக் காத்திருந் தார்கள். அவர்கள் விசுவசித்ததை நானும் விசுவசிக்கிறேன், அவர்கள் நம்பினதை நானும் நம்புகிறேன், அவர்கள் இடத்தை நானும் உமது வரப்பிரசாதத்தைக் கொண்டு சேருவேன் என்று நம்பிக்கை கொண் டிருக்கிறேன். அதுவரை அர்ச்சியசிஷ்டவர்களுடைய நன்மாதிரிகை களினால், திடன் கொண்டு விசுவாசமாய் நடந்து வருவேன். எனக்கு ஆறுதலாகவும், என் சீவியத்தின் கண்ணாடியாகவும் வேதாகமங் களை வாசித்து வருவேன்; எல்லாவற்றிற்கும் மேலாய் எனக்குச் சர்வ மருந்தாகவும் அடைக்கலமாகவும் உமது மிகவும் பரிசுத்த சரீரத்தை வைத்துக் கொண்டிருப்பேன்.

4. ஆகையால் இச்சீவியத்தில் இரண்டு காரியங்கள் எனக்கு மிக அவசியமென்று காண்கிறேன்; அவையில்லாமல் போனால் இந்த நிர்ப்பாக்கியச் சீவியம் என்னால் சுமக்க முடியாததாயிருக்கும். இந்தச் சரீரச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற எனக்கு போசனமும் பிரகாசமும் தேவை என்று ஏற்றுக்கொள்கிறேன். இதைப் பற்றியே பலவீனனான எனக்கு ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் உணவாக உமது திரு மாமிசத்தைத் தந்தீர்; என் பாதங்கள் வழி கண்டு நடப்பதற்கு வெளிச்சமாகிய உமது திரு வாக்கியத்தைக் கொடுத்தீர். மெய் யாகவே இவை இரண்டுமின்றி நான் சீவிப்பது இயலாது. ஏனெனில் தேவ வாக்கியம் ஆத்துமத்திற்குப் பிரகாசமாயும் உமது தேவ திரவிய அனுமானம் என் சீவியத்தின் அப்பமாயும் இருக்கின்றது.

இவை உமது திருச்சபையின் பொக்கிஷ அறையிலே இரு பக்கத்திலும் வைக்கப்பட்ட இரண்டு மேசைகள் என்றும் சொல் லலாம். கிறீஸ்துநாதருடைய மதிப்பிட முடியாத சரீரமாகிய பரிசுத்த அப்பம் வைக்கப்பட்டிருக்கிற திருப்பீடம் ஒரு மேசை. மற்றொரு மேசை தேவ கட்டளையின் பலகையாம். அதில் பரிசுத்த போதனை அடங்கியிருக்கின்றது; அது உண்மையான வேதப் பிரமாணங் களைப் போதித்து தேவாலயத்தின் திரைச்சீலைகளுக்கப்பாலேயே மகா பரிசுத்த ஸ்தலத்தில் நிச்சயமாய்க் கூட்டிக்கொண்டு போகிறது.

5. ஆண்டவராகிய சேசுவே! நித்திய ஒளியின் பிரகாசமே! உமது தாசராகிய தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும், மற்ற வேதசாஸ்திரிகளையும் கொண்டு நீர் எங்களுக்குப் பகர்ந் திருக்கிற திருப்போதக பந்திக்காக உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

மனிதருடைய சிருஷ்டிகரும் இரட்சகருமானவரே! உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகிறேன். ஏனெனில் உமது நேசத்தைச் சர்வலோகத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகப் பெரிய விருந்து ஆயத்தம் செய்தீர். அதில் அடையாளமான செம்மறிப் புருவையையல்ல, ஆனால் உமது மிகவும் பரிசுத்த சரீரத்தையும் இரத்தத்தையும் போசிக்கக் கொடுக்கிறீர்; சகல விசுவாசிகளையும் தெய்வீக விருந்தினால் சந்தோஷப்படுத்துகிறீர், உத்தமபானத்தால் ஆனந்தக் களிப்பு அடையச் செய்கிறீர்; அந்த விருந்தில் பரலோக இன்பங்கள் யாவுமிருக்கின்றன, பரிசுத்த சம்மனசுக்களும் எங்க ளோடு ல் ஆனால் எங்களை விட அதிக பாக்கியமான விதத்தில் ல் அந்தத் தெய்வீக விருந்தைப் புசிக்கிறார்கள்.

6. ஓ! உந்நத மகிமை பொருந்திய ஆண்டவரைத் திருவார்த்தை களைக் கொண்டு தேவ வசீகரம் செய்யவும், உதடுகளால் அவரைத் துதிக்கவும், கைகளால் எடுக்கவும், தங்கள் வாயினால் உண்ணவும், மற்றவர்களுக்குப் பகிரவும் அதிகாரம் பெற்றிருக்கும் குருக்களுடைய அலுவல் எவ்வளவோ மகத்தானதும், மகிமையுள்ளதுமாயிருக்கின்றது! பரிசுத்த தனத்தின் காரணரானவர் இத்தனை விசை குருவானவரிடம் வர, இவருடைய கரங்கள் எவ்வளவோ சுத்தமாயும், வாய் எவ்வளவோ சுத்தி யாயும், சரீரம் எவ்வளவோ கற்புடையதாகவும், இருதயம் எவ்வளவோ மாசற்றதாகவும் இருக்க வேண்டியது! இவ்வளவு அடிக்கடி கிறீஸ்துநாத ருடைய தேவத்திரவிய அனுமானத்தைப் பெறுகிற குருவானவருடைய வாயினின்று பரிசுத்தமானதும், மேன்மையானதும், பிரயோசனமானதுமான வார்த்தையேயன்றி வேறொரு வாக்கியமும் புறப்படலாகாது.

தினமும் கிறீஸ்துவின் திருச்சரீரத்தைப் பார்க்கிற அவர் கண்கள் கபடற்றவையும் கற்புள்ளவையுமாயிருக்க வேண்டியது. பரலோக பூலோக சிருஷ்டிகரைத் தொட வழக்கமுள்ள அவருடைய கரங்கள் உத்தமமானவையும் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டவையுமா யிருக்க வேண்டியது. “பரிசுத்தராயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவரும் தேவனுமாகிய நாம் பரிசுத்தராயிருக்கிறோம்” என்ற வேத கட்டளை விசேஷமாய்க் குருக்களுக்கே சொல்லப்பட்டிருக் கின்றது.

7. சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா! குருக்களுடைய தொழிலை ஏற்றுக்கொண்ட நாங்கள் யோக்கியமாயும், பக்தியாயும் நல்ல மனச் சாட்சியின் சர்வ பரிசுத்ததனத்தோடும் உமக்கு ஊழியம் செய்யப் பேறுபெற்றவர்களாகும்படி, உமது வரப்பிரசாதத்தைக் கொண்டு எங்களுக்கு உதவி புரிந்தருளும். நாஙகள் கடமைப்பட்டிருக்கும் அளவிற்கு மாசற்றதனத்தில் நாங்கள் நடக்கக்கூடாவிட்டாலோ, நாங்கள் செய்த தப்பிதங்களுக்காகவாகிலும் தக்கபடி கண்ணீர் விட்டழவும், இனிமேல் அதிக சுறுசுறுப்போடும் தாழ்ச்சியோடும், நன்மனதின் உறுதியான பிரதிக்கினையோடும் உமக்கு ஊழியம் செய்யும்படி அனுக்கிரகம் செய்தருளும்.

யோசனை

பூமியாவதென்ன? அந்நிய தேசம். திருச்சபை அழைப்பது போல் கண்ணீர்க் கணவாய். மனிதன் தன்னுடைய புத்தியின் ஜீவியமாயிருக்கிற உண்மையை இவ்வுலக இருளில் தேடுகிறான்; கணக்கற்ற தின்மைகளின் நடுவே நன்மை ஒன்றைத் தேடுகிறான். தன்னிருதயத்தின் சீவியமாயிருக்கும் நன்மை எவ்வளவு பெரிதானது, அளவற்றது, நித்தியமானதென்று அவன் அறியமாட்டான். அவன் தேடுவதெல்லாம் அவனை விட்டு அகன்று போகின்றன. சந்தேகம், அபிப்பிராயம், அபத்தம் அவனுடைய புத்தியை ஆயாசத்திற்கு உள்ளாக்குகின்றன. அவன் நன்மை என்று நினைத்தது தின்மை யென்று காண்கிறான். கடைசியில் எல்லாம் வியர்த்தம், வீண் பிரயாசையென்று கண்டுபிடிக்கிறான். தனித்திருக்கிறான் என்றால் அவனுடைய ஆத்துமம் களைத்துச் சோர்வடைந்து போகின்றது, அவனுக்கு ஆறுதல் வேண்டியிருக்கின்றது. ஆனால் மனிதர் மட்டில் அவன் நம்பிக்கை வைத்தாலோ, ஐயோ! அவனுக்குக் கேடுதான் விளையும்; அவர்கள் அவனைக் கெடுக்கிறதற்குச் சமயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிநேகிதர் என்ற பேர் வைத்துக்கொண்டு அவனை மோசம் செய்கிறார்கள், அவன் முன் மலர்ந்த முகம் காட்டிப் பின்னால் அவனுக்குத் தீங்கு நினைக்கிறார்கள், கடைசி யாய்ச் சூதினாலும் பொய்யினாலும், கோள் குண்டணியினாலும் அவன் அவர்களுடைய மாய வலையில் சிக்கிக் கொண்ட பிறகு உடனே அவர்களுடைய நீச ரூபத்தைக் காட்டிச் சிங்கமானது தன் இரையின்மேல் விழுந்து அதை விழுங்குவது போல அவர்களும் அவன்மேல் பாய்ந்து அவன் ஆத்துமத்தை விழுங்குகிறார்கள். ஐயோ! நிர்ப்பாக்கியமான ஆத்தும அந்தஸ்து; ஆயினும் சர்வேசுரன் தம்மால் உண்டாக்கப்பட்ட இந்த சிருஷ்டியை இவ்வளவு அபாய மான சமயங்களில் கைவிடுவதில்லை. தமது வாக்கியங்களால் அதைத் தெளிவிக்கிறார், தமது வரப்பிரசாதத்தால் அதைத் தேற்று கிறார், நித்திய சீவியத்தின் நம்பிக்கையால் அதற்கு ஆறுதல் வருத்துவிக்கிறார், இந்தச் சோதனை நாட்கள் கடந்து பிறகு நித்திய நன்மையாயிருக்கிற தம்மைச் சதாகாலத்திற்கும் அடைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை நமது மனதில் தூண்டுகிறார், சகலவித நன்மை களும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் பரிசுத்த தேவ நற்கருணையை நமதாசையின் அளவுக்குத் தக்கபடி நமக்குத் தந்தருளுகிறார்; நாம் இந்த மேலான தேவதிரவிய அனுமானத்தை அணுகிப் போகும் போதெல்லாம் நித்திய ஞானமும், சிருஷ்டிக்கப்படாத ஒளியும், சர்வேசுரனுடைய வார்த்தையும், உயிருள்ள வாக்கியமுமானவரை நமது உள்ளத்தில் அடைகிறோம். வரப்பிரசாதத்தின் காரணரை, விசுவாசத்தின் கதியானவரை, நமது நம்பிக்கையின் நித்திய பிணை யானவரை, நமது மாமிசத்தோடு ஒன்றிப்பதற்காகச் சிலுவையில் அறையுண்ட மாமிசத்தை, நமது இரத்தத்தோடு கலந்திருக்க உலகத்தை இரட்சித்த திரு இரத்தத்தை, தேவநற்கருணையில் உட்கொள்கிறோம். ஒரு பரிசுத்த முத்தம் நமது ஆத்துமத்தின் இரட்சகருடைய ஆத்துமத்தோடு ஒன்றிக்கிறது, அவருடைய தெய்வீகம் நமக்குள் ஊடுருவி நமது பாவ அழுக்கெல்லாம் சுட்டெரித்துப் போடுகின்றது. பிரமாணிக்கமுள்ள நேசர் நமது உள்ளத்தில் இளைப்பாறுகிறார், நம்முடன் பேசுகிறார், நம்மை நோக்கி, “உன்னிருதயத்தில் நம்மை ஒரு முத்திரையைப் போல பதியவை, ஏனெனில் சாவை விட நேசம் அதிகப் பலமாய் இருக்கிறது” என்கிறார். அப்போது இருந்த உருக்கம் நிறைந்த நேசத் தால் அக்கினியைப் போலப் பற்றி எரிந்து நமது நேசத்திற்குரியவரை மாத்திரம் காண்போம், அவருடைய ஜீவியத்தையே ஜீவிப்போம், நமது பரதேசத்தின் கஸ்தி பரலோக சந்தோஷமாக மாறிப் போகும்.