இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

11. சேசுநாதரின் சிலுவையை நேசிக்கிறவர்கள் கொஞ்சம் பேர்

1. இப்போது சேசுநாதருடைய சீடர்களில் மோட்ச இராச் சியத்தை ஆசிக்கிறவர்கள் அநேகர், ஆனால் அவருடைய சிலுவை யைச் சுமந்து போகிறவர்களோ வெகு கொஞ்சம் பேர். ஆறுதலை நேசிக்கிறவர்கள் அநேகர்; துன்பத்தை நேசிக்கிறவர்களோ கொஞ்சம் பேர். அவரோடுகூடப் பந்தியில் அமர விரும்புகிறவர்கள் அநேகர்; அவரைப்போல உபவாசம் ஒறுத்தல் அநுசரிக்கிறவர்கள் கொஞ்சம் பேர். அவரோடு மகிழ்ந்திருக்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்; அவரைப்பற்றி ஏதாகிலும் சகிக்க மனதுள்ளவர்கள் கொஞ்சம்பேர். சேசுநாதர் அப்பத்தைப் பங்கிட்டுக் கொடுக்கும்வரை அவரைப் பின்செல்கிறவர்கள் அநேகர்; ஆனால் பாடுகளின் பாத்திரத்தில் பானம் பண்ணுகிற வரைக்கும் அவரைப் பின்செல்பவர்கள் கொஞ்சம்பேர். அவருடைய அற்புதங்களைக் கொண்டாடு கிறவர்கள் அநேகர்; சிலுவையின் அவமானத்தைப் பின்பற்று கிறவர்கள் கொஞ்சம்பேர். யாதொரு கஷ்டமில்லாமல் இருக்கும் வரையும் சேசுநாதரையும் நேசிக்கிறவர்கள் அநேகர். அவரிடத் தினின்று ஆறுதலைப் பெற்றுக்கொள்ளும்போதெல்லாம் அவரைப் புகழ்ந்து வாழ்த்துகிறவர்கள் அநேகர். ஆனால் சேசுநாதர் தம்மை மறைத்து அவர்களை விட்டுச் சற்றாகிலும் அகன்று போவாரானால், முறையிடத் தொடங்குகிறார்கள். அல்லது மிதமிஞ்சின அதைரியத் திற்கு உள்ளாகிறார்கள்.

2. தங்களுக்கு உண்டாகும் ஆறுதலைப்பற்றியல்ல, ஆனால் சேசுநாதரைப்பற்றியே சேசுநாதரை நேசிக்கிறவர்கள், தாங்கள் மிகுதி யான ஆறுதல்களை அடையும்போது எப்படியோ அப்படியே தங்களுக்கு மனத்துயரமும் வருத்தமும் நேரிடும் நேரத்திலும் அவரைத் தோத்தரிப்பார்கள். அவர்களுக்கு யாதொரு ஆறுதல் தந்தருள அவருக்கு ஒருபோதும் சித்தமிராதிருந்தாலும், அவரை எப்போதும் அவர்கள் வாழ்த்துவார்கள், எப்போதும் அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்துவார்கள்.

3. சுயநலமும் சுயநேசமுமில்லாத பரிசுத்த நேசத்தோடு நாம் சேசுநாதரை நேசிப்போமானால், அந்த நேசம் எவ்வளவோ வல்லமை யுள்ளதாயிருக்கும். எப்போதும் ஆறுதலையே தேடுகிறவர்களை கூலிக்காரரென்று சொல்லவேண்டியதல்லவா? தங்கள் சுகத்தின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே எந்நேரமும் சிந்தனையில் இருக்கிறவர்கள், தாங்கள் கிறீஸ்துநாதரை விடத் தங்களையே அதிக மாய் நேசிப்பதாகக் காண்பிக்கிறார்களல்லலவா? சம்பாவனைக்கு ஆசைப்படாமல் இலவசமாய் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்ய மனதுள்ளவன் எங்கே அகப்படுவான்?

4. சகலத்தையும் துறந்துவிடத்தக்க ஞானமுடையவன் அகப் படுவது அரிது. சிருஷ்டிகளின் பேரிலுள்ள அன்பை முற்றும் துறந்த மெய்யான மனத் தரித்திரனை யார் காணக்கூடும்? “தூரத்தில் பூமியின் கடைக்கோடிகளில் சுற்றித் திரிந்து தேட வேண்டியது.” ஒருவன் தனக்கு உண்டான செல்வமெல்லாம் தானம் செய்தாலும் பெரும் காரியமல்ல; கடுந்தவம் செய்தாலும் இதுவும் சொற்ப காரியம். சகல சாஸ்திரங்களைப் படித்திருந்தாலும் இதுவும் பெரிதல்ல; மாபெரிய புண்ணியங்களையும் சுவாலைவிட்டு எரியும் பக்தியையும் சம்பாதித்த போதிலும் இன்னும் அவனிடத்தில் மிகவும் குறைவு உண்டு; அவனிடத்தில் குறைவாயிருப்பது சகலத்தையும் பார்க்க அத்தியாவசியமான ஒரு காரியமே. அதென்ன? யாவற் றையும் விட்டபின் இன்னும் தன்னையும் விட்டு, தன்னைத்தான் முழுமையும் விட்டு, சுயநேசத்தைப் பற்றிய யாதொன்றையும் பாக்கி வையாதிருக்க வேண்டியது. மேலும் தான் கடமையாய் அநுசரிக்க வேண்டியவைகளை நிறைவேற்றியும், தான் ஒன்றுமே செய்த தில்லையென்று நினைக்கக்கடவான். தன்னிடத்தில் கனமாய் மதிக்கப்படுவதைத் தான் கனமாய் மதிக்காமலிருந்து, “உங்களுக்குக் கற்பிக்கப்பட்டவைகளை எல்லாம் செய்து முடித்தபின்பு, நாங்கள் ஒன்றுக்கும் உதவாத ஊழியர் என்று சொல்லுங்கள்” என்பதாகச் சத்திய சுரூபியானவர் திருவுளம்பற்றுகிறபடி, தானும் உண்மையில் உதவாத ஊழியனென்று சொல்லிக் கொள்ளக்கடவான். அப்போது தான் அவன் மெய்யாகவே மனத்தரித்திரனும் வறுமையுள்ளவனுமா யிருந்து, தீர்க்கதரிசியோடு “தனிமையாயும் தரித்திரனாயும் இருக்கிறேன்” என்று சொல்லக் கூடுமாயிருக்கும். ஆயினும் தன்னையும் மற்றுமுண்டான சகலத்தையும் விட்டுவிடவும் தன்னைத் தானே மிகவும் தாழ்த்திக் கொள்ளவும் அறிகிறவன் எவனோ, அவனைவிட அதிக செல்வந்தனுமில்லை, அதிக வல்லவனுமில்லை, அதிக மனச் சுயாதீனமுடையவனுமில்லை.

யோசனை

சர்வேசுரனைப் பற்றியே நாம் சர்வேசுரனை நேசிக்க வேண்டியது. அவருக்கு ஊழியம் செய்வதில் நமக்கு உண்டாகும் சந்தோஷத்தைப் பற்றியல்ல, ஏனெனில் அவர் நம்மிடத்தினின்று ஆறுதலை எடுத்துப் போடுவாரேயானால் அப்போது நமது நேசம் என்னவாகும்? ஏதாவது ஒரு காரியத்தில் தன்னைத்தானே தேடுகிறவன் சர்வேசுரனைச் சரியாய் நேசிக்க அறிய மாட்டான். உன்னுடைய மாதிரிகையான சேசுநாதரை நோக்கிப் பார்! அவர் தம்மைத் தாமே தேடினவரல்ல. “சேசுநாதர் தமது பிரியத்தை நாடினவரல்ல.” உனக்காகத் தமது உயிரையும், தமது மனதையும், சகலத்தையும் பலியிட்டார். “என் மனதல்ல, ஆனால் உமது சித்தம் நிறைவேறக்கடவது” என்றார். அவரைப் போல நமது சுய மனதையும், இச்சை எல்லாவற்றையும் விட்டு, நன்மைகளையும் தின்மைகளையும், கஸ்திகளையும் சந்தோஷங்களையும் அமரிக்கையோடு ஏற்றுக்கொள்வோம். சேசுநாதரைப் போலவே நினைப்போம், அவரைப் போலவே ஆசைப்படுவோம், அப்போது அவரோடு முற்றும் ஒன்றித்திருப் போம். இந்தப் பரிசுத்த ஒன்றிப்பைத்தான் சேசுநாதர் நமக்காகத் தமது பிதாவினிடத்தில் மன்றாடினார்.