இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

10. திவ்விய நன்மை வாங்கும் வழக்கத்தை எளிதாய் விட்டுவிடலாகாது.

1. (கிறீஸ்துநாதர்) உன் ஆசாபாசங்களையும், துர்க்குணங் களையும் ஜெயித்து நீக்கவும், விழித்திருந்து பசாசு செய்கிற தந்திரங் களையும் சூதுகளையும் தள்ள அதிக வலிமையை அடையவும், வரப்பிரசாதம் திவ்விய இரக்கம் சர்வ நன்மைத்தனம், சர்வ பரிசுத்த தனம் இவைகளின் ஊறணியாயிருக்கிற சற்பிரசாதத்தை நீ அடிக்கடி நாடி வர வேண்டியது.

திவ்விய நற்கருணை வாங்குதல் ஆச்சரியத்துக்குரிய நன்மை களைத் தருவிக்கிறதென்றும் ஆத்தும வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாயிருக்கிறதென்றும் அறிந்திருக்கிற நமது விரோதி, பக்தியும் பிரமாணிக்கமுமுள்ள ஆன்மாக்களை தேவ நற்கருணை வாங்க விடாமல் அவர்களைத் தடுத்துத் தடை செய்யத் தன்னாலான மட்டும் சகல விதத்திலும், சகல சமயங்களிலும் பிரயாசைப்படுகிறது.

2. உள்ளபடி சிலர் தேவநற்கருணை வாங்க ஆயத்தம் செய்யும் தருணத்திலேயே சாத்தான் அவர்களைப் பொல்லாத தந்திரங்களால் உபாதிக்கிறது.

யோபு ஆகமத்தில் எழுதியிருப்பது போல அந்தப் பொல்லாத அரூபி, தனக்கியல்பான கெட்ட புத்தியால் தேவ மக்களைக் கலங்கச் செய்து வருகிறது, அல்லது அவர்களை மிஞ்சினவிதமாய்ப் பயமுறுத்தித் துணிகர மற்றவர்களாக்கி வருகிறது. அதேனென்றால் அவர்கள் தேவசிநேகத்தில் குறைந்துள்ளவர்களாய், விசுவாசத்தில் தளர்ந்தவர் களாய் திவ்விய நற்கருணை வாங்குகிறதை அடியோடு விட்டு விடும்படி அல்லது அசமந்தமாய் வாங்கும்படியே. ஆனால் அதன் சூதுகளையும் அது வருத்துவிக்கிற தோற்றங்களையும் - இவை எவ்வளவுதான் அவலட்சணமும், பயங்கரமுமானவையானாலும், கொஞ்சங்கூடச் சட்டை செய்ய வேண்டியதில்லை, அதற்கு மாறாய் அந்தத் தோற்றங்களையெல்லாம் அதன் தலை மேலேயே திருப்பி எறிய வேண்டியது. அந்தக் கெட்ட பசாசை நிந்தித்துப் பரிகாசம் செய்ய வேண்டியது; அது தூண்டி விடும் கலக்கங்களைப் பற்றியும், அது நம்மைத் தாக்குவதாலும், தேவ நற்கருணை வாங்குவதை விட்டுவிடக் கூடாது.

3. இன்னமும் அநேக முறை உருக்கமான பக்தி இருக்க வேண்டுமென்கிற மிஞ்சின ஆசையும், செய்யப் போகும் பாவ சங்கீர்த்தனத்தைக் குறித்து வருகிற கவலையும் திவ்விய நற்கருணை வாங்குதலைத் தடுக்கின்றன. அது விஷயத்தில் புத்திமான்களுடைய ஆலோசனைப்படி நடந்து கலக்கங்களையும் வீண் சந்தேகங் களையும் நீக்கி விடு, ஏனெனில் இவை சர்வேசுரனுடைய வரப் பிரசாதத்தைத் தடுத்து இருதயப் பக்தியை அழித்து விடுகின்றன.

சொற்ப கலக்கத்தின் நிமித்தமாவது கொஞ்சம் மனச்சாட்சியின் தொந்தரவு நிமித்தமாவது தேவ நற்கருணை வாங்குவதை விட்டு விடாதே; ஆனால் சீக்கிரம் பாவசங்கீர்த்தனம் செய்து மற்றவர் களுடைய குற்றங்கள் யாவற்றையும் முழுமனதோடு பொறுத்துக் கொள். நீயே யாருக்காகிலும் குற்றம் செய்திருந்தால் தாழ்ச்சியோடு பொறுத்தலை மன்றாடு, சர்வேசுரன் தயவாய் உனக்குப் பொறுத்தல் அளிப்பார்.

4. பாவசங்கீர்த்தனம் செய்யவோ தேவ நற்கருணை வாங்கவோ அதிகமாய்த் தாமதிப்பதனால் வருகிற இலாபமென்ன? தீவிரமாய் ஆத்துமத்தைச் சுத்தப்படுத்தி, தாமதமின்றி பாவ நஞ்சைக் கக்கிப் போட்டு சீக்கிரமாய் மருந்தை உட்கொள். வெகுகாலம் தாமதிப் பதை விட அதுவே இலாபம். யாதொரு காரணத்தை முன்னிட்டு இன்றைக்கு அதைச் செய்யத் தாமதித்தால் நாளைக்குச் சிலவேளை அதிக பெரிய தடங்கல் நேரிடும்; இவ்விதமாய் வெகுகாலம் தேவ நற்கருணை வாங்குவதற்குத் தடையுண்டாகக் கூடும் என்பது மட்டு மல்லாமல் அதை உட்கொள்ள அதிக தகுதியற்றவனாயும் ஆகக் கூடும்.

கூடிய சீக்கிரத்தில் உன் மனதில் உள்ள பளுவையும் தடை யையும் ஒழித்துவிடு; ஏனெனில் நெடுநாள் ஏக்கம் கொண்டு கலக்கத் திற்குள்ளாயிருப்பதாலும் நாள்தோறும் உண்டாகும் தடைகளைப் பற்றி தேவ நற்கருணை வாங்காதிருப்பதாலும் ஒரு பிரயோசனமு மில்லை. அதற்கு விரோத மாய், சற்பிரசாதம் (திவ்விய நன்மை) உட்கொள்ளத் தாமதிப்பதினால், வெகு நஷ்டம் உண்டாகின்றது, ஏனென்றால் இதனால் பலத்த அசமந்தம் உண்டாகும்.

ஐயோ! வெதுவெதுப்பும் சோம்பலுமுள்ள சிலர் தங்கள் பேரில் அதிக எச்சரிக்கை வைத்து நடவாதிருக்க வேண்டியே, பாவசங்கீர்த் தனம் செய்யாதிருக்க வீண் சாக்குகளை ஆசையோடு சொல்லிச் சற்பிரசாதம் உட்கொள்வதற்குத் தாமதிக்க விரும்புகிறார்கள். ஐயோ! இவ்வளவு எளிதாகத் தேவ நற்கருணை உட்கொள்ளாதவர் களிடத்தில் பக்தியும் சிநேகமும் சொற்பமாயிருக்கிறது.

5. ஒருவனுக்கு தினந்தோறும் நன்மை வாங்க உத்தரவு இருந்து, அவ்வாறு தினசரி நன்மை வாங்குவதால் பிறருக்கு விபரீதமாய்க் காணப்படாமலிருக்கக் கூடுமாயின், நாள்தோறும் முதலாய் வேண்டிய பக்தியோடு தேவநற்கருணை வாங்க ஆயத்தமாயிருக்கும்படி தக்க விதமாக ஜீவித்து, தன் மனசாட்சியைத் தக்க பரிசுத்ததனத்தில் காப்பாற்றி வருகிறவன் எவ்வளவோ பிரியமுள்ளவன் ஆவான். 

ஒருவன் தாழ்ச்சியின் நிமித்தமாவது அல்லது ஒரு நியாயமான தடையை முன்னிட்டாவது சில சமயங்களில் திவ்ய நற்கருணையைப் பெறாதிருந்தால், அவனிடத்தில் விளங்கும் சங்கை மரியாதை புகழ்ச்சிக்குரியதுதான், ஆனால் அவனுக்குண்டான பக்திக் குறை வைப் பற்றி அதைப் பெறாதிருந்தால் அவன் தன்னைத்தானே தூண்டிக் கொண்டு தன்னால் கூடுமானதைச் செய்ய வேண்டியது; அப்பொழுது நல்ல மனதை விசேஷமாய்க் காண்கிற ஆண்டவர் அவனுடைய ஆசைக்கு உதவி செய்தருளுவார்.

6. அவனுக்கு யாதொரு நியாயமான காரணத்தைப் பற்றி தடை உண்டாயிருக்கும்போது, நல்மனதையும் நன்மை வாங்குவதற்கு ஆசையையும் அவன் வைத்திருக்கிறான் என்றால், தேவத் திரவிய அனுமானத்தின் பலனை அடையாமல் போக மாட்டான். ஏனெனில் பக்தியுள்ளவன் எவனும் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் ஒரு தடையுமின்றி மிகுந்த பயனோடு கிறீஸ்துநாதரை ஞானவிதமாய் வாங்கக் கூடும். ஆயினும் சில விசேஷ நாட்களிலும் நியமிக்கப்பட்ட காலத்திலும் தன் இரட்சகருடைய சரீரத்தைப் பக்தி யுள்ள வணக்கத்தோடு தேவநற்கருணை வழியாய் உட்கொள்ள வேண்டும். இதில் ஆறுதலைத் தேடுவதைவிட தேவ தோத்திரத் தையும் மகிமையையும் அவன் அதிகமாய்த் தேட வேண்டியது.

உள்ளபடி ஒருவன் கிறீஸ்துநாதருடைய மனித அவதாரப் பரம இரகசியத்தையும் திருப்பாடுகளையும் பக்தியோடு தியானித்து அவருடைய நேசத்தால் பற்றி எரியும்போதெல்லாம் அவன் ஞான விதமாய்ச் திவ்விய நன்மை உட்கொண்டு காணப்படாத விதத்தில் தெய்வீகமாய்ப் போஷிக்கப்படுகிறான்.

யாதோர் திருநாள் சமயத்தில் மாத்திரம் அல்லது வாடிக்கை யைப் பற்றி மாத்திரம் தேவநற்கருணை வாங்கத் தன்னை ஆயத்தப் படுத்துகிறவன், அநேகமாய்த் தகுந்த ஆயத்தமாயிருப்பதில்லை.

7. பூசை செய்யும்போதெல்லாம் அல்லது தேவ நற்கருணை வாங்கும்போதெல்லாம் ஆண்டவருக்குத் தன்னைத்தானே தகனப் பலியாக ஒப்புக்கொடுக்கிறவன் பாக்கியவான்.

பூசை செய்யும்போது மிஞ்சின தாமதமும் வேண்டாம், மிஞ்சின துரிதமும் வேண்டாம்; அது விஷயத்தில் நீங்கள் புழங்குகிற மற்ற சுவாமிமார்களுடைய நல்ல பொதுவான முறையை அனுசரித்து வாருங்கள்.

நீ பிறருக்குச் சங்கடமும் சலிப்பும் உண்டுபண்ணாதே. ஆனால் பெரியவர்களுடைய ஏற்பாட்டின்படி பொதுவான முறையை அனுசரிக்க வேண்டியது; உன் சுய பக்தியையாவது சுய ஆசையையாவது பார்ப்பதை விட, பிறருடைய பிரயோசனத்தை அதிகமாய்த் தேட வேண்டியது.

யோசனை

கிறீஸ்தவர்கள் தேவ பந்தியில் அமரவும் நித்திய ஜீவியத்தின் அப்பத்தை அவர்கள் புசிக்கவும், விசுவாசத்தின் காரணரும் கதியுமா யிருக்கிற மனிதருடைய இரட்சகரான தேவ வார்த்தையை அவர்கள் உட்கொள்ளவும், அவர்களைத் தூண்டிவிட வேண்டிய அவசிய மிருப்பது ஆச்சரியமாயிருக்கின்றது. மற்றோர் பக்கத்தில் அவர்கள் சில நாட்களில் சேசுநாதரின் சரீரத்தையும் இரத்தத்தையும் உட்கொள்ள வேண்டுமென்று திருச்சபை தங்களுக்குக் கட்டளையிடுவதைக் கடினமான கடமையென்று எண்ணி, அந்தக் கட்டளையை நிறை வேற்றாதிருக்கும் பொருட்டு, சகல விதமான சாக்குப்போக்குகளைத் தேடுவது எவ்வளவு பயங்கரத்துக்குரியதாய் இருக்கின்றது! 

ஆனால் பக்தி ஆவலோடு தேவநற்கருணைத் திருப்பந்திக்கு ஓடி வருகிற விசுவாசிகளில் சிலர் சில சமயங்களில் தப்பறையான எண்ணங்களின் நிமித்தமும், வீண் சந்தேகங்களின் நிமித்தமும் தகுதியான ஆயத்தத்தோடு வாங்குகிறோமோ இல்லையோ என்று தேவ நற்கருணை வாங்காமல் விட்டுவிடுகிறார்கள், நின்று விடுகிறார்கள்.

தேவ நற்கருணை வாங்குவதற்கு ஒவ்வொருவரும் தங்களைப் பரிசோதிக்க வேண்டுமென்பது மெய்தான்; சம்மனசுகளுடைய அப்பத்தைப் புசிக்க ஆசைப்படுகிறவர்கள் அந்தப் பரலோக அரூபி களுடைய பரிசுத்த தனத்தை அடைந்திருக்க வேண்டுமென்பதும் மெய்தான். ஆனால் கிறீஸ்துநாதர் நமது பலவீனத்தை அறிந்திருக் கிறார்; அதைக் குணப்படுத்த வருகிறவர் மனிதன் தேவ வரப்பிரசாதங்களின் ஊற்றருகில் வரும்போது முற்றும் பரிசுத்தனாய் வரவேண்டுமென்று கேட்பதில்லை. அவன் பாவசங்கீர்த்தனத் தினால் தன் ஆத்துமத்தைச் சுத்திகரித்து, மனஸ்தாபமும் தாழ்ச்சியு முள்ள இருதயத்தோடு தமதருகில் வர வேண்டுமென்று மட்டும் கேட்கிறார். தன் பாவங்கள் மட்டில் முழு மனஸ்தாபத்தோடும் நேர்மையான மனதோடும் பக்தி நிறைந்த நேசத்தோடும் வர வேண்டு மென்று கேட்கிறார். வேத முறைமைகளை வெளிக்கு மாத்திரம் அனுசரித்து வந்த ஆங்காரிகளான பரிசேயரை சேசுநாதர் விலக்கிச் சபித்தார்; பாவியான ஸ்திரீயையோ, தயவாய் ஏற்றுக்கொள்கிறார். அவள் மட்டில் இரக்கம் கொள்கிறார், அவளுடைய கண்ணீர்களை ஆசீர்வதிக்கிறார். “அவள் மிகவும் நேசித்ததால் அநேக பாவங்கள் அவளுக்குப் பொறுக்கப்பட்டன” என்கிறார்.

சிலர் தாங்கள் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல என்று சொல்லி வெகுகாலம் நன்மை வாங்காதிருக்கிறார்கள். அநேகமுறை ஆங்காரம் தான் இதற்குக் காரணமாயிருக்கின்றது. சர்வேசுரனுக்குப் பதிலா யிருக்கிற ஆத்தும குருவானவருடைய யோசனைப்படி நடக்கிற தற்குப் பதிலாய்த் தங்கள் யோசனையே பெரிதென்றெண்ணி தங்களைத் தாங்களே நடத்திக்கொள்ளப் பிரயாசைப்பட்டு அநேக மாய் மோசம் போகிறார்கள்; இதை அவநம்பிக்கை என்றாவது அல்லது பெருத்த ஆங்காரம் என்றாவது நாம் சொல்ல வேண்டி யிருக்கின்றது. கீழ்ப்படிதல் மார்க்கத்தை ஒருபோதும் விட்டு விடாதே. மற்ற மார்க்கங்களெல்லாம் கெடுதியில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆத்தும குருக்கள் நீ தேவ நற்கருணை வாங்கக் கூடா தென்றால், வாங்காதே; அதைப்பற்றிக் கஸ்தி மனஸ்தாபப்படு, ஏனெனில் நீ அழ வேண்டிய நியாயமுண்டு. நேசத்தின் தேவத் திரவிய அனுமானத்தில் இருக்கிற சேசுநாதரிடம் போ என்று அவர்கள் சொன்னால் சந்தோஷமாய் அவரை உட்கொள்ளப் போ; சிறுபிள்ளையினுடைய கபடற்றதனம் உங்களிடம் எப்போதும் இருப்பதாக, கடவுள் இருதய கபடற்றதனத்தை நேசிக்கிறார், அதை இவ்வுலகத்தில் ஆசீர்வதிக்கிறார், மறுவுலகத்தில் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கிறார்.