இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

10. தேவ வரப்பிரசாதத்திற்காக நன்றியறிந்திருத்தல்

1. உழைப்பதற்காக நீ பிறந்திருக்கும்போது இளைப்பாற்றியை நீ தேடுவதேன்? ஆறுதல்களைத் தேடுவதை விடப் பொறுமையை நாடவும், சந்தோஷங் கொள்வதை விடச் சிலுவையைச் சுமந்து நடக்கவும் உன்னை ஆயத்தப்படுத்து. ஆறுதலையும் ஞான சந்தோஷத்தையும் அடைந்து எப்போதைக்கும் சுகித்துக் கொள்ளக் கூடுமாயிருந்தால், உலக மனிதர்களுக்குள் எவன் அவைகளை ஆவலோடு ஏற்றுக்கொள்வான்? ஏனெனில் ஞான ஆறுதல்கள் சகல இலெளகீக இன்பங்களையும் சரீர சுகங்களையும் மேற்படுகின்றன; சகல உலக இன்பங்களும் ஒன்றில் வீணானவை, ஒன்றில் வெட்கக் கேடானவை; ஞான இன்பங்கள் மாத்திரமே இனியவையும் தகுதி யுள்ளவையுமாயிருக்கின்றன; புண்ணியங்களினின்று உற்பத்தியாகி, பரிசுத்த ஆத்துமங்களில் சர்வேசுரனால் பதிந்திருக்கின்றன. ஆனால் இந்தத் தேவ ஆறுதல்களை எவனும் எப்போதும் தன் இஷ்டப்படி அனுபவிப்பது கூடாத காரியம்; ஏனெனில் எவனும் வெகு நேரம் சோதனை இல்லாதிருக்கமாட்டான்.

2. பொய்யான மனச் சுயாதீனமும் தன் பேரில் மிதமிஞ்சின நம்பிக்கையும் தெய்வீகத் தரிசனத்திற்குப் பெருத்த தடைகளாகும். ஆறுதலின் வரப்பிரசாதம் தேவ நன்மையாகும்; ஆனால் நாம் அதைப் பற்றி சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்தாமல் போவது தின்மையாகும். தேவ பிரசாதத்தின் வரங்களை நமக்கு அளிக்க முடியாதெனில், அவைகளை அளிப்பவருக்கு நாம் நன்றி கெட்டவர் களாய், அவைகளின் உந்நத ஊறணிக்கு நன்றி ஆறுதலைச் செலுத்து வதில்லை என்பதால்தான். தகுந்தவிதமாய் நன்றியறிந்த தோத்திரம் செய்கிறவன் மீண்டும் புது வரப்பிரசாதங்கள் பெறுவதற்குப் பாத்திர வானாகிறான்; சாதாரணமாய்த் தாழ்ச்சியுள்ளவனுக்கு அளிக்கப்படுவ தானது ஆங்காரியின் இடத்தினின்று எடுபடுவதாகும்.

3. மனஸ்தாபத்தை அழிக்கும் ஆறுதல் எனக்கு வேண்டிய தில்லை; ஆங்காரத்தைப் பிறப்பிக்கும் தியான யோகத்தையும் நான் விரும்புகிறதில்லை. ஏனெனில், உயர்ந்ததெல்லாமுமே பரிசுத்தமான தல்ல, இன்பமானதெல்லாமுமே நன்மையானதுமல்ல, சகல ஆசை களுமே சுத்தமானவையல்ல, நமக்குப் பிரியமானதெல்லாமுமே சர்வேசுரனுக்குப் பிரியமானதல்ல. என்னை அதிகத் தாழ்ச்சியும் அதிக விழிப்புமுள்ளவனாக்கவும், என்னையே நான் வெறுக்கும்படி அதிக ஆயத்தப்படுத்தவும் எனக்கு உதவியாகக் காண்கிற தேவ வரப்பிரசாதத்தையே நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன். ஞான ஆறுதலின் வரத்தையும் அது நீங்கின நிமித்தம் நேரிட்ட துன்பத்தையும் அறிந்தவன் எந்த நன்மையாவது தன்னால் உண்டான தாக மெச்சிக் கொள்ளத் துணிய மாட்டான், ஆனால் தான் ஏழையென்றும் வறுமையுள்ளவனென்றும் தானே ஒப்புக்கொள் வான். சர்வேசுரனுக்குரியதைச் சர்வேசுரனுக்குக் கொடு, உனக்கு உண்டானதை உன்னுடையதாக ஒப்புக்கொள், அதாவது அவரு டைய நன்மைகளுக்காக சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்து; உன் பாவங்கள்தான் உனக்கு மட்டும் சொந்தமென்றும், அவைகளுக்காக நீ தண்டிக்கப்படுவது நீதியே என்றும் ஒப்புக் கொள்ளக் கடவாய்.

4. எப்போதும் கீழான பதவியை நாடு, அப்போது மேலான பதவி உனக்கு அளிக்கப்படும்; ஏனெனில் கீழே இருக்கிறதின் மீதே உச்சி நிற்கும். தேவ சமூகத்தில் மிகவும் பெரிய அர்ச்சியசிஷ்டவர் களாயிருக்கிறவர்கள் தங்கள் கண்ணுக்கு வெகு அற்பமாயிருக் கிறார்கள்; அவர்கள் எவ்வளவுக்கு அதிகத் தாழ்ச்சியுள்ளவர்களோ, அவ்வளவுக்கு அதிக மகிமையுள்ளவர்களாயிருக்கிறார்கள்; தக்க அறிவினாலும் பரலோக மகிமையினாலும் நிறைந்தவர்களானதால் வீணான பெருமையை அவர்கள் ஆசிப்பதில்லை. சர்வேசுரனிடத்தில் ஊன்றி உறுதிப்படுத்தப்பட்டவர்களானதால் அவர்கள் எதிலும் ஆங்காரம் கொள்ள முடியாது. தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மை யாவற்றையும் சர்வேசுரனுக்கு ஒப்படைக்கிறவர்கள், ஒருவனுக் கொருவன் செலுத்தும் மகிமையைத் தேட மாட்டார்கள்; சர்வேசுர னிடத்திலிருந்து வரும் மகிமையை மாத்திரம் தேடுவார்கள்; தங்களிடத்திலும் சகல அர்ச்சியசிஷ்டவர்களிடத்திலும் சர்வேசுரன் புகழப்பட வேண்டுமென்று மிகவும் அதிகமாய் விரும்புகிறார்கள்; அதற்காகவே எப்போதும் பிரயாசைப் படுகிறார்கள்.

5. ஆனதால் நீ சொற்ப வரத்திற்காகவும் நன்றியறிதல் உள்ளவனாயிரு; அவ்விதம் பெரிய வரங்களை அடையத் தகுதியுடை யவனாவாய். சொற்ப வரம் பெரிய வரமாகவும், அதிக சாதாரண வரம் பெரிய கிருபையாகவும் நீ எண்ணக்கடவாய். கொடையாளியின் மகிமையை யோசித்துப் பார்த்தால், எந்தக் கொடையும் அற்ப மென்றும் அல்லது உபயோகமற்றதென்றும் காணப்படாது; ஏனெனில், உந்நதமானவரான சர்வேசுரனிடத்தினின்று வருகிற எதுவும் சொற்பமாய் இராது. அவர் உனக்குத் துயரமும் தண்டனைகளும் தான் கொடுத்த போதிலும், அவைகளுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டியது; ஏனெனில், அவரது உத்தரவின்படியே நமக்கு என்னென்ன நேரிட்டாலும் அவை யாவையும் நமது இரட்சண்யத்திற்காகவே எப்போதும் செய்கிறார். சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தை (ஞான ஆறுதலைக்) காப்பாற்ற ஆசிக்கிறவன், அது கிடைக்கும்போது நன்றியறிதலாயும், எடுபடும்போது பொறுமை யாயும் இருக்கக் கடவான்; அது திரும்பி வரும்படி வேண்டிக் கொள்ளக் கடவான்; அதை இழந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையா யிருப்பதுடன் தாழ்ச்சியுமுள்ள வனுமாயிருக்கக் கடவான்.

யோசனை

மனிதன் தன்னிலேதானே எவ்வளவு நிர்ப்பாக்கியனென்றால், தேவ இரக்கத்திலிருந்தே ஓர் நல்ல நினைப்பாவது, நல்ல ஆசையாவது உண்டாக வேண்டியிருக்கிறது. அவனால் ஒன்றுமே முடியாது; தன் நிர்ப்பாக்கியத்தினின்று நீங்கும்படி நினைப்பதற்கு முதலாய் அவனால் முடியாது. தேவ இரக்கம் அற்றுப் போனால் அவன் நிர்ப்பாக்கியனாய்க் காலந்தள்ள வேண்டியதுதான். ஆனதால் தேவ அனுக்கிரகம் அவனுக்கு எவ்வளவு ஏராளமாய்க் கொடுக்கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அவன் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ள வேண்டியவன். மதியீனனான சிருஷ்டியே! சர்வேசுரனிடத்தினின்று நீ அடைந்திருக்கும் வரங்களைப் பற்றி நீ கர்வங் கொள்வதேன்? “நீ அவரிடத்தினின்று அடையாததென்ன? அவரிடத்தினின்று நீ சகலமும் அடைந்திருந்தால், நீ அடையாதவனைப் போல மகிமை கொள்வதேன்? இக்காரணத்தை முன்னிட்டு ஆங்காரம் அடங்கிப் போக வேண்டியது. நரக பாதாளத்தினின்று உன்னை மீட்ட உன் இரட்சகர் சமூகத்தில் உன்னை நீ நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியது. மனிதன் தாழ்ந்து போவதினால் உயர்த்தப்படுகிறான். ஆனதினால் தான், “நான் பலவீனனாகக் காணப்படும்போது பலசாலியாயிருக்கிறேன்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். ஓ பெரிய அப்போஸ்தலரே! நீர் சொல்வதை நான் கண்டுபிடிக்கிறேன். உம்மை பலவீனனாக்குவது தாழ்ச்சி, அதற்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது தேவ உதவி. அதனால் நீர் பலமடைந்தவராகிறீர். சர்வேசுரன் நமக்குச் செய்யும் உபகாரங்களுக்கு நாம் நன்றியறிதல் காண்பிப்பது எவ்விதம்? ஐயோ! நமது வறுமையில் நமது இருதயம் ஒன்றுதான் நம்மிடமிருக்கின்றது; அதைத்தான் அவரும் கேட்கிறார். இந்த இருதயம் அவருக்கே முழுமையும் சொந்தமாயிருக்கக்கடவது; சர்வேசுரனைப் பற்றியே இருக்கக்கடவது; அவருடைய நேசத்திலேயே சீவிக்கக்கடவது. இவ்விதமாகப் பூலோகத்தில் துவக்குகிற ஒன்றிப்பு பரலோகத்தில் நமது நித்திய பாக்கியமாக முடியக் கடவது.