இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

10. உலகத்தை வெறுத்துச் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வது இன்பம்

1. (ஆத்துமம்) “ஆண்டவரே! இதோ மறுபடியும் பேசுவேன், மவுனமாயிருக்க மாட்டேன்.” பரலோகத்தில் வீற்றிருக்கிற என் தேவனும், என் ஆண்டவரும் என் இராசாவும் ஆனவரிடம் இரகசியமாய்ச் சொல்வேன்: “என் ஆண்டவரே, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு நீர் காண்பித்த இன்பம் எவ்வளவோ ஏராளமாயிருக்கிறது.” ஆனால் உம்மை நேசித்து உம்மை முழு இருதயத்தோடு சேவித்து வருகிறவர்களுக்கு எவ்வளவு அதிகமாகக் காண்பிப்பீரல்லோ? உமது நேசர்கள் உம்மைத் தியானிக்கையில் அடையும் இன்பம் மெய்யாகவே வாக்குக்கெட்டாததாயிருக்கிறது. விசேஷமாக நீர் உமது நேசத்தை எனக்குக் காண்பித்தது எப்படியெனில்: நான் ஒன்றுமில்லாமையாயிருந்தபோது என்னை உண்டாக்கினீர், நான் உம்மைவிட்டுத் தூர அகன்று திரிகையில் உமக்கு ஊழியம் செய்யத் தக்கதாக என்னைத் திருப்பிக்கொண்டு வந்து உம்மை நேசிக்கும் படியாக எனக்குக் கற்பித்தீர்.

2. ஓ! நித்திய சிநேகத்தின் ஊறணியே! உம்மைக் குறித்து நான் என்ன சொல்வேன்? நான் கெட்டு நாசமாய்ப் போன போது முதலாய் என்னை நினைக்கக் கிருபை புரிந்த உம்மை நான் எவ்விதம் மறந்து விடக் கூடும்? நம்பிக்கை கொள்ளக் கூடுமானதற்கு மேலாய் உமது தாசனுக்குத் தயவுசெய்தீர்; பேறுபலனுக்கு மேலாய் அவன்பேரில் இரக்கமும் நேசமும் செலுத்தினீர். இந்த உபகாரத்துக்கு நான் உமக்கு என்ன பதில் நன்றி காண்பிக்கப் போகிறேன்? ஏனெனில், எல்லா வற்றையும் வெறுத்து உலகத்தை விட்டுச் சந்நியாச அந்தஸ்தில் உட்படுவது எல்லாருக்கும் கொடுத்து வைத்ததல்ல. சகல சிருஷ்டி களும் உமக்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டிருக்க, நான் உமக்கு ஊழியம் செய்வது பெரிய காரியமோ? உம்மைச் சேவிப்பது எனக்குப் பெரிதாய்த் தோன்றக் கூடாது. ஆனால் இவ்வளவு எளியவனும் தகுதியற்றவனுமான என்னை உமது ஊழியனாகக் கையேற்றுக் கொள்ளவும், உமது அன்புள்ள தாசர்களோடு என்னைச் சேர்த்துக்கொள்ளவும் நீர் கிருபை செய்வதே எனக்குப் பெரிதாயும் ஆச்சரியமாயும் காணப்படுகின்றது.

3. இதோ என்னிடத்திலுள்ளவை எல்லாமும் நான் உமது ஊழியத்தில் செலவழிக்கக் கூடியதெல்லாமும் உமக்கே சொந்தமா யிருக்கிறது. ஆயினும் நான் உம்மைச் சேவிக்கிறதைப் பார்க்க இதோ ஒழுங்கை மாற்றி நீரே என்னை அதிகமாய்ச் சேவிக்கிறீர். இதோ மனிதனுடைய பிரயோசனத்திற்காக நீர் சிருஷ்டித்த வானமும் பூமியும் உமக்கு முன் பிரசன்னமாயிருந்து நீர் கட்டளையிடும் யாவற்றையும் நாள்தோறும் நிறைவேற்றி வருகின்றன. இதுவும் போதாதென்று மனிதனுக்கு உதவி செய்ய சம்மனசுக்களை முதலாய் ஏற்பாடு செய்திருக்கிறீர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலான உபகாரமானது ஏதெனில்: நீர் மனிதனுக்குப் பணிவிடை செய்யச் சித்தமானதும், உம்மை அவனுக்குத் தந்தருளுவதாக வாக்குத்தத்தம் செய்ததுமாகும்.

4. இத்தனை ஆயிரம் உபகாரங்களுக்குப் பிரதிநன்றியாக நான் உமக்கு எதைக் கொடுப்பேன்? ஆ! என் சீவிய காலத்தின் ஒவ்வொரு நாளும் நான் உமக்கு ஊழியம் செய்வேனாக! ஒருதினமாகிலும் நான் உமக்குத் தக்க பணிவிடை செய்யக் கூடுமானால் எவ்வளவோ நல்லது. மெய்யாகவே நீர் சகல பணிவிடைக்கும் சர்வ சங்கைக்கும் நித்திய தோத்திரத்திற்கும் பாத்திரமானவர். மெய்யாகவே நீர் என் ஆண்டவர், நானோ உமது எளிய ஊழியன்; நான் என் சத்துவம் கொண்ட மட்டும் உமக்கு ஊழியம் செய்யவும் உம்மைத் தோத் தரிப்பதில் ஒருபோதும் சலிப்படையாமலிருக்கவும் கடமைப்பட் டிருக்கிறேன். ஆக இதுவே என் ஆசை, இதுவே என் விருப்பம்; எனக்குக் குறைபடுவதையோ நீரே எனக்குக் கிருபை புரிந்தருளும். 

5. உம்மைச் சேவித்து உம்மைப் பற்றிச் சகலத்தையும் நிந்திப்பது மகா பெருமையும் மகிமையுமாகும். ஏனெனில் உமது திரு ஊழியத்திற்கு மனப்பூரணமாய் உட்படுபவர்கள் தாராளமான வரப்பிரசாதங்களை அடைவார்கள். உமது நேசத்தைப் பற்றி சரீர இன்ப சுகங்களையெல்லாம் வெறுத்து விட்டவர்கள் இஸ்பிரீத்து சாந்துவுடைய மகா மதுரமான ஆறுதலைக் கண்டடைவார்கள். உம்முடைய நாமத்தைப் பற்றி உலகக் கவலைகளையெல்லாம் ஒழித்து விட்டு நெருக்கமான பாதையில் பிரவேசிப்பவர்கள் மிகுந்த மன அமரிக்கையைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ! மனிதனை மெய் யாகவே மனச் சுயாதீனமுள்ளவனுமாய் பரிசுத்தனுமாய் ஆக்குகிற பிரியமும் மதுரமுமான தேவ ஊழியமே! ஓ! மனிதனைச் சம்மனசு களுக்குச் சமமானவனுமாய், தேவ கோபத்தைத் தணிக்கக்கூடியவனு மாய், பசாசுகளுக்குப் பயங்கரம் வருவிக்கிறவனுமாய், சகல விசுவாசிகளுக்கும் புகழ்ச்சிக்குரியவனுமாய் ஆக்குகிற துறவற அந்தஸ்தே! ஓ! சர்வ நன்மையானவரை அடையவும் முடிவில்லா இன்பங் களைச் சுகிக்கவும் செய்யும் ஊழியமே! ஓ, வெகுவாய் ஆசிக்கப்படவும் தெரிந்துகொள்ளப்படவும் ஏதுவான துறவற அந்தஸ்தே!

யோசனை

பூலோகம் ஆசாபாசங்களால் எவ்வளவு மயங்கிப் போயிருக்கிறதென்றால், சர்வேசுரனுடைய மக்களின் பாக்கியத்தை அது கண்டு பிடிக்க அறியாது. அவர்களை நிந்தித்து இகழ்ந்து பேசுகின்றது; சில சமயத்தில் அவர்களுடைய நல்லொழுக்கத்தைக் கண்டு ஆச்சரியப்படுகின்றது, ஆனால் கிறீஸ்துநாதரோடு ஒன்றித்திருக்கும் ஆத்துமத்தில் உண்டான ஆறுதலையும் அமரிக்கையையும் அது கொஞ்சம் கூட கண்டுபிடிப்பதில்லை. “எனது துன்பங்களின் நடுவில் நான் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கிறேன்” என்று அர்ச். சின்னப்பர் கூறியிருப்பது உலகத்துக்கு ஒரு பரம இரகசியம்போல் இருக்கின்றது. உலகத்திற்கு ஊழியம் செய்கிறவனுடைய கதி என்ன? எப்போதாவது சொற்ப சந்தோஷமானால் இடைவிடாத கவலை; சர்வேசுரன் அவனை முழுவதுமே கைவிட்டுவிடாதபோது அவனது மனது அவனை வருத்து கின்றது. அவனுடைய இருதயத்தில் நுழைந்து பார். மன வேதனை தான் காண்பாய். மனவேதனைதான் அவனுடைய சம்பாவனை; சலிப்புதான் அவனுடைய சமாதானம். கிறீஸ்தவ ஆத்துமங்களே! பூலோகத்தையும் அதற்குச் சொந்தமான சகலத்தையும் வெறுத்த ஆத்துமங்களே! உலகத்துக்கு ஊழியம் செய்கிறவர்களைப் பாருங்கள். சகலவித ஆசாபாசக் கட்டுகளாலும் கட்டப்பட்டு வருந்துகிறார்கள். உங்களை இரட்சித்தவருடைய பாதங்களில் விழுந்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்யுங்கள். பூலோகத்தில் உங்கள் இருதயத்தில் நீங்கள் அனுபவிக்கத் துவக்கின சந்தோஷம் பரலோகத்தில் பூர்த்தியாகும்படி செய்ய அவரை மன்றாடுங்கள்.