இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

09. நம்மையும் நமக்குண்டாகிய சகலத்தையும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கவும் எல்லாருக்காக வேண்டிக்கொள்ளவும்.

1. (சீஷன்) ஆண்டவரே! பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள சகலமும் உமக்குச் சொந்தம். என்னைத்தானே தன்னிச்சை யாக உமக்கு ஒப்புக்கொடுக்கவும் என்றென்றைக்கும் உமது சொந்தப் பொருளாயிருக்கவும் ஆசைப்படுகிறேன். ஆண்டவரே! உமக்கு நித்திய ஊழியனாயிருக்கும்படி கபடற்ற மனதோடு என்னையே இடைவிடாத புகழ்ச்சியின் பலியாகவும் காணிக்கையாகவும் இன்று ஒப்புக்கொடுக்கிறேன்.

எனக்கும் மற்றச் சகலருக்கும் இரட்சணியமாயிருக்கும்படி, கண்களுக்குக் காணக்கூடாத விதமாய்ப் புடைசூழ்ந்திருக்கிற சம்மனசுகளுடைய சந்நிதியில் நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிற மதிப்பிட முடியாத உமது திருச்சரீரத்தின் காணிக்கையோடு என்னையும் கையேற்றுக் கொள்ளும்.

2. ஆண்டவரே! நான் பகுத்தறிவு அடைந்த நாள் முதல் இன்று வரை, உமது சந்நதியிலும், உமது சம்மனசுகளுக்கு முன்பாகவும் நான் கட்டிக்கொண்ட சகல பாவ அக்கிரமங்களையும் உமது பரிகாரப் பலிபீடத்தின் மேல் உமக்கு ஒப்படைக்கிறேன்; நீர் அவைகளை யெல்லாம் உமது சிநேக அக்கினியால் சுட்டெரித்துப் போடும்படி யாகவும், என் பாவக் கறைகள் எல்லாவற்றையும் அழித்து விடும்படி யாகவும், சகல குற்றங்களிலும் நின்று என் ஆத்துமத்தைச் சுத்திகரிக் கும்படியாகவும், என் சகல குற்றங்களையும் எனக்குப் பூரணமாய்ப் பொறுத்துக் கொண்டு, உமது சமாதானத்தின் வரத்தைத் தந்து, பாவத்தினால் நான் இழந்துபோன உமது வரப்பிரசாதத்தை எனக்கு நீர் திரும்பக் கொடுக்கும்படியாகவும் உம்மை மன்றாடுகிறேன்.

3. என்னுடைய பாவங்களைத் தாழ்ச்சியோடு சங்கீர்த்தனம் செய்து அவைகளுக்காக மனஸ்தாபப்படுகிறேன். இடைவிடாமல் உமது பொறுத்தலை மன்றாடுகிறேன்; இதைத் தவிர நான் பாவப் பொறுத்தலடைய வேறென்ன செய்யக் கூடும்? 

என் தேவனே! இதோ நான் உமது சந்நதியில் இருக்கும்போதே உம்மை மன்றாடுகிறேன்; என் மன்றாட்டைத் தயாபரராய்க் கேட் டருளும். என் சகல பாவங்களும் எனக்கு மிகுந்த அருவருப்பா யிருக்கின்றன; இனிமேல் ஒருக்காலும் அவைகளைச் செய்ய மாட்டேன்; ஆனால் அவைகளுக்காக என்னால் கூடியமட்டும் தபசு செய்யவும் உத்தரிக்கவும் நான் ஆயத்தமாயிருந்து, அவைகளுக்காக விசனப்படுகிறேன், என் ஜீவியகாலம் முடிய விசனப்படுவேன்.

பொறுத்தருளும் ஆண்டவரே! உமது திருநாமத்தைப் பற்றி என் பாவங்களைப் பொறுத்தருளும்; நீர் மதிப்பிடப்பட முடியாத உமது இரத்தத்தால் மீட்டு இரட்சித்த என் ஆத்துமத்தைக் காப்பாற்றி யருளும். இதோ உமது இரக்கத்திற்கு நான் என்னைக் கையளிக் கிறேன், உமது கரங்களில் என்னை விட்டுவிடுகிறேன்; என்னுடைய துர்க்குணத்திற்கும் அக்கிரமத்திற்கும் தக்க விதமாக அல்ல, ஆனால் உமது நன்மைத்தனத்திற்குத் தக்க வண்ணம் என்னை நடப்பித் தருளும்.

4. இன்னமும் என்னிடத்திலுள்ள நன்மையானதையெல்லாம் - அது மிகவும் சொற்பமும் பழுதுள்ளதுமானாலும் - உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்; அதை நீர் திருத்தி அர்ச்சித்து அதன்மட்டில் பிரியம் கொண்டு, அதை உமது கண்களுக்கு ஏற்றதாக்கி இடைவிடாமல் அதிகமாய் ஒழுங்காக்கி வருவீராக; மேலும் சோம்பேறியும் பிரயோசனமற்ற அற்ப மனிதனுமாகிய என்னைப் பாக்கியமும் புகழ்ச்சிக்குரியதுமான கதியில் சேர்ப்பித்தருளும். இந்தக் கருத்துகளுக்காகவே நான் அதை உமக்கு ஒப்புக்கொடுக் கிறேன்.

5. பக்தியுள்ளவர்களுடைய ஆசைகள் அனைத்தையும், உறவினர் சிநேகிதர் சகோதரர்கள் சகோதரிகள் ஆக எனக்குப் பிரியமா யிருக்கிற எல்லோருடைய அவசரங்களையும், உமது நேசத்தைப் பற்றி எனக்காவது மற்றவர்களுக்காவது உபகாரம் செய்தவர் களுடைய அவசரங்களையும் தங்களுக்காகவும் தங்களைச் சேர்ந்தவர் களுக்காகவும் செபமும் பூசையும் நான் செய்யும்படி விரும்பியவர்கள் அல்லது கேட்டுக் கொண்டவர்கள் இன்னும் உயிரோடு இருந்தாலும், அல்லது உலகத்தைவிட்டு மரித்துப் போயிருந்தாலும், அவர்களுடைய அவசரங்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

இவர்கள் எல்லாரும் உமது வரப்பிரசாதத்தின் உதவியையும், உமது ஆறுதலின் பலத்தையும் ஆபத்துகளில் ஆதரவையும், வேதனைகளில் விடுதலையும் பெறுவார்களாக. அப்போது அவர்கள் சகல தின்மைகளிலும் நின்று மீட்கப்பட்டு, உமக்கு மகத்தான நன்றி யறிதல் தோத்திரங்கள் சந்தோஷமாய்ச் செய்யக் கடவார்களாக.

6. விசேஷமாய் யாதோர் காரியத்தில் என்னை மனம் நோகச் செய்தவர்கள், எனக்குக் கஸ்தி வருவித்தவர்கள், என்னை நிந்தனை யாய்ப் பேசினவர்கள், எனக்கு யாதோர் நஷ்டம் அல்லது துன்பம் செய்தவர்கள், இவர்களுக்காகவும்;

நான் வார்த்தைகளாலும், கிரியைகளாலும், அறிந்தோ அறியாமலோ, எவரெவருக்குக் கஸ்தி வருவித்தேனோ, துன்பம் வருவித்தேனோ, துர்மாதிரிகை கொடுத்தேனோ அவர்களுக் காகவும், என் செபங்களையும் பரிகாரப் பலியையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்; நாங்கள் எல்லோரும் செய்த பாவங்களையும், நாங்கள் ஒருவருக்கொருவர் செய்த துரோகங்களையும் நீர் எனக்குத் தயவாய்ப் பொறுத்தருளும்.

ஆண்டவரே! எங்கள் இருதயங்களினின்று சந்தேகத்தையும், அருவருப்பையும், கோபத்தையும், வாக்குவாதத்தையும், பிறர் சிநேகத்தை நோகப்படுத்திச் சகோதர நேசத்தைக் குறைக்கக் கூடுமான சகலத்தையும் அகற்றி விடும்.

ஆண்டவரே! உமது தயாள இரக்கத்தை மன்றாடுகிறவர்கள் மீது தயையாயிரும், சுவாமி தயையாயிரும்; ஏழைகளாகிய எங்களுக்கு உமது வரப்பிரசாதத்தைத் தந்தருளும். நாங்கள் உமது வரங்களை அனுபவிக்கத் தகுதியுடையவர்களாகி நித்திய ஜீவியத்திற்கென புண்ணியத்தில் வளரும்படி எங்களை நடப்பித்தருளும். ல் ஆமென்.

யோசனை

பாவசங்கீர்த்தனத்தினால் தன்னைச் சுத்திகரித்து, மனிதருடைய இரட்சணியத்திற்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட பரிகார அப்பமாகிய சேசுகிறீஸ்துநாதரோடு ஒன்றித்த பிறகு குரு தனக்காகவும் மற்ற மனிதருக்காகவும் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார். அதேதெனில் தானும் தன் சகோதரரும் இன்னமும் எவர்களுக்கு பலி நிறைவேற்று பவரும், பலிப் பொருளுமாகிய சேசுகிறீஸ்து நாதர் சிலுவைப் பலியை ஒப்புக்கொடுத்தாரோ அவர்கள் எல்லாரும் இப்பொழுது நடக்கப் போகிற பூசைப்பலியின் பலனில் பங்கடையும் பொருட்டே. இரட்சகர் குருவானவருக்காகத் தம்மைப் பலியிட்டது போலக் குருவானவரும் இரட்சகருக்காகத் தம்மைப் பலியிடவும், அவருடைய மகிமைக்காகவே ஜீவிக்கவும் மரிக்கவும் விரும்புகிறார். குருவானவர் தம்மிடம் இன்னுமிருக்கிற அசுத்தமும் உலகத் தன்மையு மான எல்லாவற்றையும் தேவசிநேக அக்கினியே சுட்டெரிக்கும்படி மன்றாடுகிறார். தன் நினைவுகளையும் பற்றுதல்களையும், நாட்டங் களையும், ஆசைகளையும் தன்னை முழுமையும் பீடத்தின் மேல் ஒருவிதத்தில் வைத்து விடுகிறார்; ஏனெனில் மனிதனுக்காக மரித்து உயிர்த்தெழுந்தருளின கிறீஸ்துநாதருக்காக மாத்திரம் ஜீவிக்கும்படி குருவானவர் சேசுகிறீஸ்துநாதரைத் தரித்துக்கொண்டு புதிய மனித னாக விரும்புகிறார். அவ்விதமாக சர்வாதி கர்த்தருடைய சந்நிதானத்தில் தன்னைத்தானே நிர்மூலமாக்கிக் கொண்டவராய், இரக்கத்தை மன்றாடும் இரத்தத்தில் ஏற்கெனவே தோய்ந்தவர் போல குருவானவர் தமது உறவினருக்கும், தன் நண்பர்களுக்கும், தன் உபகாரிகளுக்கும், தன் பகைவர்களுக்கும், தன்னை வெறுத்துத் துன்பப்படுத்துகிறவர்களுக்கும் முதலாய், ஆக எல்லாருக்கும் சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தை மன்றாடுகிறார்; “நல்லோர் மேலும் தீயோர் மேலும்” தமது சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் நித்திய பிதாவின் மாதிரிகையையும் சகல மனிதரையும் இரட்சித்த சேசுநாதருடைய திவ்விய மாதிரிகையையும் பின்பற்றி குருவானவர் சகல மனிதரையும் நேசித்து அரவணைக்கிறார். குருப்பட்டத்தின் அபிஷேகத்தால் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் மத்தியில் உயர்த்தப்பட்டு, மனுக்குல முழுமையையும் தனது செபத்தாலும் நேசத்தாலும் மூடிக் காப்பாற்றுகிறார். பாவத்தின் கொடுமையால் மனுக்குலம் சாகப்போகிற அந்தஸ்தில் இருக்கிறதைக் கண்டு இரக்கப்பட்டு, அதை மரணத்தினின்று காப்பாற்றக் கூடுமான சர்வேசுரனை நோக்கித் தனது செபங்களையும், மன்றாட்டு களையும் சேசுகிறீஸ்துநாதருடைய சரீர இரத்தப் பலியோடு ஒப்புக்கொடுக் கிறார். ஆம்! ஆண்டவரிடத்தினின்றுதான் இரட்சணியம் உண்டாகிறது; அவர் அர்ச்சிக்கப்பட்டவருடைய ஆச்சரியங்களைப் பிரசித்தப் படுத்தினார். “ஆ! சுயஞ்சீவியராகிய சர்வேசுரனுடைய குருக்களே! நீதியின் பலியை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுங்கள்.” ஆண்டவரே! நான் உம்மை மன்றாடுவேன்; காலையில் என் சத்தத்திற்குச் செவி கொடுப்பீர்; காலையில் உமது சமூகத்தின் முன்வந்து நிற்பேன்; உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; தேவ பயத்தினால் நிறைந்து உம்மை ஆராதிப்பேன்; உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லோரும் சந்தோஷம் கொண்டாடுவார்கள், நித்திய காலத்திற்கும் ஆனந்தக் களிப்படைவார்கள், ஏனென்றால் நீர் அவர்களிடத்தில் வாசம் செய்வீர்.