இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

09. கடைசிக் கதி சர்வேசுரன் ஆகையால் அவருக்குச் சகலமும் ஒப்புக் கொடுக்க வேண்டும்

1. மகனே! நீ பாக்கியவானாயிருக்க மெய்யாகவே ஆசித்தால், நாமே உனக்கு உன்னத கடைசி கதியாக இருக்க வேண்டியது. அநேக முறை உன்னையும் படைக்கப்பட்ட பொருட்களையும் ஒழுக்கம் தவறி நாடும் உன் பற்றுதல்கள் அந்தக் கருத்தால் பரிசுத்தமாகும். ஏனெனில் நீ யாதொரு காரியத்தில் உன்னையே தேடுவாயாகில், நீ உடனே பலனற்றுப் போய் இருதய வறட்சியடைவாய். எல்லாவற்றையும் கொடுத்தவர் நாமாகையால், உனது பிரதான கதியாகிய நமக்கே எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கக் கடவாய். சகல நன்மைகளும் சர்வ நன்மையாகிய நம்மிடமிருந்து வருகிறதாகவும், ஆதலால் ஊறணியாகிய நம்மிடத்தில் அவைகள் திரும்ப வேண்டுமென்றும் சிந்தையில் இருத்து.

2. சிறியவனும் பெரியவனும், எளியவனும், அரசனும், ஜீவிய ஊற்றினின்று எடுப்பது போல நம்மிடத்தினின்று ஜீவியம் தருகிற நீரை முகந்து கொள்கிறார்கள்; தாராளமாயும், முழு மனதோடும் நமக்கு ஊழியம் செய்கிறவர்கள் பிரதியுபகாரமடைவார்கள். நம்மை விட்டு வெளியே மகிமையையும், ஏதாவது ஒரு தனி நன்மையில் சந்தோஷத் தையும் தேடுபவன் மெய்யான சந்தோஷமும், மன அமைதியும் கொள் ளாமல் அநேக விதமாய் நெருக்கடிக்கு உள்ளாகி வருத்தத்துக்கு உள்ளாவான். ஆகவே எந்த நன்மையாவது உன்னால் உண்டான தென்று பெருமை பாராட்டாதே, ஒருவனுக்குள்ள புண்ணியம் அவனால் வந்தது என்று எண்ணாதே; ஆனால் சர்வேசுரன் இன்றி மனிதனிடம் ஒன்றுமில்லாமையால் சகலமும் அவருக்கு ஒப்புக்கொடு. நாம் சகலமும் கொடுத்தோம். சகலமும் நம்மிடமே திரும்ப வேண்டும்; வெகு கண்டிப்பாய் நன்றியறிந்த தோத்திரங்கள் கேட்கிறோம்.

3. வீண் பெருமையைத் துரத்தி விடுகிற உண்மை அதுவே. தேவ வரப்பிரசாதமும் மெய்யான சிநேகமும் ஒருவனிடம் விளங்கு மானால் அவனிடம காய்மகாரமும், மனக்கவலையும் இராது; சுய நேசத்திற்கு இடமிராது. ஏனெனில் தேவசிநேகம் ஆத்துமம் முழுவதையும் தன் வசப்படுத்தி அதன் சத்துவங்களையெல்லாம் அதிகப்படுத்துகிறது. உன்னிடம் மெய்யான ஞானமிருந்தால் நம்மிடம் மாத்திரம் சந்தோஷம் கொள்வாய், நமது பேரில் மாத்திரம் நம்பிக்கை வைப்பாய்; ஏனெனில் சர்வேசுரன் ஒருவரே உத்தமர், மற்ற எவருமல்ல, அவரே சகலத்துக்கும் மேலாய் வாழ்த்தப்பட வேண்டியவர். அவரே சகலத்திலும் துதிக்கப்பட வேண்டியவர்.

யோசனை

மேலான உத்தமநன்மையாகிய சர்வேசுரனிடத்தில் இருந்து சகல நன்மையும் உற்பத்தியாகின்றது. அவர் செய்வதெல்லாம் நன்மை. உலகத்தில் பாவம் தவிர வேறு தின்மையில்லை. பாவத்தின் தண்டனை தின்மையல்ல; ஏனெனில் அதைப் பொறுமையோடு சகித்தால் பாவ நிவாரணமாகிறது, பாவத்தினால் வந்த கேட்டை நிவிர்த்தியாக்கு கின்றது. நாம் சர்வேசுரனிடத்தினின்று உண்டாகிறோம். நமது சொந்த பலத்தால் ஒன்றும் முடியாது. ஒரு வார்த்தை முதலாய் உச்சரிக்க முடியாது. என் பிதாவே என்று முதலாய் சொல்ல முடியாது. ஏனெனில் மன்றாட நாமறியோம். நமக்குச் சொந்தமான பாவமொன்றே நமது மனச் சுதந்திரத்தின் கனியாயிருக்கின்றது, அதன் சம்பாவனை சாவு; சர்வேசுரன் தமது தயாளத்தால் நமக்கு அளிப்பதுதான் நமது ஆஸ்தி. ஆனதால் நாம் நம்மிலே நிர்ப்பாக் கியர்; சர்வேசுரனோ சகல பெருமையும் மகிமையும் அதிகாரமுமுள்ள சர்வாதி கர்த்தர்.