இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

09. எவ்வித ஆறுதலுமில்லாதிருத்தல்

1. தேவ ஆறுதல் உண்டாயிருக்கும்போது, மனுஷ ஆறுதலை வெறுப்பது பிரயாசையல்ல. ஆனால் தேவ ஆறுதலும் மனித ஆறுதலு மில்லாமலே அமைதியாயிருப்பதும், அப்பொழுது தன்னைத்தானே எதிலும் தேடாமலும், தனது புண்ணிய பலன்களைப் பாராமலும் சர்வேசுரனுடைய தோத்திரத்திற்காக அந்த இருதய தனிவாசத்தை மனசார அனுபவிப்பதும் அருமையான புண்ணியமாயிருக்கின்றது. வரப்பிரசாதமிருக்கையில் நீ சந்தோஷமும் பக்தியும் உள்ளவனா யிருப்பதில் ஆச்சரியமோ? அந்தக் காலம் எல்லோரும் விரும்பத் தக்க காலம். தேவ வரப்பிரசாதத்தால் தாங்கப்பட்டவன் வெகு சந்தோஷ மாகவே நடந்து கொள்வான். சர்வ வல்லவராகிய சர்வேசுரனால் தாங்கப்பட்டு, இந்த உத்தம வழிகாட்டியால் கூட்டிக்கொண்டு போகப்படுகிறவனுக்குப் பளு தோன்றாமல் போவது ஆச்சரியமோ?

2. ஆறுதல் தரும் ஏதாவது ஒன்று கிடைத்தால் சந்தோஷப் படுகிறோம், ஏனெனில் தன்னைத்தானே பரித்தியாகம் பண்ணுவது மனிதனுக்குப் பிரயாசையே. வேதசாட்சியான அர்ச். லவுரேஞ்சியார் தமது மேற்றிராணியாரைப் பின்சென்று பூலோகத்தை வென்றார்; எப்படியென்றால், உலகத்தில் இன்பமாகக் காணப்பட்டது எல்லா வற்றையும் இகழ்ந்தார்; தான் வெகுவாய் நேசித்த அர்ச். பாப்பானவ ராகிய சிக்ஸ்துஸ் என்பவர் தம்மிடத்திலே நின்று பிரிக்கப்படுவதை முதலாய் சேசுநாதருடைய நேசத்தைப் பற்றிப் பொறுமையோடு சகித்தார். அவ்விதமாக சிருஷ்டிகரின் மேல் வைத்த நேசத்தால் மனித னுடைய நேசத்தை மேற்கொண்டார்; மனித ஆறுதல்களைவிடத் தேவ சித்தத்தை அதிகமாய் மதித்தார். நீயும் அப்படியே உனக்கு வேண்டியவனும் பிரியமுள்ளவனுமான சிநேகிதனைச் சர்வேசுர னுடைய நேசத்தைப்பற்றி விட்டுவிடக் கற்றுக்கொள். உன் சிநேகிதனால் கைவிடப்பட்டால், கடைசியில் எல்லோரும் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரியத்தான் வேண்டியதென்று அறிந்து அதற்காக அதிக வருத்தமடையாதே.

3. மனிதன் தன்னைத்தானே முழுதும் மேற்கொள்ளவும் தன் பற்றுதல் யாவையும் சர்வேசுரன்பேரில் நாடச் செய்யும் அறிகிறதற்கு முந்தி, நெடுங்காலம் தனக்குள்ளாக கடினமாய்ப் போர் புரியக் கடவான். மனிதன் தன்னைத்தான் நம்பியிருக்கும் போது, மனுஷ ஆறுதல்களை எளிதாய் நாடுகிறான். ஆனால் கிறீஸ்துநாதரை மெய்யாகவே நேசித்துப் புண்ணியங்களைச் சம்பாதிக்கப் பிரயாசைப் படுகிறவன் அவ்வித ஆறுதல்களை ஆவலோடு ஆசிக்கிறதில்லை. அவ்வித இன்பங்களைவிட கிறீஸ்துநாதரைப் பற்றிக் கடும் பிரயாசைகளுக்கும் கொடிய வருத்தங்களுக்கும் உட்பட அதிகமாய் ஆசிக்கிறான்.

4. ஆனதுபற்றி சர்வேசுரன் உனக்கு ஞான ஆறுதலைக் கொடுக் கும்போது, நன்றியறிதலோடு அதை ஏற்றுக்கொள்; அது உன் சொந்தப் பலனால் அல்ல, ஆனால் சர்வேசுரனுடைய தயவால் வந்த நன்கொடையென்று அறிந்திரு. அதனால் பெருமை கொள்ளாதே, மிதமிஞ்சி அகமகிழாதே. மிதமிஞ்சின நம்பிக்கைக்கு உன்னைக் கையளிக்காதே. ஆனால் நீ பெற்றுக்கொண்ட வரத்தைப் பற்றி அதிக தாழ்ச்சியுள்ளவனாகவும், உன் சகல செயல்களிலும் அதிக ஜாக்கிரதை யுள்ளவனாகவும் அச்சமுள்ளவனாகவும் நடந்து கொள்; ஏனெனில், அந்த இன்பமான நேரம் கடந்துபோய்ச் சோதனைகள் தொடர்ந்து வரும். உன்னிடத்தினின்று ஆறுதல் எடுபட்டபோது, நீ அவநம்பிக் கைக்கு உள்ளாகாதே; ஆனால் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் தேவ அருளுக்குக் காத்திரு; ஏனெனில், உனக்கு இன்னும் மிகுதியான ஆறுதலை மறுபடியும் கொடுக்க சர்வேசுரன் வல்லவராயிருக்கிறார். சர்வேசுரனுடைய மார்க்கத்தில் பண்பட்டவர்களுக்கு இதெல்லாம் நூதனமுமல்ல, ஆச்சரியமாகவும் தோன்றாது: மகாத்துமாக் களிடத்திலும் பூர்வீக தீர்க்கதரிசிகளிடத்திலும் இப்படிப்பட்ட நெருக்கடிகள் பலமுறை உண்டாயிருந்தன.

5. அவர்களில் ஒருவருக்குத் தேவ வரப்பிரசாதம் அவர் உள்ளத்தில் இருந்தபோது, “நான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டேன் என்று என் மிகுதியிலே உரைத்தேன்” என்றார். பின்பு அவரே தேவ வரப்பிரசாதம் நின்றுவிட்ட போது தன் உள்ளத்தில் நடந்ததைக் கண்டுபிடித்து “நீர் உமது முகத்தை என்னை விட்டுத் திருப்பிக்கொண்டீர், ஆதலால் நான் கலக்கத்திற்குள்ளானேன்” என்று சொல்கிறார். ஆயினும் அக்கலக்கத்தின் காலத்தில் அவர் கொஞ்சமேனும் அவநம்பிக்கைப்பட்டதில்லை; ஆனால் அதிக உருக்க மாய் மன்றாடி, “ஆண்டவரே! உம்மை நோக்கிக் கூக்குரல் இடுவேன், என் தேவனாகிய உம்மைப் பிரார்த்தித்துக் கொள்வேன்” என்றார். கடைசியாய்த் தன் மன்றாட்டின் பலனை அடைகிறார்; தன் மன்றாட்டு கேட்கப்பட்டதற்கு அத்தாட்சியாக “ஆண்டவர் மன்றாட்டுக்குச் செவி கொடுத்து என்பேரில் இரக்கம் புரிந்தார். ஆண்டவர் எனக்குச் சகாயமானார்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த வகையில் சகாயம் பெற்றார்? “எனது புலம்பலை எனக்குச் சந்தோஷமாக மாற்றினார்; என்னை அக்களிப்பு சூழச்செய்தார்” என்கிறார். மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர்களுக்கே இப்படி என்பதால், பலவீனரும் ஏழைகளுமான நாம் சில சமயங்களில் பக்தி சுறுசுறுப்பாயும் சில சமயங்களில் மனவறட்சியாயும் இருந்தால், அவநம்பிக்கைப் படக்கூடாது; ஏனெனில் இஸ்பிரீத்துவானவர் தமது சித்தத்திற்கு இஷ்டமானபடி வருகிறார், போய்விடுகிறார். ஆனது பற்றித்தான்: “நீர் அதிகாலையிலேயே மனிதனைச் சந்திக்கிறீர்; பின்பு உடனே அவனைச் சோதிக்கிறீர்” என்று பரிசுத்த யோபு என்பவர் சொல்லி யிருக்கிறார்.

6. சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கத்தின் பேரிலும் பரலோக வரப்பிரசாதம் வரும் என்கிற நம்பிக்கையின் பேரிலுமே தவிர, வேறெதின்பேரில் நாம் நம்பிக்கை கொள்ளக்கூடும்? வேறெதை நாம் நம்பவேண்டியது? தேவ வரப்பிரசாதம் என்னை விட்டுவிட்டதுபோல என் சொந்த பலன் மாத்திரமிருக்கும்போது புண்ணிய ஆத்துமாக்கள், பக்தி சுறுசுறுப்புள்ள சகோதரர், பிரமாணிக்கமுள்ள சிநேகிதர் இவர்களாலும், பக்திக்குரிய புத்தகங்கள், அரிய நூல்கள், இன்பமான சங்கீதங்கள் பாட்டுகள் முதலியவைகளாலும் எனக்கு உண்டாகும் உதவியும் சந்தோஷமும் வெகு சொற்பம். அப்போது பொறுமையாய் இருந்து சர்வேசுர னுடைய சித்தத்திற்கு என்னைக் கீழப்படுத்துவதே தவிர வேறு மேலான மருந்து இல்லை.

7. சிற்சில சமயங்கள் (ஆறுதலின்) வரப்பிரசாதத்தை இழந்து போகாதவனும் அல்லது பக்தி சுறுசுறுப்பு குறைவதை உணராதவனுமான அவ்வளவு பக்தியும் உத்தமதனமுமுள்ள எவனை யாவது நான் ஒருபோதும் கண்டதில்லை. முந்தியாவது பிந்தியாவது சோதிக்கப்படாத அவ்வளவு தியானயோகத்தில் உயர்ந்தவனும் அதில் ஞானத் தெளிவு அடைந்தவனுமான அர்ச்சியசிஷ்டவன் ஒருவனுமில்லை. சர்வேசுரனைப் பற்றி யாதொரு துன்பத்தால் அலைக் கழிக்கப்பட்டாலன்றி சர்வேசுரனை உத்தம விதமாய்த் தியானிக்கக் பாத்திரவானாக முடியாது. ஆதலால் சாதாரணமாக சோதனையானது ஆறுதல் பின்னால் வரும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. ஏனெனில் சோதனைகளால் பரீட்சிக்கப்பட்டவர்களுக்கே மேலான ஆறுதல் வாக்குத்தத்தம் பண்ணப்படுகின்றது: வெற்றி கொண்ட வனுக்குச் சீவிய விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்போம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

8. இன்னமும், இடையூறுகளைச் சகிக்க மனிதன் அதிக பலனுள்ளவனாகும்படி அவனுக்குத் தேவ ஆறுதல் கொடுக்கப் படுகிறது. பின்பு, அவன் செய்யும் நற்செயல்களைப்பற்றி ஆங்காரம் கொள்ளாதபடி சோதனை தொடர்ந்து வருகின்றது. பசாசு தூங்கு கிறதில்லை, மாமிசமும் இன்னும் மாய்ந்தபாடில்லை. ஆனதால் யுத்தத் திற்கு ஆயத்தப்படுவதை நிறுத்திவிடாதே; ஏனெனில், ஒரு போதும் அயர்ந்து போகாத சத்துருக்கள் உன் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருக்கிறார்கள்.

யோசனை

திவ்விய வார்த்தையோடு இரட்சகருடைய பரிசுத்த மனுஷீகம் எப்போதும் ஒன்றித்திருந்தபடியால் சேசுநாதர் மாறாத சமாதானமும் சந்தோஷமும் அனுபவித்து வந்த போதிலும், பாவத்தினிமித்தம் மனித சுபாவத்திற்கு ஏற்பட்ட துன்ப கஸ்தி வருத்தங்களுக்கு உட்படச் சித்தமானார். ஆனதினால்தான், “என் ஆத்துமம் மரண மட்டும் கஸ்திப்படுகின்றது; என் பிதாவே! என் பிதாவே! நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று முறையிட்டார். அவ்வாறே கிறீஸ்தவ னுடைய புண்ணிய ஆத்துமமானது தனது உள்ளத்தில் உண்டான சமாதானத்தை இழந்து விடாமல் போனபோதிலும் உள்ளரங்கக் கஸ்தியினாலும் துன்பங்களினாலும் பரிசோதிக்கப்படுகின்றது. எப்போதுமே ஆறுதலடைந்திருந்தால் சில சமயம் புண்ணிய வழியில் தளர்ந்துபோகக்கூடும். மேலும், சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப் பதற்கு அதனிடத்தில் வேறென்ன இருக்கின்றது? பலவீனத்தில் புண்ணியம் வளர்ச்சியடைகின்றது; சேசுகிறீஸ்துநாதருடைய புண்ணியம் என்னிடம் குடிகொள்ளும்படியாக என் பலவீனத்தில் நான் மகிமை கொள்வேன் என்று அப்போஸ்தலர் வசனிக்கிறார். ஆறுதலற்றிருக்கும்போது நமது நிர்ப்பாக்கியத்தை நாம் கண்டு பிடிக்கிறோம். நமது விசுவாசமும் நேசமும் பலப்படுகின்றன, தாழ்ச்சியில் நிலைகொள்கிறோம். சேசுநாதர் நம்மை விட்டகன்று போயிருக்கையில், தந்திர சோதனையில் விழாதபடிக்கும் அதைரியப் படாதபடிக்கும் ஜாக்கிரதையாயிரு. சிலுவையைப் பொறுமை யோடு சுமப்பதற்கு மிகவும் உதவியானதென்னவென்றால், கவலை யெல்லாம் நீக்கிவிட்டுத் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந் திருத்தல்தான். பெருமூச்சு விடுவதற்கும் கலங்குவதற்கும் பதிலாய்ச் சந்தோஷப்படு. கண்ணீரில் விதைக்கிறவர்கள் சந்தோஷத்தில் அறுப் பார்கள்; அவர்கள் போய் அழுது கொண்டு விதை விதைத்தார்கள், தங்கள் கை நிறைய கதிர்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய்த் திரும்பி வருவார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது.