1. சேசுநாதர் நம்முடன் இருக்கையில் எல்லாம் நன்மையாய் இருக்கிறது, ஒன்றும் பிரயாசையாய்த் தோன்றாது; சேசுநாதர் நம்முடன் இராதபோதோ, எல்லாம் கஷ்டமாயிருக்கிறது. சேசுநாதர் நமது உள்ளத்தில் பேசாதபோது, நமக்குண்டாகும் ஆறுதல் இனிமையற்றதே; சேசுநாதர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம்பற்றினாலோ நம் ஆத்துமத்திற்கு வெகு மதுரமான ஆறுதலாகின்றது. “போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார்” என்று மார்த்தாள் தனக்கு அறிவித்தபோது, மரிய மதலேனாள் தான் அழுதுகொண்டிருந்த இடத்தை விட்டு உடனே எழுந்திருந்து வரவில்லையோ? நாம் படும் மனத் துன்பத்தை ஒழித்து மன சந்தோஷத்திற்கு சேசுநாதர் அழைக்கிற நேரம் பாக்கியமான நேரம். சேசுநாதர் இல்லாமல் எவ்வளவு உன் மனம் வற்றினதும் கல் நெஞ்சுமாயிருக்கிறது. சேசு நாதரைத் தவிர நீ வேறெதையாவது விரும்பினால், எவ்வளவு புத்தியீனனும் வீணனுமாயிருப்பாய்; அதனாலே பூலோகமெல்லாத்தையும் இழந்து போவதைவிட உனக்கு அதிக கனமான நஷ்டமாகுமல்லவா?
2. சேசுநாதருடன் நீ சேர்ந்திராவிடில் இவ்வுலகம் உனக்கு என்ன தரக்கூடும்? சேசுநாதர் இல்லாமலிருப்பது சகிக்கக் கூடாத நரகம்; சேசுநாதரோடு இருப்பதோ இன்பமான மோட்சம். அவர் உன்னோடிருந்தால், எந்தச் சத்துருவும் உனக்குத் தீங்கு செய்ய முடியாது. சேசுநாதரைக் கண்டடைகிறவன் உத்தம பொக்கிஷத்தை, இன்னும் சொல்ல வேண்டுமானால் சகல நன்மைகளுக்கும் மேலான நன்மையைக் கண்டடைகிறான். சேசுநாதரை இழந்து போகிறவனோ உலகத்தையெல்லாம் இழந்து போவதைவிட அதிகமாக இழந்து போகிறான். சேசுநாதர் இல்லாமல் சீவிக்கிறவன் பரம ஏழை; சேசு நாதரோடு ஒன்றித்துச் சீவிக்கிறவனோ திரண்ட செல்வந்தன்.
3. சேசுநாதரோடு ஜீவிக்க அறிவது பெரிய சாஸ்திரம்; அவரை எப்போழுதும் தன் இருதயத்தில் வைப்பது மேலான ஞானம். தாழ்ச்சியும் சமாதானமும் உள்ளவனாயிரு: உன்னுடன் சேசுநாதர் இருப்பார். பக்தியும் மனவொடுக்கமும் உள்ளவனாயிரு. உன்னுடன் சேசுநாதர் தங்குவார். வெளிக் காரியங்களை நாட விரும்புவாயாகில், வெகு சீக்கிரத்தில் சேசுநாதரை நீக்கிவிட்டு அவரது வரப்பிரசாதத்தை இழந்து விடுவாய். அவரை நீக்கி இழந்துபோன பிறகு யார் உனக்கு அடைக்கலமாயிருப்பான்? வேறு எந்தச் சிநேகிதனைத் தேடுவாய்? சிநேகிதன் இல்லாமல் சுகமாய்ச் சீவிப்பது கூடாத காரியம்; மற்றவர் களுக்கு மேலாக சேசுநாதர் உன் சிநேகிதராயிராமல் போவாரானால் நீ மிகவும் துக்கப்படுவாய். ஆகையால் நீ மற்ற எவர் மட்டிலாவது நம்பிக்கை வைத்தாலும் அல்லது சந்தோஷம் கொண்டாலும் மதியீனமாய் நடந்து கொள்கிறாய். நீ சேசுநாதருக்கு விரோதம் செய்வதை விட உலகம் முழுவதும் உன்னை எதிர்ப்பதே உனக்கு அதிக நல்லது. ஆகையால் உன் நேசர்கள் எல்லோரிலும் சேசுநாதர் ஒருவரே உன் விசேஷ நேசராய் இருப்பாராக!
4. எல்லோரையும் சேசுநாதரைப்பற்றி நேசிக்கக்கடவாய். சேசுநாதரையோ அவரைப்பற்றியே நேசிக்கக்கடவாய். சேசுகிறீஸ்து நாதர் ஒருவரே விசேஷமான விதமாய் நேசிக்கப்பட வேண்டியவர்; ஏனெனில் சகல நேசர்களில் அவர் ஒருவரே உத்தமரும் பிரமாணிக்க முள்ளவருமாயிருக்கிறார். அவரிலும் அவரைப் பற்றியும் உன் சிநேகிதரையும் உன் பகையாளிகளையும் நேசி; இவர்கள் எல்லாரும் அவரை அறிந்து நேசிக்கும்படியாக, இவர்கள் எல்லோருக்காகவும் வேண்டிக்கொள். மற்றவர்களைப் பார்க்கிலும் நீ அதிகமாய்ப் புகழப் படவும் நேசிக்கப்படவும் ஒருபோதும் ஆசியாதே; இது நிகரற்ற சர்வேசுரனுக்கு மாத்திரமே உரியது. மற்றொருவன் உன்னை மிஞ்சின விதமாய் நேசிக்கவும் ஆசிக்காதே. நீயும் மற்றொருவன் பேரில் மிஞ்சின பற்றுதல் வைக்காதே; ஆனால் உன்னிடத்திலும் சகல நல்லோரிடத் திலும் சேசுநாதரே இருக்கக் கடவார்.
5. யாதோர் சிருஷ்டியின்பேரில் உள்ள பற்றுதலில் சிக்கிக் கொள்ளாமல் உன் உள்ளத்தில் சுத்தமுள்ளவனும் கட்டுப்படாத வனுமாயிரு. “மன அமைதியாயிருக்கவும் ஆண்டவர் எம்மாத்திரம் மதுரமானவரென்று காணவும்” உனக்கு மனதுண்டானால், எல்லாவற்றையும் உரிந்து விட்டு சர்வேசுரனுடைய சந்நிதியில் தூய மனதுடையவனாயிருக்க வேண்டியது. உண்மையாகவே எல்லாவற் றையும் ஒழித்துத் தொலைத்துவிட்டு அவர் ஒருவரோடு நீ ஏக பந்தனமாகும்படிக்கு அவருடைய வரப்பிரசாதம் உன்னை அழைத்து இழுத்திருந்தால் ஒழிய, நீ அந்த அந்தஸ்திற்கு வந்து சேரப்போவ தில்லை. ஏனெனில் சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தால் தூண்டப் பட்டவன் சகலத்தையும் செய்ய வல்லவனாகிறான்; அது நின்று போனால் அவன் தரித்திரனும் பலவீனனுமாய்த் துன்பங்களுக்கே கையளிக்கப்பட்டவன் போலாகிறான். ஆனால் அவன் இந்த அந்தஸ்தில் மனதைரியத்தை விடத்தகாது, அவநம்பிக்கை கொள்ளலாகாது; ஆனால் மனத்திடத்தோடு தேவ சித்தத்திற்கு அமைந்திருந்து தனக்கு வருவதையெல்லாம் சேசுகிறீஸ்துநாதருடைய தோத்திரத்திற்காக அனுபவிக்க வேண்டியது; ஏனெனில் மழைக்காலத்திற்குப் பின் வசந்த காலமும். இரவுக்குப்பின் பகலும், புயலுக்குப்பின் அமரிக்கையும் வந்து சேரும்.
யோசனை
தேவசுதன் பூமியிலிறங்கும்படி நேசமே காரணமாயிருந்தது. நேசமே நம்மை அவர் வரைக்கும் உயர்த்துகின்றது, நமது ஆத்துமத் திற்கும் சேசுநாதருக்கும் ஆச்சரியத்திற்குரிய ஒன்றிப்பு உண்டாக்கு கின்றது. நாம் உங்களை அநாதைப் பிள்ளைகளாய் விடமாட்டோம், உங்களில் வருவோம் என்ற சேசுநாதருடைய வாக்குத்தத்தம் எப்போதும் நிறைவேறும். ஓ, என் சேசுவே வாரும், என்னைச் சிருஷ்டிகளோடு கட்டியிருக்கும் விலங்குகளைத் தறித்துவிடும்; நான் உமக்காக மாத்திரமே ஜீவிக்க வேண்டியது. என்னையே நான் மறந்துவிட்டு உம்மைமாத்திரம் பார்க்கவும், உம்மைமாத்திரம் ஆசிக்கவும் கிருபை செய்தருளும்; உமது மார்பில் இளைப்பாறின சீடனைப் போல நானும் உம்மிடத்தில் இளைப்பாறத் தயை செய்யும்; உலகம் இந்தச் சமாதானத்தைக் கண்டுபிடிப்பதில்லை; அதன் தந்திரச் சோதனைகளாலும் அந்தச் சமாதானம் ஒருபோதும் கெடாது.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠