இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

08. கிறீஸ்துநாதர் தம்மைச் சிலுவையில் ஒப்புக்கொடுத்ததின் பேரிலும் நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்பதின் பேரிலும்.

1. (கிறீஸ்துநாதர்) உன் பாவங்களால் வந்த தேவ கோபாக்கினையை அமர்த்தும்படி நாம் சிலுவை மரத்தில் நம் கைகளை விரித்து நிர்வாணியாயும் சர்வாங்கமாயும் நம்மை முழுமையுமே வலியச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது போல, நீயும் நாள்தோறும் பூசையில் உன் ஆத்துமத்தின் சர்வ சத்துவத்தோடும் பற்றுதலோடும், உன்னால் கூடிய அளவு மன உற்சாகத்தோடும் நமக்கு உன்னைத்தானே பரிசுத்த திருப்பலியாக வலிய ஒப்புக்கொடுக்கக் கடவாய். நீ முழுமையும் நமக்கு ஒப்புக்கொடுக்கக் கவனம் கொள்ள வேண்டுமென்று அல்லாது உன்னை நாம் வேறென்ன கேட்கிறோம்? உன்னையன்றி நீ வேறெதை நமக்குக் கொடுத்தாலும், அது நமக்குத் தேவையில்லை, ஏனெனில் நாம் உன்னையே தேடுகிறோமேயன்றி உன் காணிக்கைகளைத் தேடுகிறதில்லை!

2. நம்மைத் தவிர மற்றதெல்லாம் உனக்குண்டாயிருந்த போதிலும், அது உனக்குப் போதாதிருப்பது போல், உன்னை ஒப்புக் கொடாமல் வேறென்ன நீ கொடுத்தாலும் அது நமக்குப் பிரியமா யிராது. உன்னை நீ நமக்கு ஒப்புக்கொடு; தேவனிடம் உன்னை முழுதும் நீ கையளித்துவிடு; அது நமக்குப் பிரியமான காணிக்கை யாகும். இதோ! நாம் உனக்காக நம்மை முழுவதும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தோம்; நமது சரீரம் இரத்தம் முழுவதையும் உனக்குப் போசனமாகக் கொடுத்தோம்; நாம் முழுதும் உனக்குச் சொந்த மாகவும் நீயும் எப்பொழுதும் நமக்குச் சொந்தமாயிருக்கும்படி யாகவும் அவ்விதம் செய்தோம். ஆனால் நீ உன்னிலேயே நின்று நமது சித்தத்திற்கு முழு மனதோடு உன்னை ஒப்புக்கொடாதிருந் தால், அது பூரண காணிக்கையாகாது, நமக்குள்ளாக முழு ஐக்கியமுமிராது.

ஆகையால் நீ மன சுயாதீனத்தையும் அருளையும் பெற வேண்டு மானால், உன் சகல கிரியைகளுக்கு முன்னதாக உன்னையே தன்னிச்சை யாக தேவனின் கரங்களில் ஒப்பிக்க வேண்டியது. தங்களை முழுதும் மறுக்கத் தெரியாததினால்தான், வெகு கொஞ்சம் பேர்களே தெளிவும் மன சுயாதீனமும் உள்ளவர்களாயிருக்கிறார்கள். “யாதொருவன் சகலத்தையும் வெறுக்காவிட்டால் நமது சீஷனாயிருப்பது கூடாது” என்று நாம் சொன்ன வாக்கியம் மாறாத வாக்கியம். ஆகையால் நீ நமக்குச் சீடனாகிறதற்கு ஆசைப்பட்டால், உன் சர்வ பற்றுதல் களோடு உன்னையே நமக்கு ஒப்புக்கொடு.

யோசனை

சிலுவைப் பலியின்போது வெளியில் நமது புலன்கள் காண்கிற காரியங்களைக் கொண்டு மாத்திரம் நாம் யோசனை செய்து பார்த் தால், அந்தப் பலி அவ்வளவு கனமானதாகவும் பிரதானமாகவும் நமக்குத் தோன்றாது. மனித சுபாவம் சகிக்கக் கூடுமான சகலவித வேதனைகளுக்கும் ஆறாட்டங்களுக்கு மாத்திரமல்ல, சேசுநாதர் தம்முடைய சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறார். ஆனால் தம்மோடு ஐக்கியமாய் ஒன்றித்திருக்கும் தமது ஆத்துமத்தையும், தமது கஸ்தி களையும் பற்றுதல்களையும் மனதையும் ஆறாட்டங்களையும், தாம் பிதாவினால் கைநெகிழப்பட்டதையும், சகலத்தையும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார். ஆனதினால், “பிதாவே! என்னை ஏன் கைநெகிழ்ந்தீர்?” என்று முறையிடுவதுபோலச் சொல்கிறார். அந்தச் சமயத்தில் மரணத் தீர்வைக்குள்ளான மனுக்குலத்துக்குப் பதிலாகப் பாடுபடுகிறார். அப்போதே எல்லாம் நிறைவேறிற்று, வேதனையும் இரட்சணியமும். குருவானவர் பீடத்தில் ஏறும்போதெல்லாம் அந்தப் பலி திரும்பவும் நிறைவேறுகின்றது, கிறீஸ்தவனும் அந்தப் பலிக்குப் பங்காளியாகிறான், ஆனதால் சேசு நாதர் தம்மை ஒப்புக்கொடுப்பது போலவே கிறீஸ்தவனும் குருவான வரும் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டியது; முழுமையும் ஒப்புக் கொடுக்க வேண்டியது. நாமும் சிலுவையில் அறையப்பட்டிருக் கிறோம்; சேசுநாதரோடு, சேசுநாதரிடம் நாமும் பாடுபட வேண்டும். சேசுநாதர் நமக்காகப் பாடுபட்டார்; நாம் நமக்காகவும், நமது சகோதரருக்காகவும், சகல மனுக்குலத்திற்காகவும் பாடுபட வேண்டியது. ஆனதினால்தான் அர்ச். சின்னப்பர்: “உங்களைப் பற்றி நான் என் உபத்திரவங்களில் சந்தோஷப்படுகிறேன்; சேசுநாதரின் பாடுகளில் குறைவதை, அவருடைய சரீரமாக இருக்கும் திருச் சபைக்காக நான் என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன்” என்ற ஆச்சரிய மான வாக்கியங்களை வசனித்திருக்கிறார். இரட்சகருடைய பாடுகள் பாவத்தைப் போக்கப் போதாதவை யென்றல்ல, தேவனுடைய நீதிக்குப் பரிகாரம் செய்யப் போதாதவையென்றல்ல; ஆனால் நாமெல்லோரும் கிறீஸ்துநாதருடைய சரீரமாகிய ஒரே சரீரத்தின், ஒரே திருச்சபையின் உறுப்பினர்களாயிருப்பதால், நம்மில் ஒவ்வொரு வரும் அவரோடுகூடப் பாடுபட வேண்டியிருக்கின்றது. நம்முடைய பாடுகளும் சேசுநாதரின் பாடுகளில் ஒரு பங்காக இருக்கின்றன. ஆ, சேசுவே! நாம் உம்மோடு என்னை முழுமையும் ஒப்புக்கொடுக் கிறேன்; இதோ! பீடத்தின்பேரில் என்னைப் பாரும்; ஆண்டவரே! என்னைத் தண்டியும், பலியை நிறைவேற்றும்; மரணத்திற்குத் தீர்வையிடப்பட்ட மனிதனாகிய என்னிடமுள்ள எல்லாவற்றையும், என் உலக ஆசைகளை, உலகப் பற்றுதல்களை, என் மனதை, என்னைக் கலக்கத்திற்குள்ளாக்கும் என் புலன்களை, இந்தப் பாவச் சரீரத்தை, எல்லாவற்றையும் அழித்து விடும்; அப்போது நான் சிலுவையை நோக்கி: “எல்லாம் நிறைவேறிற்று” என்று சொல்வேன்.