இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

07. தாழ்ச்சியின் மறைவில் புண்ணிய வரங்களை மறைக்க வேண்டும்

1. மகனே! நீ பெற்றுக் கொண்ட பக்திச் சுறுசுறுப்பென்னும் வரத்தை மறைத்து வைக்கிறதும் அதைக் குறித்துப் பெருமை கொள்ளாமலும் அதிகமாய்ப் பேசாமலும் அதை அதிக பொருட்டாய் எண்ணாமலும் இருக்கிறதுமே உனக்கு நலமும் பிரயோசனமுமா யிருக்கிறது. உன்னையே நிந்தித்து, அந்த வரம் தகுதியற்றவனாகிய உனக்கு அளிக்கப்பட்டதேயென்று பயங்கொள்ளக் கடவாய். சற்று நேரத்துக்குள்ளாக விரோதமாய் மாறிப்போகக் கூடுமான இந்தப் பக்திச்சுறுசுறுப்பில் மிதமிஞ்சின நம்பிக்கை வைக்கத்தகாது. ஆனால் அது உன்னிடமிருக்கும் காலத்தில், அது இன்றி நீ எவ்வளவு ஏழை, எவ்வளவு சக்தியற்றவன் என்று கவனமாய் நினை. மன ஆறுதலின் வரத்தை வைத்துக் கொண்டபோது மாத்திரம் அல்ல, ஞான ஆறுதல் எடுபட்ட நிலைமையைத் தாழ்ச்சியோடும் மன அமைதியோடும் பொறுமையோடும் சகிக்கும்பொழுதும்கூட ஞான வளர்ச்சியாகின்றது; ஆனால் அப்போது செபத்தின் மட்டில் உனக்குள்ள பற்றுதல் குறைந்து போகவிடாமலும் நீ வழக்கமாய்ச் செய்துவரும் ஞான முயற்சிகளைக் குறைக்காமலும், உன்னால் செய்யக் கூடுமானதை நல்ல மனதோடு, உன் புத்திக்குத் தோன்றினபடி செவ்வையாய்ச் செய்தும், உனக்கு உண்டாகிற இருதய வறட்சியையும், மனக் கலக்கத்தையும் பற்றி உன்னையே முழுதும் கைநெகிழ்ந்து விடாமலுமிருக்க வேண்டும்.

2. உள்ளபடி பலபேர், தங்கள் இஷ்டப்படி காரியம் கைகூடாத சமயங்களில், உடனே பொறுமையை இழந்து அவநம்பிக்கைக்கு உள்ளாகிறார்கள். மனிதனுடைய சீவியத்தின் போக்குகள் எப்போதும் அவனுடைய கையில் அடங்கினவையல்ல; சர்வேசுரன் தம் வரப்பிரசாதங்களையும் ஆறுதல்களையும், தமது இஷ்டமுள்ள அளவிலும் நேரத்திலும் விதத்திலும் தம் பக்தர்களுக்குத் தந்தருளுவாரொழிய மற்றபடியல்ல. சிலர் விவேகம் தப்பி, பக்தி வரத்தினாலேயே கெட்டுப் போனார்கள். எப்படியென்றால், தங்கள் பலவீனம் எவ்வளவு என்று யோசியாதவர்களாய், பகுத்தறிவு காட்டும் வழியில் நடவாமல் தங்கள் சக்திக்கு அதிகமாய்ச் செய்ய முயன்றார்கள். சர்வேசுரனுக்குப் பிரியமானதற்கு மேல் அதிகமாய்ச் செய்ய அவர்கள் துணிந்து கொண்டபடியால், வெகு சீக்கிரத்தில் பக்தி வரத்தை இழந்து போனார்கள். பரலோகத்தில் கூட்டைக் கட்ட வேண்டும் என்று விரும்பினவர்களாகிய அவர்கள் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களுமானார்கள்; தாழ்த்தப்பட்டு எளிமையடை வதனால் அவர்கள் தங்கள் சொந்த சிறகுகளின் பலத்தாலல்ல, ஆனால் என் சிறகுகளில் அடைக்கலம் புகுந்தே என் சமூகத்தில் பறக்கக் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. புண்ணிய ஜீவியத்தின் வழியில் புதியவர்களும் பழக்கமில்லாதவர்களும் விவேகிகளுடைய ஆலோசனையின் மேல் நடந்தாலே தவிர மற்றப்படி எளிதாய் மோசம் போய்த் தவறிப் போவார்கள்.

3. பழக்கப்பட்டவர்களுடைய யோசனையை நம்பாமல் தங்களுடைய எண்ணத்தையே பின்பற்றி நடக்க மனதுள்ளவர்கள் தங்களுடைய சுய கருத்தை விட்டு விட்டாலன்றி அவர்களுடைய முடிவு வெகு ஆபத்துள்ளதாயிருக்கும். தாங்களே புத்திசாலிகள் என்று எண்ணம் கொள்பவர்கள் பிறரால் நடத்தப்பட தாழ்ச்சியோடு சகிப்பது வெகு அரிது. தன்னைத்தானே மதித்தலுடன் சேர்ந்த மிகுதியான படிப்பை விட, தாழ்ச்சியும் சாதாரண புத்தித் திறமையும் சேர்ந்த அற்ப ஞானமேமேல். மிக்க ஆங்காரம் வருவிக்க ஏதுவான அறிவைவிட அற்பமாய் அறிவது உனக்கு அதிக உத்தமம். தனக்கு முந்தியிருந்த ஞான வறுமையையும், தனக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்தை எங்கே இழந்து விடுவோமோ என்கிற பரிசுத்த தெய்வ பயத்தையும் மறந்து, சந்தோஷத்துக்கு முழுவதும் தன்னைக் கையளிப்பது விவேகமற்ற தன்மை. இக்கட்டும் துன்பமுமான காலத்தில் மிஞ்சின அவதைரியப்பட்டு என்மேல் வைக்க வேண்டிய நம்பிக்கைக்குத் தகாத எண்ணமும் மனமும் கொள்ளுவது நலமும் ஞானமுமன்று.

4. சோதனையில்லாத சமாதான காலத்தில் முற்றும் அச்ச மற்றவன் எவனோ அவன் ஞான யுத்தக் காலத்தில் அநேகமாய் தைரியமற்றவனும், கோழைத்தனமுள்ளவனுமாவான். எப்போதும் தாழ்ச்சியுள்ளவனும் உன் மதிப்பில் நீசனுமாயிருக்கவும் உன் புத்தியை அடக்கி ஒடுக்கவும் நீ அறிவாயாகில், இவ்வளவு சீக்கிரமாய் ஆபத்திலும் பாவத்திலும் விழ மாட்டாய். பக்திச் சுறுசுறுப்பின் போதே, ஞான ஒளி எடுபட்டபின் உனக்கு என்ன சம்பவிக்கும் என்று நினைப்பது யுக்தி. பக்திச் சுறுசுறுப்பை இழந்தாய் என்றால், அது மறுபடி உனக்குக் கொடுக்கப்படக் கூடுமென்றும், சர்வேசுரன் உன் நன்மைக்காகவும் தம் மகிமைக்காகவும் அதைத் தற்போதைக்கு நீக்கினாரென்றும் நினைத்துக்கொள்.

5. உன் இஷ்டப்படி சகலமும் உனக்கு வெற்றியாகிறதை விட இப்படிப்பட்ட சோதனை வருகிறது அடிக்கடி உனக்கு மிகுந்த நன்மையாயிருக்கும். ஏனெனில் ஒருவனுடைய புண்ணியத்தை அறிய, அவன் பல காட்சி காண்கிறானா, அநேக ஆறுதலை அடை கிறானா, வேதாகமசாஸ்திரியாயிருக்கிறானா, உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறானா என்று பார்க்க வேண்டாம்; ஆனால் மெய்யான தாழ்ச்சியில் அஸ்திவாரம் ஊன்றி தேவசிநேகத்தால் நிரப்பப்பட்டு, எப்போதும் சுத்தக் கருத்தோடும் முழுமையும் சர்வேசுரனுடைய மகிமையைத் தேடி, தன்னை ஒன்றுமில்லையென்று எண்ணி மெய் யாகவே நிந்தித்து, பிறரால் சங்கை பெறுவதை விட நிந்திக்கப்படவும் தாழ்த்தப்படவும் ஆசித்து வருகிறானா என்றுதான் பார்க்க வேண்டும்.

யோசனை

தன் நிர்ப்பாக்கியத்தை அறிந்து, அதை எப்போதும் தன் கண் முன்பாக வைத்திருப்பதும், உயிருள்ள விசுவாசத்தோடும் கீழ்ப்படித லுள்ள நேசத்தோடும் சர்வேசுரனுக்குத் தன்னைத்தானே முழுவதும் கையளித்து விடுவதும்தான் தாழ்ச்சியென்னும் அஸ்திவாரம் கொண்ட ஞான சீவியம். நான் பலவீனன், வறியவன் என்று தன்னுள் ளத்தில் சொல்கிறவன் தன்னை நம்புவதில்லை. சேசுநாதர் மட்டிலே முழு நம்பிக்கையும் வைக்கிறான். வரப்பிரசாதத்தின் ஏவுதல்களை எதார்த்தமாய்ப் பின்செல்கிறான். பக்தியுருக்கத்தில் தன்னை உயர்த்திக் கொள்ளுவதில்லை. ஞான வறட்சியில் அயர்ந்து போவதில்லை. சர்வேசுரனுடைய சித்தம் அவனிடம் நிறைவேறி வரும் வரையில் திருப்தியாயிருக்கிறான். மகா பரிசுத்தமான காரியங்களுக்குள்ளாகக் கூட தன்னைத் தானே மறைத்துக் கொண்டிருக்கும் ஆங்காரம் அவனை மோசத்துக்கு உள்ளாக்குவதில்லை. தன் சீவியத்தில் பிரமாணிக்க அமைதியோடு, அவன் சர்வேசுரனை நோக்கி, “உமது சிம்மாசனத் தருகில் பணிவிடை செய்யும் ஞானத்தை எனக்குத் தந்தருளும்; என்னை உமது பிள்ளைகளின் கணக்கினின்று நீக்கி விடாதேயும், ஏனெனில் அடியேன் உமது ஊழியன், உமது ஊழியக்காரியின் பிள்ளை; பலவீனன், சொற்ப ஆயுசுள்ளவன்; உமது நீதியையும் சட்டங் களையும் கண்டுபிடிக்கிறவனல்லன்” என்று சொல்லுவான். இவ்விதம் வேண்டிக்கொண்டு இவ்விதம் ஆசைப்படுகிறவன் சமாதானத்தில் நடக்கக் கடவான். சர்வேசுரன் பிரியத்தோடு அவனை நோக்குகிறார். அவருடைய ஆசீர்வாதம் அவன்மேல் நிற்கிறது.