1. சேசுநாதரை நேசிப்பதும் சேசுநாதரைப் பற்றித் தன்னைத்தானே வெறுப்பதும் என்னவென்று கண்டு பிடிக்கிறவன் பாக்கியவான். இந்த நேசரைப்பற்றி மற்றெந்த நேசனையும் விட்டுவிடவேண்டியது; ஏனெனில் எல்லாவற்றையும் பார்க்க சேசுநாதர் நேசிக்கப்பட விரும்புகிறார். சிருஷ்டிகளின் நேசம் மோசமும் நிலையாமையும் உள்ளது; சேசுநாதருடைய நேசமோ உறுதியும் நிலையுமுள்ளது. சிருஷ்டிப்புகளின் பேரில் பற்றுதல் வைத்திருக்கிறவன், நிலைகொள்ளாத அவைகளின் மேல் ஊன்றித் தவறிவிடுவான்; சேசுநாதர்மீது பற்றுதல் வைத்திருக்கிறவனோ என்றைக்கும் தவற மாட்டான். உன்னை விட்டு எல்லோரும் பிரிந்து போகையில் உன்னைக் கைவிடாதவரும், கடைசியில் நீ கெட்டுப்போகச் சகியாதவருமான அவரை நேசி, அவரை உன் நேசராக வைத்துக்கொண்டேயிரு. வேண்டும் வேண்டாம் என்றாலும் ஒருநாள் நீ எல்லோரையும் விட்டுப் பிரிய வேண்டியது.
2. சீவியகாலத்திலும் மரணத் தறுவாயிலும் சேசுநாதரோடு ஐக்கியமாயிரு; எல்லோரும் உன்னைக் கைவிடும்போது, உனக்கு உதவி செய்யக் கூடியவர் அவர் ஒருவரேயாகையால், அவருடைய பிரமாணிக்கத்துக்கு உன்னைக் கையளித்து விடு. உன் நேசர் எப்படிப்பட்டவர் என்றால் வேறெவனையும் நீ நேசனாக ஏற்றுக்கொள்ள அவர் சம்மதிப்பதில்லை; தாம் மாத்திரம் உன் இருதயத்தை வசப் படுத்தி, அரசன் தன்னுடைய சொந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பதும் போல, தாமே உன் இருதயத்தில் வீற்றிருக்க ஆசைப்படுகிறார். படைக்கப்பட்ட வஸ்துவின் பேரில் எவ்வித பற்றுதலுமற்றவனாய் நீ இருப்பாயாகில், சேசுநாதர் உன்னிடத்தில் வாசம் செய்யப் பிரியம் கொள்ளுவார் என்பது திண்ணம். சேசுநாதரன்றி மனிதர்பேரில் நீ வைத்த நம்பிக்கை எதுவும் ஏறக்குறைய வீணாகிப் போனதாகக் காண்பாய். காற்றால் அசைகிற நாணலை நம்பாதே, அதின்பேரில் ஊன்றி நில்லாதே; ஏனெனில் எல்லா ஜீவனும் புல்லைப்போல் இருக்கின்றது, அதின் மகிமை யாவும் புல்லின் பூவைப்போல் அழிந்துபோம்.
3. மனிதனை அவனுடைய புறக்கோலத்தின்படியே மதிப்பாயாகில் வெகு சீக்கிரத்தில் மோசம் போவாய். ஆறுதலையும் இலாபத்தையும் பிறரிடத்தில் தேடினால் அநேகமாய் நஷ்டத்தை மட்டும் காண்பாய். அவரை மட்டும் தேடுகிறவன் அவரை எவ்விடங் களிலும் காண்பான். தன்னைத்தானே தேடுகிறவனோ, தன்னையும்தான் காண்பான். ஆனால் அது தனக்குக் கேடாயிருக்கும். ஏனெனில் தான் சேசுநாதரைத் தேடாதிருப்பதால், உலக முழுவதாலும், தன் பகைவர் களாலும் தனக்கு வரக் கூடுமான தின்மையை விட, தானே தனக்கு அதிக தீங்கு வருவித்துக் கொள்ளுகிறான்.
யோசனை
ஏதோ ஒரு சந்தோஷத்தை நாடி, நமது நலத்தைச் சிருஷ்டி களிடத்தில் தேடுகிறோம்; ஆனால் சகலமும் நிழலைப் போல மறைந்து போகின்றன. நேசிக்கவும் நேசிக்கப்படவும் ஆசிக்கிறோம், மெய் யான அளவிறந்த நேசத்தினின்று அகன்றுபோகிறோம். கடந்து போகிற வஸ்துகளின் மேல் நமது இருதயப்பற்றுதலை வைப்பது எவ்வளவு மதியீனமென்றும், காலத்தோடு நின்றுபோகும் உலக நேசம் எவ்வளவு வீணானதென்றும் கண்டுகொள்ளக் கடவோம். சேசுநாதரை மாத்திரமே நேசிப்போம். அவர் ஆசைப்படுவது போலவும் நாம் அவரை நேசிப்போம். அவரை மட்டற்ற விதமாய் நேசிப்பதுதான் நமது நேசத்தின் அளவாக இருக்க வேண்டியதென்று அர்ச். பெர்நார்து சொல்லுகிறார். அவரை நேசிப்பதைவிட மற்றெந்த வஸ்துவையும் அதிகமாய் நேசிக்கிறவனுக்குக் கேடாம். அவன் ஆசைகள் கெடுதலின் வழியில் செல்லுகின்றன.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠